ராம் வக்சௌரே தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சந்தையில் தினமும் காலையில் 275 மாணவர்கள் மற்றும் பிறருக்கு தேவையான காய்கறிகளை வாங்குகிறார் - மூன்று கிலோ உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், தக்காளி மற்றும் பல. "ஒவ்வொரு காய்கறியின் விலையும் மனப்பாடமாக எனக்குத் தெரியும். எனது மோட்டார் சைக்கிளில் காய்கறி பைகளை தொங்கவிட்டு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்வேன்", என்கிறார் வீர்காவுன் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க  பள்ளியின் இந்த ஆசிரியர்.

ஜூன் மாதம் அகமதுநகரின் அகோலா தாலுகாவிலுள்ள கலாஸ்கவுன் கிராமத்தில் வசிக்கும் 44 வயதாகும் வக்சௌரே, 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீர்கவுனில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டார். கலாஸ்கவுன் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக அவர் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார். இப்போது அவரது முக்கிய கடமை மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது ஆகும் (துவக்கப் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் இதை செயல்படுத்த வேண்டும்).

"தலைமை ஆசிரியரால் எல்லாவற்றையும் செய்ய முடியாது, எனவே அவர் பொறுப்புகளை பிரித்து ஒப்படைத்துள்ளார்", என்று அப்போது அவர் நிரப்பிக் கொண்டிருக்கும் மதிய உணவு பதிவேட்டிலிருந்து கண்ணெடுத்தும் பாராமல் கூறுகிறார். "அரசாங்க வேலையில் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்பு அளித்தாலும் நான் ஒரு ஆசிரியராகவே உணரவில்லை" என்று கூறுகிறார்.

வக்சௌரேவுக்கு வழங்கப்படும் கல்வி சாராத பணிகள் வழக்கமானதே - மகாராஷ்டிராவில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இத்தகைய கல்வி சாராத பணிகள் அடிக்கடி ஒதுக்கப்படுகிறது. இது அவர்கள் கல்வி கற்பிக்கும் நேரத்தை குறைத்து விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஏழாம் வகுப்பு வரை கொண்ட வீர்காவுன் பள்ளியில் வக்சௌரேவுடன் பணியாற்றுபவரான 42 வயதாகும் சபாஜி தாதிர், இந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வேலைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது என்று கூறுகிறார். சராசரியாக ஒரு வாரத்திற்கு 15 மணி நேரம் கல்வி சாராத பணிகளில் தான் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறுகிறார். அவை பெரும்பாலும் பள்ளி நேரத்துடன் ஒத்துப் போவதாகவும் (ஒரு நாளைக்கு 4 மணி நேரம்) கூறுகிறார். "நாங்கள் எங்களால் முடிந்த வரை பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிக்க முயற்சிக்கிறோம்". ஆனால் இரண்டு வேலைகளும் ஒத்துப் போகின்ற வேளையில் கல்வி சாராத பணிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

வீர்காவுன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கற்பித்தல் மற்றும் கல்வி சாராத பணிகளுக்கு இடையில், ராம் வக்சௌரே (இடது) மற்றும் சபாஜி தாதிர் (வலது)

"2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வி உரிமை சட்டத்தின் (RTE) படி (குறிப்பாக பிரிவு 27), தேர்தல் நேரத்தில், இயற்கை பேரிடர் காலங்களில் மற்றும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய பணிகளுக்கு மட்டுமே, ஆசிரியர்கள் கல்வி சாராத பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது", என்று தாதிர் கூறுகிறார்.

ஆனால் மகாராஷ்டிராவின் அரசுப் பள்ளிகளில் உள்ள 3 லட்சம் ஆசிரியர்கள் பிற நேரங்களிலும் கூட மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநில அரசுக்கும் பல்வேறு கல்வி சாராத பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் - கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பு, அரசாங்க நலத்திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்கிறதா என்பதை ஆராய்வது, கழிவறைகளை கிராமத்தினர் சரியாக பயன்படுத்துகின்றனரா என்பதை பரிசோதிப்பது, மேலும் திறந்தவெளியில் மலம் கழிப்பது குறித்த தீமைகளை அவர்களிடம் எடுத்துரைப்பது ஆகியவை. (காண்க மின்சாரம் தண்ணீர் கழிப்பறைகள் இல்லாமல் திணறும் மாவட்ட பள்ளிகள் )

இந்தக் கூடுதல் பணிகளுக்கான ஊதியம் ஆசிரியர்களுக்கு சரியாக வழங்கப்படுவதில்லை. ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் பட்டப்படிப்பும் ஆசிரியர் பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும் மேலும் ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பும் பெற்றிருக்க வேண்டும், இவர்கள் ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 25,000 பெறுவர். அதிகபட்சமாக தலைமை ஆசிரியராக இருப்பவர் பல வருடங்களுக்குப் பின்னர் மாதம் 60,000 ரூபாய் சம்பளமாகப் பெறுவார். இந்த ஊதியத்தில் பல படிகளும் அடங்கும் கிராகிப்படி, பயணப்படி மற்றும் வாடகைப்படி ஆகியவையும் மற்றும் பலவும். மேலும் இந்த ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருந்து தொழில்முறை வரி மற்றும் ஓய்வூதிய பங்களிப்புகள் உட்பட பல்வேறு தொகைகள் கழிக்கப்பட்டுவிடும். மணிக்கணக்கில் செய்யப்படும் கல்வி சாராத பணிகளுக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

“RTE 2009 இன் படி தேர்தல் நேரத்தில், இயற்கை பேரிடர் காலங்களில் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய பணிகளுக்கு மட்டுமே, ஆசிரியர்கள் கல்வி சாராத பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது", என்று தாதிர் கூறுகிறார்.

"ஜூன் மாதம் வீர்காவுன் பள்ளிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு சந்த்வார்டு தாலுகாவிலுள்ள உர்துல் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த நாற்பது வயதாகும் தேவி தாஸ் கிரே, நாசிக்கில் இருக்கும் ஒரு கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற கணக்கெடுப்பை எடுப்பதற்கு நான் ஒருமுறை சென்றிருக்கிறேன்", என்று கூறுகிறார். "ஒரு பங்களாவின் உரிமையாளர் குடும்பத்தினர், என்னை 'அவர்களது பெயரையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என்று கூறி மிரட்டினர். நமது ஆசிரியர்களை நாம் என்னவாக குறைத்துக் கொண்டு வருகிறோம்? எங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை கிடையாதா? இது மிகவும் அவமானமாக இருக்கிறது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வெடுக்க முடிவதில்லை", என்று கூறுகிறார்.

பிற நேரங்களில் ஒரு வாக்குச்சாவடி மைய அதிகாரியாக வீடு வீடாகச் சென்று கிராமத்தில் வசிப்பவர்களிடமிருந்து இடப்பெயர்வு, இறப்பு மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான ஆவணங்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது என்று கிரே கூறுகிறார். பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த  குழந்தைகள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். "இது வருடம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்", என்கிறார். "நாங்கள் சரியாக கற்பிக்கவில்லை என்று எங்களுக்கு மெமோ வழங்கப்பட்டால் அதைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எத்தனை கழிவறைகள் இருக்கின்றன என்ற கணக்கெடுப்பு வேலையில் எங்களால் மெத்தனமாக இருக்க முடியாது", என்று கூறுகிறார்.

தாங்கள் செய்ய வேண்டிய பணி அல்லாத பிற பணி செய்து சோர்வடைந்த அகோலாவைச் சேர்ந்த 482 ஆசிரியர்கள் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதியன்று பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மராத்தியில் ('எங்களை பாடம் நடத்த விடுங்கள்') என்ற பதாகைகளை வைத்திருந்தனர்.

அகோலாவைச் சேர்ந்த ஆர்வலரும் வீர்காவுன் பள்ளியின் ஆசிரியருமான பௌ சஸ்கார், இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். கடந்த பத்து வருடங்களில் கல்வி சாராத பணி சுமைகள் அதிகரித்துவிட்டன என்று கூறுகிறார். "நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. வருவாய் மற்றும் திட்டமிடல் துறைகளில் பல பதவிகள் காலியாக இருக்கின்றன மேலும் அப்பணிகள் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய கல்வி சாராத பணிகளில் நாங்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் போது மக்களிடையே ஆசிரியர்களைப் பற்றிய மரியாதை குறைந்து வருகிறது. அவர்கள் எங்களை மெத்தனமாகவும், ஒழுக்கமற்றதாகவும் இருப்பதாக குறை கூறுகின்றனர். அந்தப் போராட்டத்திற்கு பின்னர் சிறிது காலத்திற்கு நாங்கள் அதிகமாக அழைக்கப்படவில்லை. ஆனால் அது இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டது", என்று கூறுகிறார்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

எங்களை பாடம் நடத்த விடுங்கள் : கட்டாயப்படுத்தி கூடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிராக 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல நூறு ஆசிரியர்கள் பௌ சஸ்கார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்குபெற்றனர்

பெண் ஆசிரியைகள் இன்னும் அதிகமாக போராட வேண்டியிருக்கிறது. உஸ்மானாபாத் நகரத்தில் இருக்கும் பெண்கள் பள்ளியில் ஆசிரியராக  பணி புரியும் நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் தபசும் சுல்தானா, கல்விப்பணி, கல்வி சாராத பணி, வீட்டு வேலைகள் ஆகியவைகளுக்கு மத்தியில் நாங்கள் அல்லாட வேண்டியிருக்கிறது என்று கூறுகிறார். "ஆசிரியர்களின் வேலை நேரம் பாலினத்திற்கு அப்பாற்பட்டு ஒன்றாகவே இருக்கிறது", என்று அவர் கூறுகிறார். "ஆனால் நாங்கள் கூடுதலாக எங்கள் மாமனார் மாமியார் மற்றும் குழந்தைகளை கவனிக்க வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு உணவு சமைக்க வேண்டியிருக்கிறது, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அங்கு எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது", என்று கூறுகிறார். தபசும் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருவருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். "அவர்கள் வளர்ந்து விட்டனர்", என்கிறார். "குறிப்பாக அவர்கள் பள்ளியில் இருக்கும் போது தான் அது மிகவும் சிரமமாக இருக்கும். இப்போது எல்லாம் பழகி விட்டது", என்று கூறுகிறார்.

ஆசிரியர்கள் தான் மென்மையான இலக்குகள் என்று 'ஆசிரியர் தொகுதியில்' (ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட) மகாராஷ்டிரா சட்ட மன்ற உறுப்பினர் கபில் பாட்டீல் கூறுகிறார். அவர்கள் படித்து இருக்கின்றனர், அரசு ஊழியர்கள் மற்றும் எளிதாக கிடைக்கக் கூடியவர்கள். மகாராஷ்டிராவில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் (மேலும் காண்க: சில நேரங்களில் பள்ளியை போன்ற ஒரு இடம் இருப்பதில்லை ) பாடம் எடுப்பதற்கு ஆசிரியர்கள் இருப்பதில்லை ஆனால் அதன் பொருள் அவர்கள் விடுமுறையில் இருக்கின்றனர் என்பதல்ல. அவர்கள் வேறொரு இடத்தில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். தவிர இதனால் மாணவர்கள் தான் மிகவும் பாதிப்படைகின்றனர் ஏனெனில் இது நேரடியாக கல்வியின் தரத்தை பாதிக்கிறது", என்று கூறுகிறார்.

கல்வி பெறுவதற்கு மஹாராஷ்டிராவில் உள்ள  61,659 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் சுமார் 4.6 மில்லியன் மாணவர்கள் (2017 - 18 புள்ளி விவரங்களின்படி) உள்ளனர்.இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.  ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்குகின்றன, பெரும்பாலான மாணவர்கள்  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பலர்  தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களால் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க முடிவதில்லை. "இது சமூகத்தின் ஒரு பிரிவின் கல்வியையே சமரசம் செய்கிறது", என்று சோலாப்பூரைச் சேர்ந்த ஆர்வலரும் ஆசிரியருமான நவ்நாத் கெண்ட் கூறுகிறார். "ஆனால் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி மைய அதிகாரியாகப் பணியாற்ற மறுக்கும் போது உள்ளூர் நிர்வாகம் அவர்களை மிரட்டுகிறது", என்று கூறுகிறார்.

Teachers hanging around at virgaon school
PHOTO • Parth M.N.
Children playing in school ground; rain
PHOTO • Parth M.N.

வட்டார அளவிலான அதிகாரிகளாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் அவர்களால் வகுப்புகளை நடத்த முடிவதில்லை, இதன் விளைவாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது

சோலாப்பூர் மாவட்டத்தின் மாதா தாலுகாவில் உள்ள மோட்நிம்ப் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியரான பரமேஸ்வர சுர்வாசே, வாக்குச்சாவடி மைய அதிகாரியாக பணியாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து  அடுத்து 2017 ஆம் ஆண்டு நவம்பரில் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. "தரமான கல்வி வழங்குவதே எனது பொறுப்பு", என்று அவர் கூறுகிறார். "எங்களது பள்ளியில் 6 ஆசிரியர்கள், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக பணியாற்றும்படி பணிக்கப்பட்டோம். நாங்கள் ஒரே நேரத்தில் ஆறு ஆசிரியர்கள் பள்ளியை விட்டு செல்லமுடியாது இல்லையேல் மாணவர்கள்  என்று கூறினோம். நாங்கள் வட்டாட்சியரை சந்திக்க வேண்டினோம்", என்று கூறினார்.

நாங்கள் சரியாக கற்பிக்கவில்லை என்று எங்களுக்கு மெமோ வழங்கப்பட்டால், அதைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. மாறாக வட்டாட்சியர் கூறுகின்ற கழிவறைகள் கணக்கெடுப்பில் எங்களால் மெத்தனமாக இருக்க முடியாது", என்று கூறுகிறார்.

ஆனால் சோலாப்பூர் நகரிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் இந்த ஆறு ஆசிரியர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. "உத்தரவுகளை பின்பற்ற மறுத்துவிட்டதாகவும் எங்கள் வேலையை செய்யவில்லை என்றும் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டோம்", என்று அவர் கூறுகிறார். “எங்களால்  அதற்கு மேலும் வாதிட முடியவில்லை. நாங்கள் அதற்கு  கட்டுப்பட்டோம் இதன் பொருள் எங்களால் அடுத்த ஒரு மாதத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாது என்பதே. வாக்குச்சாவடி நிலைய அதிகாரியாக எங்களது பணி இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, நாங்கள் சிலமுறை காவல் நிலையத்திற்கு வேறு சென்று வர வேண்டியிருக்கிறது. எங்களில் இருவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் நாங்கள் பாடம் எவ்வாறு நடத்துவது? 40 மாணவர்கள் எங்களது பள்ளியை விட்டு சென்றுவிட்டனர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்துவிட்டனர்", என்று கூறினார்.

தத்தாத்திரேயர் சுர்வேயின் 11 மகன் விவேக்கும் அதில் ஒருவன். சுர்வே 2.5 ஏக்கர் நிலத்தில் கம்பு மற்றும் சோளம் பயிரிட்டு வரும் ஒரு விவசாயி, "பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தேன், அவர் ஆசிரியர்கள் தங்களது வேலையை செய்கின்றனர் என்று கூறினார்", என்று சுர்வே கூறுகிறார். ஒரு கல்வி ஆண்டில் 200 நாட்களுக்கு பள்ளி கூட வேண்டியிருக்கிறது. அந்த நாட்களிலும் ஆசிரியர்கள் அங்கு இருக்கப் போவதில்லை என்றால் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் என்ன பலன்? என்று கேட்கிறார். “இது ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள மாணவர்களை அரசு கவனிப்பதில்லை என்பதையே காட்டுகிறது", என்று கூறுகிறார்.

தனது மகனுக்கு மிகச் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக சுர்வே கூறுகிறார். "விவசாயத்திற்கு எதிர்காலம் இல்லை", என்கிறார். 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தனது மகனை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார். வருடத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துகிறார். “ஆனால் இந்த புதுப்பள்ளியினால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் அது மிகவும் நேர்த்தியான பள்ளி", என்று கூறுகிறார்.

PHOTO • Parth M.N.

தலைமையாசிரியர் அனில் மோகித் தனது மாணவர்களும் அவரும் வெவ்வேறு மொழிகளைப் பேசும் பள்ளிக்கு மாற்றப்பட்டு அங்கு தன் பணியை புதியதாக துவங்க இருக்கிறார்

ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் குறித்து மாநில அரசு பெரிதாக அக்கறை காட்டவில்லை என்பதை இந்த தொடர்ச்சியான பல புகார்கள் காட்டுகின்றன என்கிறார் கபில் பாட்டீல். "இது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர்களின் மாநில அளவிலான இட மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது", என்று கூறுகிறார். இந்த இடமாற்றங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு காரணம் என்னவென்றால் தொலைதூர பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் நகரங்கள் அல்லது நன்கு இணைக்கப்பட்ட கிராமங்களில் தங்கி பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினர். ஆனால் பாட்டீல், ஒரு ஆசிரியரிடமிருந்து தனது இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி எழுதப்பட்ட கடிதத்தை கையில் வைத்தபடி, "அரசு மாணவர்களைப் பற்றியும் சிந்திக்க வில்லை ஆசிரியர்களைப் பற்றியும் சிந்திக்கவில்லை", என்று கூறுகிறார்.

அகமதுநகரில் உள்ள 11,462 பேரில் 6189 பேர் (அதாவது 54% பேர்) இடமாற்ற உத்தரவுகளை பெற்றதாக மாவட்ட கல்வி அலுவலர் ரமாகாந்த் காட்மோர் கூறுகிறார். இந்த சதவிகிதம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீராக இருக்கிறது. இது ஒரு வழக்கமான நடைமுறை", என்று கூறுகிறார்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுள் ரமேஷ் உத்தர்கர் என்பவரும் ஒருவர். அவர் தேவ்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாற்றுகிறார். "புல்தானா நகரில் உள்ள எனது வீட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது", என்று அவர் கூறுகிறார். 2018 ஆம் ஆண்டு மே மாதம் அவர் 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மோமினாபாத் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாற்றப்பட்டார். "எனது மனைவி நகராட்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார், எனவே அவரால் இடம்மாற முடியாது", என்று கூறுகிறார். “நான் பள்ளிக்கு தினமும் பயணித்து செல்கிறேன். ஒரு வழிக்கு இரண்டு மணி நேரம் ஆகிறது", என்று கூறுகிறார். உத்தர்கர் இரண்டு புதினங்களை எழுதி இருக்கிறார் மற்றும் 2 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார், இவரது படைப்பு மாநில இலக்கிய விருதை வென்றுள்ளது. ஆனால் அவரது இடமாற்றத்திற்கு பிறகு, அவரால் படிக்கவோ அல்லது எழுதவோ முடிவதில்லை. "இவ்வளவு தூரம் பயணம் செய்வது சோர்வாக இருக்கிறது. இது என் வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது", என்று கூறுகிறார்.

44 வயதாகும் அனில் மோஹித் தனது சொந்த ஊரான அகோலாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆதிவாசி கிராமமான செல்விகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியர் பதவி ஏற்கும்படி கூறி மாற்றப்பட்டார். மோஹித்திற்கு கோலி மஹாதேவ் ஆதிவாசி மாணவர்களின் மொழி புரியவில்லை அவர்கள் சரளமாக மராத்தி பேசுவதில்லை. “மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவது? இதற்கு முன்பு நான் ஔரங்கப்பூரில் (அகோலாவில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள )உள்ள  பள்ளியில் 4 வருடம் வேலை பார்த்து வந்தேன். எனக்கு எனது மாணவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி நன்கு தெரியும். அவர்களும் என்னை நன்கு அறிவர். எங்களுக்குள் ஒரு நல்லுறவு இருந்தது. இப்போது நான் புதியதாக துவங்க வேண்டும்" என்று கூறுகிறார்.

பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இருப்பதைப் போலவே செல்விகிரியில் உள்ள அவரது பள்ளியிலும் இணைய இணைப்பு கிடைப்பது சிரமமாக உள்ளது. "நாங்கள் மதிய உணவு திட்டம் மற்றும் வருகை பதிவேட்டை இணையத்தில் பதிவேற்ற வேண்டியிருக்கிறது", என்று மோஹித் கூறுகிறார். (காண்க: சிறிதளவு உணவு பசியுள்ள மாணவர்களுக்கு பெரிய விஷயம் ) "இணையத்தில் செய்ய வேண்டிய வேலை சுமார் 15 வேலைகள் இருக்கின்றது. இந்தப் பள்ளியில் அதை செய்யவே முடியாது. அதை நான் எழுதிக் கொண்டு வீட்டிற்குச் சென்று அங்கிருந்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். ஏற்கனவே வேலைப் பளுவால் மூழ்கியிருக்கும் எங்களுக்கு இது மேலும் ஒரு பணிச்சுமை", என்று கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Parth M.N.

پارتھ ایم این ۲۰۱۷ کے پاری فیلو اور ایک آزاد صحافی ہیں جو مختلف نیوز ویب سائٹس کے لیے رپورٹنگ کرتے ہیں۔ انہیں کرکٹ اور سفر کرنا پسند ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Parth M.N.
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

کے ذریعہ دیگر اسٹوریز Soniya Bose