தில்லி கத்புட்லி காலனியில் கைப்பாவை பொம்மைகள் செய்யப்படுகின்றன

ஒரு சிறிய சதுர அறையில் வெளிர் மஞ்சள் நிறப் புடைவையும் அழகிய வெள்ளை வளையல்களையும் அணிந்த பிமலா பட், கீழே அமர்ந்து சுல்ஹாவில்(பாரம்பரிய அடுப்பு) ரொட்டி சுட ஆரம்பிக்கிறார்.

மாவைப் பிசைந்து உருண்டையாக்கி, பின் அதை நன்றாகத் தட்டி ஒரு தட்டில் வைக்கிறார். அடுப்பைச் சுற்றி மரத்துண்டுகள் செருகப்பட்டிருக்க, சில துண்டுகள் சுவற்றில் சாய்க்கப்பட்டு  இருக்கின்றன. சுவரின் வண்ணப்பூச்சு  அழுக்கு நீலத்தில் உதிர்ந்தபடி இருக்க, அடுப்புப் புகை மேலெழுந்து அதை மேலும் அழுக்காக்குகிறது.

“இப்படி சமைத்தால் உணவு இன்னும் நன்றாக இருக்கும்”, என்று அவர் சொல்கிறார். இந்தப் புகை அவருக்குத் தலைவலியையோ வேறு ஏதேனும் இன்னல்களையோ  ஏற்படுத்தவில்லையா என்று கேட்டால், பிமலா அதைப் பற்றிக் கவலைப்படாமல், “மண்பானைத் தண்ணீரையும் சுல்ஹா உணவையும் அடித்துக்கொள்ள முடியாது”, என்கிறார்.

அவருக்கு எரிவாயு அடுப்பு கிடைக்காமல் இல்லை, ஆனாலும், அவர் சுல்ஹாவில் சமைப்பதையே விரும்புகிறார். ஒரு நாளைக்கு ஐந்து கிலோ கோதுமையை வைத்து இருபது ரொட்டிகள் வரை சமைக்கிறார். தண்ணீர் முதலில் ‘பியூர் இட்’ இயந்திரத்தில் சுத்தப்படுத்தப்பட்டு, பிறகு பெரிய மண்பானை ஒன்றில் குளிர்விக்கப்படுகிறது.

PHOTO • Urvashi Sarkar

பல வருடங்கள் வாழ்ந்த இந்தக் காலனியிலிருந்து பிமலா பட் வெளியேற விரும்பவில்லை

இந்த அன்றாட வாழ்வைத் தாண்டி அவருக்குப் பல கவலைகள் உண்டு. இந்த நிலத்தை இழந்துவிடுவோமோ, தன் சமூகத்தின்பால் தாம் வைத்திருக்கும் பிணைப்பு அறுந்துவிடுமோ, என்று அவை நீள்கின்றன. “நான் இங்கு முப்பது வருடங்களுக்கு முன்பு குடியேறினேன்”, என்கிறார் பிமலா. பார்க்க இளமையாக இருக்கிறார். தோலில் சுருக்கங்கள் இல்லை. “என் வயது என்னவென்றே எனக்கு சரியாகத் தெரியாது”, என்று விரக்தியுடன் புன்னகைக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிமலா, தேசிய விருது பெற்ற கைப்பாவைக் கலைஞரான புரன் பட்டின் குடும்பத்திற்குள் திருமணமாகிச் சென்றார். அந்தக் காலனியிலுள்ள பல குடும்பங்கள் ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் கிராமங்களிலிருந்து 1970-வாக்கில் வந்து குடியேறியவர்கள்.

PHOTO • Urvashi Sarkar

இவர்கள் ஒரு கலையைப் பாதுகாத்தபடி பிழைக்க முயற்சிக்கிறார்கள்

தில்லி வளர்ச்சிக் குழுமத்தின் சேரி புணர்வாழ்வுத் திட்டம் முதன்முதலாக செயல்படுத்தப்பட இருக்கும்  கத்புட்லி காலனியில் இவர்கள் வசிக்கிறார்கள். இங்கே புரன் பட்டின் வீட்டை யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். இந்தத் திட்டத்தின்படி கத்புட்லி காலனியில் வீடு கிடைப்பதற்கு முன், சேரி வாழ் மக்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு இடைப்பட்ட முகாமில் தங்குமாறு சொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசு-தனியார் கூட்டுக்கொள்கையின்படி தில்லி வளர்ச்சிக் குழுமத்துடன் இணைந்து ரஹேஜா  டெவலப்பர்ஸ் அடுக்குமாடி வீடுகளைக் கட்ட இருக்கிறார்கள். இந்தக் காலனியில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு இந்த முகாம்களுக்குச் செல்லத் தயக்கமில்லை. ஆனால் நிலம் இருப்பவர்களுக்கோ அவர்களுக்கு  தருவதாக உறுதியளிக்கப்பட்ட வீடு கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இருக்கிற நிலமும் போய்விடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

“நாங்கள் காலம் காலமாக இங்குதான் வாழ்கிறோம். எதற்காக இப்பொழுது காலி செய்ய வேண்டும்?”, என்று கேட்கிறார் பிமலா. அவரின் 15 வயது மகள் திபாலி, “அடுக்குமாடி வீடுகள் அடைத்து வைத்தாற்போல் இருக்கும். எங்களால் முன்னைப்போல் நண்பர்களையும் உறவினர்களையும் சுதந்திரமாகப் பார்த்து வர முடியாது”, என்று ஆதங்கத்தை மேலும் வெளிப்படுத்துகிறார்.

திபாலிக்கு தேநீர் பருக வேண்டும்போல் இருக்கிறது. அவர் தாய் சமையலறைக்குள் செல்ல, நானும் திபாலியும் பக்கத்து அறைக்குள் நுழைந்தோம். அங்கு கண் மை வைத்து தலைமுடியை நீட்டிப்பின்னி உட்கார்ந்திருந்த ஒரு சிறுமி, உள்ளே வந்த எங்களைப் பார்த்து வெள்ளந்தியாகச் சிரிந்தாள். பக்கத்து வீட்டுக்காரரின் மகள் அவள். குழந்தைகள் அனுமதியின்றி ஒவ்வொரு அறைக்குள்ளும் வந்து போவார்கள், புதியவர்கள் எவரேனும் வந்தால் வினோதமாகப் பார்த்தபடி வெளியேறுவார்கள். குறுகிய சந்துகள்; அதில் அடைத்து வைக்கப்பட்ட ஒழுங்கற்ற கட்டிடங்கள்; ஒன்றோடொன்று நெருக்கியபடி இருக்கும் வீடுகள். இதுதான் கத்புட்லி காலனி. அரசு அதிகாரிகள் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. அதற்கு அங்கு நிறைந்து வழிந்து கொண்டிருக்கும் சாக்கடைகளும், குவியல் குவியலாகக் கிடக்கும் குப்பைகளும் மலக்கழிவுகளுமே சாட்சி. ஆனால் இதற்கு நேர்மாறாக வீடுகள் மிகவும் சுத்தமாக உள்ளன.

PHOTO • Urvashi Sarkar

அன்றாடம் அழுக்கில் உழலும் இந்த ஏழைச் சிறுவன் நகர அதிகாரிகளின் மெத்தனத்தை முகத்தில் அறைகிறான்

இந்த சிக்கலை நன்றாகப் புரிந்துவைத்துள்ள திபாலி, இந்தப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பும் மாலும் எவ்வாறு காலனியைப் பிரித்துவிடும் என்று விளக்குகிறார். அடுக்குமாடிக் கட்டிடத்தில் சில வீடுகள் ஆடம்பரமாகக் கட்டப்பட்டு வெளியே விற்கப்படும். ஓரம் கட்டப்படுகிறோமோ என்ற உணர்வின் காரணமாக திபாலியின் சொற்களில் அவ்வளவு கசப்பு. “எங்களை ஒரு ஓரத்தில் தள்ளி மறைத்து வைக்கத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஏழ்மையும் அழுக்கு வாடையும் வெளியே தெரிந்துவிடக்கூடாது பாருங்கள்!”

தன் தாத்தாவான புரன் பட்டின் சாதனைகளையும் புகழையும் பெருமையாகக் கருதும் திபாலி, தன் கனவைப் பற்றியும் சொல்கிறார். ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் ஆவதே அவரது கனவு. ஆனால் அவர் குரலில் ஏனோ உறுதியின்மை தெரிந்தது. வினவியதில் அவர் குரல் தாழ்த்தியபடி சொன்னது, “எங்கே அதெல்லாம்? என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்கள்”. அவள் தோழிகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சில வினாடிகளில் மீண்டும் நம்பிக்கை பெற்றவராய், “ஆனாலும் மற்ற வீடுகளைப் பார்க்கையில் என் வீட்டில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. நான் படிக்கவும் வேலை பார்க்கவும் அனுமதிப்பார்கள் என்றே நினைக்கிறேன்”, என்கிறார்.

இந்த உரையாடல்களால் இறுக்கமாக இருந்த அந்த சூழலை கலகலப்பாக்குவதற்காக திபாலி தான் அடிக்கடி செல்லும் தன் அம்மாவின் கிராமத்தில் நடந்த ஒரு திருமணம் குறித்து நோக்கம் ஏதுமின்றி சொல்லத் துவங்குகிறார். “நீங்கள் கிராமத்துத் திருமணங்களை கட்டாயம் காண வேண்டும். அவர்களின் உடைகளையும் நடனமாடும் விதத்தையும் நீங்கள் பார்க்கவேண்டுமே!”, என்கிறார். ஒரு வினாடி யோசித்து சட்டென்று, “அடுத்தமுறை நீங்களும் எங்களோடு வரவேண்டும்!”, என்கிறார். வரமுடியாததற்கு நாம் சொல்லும்  காரணங்கள் எல்லாம் அவரிடம் செல்லாது, அவர் அழைத்துவிட்டார், அவ்வளவுதான். அதில் பிடிவாதமாக இருக்கிறார்.

கத்புட்லி காலனி அங்கு வசித்து வரும் முக்கிய கலைஞர் சமூகத்தினாலே அறியப்படுகிறது. அங்கு வசிக்கும் தையல், மர வேலை, பாத்திர வேலை போன்றவற்றை செய்யும் சமூகத்தினரை விட சற்றே கூடுதல் கவனமும் செல்வாக்கும் பெற்று விளங்குகிறது இந்த சமூகம். இசை, கண்கட்டு வித்தை, நடனம், ஓவியம், அனைத்தும் இங்கே செழிக்கின்றன. கலை நிகழ்ச்சிகள்தான் அவர்களின் வாழ்வாதாரமே, எனவே அவற்றிற்கு முதன்மையான  முக்கியத்துவம் தரப்படுகிறது.

முகம்மது மஜிதிற்கு திறமையும், வாழ்வாதாரமும் கண்கட்டு வித்தைதான். ஒரு குறுகலான படிக்கட்டு, ஓரறையே உள்ள அவரது வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறது. சரியாக பளுவைத் தாங்கும் வகையில் கட்டப்படாத,  வசிக்க சற்றே ஆபத்தான வீடு. அங்குதான் அவர் தன் வித்தையைப் பயிற்சி செய்து மெருகேற்றுகிறார். வித்தையில் பயன்படுத்த அவர் அங்கு வைத்திருக்கும் பொருட்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. புத்தகங்கள், கயிறுகள், வாளிகள், குவளைகள், இப்படி. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்திருந்து வந்து, தன் வாழ்வின் பெரும்பகுதியை கத்புட்லி காலனியிலேயே கழித்திருக்கிறார். தன் தொழிலின் வரலாற்றை அவர் நினைவுகூர்கிறார். “துவக்கத்தில் ஆல்வாரைச் சேர்ந்த கண்கட்டு வித்தைக்காரர்கள் வேலை தேடி அலைந்த, பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள். கிராமத்தில் எங்கள் தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் வாழ்வாதாரத்திற்காக அதை நம்பும் அளவிற்கு வருமானம் இல்லை. ஆனால் இங்கு நகரத்தில் பணம் நிறைய கிடைக்கிறது. உணவு விடுதிகள், பிறந்தநாள் விழாக்கள் போன்றவற்றில் நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்திப் பிழைக்கிறோம்.”

அந்தப் பகுதியைச் சேர்ந்த 19 வயது துடிப்பான இளைஞரான ராஜேஷ் பட், இது போன்ற கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தருபவர். மஜித் ஒரு 30 நிமிட நிகழ்ச்சியின் மூலம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக அவர் சொல்கிறார்.

19 வயது ராஜேஷ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்றால், அவருக்கு சிறிதும் சளைக்காமல் இயங்குவது முன்னி என்ற இரண்டு வயது சிறுமி. அவரிடம் எந்த இசையைக் கொடுத்தாலும் அதற்கு அருமையாகத் தாளம் போடுகிறார். ராஜஸ்தானி நாட்டுப்புறப் பாடல்களுக்குக் கைதட்டித் தாளமெழுப்பும் பெரிய குழந்தைகள் கொண்ட குழுவில் இவர் சிரமமின்றி எளிதாகக் கலந்துவிடுகிறார். அவர்களுடன் சேர்ந்து ஹார்மோனியம், தபேலா, மின்சார கித்தார் ஆகியவை இசையெழுப்புகின்றன. பாடல் வரிகள் பரிச்சயமானதாகவே இருக்கின்றன, ‘பாதாரோ மாரே தேஸ்’, ‘ஆராராரா’, இப்படி. இந்த இசை எவ்வளவு பழமையானவை என்றெல்லாம் ராஜேஷுக்குத் தெரியாது. “எங்கள் தாத்தா பாட்டி சிறுவர்களாக இருந்தபோதே இவையெல்லாம் இருந்தனவாம். அவர்களுக்கு முன்பும் இவை இருந்திருக்கக்கூடும். இவை எங்கள் கிராமங்களில்தான் உருவாகியிருக்கவேண்டும்.”

பெரும்பாலான குடும்பங்கள் கத்புட்லி காலனிக்குக் குடியேறி முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்றைய தலைமுறை முழுக்க முழுக்க நகர சூழலில் வளர்க்கப்பட்டாலும், இன்றும் அவர்களின் தினசரி பழக்க வழக்கங்கள் கிராம வாழ்வையும் நகர வாழ்வையும் கலந்ததுபோலவே இருக்கின்றன. சமையல், சமூக உரையாடல்கள், திருமண சடங்குகள், கலை வடிவங்கள், உடைகள், சொந்த கிராமத்தோடு இன்றும் வைத்திருக்கும் உறவு என அனைத்தும் அடிப்படையில் கிராம வாழ்வைச் சார்ந்ததே. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆவலும், மேம்படுத்தலும் இந்த நகர வாழ்வு தந்தவை!

தற்பொழுது கத்புட்லி காலனி மக்களின் குழப்பமான மனநிலைக்குக் காரணம், தில்லி அரசாங்கம் ஒரு நகரமயமாக்கல் மாதிரியை இவர்களிடம் தள்ள முயற்சிப்பதை அந்த மக்கள் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிடவில்லை என்பதே.

Urvashi Sarkar

اُروَشی سرکار ایک آزاد صحافی اور ۲۰۱۶ کی پاری فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز اُروَشی سرکار