ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்களில் சி.என். ராஜேஸ்வரி சாதாரணமானவர் அல்ல. வாரத்தில் ஆறு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவர் 3 முதல் 6 வயது வரை உள்ள 20 குழந்தைகளுக்கு கல்வி போதிக்கிறார், அவர்களில் பெரும்பாலோர் நகராட்சியில் துப்புரவாளர்களாகவும், தினசரி கூலித் தொழிலாளர்களாகவும், சுமை தூக்குபவர்களாகவும், தெருக்களில் வியாபாரம் செய்பவர்களாகவும் தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியர்களாக வேலை செய்பவர்களின் குழந்தைகள். அவர்களில் பலர் கர்நாடகாவின் பிற பகுதிகளிலிருந்தோ ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தோ வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
அந்தக் குழந்தைகளுக்கும் இந்த நேரத்தில் அங்கு வருகிற மூன்று முதல் ஐந்து வரையான கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அவரே மதிய உணவும் சமைக்கிறார். அதே போல் வேலைக்குப் போகிற பெற்றோர்களின் குழந்தைகளையும் பராமரிக்கிறார். அந்தக் குழந்தைகளுக்கும் உணவு ஊட்டுகிறார். அந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் போடவேண்டிய நோய்த் தடுப்பு ஊசிகள் சரியான காலகட்டங்களில் போடப்பட்டுள்ளதாக என்றும் அவர் உறுதிப்படுத்துகிறார்.. இவை அனைத்தையும் பற்றிய விரிவான பதிவுகளையும் அவர் பராமரிக்கிறார். அங்கன்வாடிகளுக்கு வந்து போகிறவர்களின் ஏதாவது ஒரு வீட்டுக்குப்போய் அந்தத் தாயின் நல்வாழ்வையும் குழந்தையின் நல்வாழ்வையும் பரிசோதிக்கவும் அவர் நேரத்தைக் கண்டுபிடித்து ஒதுக்கிக்கொள்கிறார்.
பெங்களூரின் பரபரப்பான ஜே. சி. சாலையில் உள்ள வியாயம் ஷாலா காலனி அவரது பணிப் பொறுப்புக்கு உட்பட்ட பகுதி. அதில் உள்ள 355 குடும்பங்களுக்கு அரசுத் திட்டங்களின் பயனை அளிக்கும் வகையில் அவர் படிவங்களை நிரப்புகிறார். அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொள்கிறார். இந்தப் பணி என்பது புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சுகாதாரப் பணிகளையும் அரசாங்க திட்டங்களையும் வாங்கிக்கொடுக்க உதவுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
பலர் அவரை வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாகப் பார்க்கிறார்கள் என்கிறார் அவர். “நாங்கள் சமைப்பதையும் சுத்தம் செய்வதையும மட்டும்தான் செய்கிறோம் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை எனக்கு கல்வி போதிப்பதில் ‘அனுபவம்’ கிடையாது என்று கருதுகிறார்கள் ” என்கிறார் 40 வயதான ராஜேஸ்வரி.
அரசும் அவரை ஒரு அங்கன்வாடி ‘தொழிலாளி’ (AWW) என்று குறிப்பிடுகிறது. ஆனால், கற்பித்தல் ராஜேஸ்வரியின் முதன்மையான பணி. குழந்தைகள் AWW களுடன் இருக்கும் மூன்று ஆண்டுகளில், அவர்கள் அடிப்படையான எழுத்தறிவைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது எந்த தொடக்கப் பள்ளியிலும் சேருவதற்கு ஒரு முன்நிபந்தனையான அடிப்படையான எழுத்தறிவு மட்டம்.
"என் குழந்தைகளை வேறு எங்கும் அனுப்பும் பொருளாதார நிலையில் நான் இல்லை. அங்கன்வாடியில் அவர்கள் இலவசமாக முட்டையும் மதிய உணவையும் தருகிறார்கள்" என்கிறார் வியாயம் ஷாலா காலனியில் பூக்களை மாலையாகக் கட்டி விற்கிற, 30 வயதான ஹேமாவதி. அவரது கணவர் ஒரு பழ வியாபாரி. " தனியார் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்புவதைவிட அங்கன்வாடிக்கு அனுப்புவதையே நான் விரும்புகிறேன் ”என்கிறார் அதே காலனியில் இல்லத்தரசி யாக இருக்கிற 26 வயதான எம். சுமதி. “ அங்குள்ள ஆசிரியைக்கு எனது குழந்தையை அது பிறப்பதற்கு முன்பே தெரியும்!” என்கிறார் அவர்.
பெங்களூரில் 3,649 அங்கன்வாடிகள் உள்ளன. கர்நாடகா முழுவதும் இத்தகைய 65,911 மையங்கள் உள்ளன. கர்நாடகத்தில் 0 - 6 வயதுகளில் உள்ள 70 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளில், 57 சதவீதம் 3 - 6 வயதுடைய குழந்தைகள். ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து, வாரத்தின் ஒவ்வொரு நாளும் அவர்கள் அங்கன்வாடிகளுக்கு வருகிறார்கள். இது தேசிய சராசரியான 38.7 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் அங்கன் வாடிக்கள் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளின் (ஐ.சி.டி.எஸ்) கீழ் நடத்தப்படுகின்றன.
அனைத்து அங்கன் வாடி ஊழியர்களும், பெண்கள்தான். அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் ஒரு மாத கால பயிற்சியையும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை ஒரு வார கால பயிற்சியையும் பெறுகிறார்கள்.
ஆனால், அவர் செய்கிற அனைத்து வேலைகளுக்கும் சேர்த்து, ‘ஆசிரியர்’ ராஜேஸ்வரிக்கான ‘சம்பளம்’ என்பது மாதத்திற்கு வெறும் 8,150 ரூபாய்தான். அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை 4,000 ரூபாயாகத்தான் இருந்தது . அதனால், அவர் அங்கன்வாடியிலிருந்து சம்ராஜ்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையத்திற்கு ஒரு பேரூந்தில் செல்கிறார். அங்கு பள்ளி மேலாண்மையையும் கைவினைத் திறன் மூலம் பொருட்களை உருவாக்குவதையும் கற்பிக்கிறார். அந்தப் பணியின் மூலம் மேலும் ஒரு 5,000 ரூபாய் அவருக்குச் சம்பளமாகக் கிடைக்கிறது. இரவு 10 மணிக்கு மட்டுமே அவள் வீடு திரும்புகிறார். "ஒரு நாள் என்பது எனக்கு மிக நீண்டதாக இருக்கிறது. ஆனால், எனக்கு பணம் தேவை," என்கிறார் அவர். ராஜேஸ்வரியின் கணவர் ஒரு பேக்கேஜிங் நிறுவனத்தில் மாதம் ரூபாய் 5000 த்துக்கு வேலை செய்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கல்லூரியில் மகன் படிக்கிறான். உயர்நிலைப் பள்ளியில் மகள் படிக்கிறாள். இது ஒரு ஒவ்வொரு மாதமும் இந்தக் குடும்பத்தை பிழிகிறது இந்த இறுக்கமான நிதிப் பிரச்சனைகள்.
ஒரு சாகச வித்தையைப் போல, அந்தக் குடும்பம் படுகிற பாட்டை மேலும் அதிகரிக்கும்வகையில், டிசம்பர் 2017 முதல், ராஜேஸ்வரிக்கு அவரது அங்கன்வாடி ஊழியருக்கான சம்பளமும் கிடைக்கவில்லை என்கிறார் ராஜேஸ்வரியைப் போன்று 1,800 அங்கன்வாடி ஊழியர்களைக் கொண்ட், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தைச் (TUCC) சார்ந்த ஜி.எஸ்.சிவசங்கர் . மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 5,371 கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கான சம்பளங்களும் உணவுப் பொருள்களுக்கும் செலவுகள் செய்ய அனுமதி இல்லை என்று அந்தத் துறை கூறுகிறது. இதற்கு முன்னர் இத்தகைய நிகழ்வு நடந்திருந்தாலும் இத்தகைய நீண்டகால தாமதம் நீடிப்பது என்பது இதுவே முதல் முறை.
அரசாங்கம் தங்களின் சம்பளப் பாக்கிகளை கொடுத்துவிடும் என்று பல மாதங்களுக்குக் காத்திருந்துப் பார்த்தபிறகு, அவர்களின் சங்கமான அங்கன்வாடி காரிய கார்தே சஹாயகி மகா மண்டலியின் (அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தொழிற்சங்கம், (TUCC உடன் இணைக்கப்பட்டது) சுமார் 2,300 உறுப்பினர்களோடு, ஆகஸ்ட் 16 ம் தேதி,பெங்களூரு டவுன் ஹாலுக்கு வெளியே, தங்களின் விரக்தியைத் தெரிவிக்கும்வகையில் , அமைதியான போராட்டத்தை நடத்தினர். இந்த தொழிற்சங்கத்திற்கு மாநிலம் முழுவதும் 21,800 உறுப்பினர்கள் உள்ளனர். கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்கள் நீண்டகாலமாக கொடுக்காமல் வைக்கப்பட்டிருக்கிற தங்களது சம்பளப் பாக்கிகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 60 வயதில் பணி ஓய்வு பெறுவதற்குப் பதிலாக, அங்கன்வாடி ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தவேண்டும்; குறைவான வேலை நேரம் வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். அவர்களில் பலர் அவர்களின் பெயர்களை இந்தக் கட்டுரையில் வெளியிடவோ, அவர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டவோ, அல்லது அவர்களின் நிழற்படங்களை எடுக்கவோ விரும்பவில்லை. அதையொட்டி வரக்கூடிய விரும்பத்தகாத பின் விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் பயப்படுகின்றனர்.
30 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக இருக்கிற, 56 வயதான லிங்கராஜம்மா, போராட்டத்தின் முன்னணியில் பயம் இல்லாமல் நிற்கிறார். அவர் அவர்களின் சம்பளத்தை தாராளமான முறையில் உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். "எங்களது சம்பளத்தை தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் தருவதை மாற்றவேண்டும். அதற்குப் பதிலாக, சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தையும் அடங்கிய அரசு ஊழியரின் சம்பளம் என்ற அடிப்படையில் தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கூடுதல் பயன்களை எங்களுக்குத் தரும். மேலும் சம்பளத்தை 20,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஏனென்றால், நாங்கள் கற்பிப்பதை விட அதிகமான பணிகளைச் செய்கிறோம் " என்று அவர் உறுதியோடு சுட்டிக்காட்டுகிறார். லிங்கராஜம்மாவின் கணவர் வங்கி ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். அதனால் அங்கன்வாடி ஊழியருக்கான சம்பளம் வராத இந்த மாதங்களில் தனது கணவரின் ஓய்வூதியத்தை வைத்து அவர் சமாளிக்கிறார். மேலும் அவரது மகன் புற்றுநோயியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக தகுதி பெறுவதற்காக படிக்கிற ஒரு டாக்டர். அவரது மகள் பத்திரிகையாளராக இருக்கிறார்.
ஆனால், மற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு லிங்கராஜம்மாவுக்குக் கிடைத்திருக்கிற மாதிரி, அவர்களின் சிரமங்களைக் குறைக்கிற எதுவும் இல்லை. அதனால், அவர்கள் கூடுதலாக வேறு வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். சிலர் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களாகவும், வீட்டில் தயாரிக்கப்பட்ட சமையல் பொருள்களை விற்பவர்களாகவும், தையல் கடைகளில் வேலை செய்பவர்களாகவும், குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுக்கிற வேலைகளும் செய்கிறார்கள்.
அவர்களில் ராதிகா ஒருவர். அவரது உண்மையான பெயரை எழுத வேண்டாம் என்று அவர் என்னை கேட்டுக்கொண்டுள்ளார். அவரது அங்கன்வாடி 12 அடி நீளம் 10 அடி அகலம் கொண்டது. அதில் , 15 குழந்தைகளும், அழுகிற குழந்தையை ஆறுதல்படுத்துகிற ஒரு கர்ப்பிணித் தாயும் இருப்பார். ஒரு சமையல்காரர் சாம்பாரையும் சாதத்தையும் மதிய உணவுக்காக தயாரிப்பார். அறையின் மூலைகளில் பெரிய சாக்குகளில் பருப்பு மற்றும் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு இடையில், உயிர் எழுத்துக்களின் சுவரொட்டிகளும் ஒரு எண்கள் விளக்கப்படமும் இருக்கும். அவற்றுக்கு மத்தியில், ராதிகாவின் மேசையில் அவர் பல பதிவேடுகளை பராமரித்தே ஆக வேண்டும்.
நாங்கள் அந்த அங்கன்வாடியில் வாசலில் நின்றோம். அவர் கன்னடத்தில் மனித உடலின் பாகங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு பாடலை வாசிப்பதைப் பார்க்கிறோம். அவர் கைகளையும் கால்களையும் காட்டி, மிகைப்படுத்தப்பட்ட சைகைகளை காட்டுகிறார். குழந்தைகள் அவரைப் போலவே சைகைகளைக் காட்டி சந்தோசப்படுகின்றன. ஒரு வருடம் முன்பு, ராதிகா தனது கணவரை சிறுநீரக புற்றுநோயால் இழந்தார். கணவர் நீண்டகாலம் உடல் நலம் இல்லாமல் இருந்தார். அவரது சிகிச்சைக்காக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து ராதிகா 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருக்கிறார். அங்கன் வாடியில் செய்கிற வேலைக்கு சம்பளம் வராமல் இருப்பது அவரது பணப் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குகிறது. "பஸ் டிக்கெட் வாங்க என்னிடம் பணம் இல்லாததால் நான் வாரத்தில் ஆறு நாட்களுக்கு 45 நிமிடங்கள்வரை நடந்து போகிறேன்" என்கிறார். தனது பகுதியில் உள்ள 30 குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக்கொடுப்பதன் மூலம் அவர் மாதத்திற்கு 3,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடைய கடன்களைத் திருப்பிச் செலுத்தவே அதில் பெரும்பகுதி போகிறது.
குழந்தைப் பருவத்தின் ஆரம்பகாலத்திலேயே கற்றுக்கொள்வது எவ்வளவு பயன்களைத் தருகிறது என்பதை, நாட்டின் பல கொள்கைகள் விளக்குகின்றன. குழந்தைப் பருவத்துக்கு முந்தைய நிலையான, பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரையான காலகட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு, கல்விக்கும் நல்வாழ்வுக்கும் தேவையான முழுமையான வசதிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி, 1974 ஆம் வருடத்திய குழந்தைகளுக்கான தேசிய கொள்கை விவாதித்தது. அதன் விளைவாகவே, 1975 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் அங்கன்வாடிகள் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆரம்பக் கல்விக்கு மேலான பணிகளை, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கையாளுகிறது. குழந்தை பராமரிப்பு, நல்வாழ்வு, ஊட்டச் சத்து, பாதுகாப்பானதாகவும், தான் நினைத்ததை செய்யக்கூடியதாகவும் உள்ள ஒரு சூழலில் , விளையாட்டையும் முன்பருவக் கல்வியையும் தருவது என்பது சமூகத்தில் நிகர்நிலை இல்லாமையை போக்குவதற்கும் சமூக அளவிலான, பொருளாதார அளவிலான நீண்டகால பயன்களுக்கு இட்டுச் செல்லும் என்று முன்பருவ குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக் கொள்கை - 2013 உறுதியளித்தது.
பல அங்கன்வாடி மையங்களில் இன்னமும் கூட அடிப்படையான தேவைகள் கூட இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகள் நிலை தொடர்பான ஒரு விரைவான ஆய்வை 2013 - 2014 ஆண்டில் எடுத்தது. அதில் 52 சதவீதம் அங்கன் வாடிகளில் மட்டுமே தனி சமையலறை இருப்பதையும் 43 சதவீதம் அங்கன்வாடிகளில் மட்டுமே கழிப்பறை இருப்பதையும் கண்டறிந்தது. "இத்தகைய சின்னக் குழந்தைகளைக் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்காமல் மதிய உணவுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பும் வரை வைத்திருப்பது மிகவும் மன அழுத்தம் தரும் பிரச்சனை; பல குடும்பங்களில் பெற்றோர் இருவரும் தொலைதூரங்களில் வேலை செய்ய போய்விடுகிறார்கள். பெரியவர்களான நமக்கு கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட எப்படியாவது சமாளிக்க வேண்டும் ”என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அங்கன் வாடி ஊழியர் .
‘பட்ஜெட் இல்லை’ என்பதற்கான அர்த்தம் என்பது அங்கன்வாடியை செயல்படுத்துவதற்கான பொருட்கள் வாங்க நிதி இல்லை என்பதும்தான். பெற்றோர்கள் இந்த மையங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கான பெரும் ஊக்கமாக இருப்பது உணவுதான். அது ஆசிரியரின் பொறுப்பும் கூட. இத்தகைய சூழ்நிலைகளில், முட்டை, அரிசி, காய்கறிகளை வாங்குவதற்கும், அங்கன்வாடிக்கான வாடகையை கொடுப்பதற்கும் அங்கன்வாடி ஊழியர்கள் எப்படி கடன் வாங்குகிறார்கள் என்று அங்கன்வாடி ஊழியர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்.
பணம் இல்லாமல் சிரமப்படும் அங்கன்வாடிக்கு , அனைத்து குழந்தைகளுக்கும் உணவு அளிப்பது என்பது தினமும் ஒரு சவால்தான். "சில சமயங்களில் குழந்தைகளின் உணவைத் தயாரிப்பதற்காக, பெற்றோர்களிடம் ஒரு கத்தரிக்காய், ஒரு முள்ளங்கி அல்லது உருளைக்கிழங்கு போன்றவற்றை அனுப்பிவைக்குமாறு கேட்கிறேன்" என்கிறார் ராஜேஸ்வரி.
இந்தியாவின் ஏழைகள் பலர் அங்கன்வாடிகளை நம்பியிருக்கிறார்கள் - 70 சதவீத பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி குடும்பங்கள்தான் தங்களின் குழந்தைகளை நாடு முழுவதும் இந்த மையங்களுக்கு அனுப்புகின்றன.
2011 ஆம் வருடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆறு வயதிற்குட்பட்ட 15.87 கோடி குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முன்பருவக் கல்வியையும், வாரத்திற்கு இரண்டு முறையாவது முட்டைகளுடன் கூடிய உணவையும் இத்தகைய பயன்களையும் அளிக்க வேண்டும் என்று அரசின் பல்வேறுகொள்கைகள் உறுதிப்பட கூறுகின்றன. தாய்மார்களின் பிரசவத்துக்கு முந்தியும் பிந்தியும் பரிசோதனைகள் செய்வது, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் மற்றும் இத்தகைய பல்வேறு வகையான சேவைகளையும் அந்தக் கொள்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
இத்தகைய சேவைகளை எல்லாம் செயல்படுத்துகிற அங்கன்வாடிதான் ஒவ்வொரு நாளும் போராடுகிறது. ஆனால், அங்கன்வாடி தொழிலாளர்கள் சமூகத்தில் தங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், குழந்தைகளின் சிரிப்பும் தங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தச் செய்கிறது என்று கூறுகிறார்கள். “நான் இப்பகுதிக்குள் நுழையும்போதே, என் மாணவர்கள் என்னை‘ நமஸ்தே மிஸ் ’என்று அழைத்துக்கொண்டே ஓடி வருவார்கள் ” என்கிறார் ஒரு அங்கன்வாடி ஊழியர். “மேலும் அவர்கள் வயதாகி, ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும்போது, அவர்கள் என்னைச் சுட்டிக்காட்டி, தங்கள் நண்பர்களிடம்‘ அதுதான் என் மிஸ் ’என்று கூறுகிறார்கள்".
தமிழில்: த நீதிராஜன்