வடக்கு சூரத்தின் மினா நகரில் ரேணுகா பிரதான் தனது ஒற்றை அறைகொண்ட வீட்டில் தினமும் காலை 10 மணிக்கு பணியை தொடங்கிவிடுகிறார். அவரது வீட்டு முன்வாசல், வாசற்படி, சமையலறை தொட்டியின் கீழ் என எங்கும் புடவை பண்டில்கள் விரவிக் கிடக்கின்றன. கட்டிலுக்கு அடியில் கூட திணிக்கப்பட்டுள்ளன. வேகமாக ஒரு இளஞ்சிவப்பு - நீல நிற பாலிஸ்டர் புடவையை பிரிக்கும் ரேணுகா, அறைக்கு வெளியிலுள்ள தண்ணீர் குழாயில் அதைத் தொங்கவிடுகிறார்.
அருகே உள்ள வேத் சாலை உற்பத்தி ஆலையிலிருந்து இப்புடவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இயந்திரங்களில் புடவைகளுக்கு எம்பிராய்டரி செய்யும்போது பாலியஸ்டர் துணியின் பின்புறம் தளர்வான நூல்கள் தொங்கும். இவற்றை கவனமாக இழுத்து சரிசெய்துவிட்டு துணியை தேய்க்கவும், மடிக்கவும் செய்ய வேண்டும். அதன் பிறகே ஜவுளி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இங்கு தான் ரேணுகா போன்ற பணியாளர்களின் வேலை தொடங்குகிறது.
ஆள்காட்டி விரல், கட்டை விரலைக் கொண்டு தொங்கவிடப்படும் 75 புடவைகளில் தொங்கும் நூல்களை இழுக்கிறார். பாலிஸ்டர் பட்டு போன்ற விலை உயர்ந்த புடவையாக இருந்தால் தளர்வுற்ற நூல்களை கத்தி கொண்டு நறுக்குகிறார். “ஒவ்வொரு புடவைக்கும் ஐந்து முதல் ஏழு நிமிடங்களை செலவிடுகிறேன்,“ என்கிறார் அவர். “அதிகமாக நூல்களை இழுத்துவிட்டால் துணியை சேதப்படுத்திவிடும், பிறகு புடவைக்கான செலவையும் ஒப்பந்ததாரரிடம் நானே ஏற்க வேண்டிவரும். எனவே மிகவும் கவனமாக இருப்பேன்.“
ஒரு புடவைக்கு ரூ.2 வீதம் தினமும் ரூ.150 சம்பாதிக்கிறார் ரேணுகா. சில சமயம் ஏற்படும் தவறுகளால் கிட்டதட்ட ஐந்து நாள் ஊதியத்தையும் இழக்க நேரிடுகிறது. “தினமும் [எட்டு மணி நேரம்] செய்யும் வேலையின் முடிவில் என் கைவிரல்களில் எரிச்சல் ஏற்படும்,“ என்கிறார் அவர்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் பொலசாரா வட்டாரத்தில் உள்ள சனாபரகம் கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து விசைத்தறி பணியாளரான 35 வயதாகும் ரேணுகா, தனது கணவர் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் சூரத்தில் 17 ஆண்டுகளாக வசிக்கிறார். சூரத்தில் ஒடியா புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 8,00,000 பேர் வரை வசிப்பதாக (வாசிக்க: Synthetic fabric, authentic despair and Living in the rooms by the looms ) தோராயமான கணக்கெடுப்பு கூறுகிறது. நாட்டின் ஜவுளித் தலைநகரம் என அழைக்கப்படும் இந்நகர விசைத்தறி, ஜவுளித் தொழிற்சாலைகளில் அவர்களில் பெரும்பாலானோர் வேலை செய்கின்றனர். குஜராத் நெசவாளர்கள் சங்க கூடடமைப்பு, அதன் மானியத்தில் இயங்கும் பண்டேசாரா நெசவாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை ஜூலை 2018ஆம் ஆண்டு அளித்த அறிக்கைபடி, ஆண்டிற்கு ரூ. 50,000 கோடி விற்றுமுதல் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ஒடியா விசைத்தறி தொழிலாளர்களின் மனைவிமார்களில் ரேணுகாவும் ஒருவர். வடக்கு சூரத்தின் தொழிற்சாலை வளாகத்திற்குள் அல்லது அருகில் கிடைக்கும் இடங்களில் வசித்து கொண்டு அவர்கள் வேலை செய்கின்றனர். கூடுதல் நூல்களை அறுத்தல், துணிகளில் வண்ண கற்களை பதித்தல் போன்ற பணிகளும் அவற்றில் அடக்கம். இப்பணிகளின்போது ஏற்படும் கண் வலி, முதுகு வலி, வெட்டுக் காயங்கள் போன்ற உடல் அசெளகரியங்களுக்கு இழப்பீட்டு பலன்களும், பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு சம்பள ஒப்பந்தமோ, சமூக பாதுகாப்போ கிடையாது. பேரம் பேசும் அதிகாரமும் இல்லை.
“நான் 15 ஆண்டுகளாக வேலை செய்கிறேன், ஆனால் நிறுவனத்தின் பெயரோ, உரிமையாளர் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையில் பண்டல்கள் வரும், தினமும் இரவில் பணம் கிடைக்கும்,“ என்கிறார் ரேணுகா.
ரேணுகாவின் வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் வசிக்கும ஷாந்தி சாஹூவும் இதே வேலையைத் தான் செய்கிறார். அவர் கஞ்சம் மாவட்டம் பிரம்மபூர் சதார் வட்டாரம் படுகா கிராமத்திலிருந்து சூரத்திற்கு வந்துள்ளார். 40 வயதாகும் சாஹூ தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து மினா நகர் தோழிகளுடன் சேர்ந்து அருகில் உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு செல்கிறார். அடுத்த சில மணி நேரங்களுக்கு நீர் பிடிப்பது, சமைப்பது, துணி துவைப்பது என பல்வேறு வீட்டுவேலைகளை முடிக்கிறார் - விசைத்தறி ஆலையில் இரவுப் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும் கணவர் ஆர்ஜித் சாஹூவையும் அவர் கவனித்துக் கொள்கிறார்.
மகள் ஆஷா புடவை பண்டில்களை பிரிக்கத் துவங்குகிறார். “நாங்கள் குழுவாக வேலை செய்கிறோம்,“ என்று தனது 13 வயது மகள் ஆஷாவை சுட்டிக்காட்டி சொல்கிறார் சாஹூ. சூரத் நகராட்சி நடத்தும் ஒடியா வழி பள்ளியிலிருந்து ஆஷா இடைநின்றுவிட்டாள். அப்பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. அடுத்த வகுப்புகளுக்கு செலவு செய்து தனியார் பள்ளிகளுக்கு செல்வது அவர்களால் முடியாதது. சிக்கலான நூல் வேலைப்பாடு நிறைந்த விலை உயர்ந்த புடவைகளில் வேலைசெய்து தாயும்,மகளும் ஒரு புடவைக்கு ரூ.5, ரூ.10 என ஈட்டுகின்றனர். பிழைகளால் ஏற்படும் சுமையும் அதிகம். “எங்கள் அறையின் உயரம் என்பது மிகவும் குறைவு. ஒளியும் குறைவாக உள்ளதால் வீட்டிற்குள் இருந்துகொண்டு வேலைசெய்வது எங்களுக்கு சிரமமானது. வெளிப்புறத்தில் உயரத்தில் புடவையை தொங்கவிட்டு வேலை செய்வதால் நாள் முழுவதும் நிற்க வேண்டியிருக்கும். துணியில் ஏதும் கறை படிந்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்துவிடுவார்கள்,“ என்கிறார் சாஹூ.
ஜவுளித் தொழிலில் மிகவும் கடைநிலை பணியில் உள்ளதால் அலுவல் பதிவேடுகளில் அவர்கள் இடம்பெறுவதில்லை. வீட்டிலிருந்தபடி இப்பணியில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும் தெளிவாக கணக்கிடப்படவில்லை. “எந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்களிலும் அவர்கள் கையெழுத்திடுவதில்லை, அவர்களுக்கு வேலையளிக்கும் ஒப்பந்தக்காரரின் பெயர் கூட அவர்களுக்குத் தெரியாது,“ என்கிறது மேற்கிந்தியாவின் ஒடியா புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சூரத்தில் உள்ள ஆஜீவிகா பீரோ எனும் என்ஜிஓ அமைப்பு. “பல சமயங்களில், வீட்டிற்குள் வேலை செய்வதால் தொழிலாளியாக அவர்கள் கருதப்படுவதில்லை. அன்றாடம் உருப்படிகள் கணக்கில் இலக்கு நிர்ணயித்துக் கொண்டு சிறார்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் கூலி பற்றி அவர்கள் பேச முடிவதில்லை.“
குஜராத் குறைந்த ஊதிய சட்டப்படி, (2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை; விலை ஏற்றத்திற்கு ஏற்ப ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊதியத்தை உயர்த்த வேண்டும்), ஜவுளி உற்பத்தி, அவற்றின் துணை பொருட்கள், தையல் நிறுவனங்களில் வேலை செய்யும் திறனற்ற பணியாளர்கள் எட்டு மணி நேர பணியில் ஒரு நாளுக்கு ரூ.315 ஈட்ட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ரேணுகா, சாஹூ போன்ற ஒடிசா பெண்கள் உருப்படிகள் கணக்கில் வேலை செய்வதால் மாநில அரசின் குறைந்த ஊதிய விகிதத்தைவிட சுமார் 50 சதவீதம் குறைவாகவே பெறுகின்றனர். இதே நூல் அறுக்கும் வேலையை தொழிற்சாலைகளில் செய்யும் பெண்கள் மாதம் ரூ.5000-7000 வரை பெறுகின்றனர். கூடுதல் நேர பணிக்கான ஊதியம், தொழிலாளர் காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு அம்சங்களும் கிடைக்கின்றன. ஆனால் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் பெண்கள் பணிச் செலவையும் கூடுதலாக ஏற்று மாதம் ரூ.3000க்கு மேல் சம்பாதிப்பதில்லை.
“10 ஆண்டுகளாக ஒரு புடவைக்கு ரூ.2 தான் பெறுகிறேன். என் ஊதியத்தை உயர்த்தித் தருமாறு ஒப்பந்ததாரிடம் கேட்டாலும், வீட்டிலிருந்து செய்யும் திறனற்ற வேலை இதுவென்று அவர் சொல்கிறார். நான் செலுத்தும் மின் கட்டணம், அறை வாடகையை யார் கொடுப்பார்?“ என்கிறார் 32 வயதாகும் கீதா சமல் கோலியா. அவரது கணவர் ராஜேஷ் விசைத்தறி பணியாளர். மினா நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஷ்ராம் நகரில் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.சுரண்டப்படும் துணிகள் துறை என்ற தலைப்பில் 2019 பிப்ரவரியில் கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது: அதில், வீட்டிலிருந்தபடி இந்திய துணிகள் தொழிலில் ஈடுபடுவோரில் 95.5 சதவீதம் பேர் பெண்கள் என்கிறது பெண்களும், சிறுமிகளும் சுரண்டப்படும் வீடு சார்ந்த துணிகள் துறை. நவீன அடிமைத்தனம் பற்றிய ஆராய்ச்சியாளர் சித்தார்த் காராவின் அறிக்கை, பணியின்போது காயமடையும் தொழிலாளர்களுக்கு எவ்வித மருத்துவ உதவியும் அளிக்கப்படுவதில்லை, அவர்கள் எந்த தொழிலாளர் சங்கத்திலும் சேர்க்கப்படுவதில்லை, எந்த எழுத்துப்பூர்வ பணி ஒப்பந்தமும் செய்யப்படுவதில்லை என்கிறது.
சூரத் ஜவுளித் தொழிலில் வீட்டிலிருந்தபடி பெண்கள் வேலை செய்வதால் அதிகாரப்பூர்வ பணியாக அறியப்படுவதில்லை. தொழிற்சாலை - பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தொழிற்சாலை சட்டம் 1948 போன்ற எந்த தொழிலாளர் சட்டத்தின் கீழும் அவர்கள் வருவதில்லை என்பதே இதன் பொருள்.
“வீடு சார்ந்த பணி ஒப்பந்தம் என்பது ஒரு சமூக உறவாக [முதலாளி -தொழிலாளி உறவு அல்ல] மட்டுமே உள்ளது”, எந்த தொழிலாளர் சட்டங்களும் பொருந்துவதில்லை. “இப்பணி பாதி ஒப்பந்தம் அடிப்படையில் உள்ளதால் அவற்றை சரிபார்க்கும் முறையும் கிடையாது,“ என்கிறார் சூரத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் ஜிஎல் படேல்.
“பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலை வளாகத்திற்குள் காயமடைந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ், இழப்பீடு அளிக்கப்படும்,“ என்கிறார் சூரத் விசைத்தறி சேவை மையத்தின் (மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது) உதவி இயக்குநரான சித்தேஸ்வர் லோம்பி. “இத்துறையில் பெண் தொழிலாளர்கள் பங்கு வகித்தாலும், வசதிகேற்ற நேரத்தில் வீட்டிற்குள் வேலை செய்வதால் அவர்களின் பணி நேரம், நிலைகள், காயங்களை ஆவணப்படுத்துவது மிகவும் கடினம்.“
எவ்வித நிறுவன பாதுகாப்பு, சமூக ஆதரவு வசதிகள் இல்லாதபோதும் கஞ்சமின் பகுடா வட்டாரம் பொகோடா கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்த 30 வயதாகும் ரஞ்சிதா பிரதான் விஷ்ராம் நகரில் ஒரே “ஒடியா பெண் ஏஜென்ட்“ என்ற பெயரை பெற்றுள்ளார். “ஆண் ஒப்பந்தக்காரர்களுடன் வேலை செய்வது மிகவும் கடினமானது, நேரத்திற்கு பணம் கொடுக்க மாட்டார்கள். காரணமின்றி ஊதியத்தை குறைப்பார்கள்,“ என்கிறார் 13 ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்தபடி வேலையை தொடங்கிய ரஞ்சிதா.
2014ஆம் ஆண்டு வேத சாலையில் உள்ள துணிகள் ஆலையின் உரிமையாளரை நேரடியாக அணுகிய ரஞ்சிதா தன்னிடம் நேரடி ஒப்பந்த பணி கொடுத்தால் “நல்ல தரமான வேலையை“ செய்து தருவதாக உறுதி அளித்தார். அன்றிலிருந்து அருகமையில் உள்ள மூன்று துணி ஆலைகளில் இருந்து கல் பதிக்கும் பணிகளை துணை ஒப்பந்தமாக பெற்று அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 பெண்களுக்கு வேலை கொடுத்து வருகிறார். எழுதப்படாத இப்பணி ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு முன்னிரவிலும் பணியாளர்களிடம் ஒரு கிலோ ஜமுக்கி, துணி ஒட்டும் கோந்துகளை ரஞ்சித தருகிறார். தினமும் காலையில் துணிகளும் அவர்களை வந்தடைகின்றன. ஒவ்வொரு தொழிலாளரும் ஒருநாளில் 2,000 ஜமுக்கி வரை ஒட்டி தினமும் ரூ.200 வரை சம்பாதிக்கின்றனர்.
“அவர்களில் நானும் ஒருத்தி என்பதால் என்னை நம்புகின்றனர்,“ என்கிறார் ரஞ்சிதா. “சிக்கலான வடிவங்களை நிரப்புவதற்கு பல மணி நேரம் பெண்கள் முதுகை வளைத்து வேலை செய்ய வேண்டும். முதுகு வலி, கண் எரிச்சலும் ஏற்படும். இதுபற்றி எங்கள் கணவர்களிடம் சொன்னால் கூட, இது ஒரு பொழுதுபோக்கு தானே, உண்மையான வேலை இல்லையே என்று சொல்வார்கள்.“
மாலை 7 மணி ஆகிறது. விசைத்தறி வேலை முடிந்து வீடு திரும்பும் கணவனுக்காக ரஞ்சிதா காத்திருக்கிறார். அன்றாட பணியாக பண்டல்களையும் பிரிக்கிறார். கடந்த 13 ஆண்டுகளாக எல்லா நாளும் ஒன்றுபோலவே இருக்கிறது. “கஞ்சம் திரும்பி ஒரு நாள் வீடு கட்டுவோம் என்ற நம்பிக்கையோடு நாங்கள் சூரத்திற்கு வந்தோம்,“ என்கிறார் அவர். “இங்கும் எங்களால் சேமிக்க முடியவில்லை, அன்றாடத்தை மட்டும் கழித்து வருகிறோம்.“தமிழில்: சவிதா