நான் ஒரு தொழிலாளி, சுமை அல்ல
நான் வெறும் தொழிலாளி
ஒரு உதவியாளர், உதவி வேண்டுபவனல்ல.
நானும் மனிதன்தான்
உங்களின் வானளாவிய கட்டிடங்கள்
எங்களின் குப்பங்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை.
உங்கள் வீட்டுச்சுவர்களில்
எங்கள் வியர்வை பூசப்பட்டிருக்கிறது.
ஆம், நான் ஒரு தேசியவாதி
வளர்ச்சியில் முதன்மையானவன்
இந்த மெட்ரோ ரயில்
வழுக்கும் அந்த நெடுஞ்சாலை
என் உழைப்பும் என் ரத்தமும்
எல்லா இடங்களிலும் இருக்கிறது
ஆம், நான் தற்சார்பானவன்
வண்டியில் சப்ஜி விற்கிறேன்
நடைபாதையில் மோமோ விற்கிறேன்
உங்கள் வீட்டின் அழுக்கை நான் சுத்தப்படுத்துகிறேன்
வெளியிலும் செய்கிறேன்
உங்களின் மலக்குழியில் நான் இறங்குகிறேன்
வாழ்வதற்கான உரிமையை நான் விற்கிறேன்
ஆம், நான் ஒரு ஏழைதான்.
என் வியர்வையை விற்கிறேன்
இப்போதெல்லாம் நீங்கள் என்னை பார்த்திருப்பீர்கள்
தெருக்களில் கும்பல்களில் இருக்கிறேன்
இங்கும் அங்குமாக ஓடுகிறேன்
அடி வாங்குகிறேன்
உடைந்து போகிறேன்
அழிக்கப்பட்டிருக்கிறேன்
இறந்து கொண்டிருக்கிறேன்
பசியோடிருக்கிறேன்
தாகத்தோடிருக்கிறேன்
எங்குமே செல்லாத சாலைகளில்
ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறேன்
என் வயிற்றில் உதைக்கிறீர்கள்
இலகுவான என் சுயமரியாதையை
உடைக்கறீர்கள்
நீங்கள் கருணைமிக்கவர்கள்
நாங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கிறீர்கள்
நீங்கள் தயாள மனம் கொண்டவர்கள்
நாங்கள் இறப்பதற்கு அனுமதிக்கிறீர்கள்
நீங்கள் இரக்கம் படைத்தவர்கள்
நாங்கள் கிளம்பியபோது
பேருந்துகளை நீங்கள் நிறுத்தினீர்கள்
தண்டவாளங்களில் நடந்தோம்
எஞ்சின்களை அனுப்பி எங்கள் மேலேற்றினீர்கள்
ஏன் அப்படி செய்தீர்கள்?
நான் ஏழை என்பதாலிருக்கலாம்.
நீங்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள்
எனக்கு தெரியும்
நீங்கள் காட்சிகளை பார்க்கிறீர்கள்
சூரியன் உருகியோடும் சாலைகளில்
ஆயிரக்கணக்கில்
நாங்கள் நடப்பதை பார்க்கிறீர்கள்
நீங்கள் பரிதாபப்படுவீர்கள்
மிக மோசமாக உணர்வீர்கள்
உங்கள் கண்கள் பரிதாபமாக
நாளையை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்.
கவலைப்படாதீர்கள்
நான் வெறும் ஒரு தொழிலாளி
சுமை அல்ல
நான் ஒரு மனிதன்
ஏழை
நம்புங்கள்
நிலைமை சரியான பிறகு
மீண்டும் நான் வருவேன்
நான் வராமல்
நீங்கள் எப்படி வளர்ச்சி அடைவீர்கள்?
நகரங்கள் எப்படி விரிவடையும்?
புல்லட் ரயிலைப் போல்
நாடு எப்படி ஓடும்?
நிச்சயமாய் நான் வருவேன்
நான் சாலைகள் போடுவேன்
நான் மேம்பாலங்கள் கட்டுவேன்
நான் கட்டிடங்களை உயரமாக்குவேன்
நான் நாட்டை இந்த கைகளால்
முன்னோக்கி கொண்டு செல்வேன்
நான் ஒரு தொழிலாளியாய் இருந்தவன்
நான் தொழிலாளியாக இருப்பவன்
எப்போதும் தொழிலாளியாக இருக்கப் போகிறவன்
ஒலி: சுதன்வ தேஷ்பாண்டே ஜன நாட்ய மஞ்சில் நடிகராகவும் இயக்குநராகவும் இருப்பவர். LeftWord Books-ல் ஆசிரியராக இருக்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்