ஜூன் 16, 2022 அன்று, அசாமின் நகாவோன் கிராமத்தைச் சேர்ந்த பலரையும் போல, லபா தாஸ் அவநம்பிக்கையுடன் மணல் மூட்டைகளை நனோய் நதி கரைகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். பிரம்மபுத்திரா நதியின் கிளை ஆறான நானோய் கரை தாண்டப் போகும் தகவல் 48 மணி நேரங்களுக்கு முன்பு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தர்ரங்க் மாவட்டத்தின் கரையோர கிராமங்களுக்கு மணல் மூட்டைகள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டிருந்தது.
“நள்ளிரவு 1 மணிக்கு (ஜூன் 17) கரை உடைந்தது,” என்கிறார் நகாவோனின் சிபாஜர் ஒன்றியத்தின் ஹிரா சுபுரி குக்கிராமத்தில் வசிக்கும் லபா. “பல்வேறு இடங்களில் கரை உடைந்து கொண்டிருந்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” ஐந்து நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. தென்மேற்குப் பருவமழை மாநிலம் முழுக்க மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அடித்துக் கொண்டிருந்தது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், ‘தீவிர கனமழையை’ (244.5 மிமீ அதிகமான மழை ஒருநாளில்) ஜூன் 16-18ல் எதிர்பார்த்து சிவப்பு நிற எச்சரிக்கையை அசாம் மற்றும் மேகாலயாவுக்கு விடுத்திருந்தது.
ஜூன் 16ம் தேதி இரவு 10.30 மணிக்கு நானோய் தன் சக்தி முழுவதையும் திரட்டி நகாவோனுக்கு ஒரு கிலோமீட்டர் தெற்குப்பக்கம் இருக்கும் கஸ்திபிலா கிராமத்தின் கலிதாபரா குக்கிராமத்துக்குள் புகுந்தது. ஜெய்மதி கலிதாவும் அவரின் குடும்பமும் வெள்ளத்தில் மொத்தத்தையும் இழந்தனர். “ஒரு கரண்டி கூட மிச்சம் இருக்கவில்லை,” என்கிறார் அவர் தகரம் வேயப்பட்ட தற்காலிக தார்ப்பாய் வசிப்பிடத்தின் வெளியே அமர்ந்தபடி. “நெற்களஞ்சியம் மற்றும் மாட்டுக் கொட்டகை உள்ளிட்ட எங்களின் மொத்த வீடுகளும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது,” என்கிறார் அவர்.
அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தினசரி வெள்ளச்சேத அறிக்கையின்படி ஜூன் 16ம் தேதி, 28 மாவட்டங்களைச் சேர்ந்த 19 லட்ச மக்கள் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த இரவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் வாழும் தர்ரங்கும் ஒன்று. நானோய் கரையுடைத்த இரவில் பெகி, மனாஸ், பக்லாடியா, புதிமாரி, ஜியா-பராலி மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய ஆறு நதிகள் ஆபத்தான உயரத்தை எட்டியிருந்தன. அதற்குப் பிறகு ஒரு வாரத்துக்கு கனமழை மாநிலத்தை நாசம் செய்தது.
“நாங்கள் 2002, 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளிலும் வெள்ளங்களைச் சந்தித்திருந்தாலும் இம்முறை அதிக மிரட்சி தருவதாய் இருந்தது,” என்கிறார் தங்கேஸ்வர் தேகா. பெருவாடோல்காவோனுக்கு அருகே இருக்கும் ஹதிமராவின் பொதுச் சுகாதார மையத்தை அடைய நகவோனிலிருந்து இரண்டு கிலோமீட்டர் கால்முட்டி வரை இருந்த நீரில் நடந்தே சென்றார். வளர்ப்புப் பூனை கடித்ததால் ரேபிஸ் மருந்து எடுத்துக் கொள்வதற்காக அவர் அங்கு ஜூன் 18ம் தேதி சென்றார்.
“பூனை பட்டினியாகக் கிடக்கிறது,” என விளக்குகிறார் தங்கேஸ்வர். “ஒருவேளை அது பசியோடிருக்கலாம். அல்லது மழை நீர் கொடுத்த அச்சத்தில் இருக்கலாம். அதன் உரிமையாளர் அதற்கு உணவளித்து இரண்டு நாட்களாகிவிட்டது. எல்லா இடங்களையும் நீர் சூழ்ந்திருந்ததால் உரிமையாளரால் உணவளிக்க முடியவில்லை. சமையலறை, வீடு மற்றும் மொத்தக் கிராமமும் நீருக்கடியில்தான் இருந்தன,” என்கிறார் அவர். தங்கேஸ்வரை நாம் ஜூன் 23ம் தேதி சந்தித்தபோது, எடுக்க வேண்டிய ஐந்து ஊசிகளில் இரண்டு போட்டிருந்தார் அவர். தாழ்வுப் பகுதியான மங்கல்டோய் பகுதியை நோக்கி மழை வெள்ளம் வடிந்தது.
அதிகமாய் வளர்ந்திருந்த மரத்தின் வேர்கள், வெள்ளை எறும்புகள் மற்றும் எலிகள் யாவும் கரையை சேதப்படுத்தியதாக சொல்கிறார் தங்கேஸ்வர். “பத்தாண்டுகளாக அதைச் சரி செய்யவில்லை,” என அவர் சுட்டிக் காட்டுகிறார். “நெல்வயல்கள் 2-3 அடி சகதிக்குள் மூழ்கியிருக்கிறது. இங்கிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையும் தினக்கூலியையும் சார்ந்திருப்பவர்கள். குடும்பங்களை எப்படி அவர்கள் நடத்துவார்கள்?” என அவர் கேட்கிறார்.
லஷ்யபதி தாஸ் போராடிக் கொண்டிருக்கும் கேள்வியும் அதுதான். அவரின் மூன்று பிகா நிலம் (கிட்டத்தட்ட ஒரு ஏக்கர்) சகதியில் மூடப்பட்டிருக்கிறது. “இரண்டு கதா அளவில் (ஐந்து கதாக்கள் ஒரு பிகா) இருந்த என் நெற்கதிர்கள் யாவும் இப்போது சகதியாகிவிட்டது,” என்கிறார் அவர் கவலையுடன். “மீண்டும் நான் பயிரிட முடியாது.”
நகாவோனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிபாஜர் கல்லூரியில் லக்ஷ்யபதியின் மகளும் மகனும் படிக்கின்றனர். “கல்லூரிக்கு செல்ல ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு 200 ரூபாய் தேவை. அந்தப் பணத்தை எப்படிக் கொடுப்போமென எனக்குத் தெரியவில்லை. வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் மீண்டும் வந்தால் என்ன செய்வது? அச்சத்திலும் மன அழுத்தத்திலும் நாங்கள் தவிக்கிறோம்,” என்னும் அவர், விரைவிலேயே கரை சரி செய்யப்படுமென நம்புகிறார்.
”நீற்றுப் பூசணிக் கொடி மரித்து விட்டது. பப்பாளி மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன. பூசணிகளையும் பப்பாளிகளையும் கிராமத்தில் வசிக்கும் பிறருக்கு நாங்கள் கொடுத்தோம்,” என்கிறார் ஹிரா சுபுரியில் சுமித்ரா தாஸ். குடும்பத்தின் மீன் குளமும் மூழ்கிவிட்டது. “குளத்தில் மீன்கள் பெருகவென மீன் விதைகளை வாங்க 2,500 ரூபாய் செலவழித்தேன். குளம் இப்போது நிலத்தின் மட்டத்துக்கு வந்துவிட்டது. பெரிய மீன்கள் எல்லாம் போய்விட்டன,” என்கிறார் சுமித்ராவின் கணவர் லலித் சந்திரா, வெள்ளத்தில் அழுகிப் போன வெங்காயங்களையும் உருளைக்கிழங்குகளையும் பிரித்தபடி.
சுமித்ராவும் லலித் சந்திராவும் குத்தகை விவசாயம் செய்பவர்கள். விளைச்சலின் நான்கில் ஒரு பங்கை நிலவுரிமையாளருக்கு வாடகையாக கொடுக்கும் முறை அது. அவர்கள் சொந்தப் பயன்பாட்டுக்காக விவசாயம் செய்கின்றனர். சில நேரங்களில் பக்கத்து விவசாய நிலங்களில் லலித் தினக்கூலி வேலையும் செய்வதுண்டு. “மீண்டும் விதைப்பதற்கேற்ப நிலத்தை தயார் செய்ய இன்னும் பத்தாண்டுகள் ஆகும்,” என்கிறார் சுமித்ரா. குடும்பத்தின் எட்டு ஆடுகள் மற்றும் 26 வாத்துகள் ஆகியவற்றுக்கு வெள்ள நேரத்தில் தீவனம் பார்ப்பதும் பிரச்சினையாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
குடும்பம் இப்போது மகன் லலகுஷ் தாஸின் வருமானத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். நகாவோனிலிருந்து 7-8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நம்கோலா மற்றும் லோதாபரா சந்தைகளில் வெங்காயங்கள் மற்றும் உருளைக் கிழங்குகள் போன்ற காய்கறிகளையும் அத்தியாவசியங்களையும் விற்று அவர் வருமானம் ஈட்டுகிறார்.
நஷ்டங்கள், அழுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில் ஜூன் 27ம் தேதி 12ம் வகுப்புத் தேர்வில் முதல் தரத்தில் தேர்ச்சியடைந்த சந்தோஷமானத் தகவல் லலித்தின் மகள் அங்கிதாவுக்குக் கிட்டியது. அவருக்கு மேற்படிப்பில் ஆர்வமிருந்த போதிலும், தற்போதையச் சூழலில் அவரின் தாய்க்கு அது சாத்தியமா என உறுதியாகத் தெரியவில்லை.
அங்கிதாவைப் போலவே 18 வயது ஜூப்லி தேகாவும் மேற்படிப்பு படிக்க விரும்புகிறார். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திபிலா சவுக்கின் NRDS ஜூனியர் கல்லூரி மணவரான அவர், அதேத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்றிருக்கிறார். சுற்றி நேரந்திருக்கும் அழிவைப் பார்க்கையில், எதிர்காலத்தைப் பற்றி அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.
“முகாமில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. எனவேதான் இங்கு வந்திருக்கிறேன்,” என்கிறார் அவர், வெள்ளம் சேதப்படுத்திய நகாவோனில் இருக்கும் அவர் வீட்டின் ஜன்னல் வழியாக. அவரது குடும்பத்தின் மிச்ச நால்வர், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்த நிவாரண முகாமில் இருக்கின்றனர். “அந்த இரவில் என்ன செய்வது, எதை எடுப்பது என எங்களுக்கு எதுவும் தோன்றவில்லை,” என்கிறார் ஜூப்லி. வீட்டில் வெள்ளம் வந்தபோது அவர் கல்லூரிப் பையைத் தவறாமல் கொண்டு வந்துவிட்டார்.
மழை பெய்த 10 நாட்களும் 23 வயது திபங்கர் தாஸால் அவரது டீக்கடையை நகாவோனில் திறக்க முடியவில்லை. அவர் நாளொன்றுக்கு 300 ரூபாய் வருமானம் ஈட்டினார். ஆனால் பெருமழைக்குப் பிறகு இன்னும் அவர் தொழில் மீளவில்லை. ஜூன் 23ம் தேதி அவரைச் சந்தித்தபோது, அவர் கடையிலிருந்த ஒரே வாடிக்கையாளர், ஊற வைத்தப் பாசிப்பயறு தேநீருக்கும் சிகரெட்டுக்கும் வந்திருந்தார்.
திபங்கரின் குடும்பத்திடம் சொந்தமாக நிலமில்லை. அவரின் டீக்கடை மற்றும் அவ்வப்போது அவரின் 49 வயது தந்தை சத்ராம் தாஸ் செய்யும் கூலி வேலை ஆகியவற்றின் வருமானத்தைதான் குடும்பம் சார்ந்திருக்கிறது. “வீட்டுக்குள் இன்னும் செல்ல முடியவில்லை. முழங்காலளவுக்கு சகதி இருக்கிறது,” என்கிறார் திபாங்கர். கல் வீட்டில் பெரியளவில் பழுதுகள் நீக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு 1 லட்சம் ரூபாயேனும் செலவாகும் என்கிறார் அவர்.
“வெள்ளங்கள் நேரும் முன்னமே நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தால் இப்பேரழிவைத் தவிர்த்திருக்க முடியும்,” என்கிறார் திபாங்கர். குவஹாத்தியின் பிரபலமான ஒரு பேக்கரியில் வேலை பார்த்த அவர், கோவிட் ஊரடங்கின்போது நகாவோனுக்கு வந்துவிட்டார். “அவர்கள் (மாவட்ட நிர்வாகம்) கரை உடையும்போது ஏன் வந்தார்கள்? வறண்ட காலத்தில் வந்திருக்க வேண்டும்.”
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி 28 மாவட்டங்களைச் சேர்ந்த 19 லட்சம் பேர் ஜூன் 16ம் தேதி மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்
இவற்றுக்கிடையில் பொது சுகாதார பொறியியல் பிரிவின் ஊழியரான திலிப் குமார் தேகா, கிராமத்தில் நிர்வாகம் உறைகிணறுகளை உருவாக்கவிருக்கும் இடங்களின் பட்டியலைக் காட்டினார். வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக மேட்டு நிலங்களில் கட்டப்படும் உறைகிணறுகள், வெள்ளக்காலத்தில் மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி வகுக்கும்.
வெள்ளம் நேரும் வரை ஏன் நிர்வாகம் இதைச் செய்ய தாமதித்தது என்கிற கேள்விக்கு அவர் அலட்சியமாக, “மேலே இருந்து வருகிற உத்தரவுகளைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்,” என்கிறார். தர்ரங் மாவட்டத்தின் பயாஸ்பரா கிராமத்திலுள்ள திலீப்பின் வீடும் நீரில் மூழ்கியிருக்கிறது. ஜூன் மாதம் தொடங்கி அம்மாத 22ம் தேதி வரை, வழக்கத்தைக் காட்டிலும் 79 சதவிகிதம் அதிகமாக அம்மாவட்டத்தில் மழை பெய்திருக்கிறது.
“நேற்று (ஜூன் 22) மாவட்ட நிர்வாகம் நீர் பாக்கெட்டுகளை விநியோகித்தது. இன்று ஒரு சொட்டுக் குடிநீர் கூட எங்களிடம் இல்லை,” என்கிறார் ஜெய்மதி. அவரின் கணவரும் மூத்த மகனும் நாய்க்கடிக்கு தடுப்பூசி போடச் சென்றிருந்தனர்.
நகாவோனிலிருந்து நாங்கள் கிளம்பும்போது வெள்ளம் பாதித்த வீட்டிலிருந்து லலித் சந்திரா மற்றும் சுமித்ரா எங்களை வழியனுப்ப வந்தனர். லலித் சந்திரா எங்களிடம், “மக்கள் வருகிறார்கள். நிவாரணப் பொருட்கள் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். யாரும் அமர்ந்து எங்களுடன் பேசியதில்லை,” என்றார்.
தமிழில் : ராஜசங்கீதன்