மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டம் நிம்பாவலி எனும் எனது கிராமத்தில் நடுத்தர வயதினர் ஒரு மரத்தினடியில் திரண்டனர். அவர்கள் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கின்றனர். அந்நிகழ்வுகளின் தாக்கங்கள் இன்றும் உணரப்படுகின்றன. அரசு அலுவலர்கள் காகிதங்கள், அளவீட்டு கருவிகள், ரூலர்கள், டேப்புகள் ஆகியவற்றுடன் பெரிய காரில் வந்திறங்கினர். அவர்கள் நிலத்தடி நீருக்கான ஆதாரமான இடத்தை தோண்டுவதற்காக தேடினர், என்று நினைவுகூர்ந்தார் என் தந்தையான 55 வயது பரஷூராம் பரேட்.
“அவர்களை எனக்கும் நினைவிருக்கிறது. என்ன செய்கிறீர்கள் என்று பலமுறை கேட்டபிறகு, அவர்கள் பதிலளித்தனர், ‘உங்களுக்கு தண்ணீர் வேண்டும்தானே?’ நாங்கள் வேண்டும் என்றோம். யாருக்கு தான் தண்ணீர் தேவைப்படாது?,” பாபா நினைவுகூர்ந்தார். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் ஒரு பகுதியில் அரசின் சார்பில் ஏதேனும் நீராதாரம் கண்டறியப்பட்டால் மகிழ்ச்சி தான். ஆனால் கிராமத்தினர் கொண்ட மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
சில மாதங்களில் வாடா தாலுக்கா நிம்பாவலியின் வார்லி மக்கள் இடத்தை காலி செய்யுமாறு அறிவிப்பாணை வந்தது. தண்ணீர் திட்டம் எதுவும் கிடையாது. மாறாக மும்பை – வதோதரா தேசிய விரைவு நெடுஞ்சாலைக்கு கிராம நிலம் ஒதுக்கப்பட்டது.
“அப்போதுதான் எங்களுக்கு நெடுஞ்சாலையைப் பற்றி தெரியவந்தது,” என்றார் 50 வயது பால்க்ருஷ்னா லிபாட். அது 2012. பத்தாண்டுகள் ஆகியும் எனது கிராம மக்கள் ஏமாற்றி நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசை எதிர்த்துப் போராடி தோற்றுப் போவோம் என்பதை புரிந்துகொண்ட கிராமத்தினர், அதிக இழப்பீடு, மாற்று நிலம் போன்ற கோரிக்கைகளை கைவிட்டு, ஒட்டுமொத்த கிராமத்திற்கும் முறையான மறுகுடியமர்த்தல் என்ற கோரிக்கையுடன் முடித்துக் கொண்டனர்.
மகாராஷ்டிரா, குஜராத், தாத்ரா, நாகர் ஹவேலி வழியாகச் செல்லும் எட்டு வழிச்சாலையான 379 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள அரசு நிலத்தை, மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி கையகப்படுத்த உள்ளது. மகாராஷ்டிர நெடுஞ்சாலைப் பகுதி ஒன்று பல்கார் மாவட்டத்தின் மூன்று தாலுக்காக்களில் உள்ள 21 கிராமங்கள் இடையே செல்கிறது. வாடாவும் அவற்றில் ஒன்று. அங்குள்ள சிறு கிராமம் தான் நிம்பாவலி. இங்கு 140 குடும்பங்கள் வசிக்கின்றன.
நிம்பாவலி வழியாக சுமார் 5.4 கிலோமீட்டர் நெடுஞ்சாலை செல்கிறது. மொத்தம் 71,035 சதுர மீட்டர் பகுதி நிம்பாவலியில் கண்டறியப்பட்டது. கிராம மக்கள் அதை எதிர்ப்பதற்கு முன்பே கையகப்படுத்தும் செயல்முறை தொடங்கியது.
திட்டத்தின் உண்மைநிலை குறித்து கிராமத்தினர் அறிந்து கொண்டபோது, மக்களின் வீடுகளுக்கு இழப்பீடாக போதிய நிதி உதவியை செய்து தருவதாக ஊர்ப் பெரியவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. புதிதாக நிலம் வாங்கவும், வீடு கட்டுவதற்கும் அப்பணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் எங்கள் கிராம மக்கள் அதை ஏற்கவில்லை. மறுகுடியமர்த்தலுக்கு மாற்று நிலம் வழங்கப்படும் வரை வீட்டையோ, நிலத்தையோ விட்டுச் செல்லப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்தனர்.
“சராசரியாக ஒன்பது லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக எங்களுக்கு அறிவிப்பாணைகள் வந்தன,” என்கிறார் 45 வயதாகும் சந்திரகாந்த் பரேட். “எதற்கு? இங்குள்ள மரங்களைப் பாருங்கள் – முருங்கை, சீத்தாப்பழம், சப்போட்டா, கருவேப்பிலை இருக்கின்றன. இந்நிலத்தில் நாங்கள் அனைத்து கிழங்கு வகைகள், காய்கறிகளை விளைவித்தோம். இதற்கு அவர்கள் எவ்வளவு பணம் தருவார்கள்? ஒன்றும் கிடையாது. ஒன்பது லட்சம் ரூபாயில் நீங்கள் நிலம் வாங்கி வீடு கட்டி, இந்த மரங்களை நட்டுவிட முடியுமா?” என அவர் கேட்டார்.
மற்றொரு விவகாரமும் உள்ளது: நெடுஞ்சாலை கிராமத்தை இரண்டாக பிரிக்கிறது. “பல காலங்களாக வாழ்ந்தது போல இணைந்து இருக்கவே நிம்பாவலி மக்கள் விரும்புகின்றனர். எங்களுக்கு, இப்போதுள்ள கிராமத்திற்கு இழப்பீடாக நிலமும், இழப்பீட்டுத் திட்டத்தில் வீடுகளும் சேர்க்கப்பட வேண்டும். இங்குள்ள அனைத்து மக்களுக்கும் நியாயமான இழப்பீடு வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் இந்த சாலையை நீங்கள் கட்டமைக்க விரும்புகிறீர்களா? தயவுசெய்து செய்யுங்கள். எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் எங்களை ஏன் அழிக்கிறீர்கள்?” எனக் கேட்டார் வினோத் காகட்.
இத்திட்டம் எங்கள் வாழ்வில் நிச்சயமற்ற நிலையை கொண்டு வந்துள்ளது. சாலை வருவதால் 49 வீடுகளில் வசிக்கும் 200 – 220 பேர் வரை நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சாலையின் பாதை தொடாத காரணத்தால் நான்கு வீடுகள் மட்டும் தப்பித்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட நான்கு வீடுகளில் மூன்று வனத்துறை நிலத்தில் உள்ளவை. இழப்பீடு பெறத் தகுதியானவர்களாக அவர்களைக் கருதக் கூட அரசு மறுக்கிறது.
பல நூற்றாண்டுகளாக வார்லி பழங்குடியினரான நாங்கள் இம்மண்ணில் வசிக்கிறோம். நாங்கள் இங்கு வீடுகள் மட்டும் கட்டவில்லை. இந்த நிலத்தின் மீது அன்புறவை வளர்த்துள்ளோம். புளிய மரம், மாமரம் மற்றும் பிற மரங்கள் எங்களைக் கோடை வெப்பத்திலிருந்து காக்கின்றன. சபர்யா மலை எங்களுக்குத் தேவையான விறகினைத் தருகிறது. இவை அனைத்தையும் விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் செல்வது வலி நிறைந்த ஒன்று. எங்கள் சொந்த மக்கள் சிலரை விட்டுச் செல்வதும், எங்கள் சமூகத்தை உடைத்துக் கொண்டு செல்வதும் மிகுந்த வலி நிறைந்தது.
“நிலத்தை அளவீடு செய்ய வந்த அலுவலர்கள் எங்கள் ஒற்றுமையைக் கண்டு திகைத்தனர். வீடுகளை இழப்பவர்கள் துயரத்தில் இருக்கலாம் என்றனர். ஆனால் இங்கு மற்றவர்களும் அழுகின்றனர்,” என்றார் 45 வயது சவிதா லிபட். “எங்கள் வீட்டிற்கு முன்னும், பின்னும் உள்ள வீடுகள் சாலைக்காக கையகப்படுத்தப்படுவதை நான் விளக்க முயன்றேன். என் வீடு சரியாக நடுவில் உள்ளது. எங்களுக்கு இந்தச் சாலை பெரிய பிரச்சினையைத் தரப் போகிறது.”
பல தசாப்தங்களாக இணைந்து வாழ்ந்த மக்களை சாலை பிரிப்பதால் நிலைமை இன்னும் மோசமாகும். நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் வரைபடத்தில் காட்டப்படவில்லை அல்லது அலுவல் குறிப்புகளில் இடம்பெறவில்லை. அவர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டனர். வனத்துறை நிலத்தில் 3-4 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக காட்டப்பட்டது. அனைத்து குடும்பத்தினரும் ஒன்றாக மறுகுடியமர்த்தப்பட வேண்டும் என அரசிடம் கிராமத்தினர் வாதிட்டு வருகின்றனர். வார்லிகள் ஒன்றாக இருப்பதன் தேவையை அதிகாரிகள் அங்கீகரிக்கவில்லை.
“நான் இங்கு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். வீட்டின் பழைய வரி ரசீதை பாருங்கள். ஆனால் இப்போது அரசு வந்து வனத்துறை நிலத்தில் நான் ஆக்கிரமித்துள்ளேன் என்கிறது. இழப்பீட்டிற்கும் நான் தகுதி பெறவில்லை. நான் இப்போது எங்கே செல்வது?” என்று என்னிடம் பழைய அலுவல் காகிதங்கள் சிலவற்றை காட்டியபடி சொல்கிறார் 80 வயது தாமு பரேட். அவர் என் தாத்தாவின் சகோதரர். “என்னால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது. நீ படித்தவள், இளவயது. நீ தான் இப்பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று கூறி அவர் மெளனமானார்.
45 வயது தர்ஷனா பரேட் மற்றும் 70 வயது கோவிந்த் ககட் ஆகியோரது வீடுகளும் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளதாக காட்டப்படுகிறது. இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இருவரும் வீடு கட்டியதோடு, ஆண்டுதோறும் முறையாக சொத்துவரி செலுத்தியுள்ளனர். அவ்வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்ட மின் இணைப்பும் அரசால் அளிக்கப்பட்டது. எனினும் நெடுஞ்சாலைக்கான வரைபடம் எடுக்கும்போது அவர்களின் வீடுகள் வனத்துறை நிலத்தின் ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டது. அதாவது அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது.
பல ஆண்டுகளாக தொடரும் இந்தச் சிக்கலான போராட்டம் தொடக்கத்தில் மக்களை ஒன்றிணைத்தது. பின்னர் அவர்களின் கோரிக்கைகள் மாறின. திட்டத்திற்கு எதிர்ப்பு எனத் தொடங்கி, கூட்டாக அதிகளவு இழப்பீடு கோர முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிம்பாவலியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் முறையான மறுகுடியமர்த்தல் வேண்டும் என போராட்டம் மாறியது.
“பல்வேறு அரசியல் கட்சியினர், நிறுவனங்கள், சங்கங்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து ஷேட்காரி கல்யாண்காரி சங்கடனா என்ற சுயாதீன அமைப்பாக ஒன்று திரண்டன. இந்த முன்னணி மக்களை முன்னகர்த்தி பேரணிகள், போராட்டங்கள் நடத்தி அரசிடம் அதிக இழப்பீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்குப் பிறகு, விவசாயிகளும், சங்கடனாவின் தலைவர்களும் எங்களை கைவிட்டுச் சென்றனர். முறையான மறுகுடியமர்த்தல் விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது,” என்றார் பாபா.
ஷேட்காரி கல்யாண்காரி சங்கடனாவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணா போயர் இதை மறுக்கிறார். “முறையான இழப்பீட்டிற்காக நாங்கள் மக்களை ஒன்றிணைத்து போராடினோம். நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்தும் நாங்கள் கேள்விகள் எழுப்பினோம். உதாரணத்திற்கு, மக்கள் எப்படி நெடுஞ்சாலையை கடப்பார்கள், மாணவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு எப்படிச் செல்ல முடியும், ஓடைகளில் இருந்து தண்ணீர் வந்து கிராமங்கள், வயல்களில் புகுந்தால் என்ன செய்வார்கள் என்றெல்லாம் கேட்டோம். நாங்கள் கடினமாக போராடினோம். ஆனால் மக்கள் கொஞ்சம் இழப்பீடு கிடைத்ததும் அனைத்தையும் மறந்துவிட்டனர்,” என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையே, பழங்குடி அல்லாத குன்பி விவசாயி அருண் பாட்டீல், பேசுகையில், தனது விவசாய நிலத்திற்கு அருகில் தனக்கு சொந்தமான இடத்தில் வார்லிகள் வாழ்வதால் இழப்பீடு தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். எனினும் இது தவறாக முடிந்தது. “எங்கள் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு வருவாய் அலுவலகத்திற்கு பலமுறை சென்றுவந்தோம். இறுதியாக எங்கள் அனைத்து வீடுகளும் கிராமப்புற பகுதிக்குரியது என உறுதி செய்யப்பட்டது,” என நினைவுகூர்ந்தார் 64 வயது திலீப் லோக்கன்டி.
லோக்கன்டியின் வீடு நிம்பாவலியில் உள்ள பழங்குடியின கிராமமான கரேல்படாவில் ஐந்து ஏக்கர் கிராமப்புற இடத்தில் (அரசு ஒதுக்கிய கிராம நிலம்) அமைந்துள்ளது. நிலத்தின் துல்லியமான பிரிவினைகளை அறிவதற்காக நிலப்பதிவுத் துறையிடம் வார்லிகள் விண்ணப்பித்தனர். அச்சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் அங்கு இல்லை எனக் கூறி அலுவலர்கள் தங்கள் பணியை முழுமையாக முடிக்கவில்லை.
இழப்பீட்டிற்கு தகுதியானவர்கள் கூட எதிர்காலம் பற்றி கவலையில் உள்ளனர். அறிவிக்கப்பட்ட சொற்ப இழப்பீட்டைக் கொண்டு மற்றொரு வீட்டைக் கட்டுவது சாத்தியமற்றது. “வனத்துறை நிலத்தில் வீடு கட்ட நாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காக விட்டுக் கொடுத்துவிட்டு பழங்குடியினர் நாங்கள் எங்கு செல்வது?” என்றார் 52 வயது பாபன் தம்படி.
துணைக் கோட்டாட்சியரை ஒவ்வொரு முறை அணுகும்போதும், நிம்பாவலி குடியிருப்புவாசிகளுக்கு பலவித சத்தியங்கள், உறுதிகள் அளிக்கப்படும். “அது நிஜமாகும் என நாங்கள் காத்திருக்கிறோம். அதுவரை நிலத்திற்கான போராட்டம் தொடரும்,” என்கிறார் பாபா.
நிம்பாவலியின் வார்லிகளுக்கு நெடுஞ்சாலை அமைவதால் எந்த பலனும் இல்லை. முழுமையான மறுகுடியமர்த்தலுக்கான திட்டமின்றி அவர்கள் கிராமத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். தோற்கும் போராட்டம் என்று தெரிந்தாலும்கூட என் சக கிராமத்தினர் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
கட்டுரையை சரிபார்த்த ஸ்ம்ருதி கோபிகர் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளரும் பத்தி எழுத்தாளரும் ஊடகக் கல்வியாளரும் ஆவார்.
தமிழில்: சவிதா