டிரக்கில் வைக்கப்பட்டுள்ள, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பத்து அடி உயர கணேசா சிலையின் ஒரு கை உயர்த்தி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது, சங்கர் மிர்ட்வாட் அதில் களிமண்ணைப் பயன்படுத்தி இறுதிகட்ட வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். தேங்காய் மட்டை மற்றும் பிளாஸ்டர் சாக்குகள் பரவிக்கிடக்கின்றன, வர்ண பாட்டில்களுக்கு அடுத்ததாக ரப்பர் சாய கொள்கலன்களும், சிலை சட்டங்களும் இருக்கின்றனர். “சில இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பூசப்பட வேண்டியுள்ளது. அதை முடித்தால், சிலை வர்ணம் பூசுவதற்கு தயாராகிவிடும்” என்று சங்கர் கூறுகிறார்.
பழைய ஹைதராபாத் நகரின் பரபரப்பான தூல்பெட் பகுதியில் உள்ள மங்கள்ஹாட் சாலையில் செய்து முடித்துவிட்ட மற்றும் தயாராகிக்கொண்டிருக்கும் சிலைகள் வரிசையாக அடிக்கிவைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பின்னால், தார்ப்பாய் மற்றும் மூங்கில் போடப்பட்டுள்ள கொட்டகையில் அவர் வேலை செய்து கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது. குறுகலான சந்துகளில், டிரக்குகளும், டெம்போக்களும் பெரிய மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை சுமந்து நத்தையைப்போல் ஊர்ந்து செல்கின்றன. இங்கு செய்யப்படும் பெரிய விநாயகர் சிலைகள் 21 அடி உயரம் கொண்டவை. தார்ப்பாயால் மூடப்பட்டு, ஆண்கள் பாடிக்கொண்டே அவற்றை வைக்க வேண்டிய பொது பந்தல்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ எடுத்துச்செல்வார்கள்.
ஜீன் மாத இறுதி வாரத்தில் இருந்து சங்கர் இந்த கொட்டகையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இதன் உரிமையாளர் தற்போது வெளியூர் சென்றுள்ளதாகவும், அவர் இதுபோன்று மூன்று இடங்களில் பட்டறை வைத்துள்ளதாகவும் சங்கர் கூறுகிறார். ஒவ்வொரு இடத்திற்கும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் அவர் சென்று பார்த்தபோது, இந்தாண்டு செப்டம்பர் மாத இறுதியில் வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக, 2 முதல் 3 கலைஞர்கள் சிலை தயாரித்துக்கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.
சிற்பிகளின் மற்றொரு பகுதியினர் தூல்பெட்டிற்கு ஜனவரி மாத வாக்கில் வந்து ஏப்ரல் மாதத்தில் வீடு திரும்புவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இதேபோல் செய்வதாக சங்கர் கூறுகிறார். “எங்கள் கடைக்கு நாங்கள் கொல்கத்தாவைச்சார்ந்த சிற்பியை வரவழைப்போம்” என்று அவர் கூறுகிறார். “அவர் நன்றாக அரைக்கப்பட்ட மண்ணை வைத்து சிலை வடிப்பார். ஒரு பெரிய சிலையை செய்து முடிப்பதற்கு அவருக்கு 25 நாட்கள் தேவைப்படும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சில வாரங்களுக்கு பின்னர், சங்கர் மற்றும் மற்ற கலைஞர்கள் வருவார்கள். அவர் செயல்முறையை விளக்குவார். சிற்பமாக்கப்பட்ட களிமண் சிலைகள் வார்ப்புருவாக (template) பயன்படும். சங்கர் மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் அதற்கு மேல் ரப்பர் சாயத்தை பூசுவார்கள். அது பத்து நாட்களில் கெட்டியாகி உறைபோல் மாறிவிடும். பின்னர் அதில் பிசினை பூசுவார்கள். இவையிரண்டும் இணைந்து அச்சாக மாறிவிடும். அதை அடிப்படை(base idol) சிலையில் இருந்து எடுத்துவிடலாம். அந்த அச்சில் பிளாஸ்டர் மற்றும் தேங்காய் மட்டை நிரப்பி மற்றொரு சிலை செய்யப்படும். உயரமான சிலைகளுக்கு உட்புறம் மூங்கில் வைத்து, முட்டு கொடுக்கப்படும். பிளாஸ்டர் 10 முதல் 15 நிமிடத்தில் இறுகிவிடும். பின்னர் அந்த அச்சு நீக்கப்படும். முழுமை பெறாத பகுதிகளில் தொழிலாளர்கள் களிமண்ணைக்கொண்டு நிரப்புவார்கள். பின்னர், புதிய சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலங்காரம் செய்து தரப்படும்.
இதே போல்தான், இந்தப்பட்டறையில் உள்ள சங்கர் மற்றும் மற்றவர்கள் சிலை செய்வார்கள் என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு வடிவத்திலும் 50 சிலைகள், மொத்தமாக 400 சிலைகள், விநாயகர் சதுர்த்தி காலத்தில் சங்கருக்கு வேலை வழங்கியுள்ளவரின் 4 பட்டறைகளிலும் செய்யப்படும். அவர்கள் பெரிய சிலைகள் மட்டுமே செய்வார்கள். 10 அடி அல்லது அதற்கு மேல் வடிவத்திற்கு ஏற்றார் போல் இருக்கும். ஒவ்வொரு சிலையும் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்.
சங்கருக்கு தற்போது 29 வயதாகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக அவர் சிலைகள் தயாரிக்கும் பணியில் இருந்து வருகிறார். விநாயகர், துர்கா மற்றும் மற்ற தெய்வங்களின் சிலைகளை அவர் செய்துள்ளார். அவர் கும்பர் ஜாதியை சேர்ந்தவர். அவர்கள் பாரம்பரியமாக பானை செய்யும் தொழில் செய்பவர்கள். “எனது பத்தாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில்,16 வயதாக இருந்தபோது எனது மாமாவுடன் முதன்முதலில் நான் தூல்பெட்டுக்கு வந்தேன். நான் சிறுசிறு வேலைகளான பொருட்களை எடுத்துக்கொடுப்பது மற்றும் வர்ணம் பூச உதவுவது போன்ற வேலைகளை செய்தேன்.” என்று அவர் கூறுகிறார். மூன்று மாதங்கள் அங்கு தங்கி மாதம் ரூ.3,500 சம்பாதித்தார்.
சங்கரின் குடும்பத்தினர், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த வார்னி மண்டலத்தில் உள்ள வார்னி கிராமத்தில் வசிக்கின்றனர். அது ஹைதராபத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த விடுமுறைக்குப்பின் அவர் பிஏ பட்டப்படிப்பு படிப்பதற்கு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தேட் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கல்லூரிக்குச் சென்றுவிட்டார். “இரண்டாவது ஆண்டில் நான் படிப்பை விட்டுவிட்டேன். நான் தான் வீட்டிலேயே மூத்தவன். அதனால், அனைவரையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு உள்ளது.” என்று அவர் கூறுகிறார்.
சங்கரின் மூன்று சகோதரர்களும் (அவருக்கு சகோதரிகள் கிடையாது) சிற்பிகள். அவரும் அவரது மனைவி ஸ்வாதியும் பீடி சுற்றும் தொழிலாளர்கள். வருமானத்திற்காக இத்தொழிலை செய்கிறார்கள். அவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது பெற்றோர்களும் அவர்களுடன் வசிக்கிறார்கள். அவர்கள் பானை செய்யும் தொழிலாளர்கள்.
கல்லூரியை விட்டு வந்தவுடனே, அவர் தூல்பெட் திரும்பினார். “மற்ற சிற்பிகளுக்கு உதவுவது மற்றும் அவர்களின் வேலைகளை பார்த்து நானும் சிலை செய்யக்கற்றுக்கொண்டேன். அப்போது முதல் நான் சிலை செய்பவராக கர்னூல், குண்டூர், விஜயவாடா, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற பல்வேறு ஊர்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்துள்ளேன். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வேலை இருந்தது. ஆனால், இப்போது எனக்கு 8 மாதங்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. கடந்த 3, 4 ஆண்டுகளாக வெளியூர் சிலைகள் வருவதால், தூல்பெட்டில் தயாரிப்பது குறைந்துவிட்டது.” என்று அவர் கூறுகிறார்.
தூல்பெட்டில் அவருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் என இரண்டு மாத சிலை வடிவமைக்கும் வேலைக்கு சம்பளம் கிடைக்கிறது என்று சங்கர் கூறுகிறார். “நான் முதலாளிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் போடுவேன். எனது திறமைக்காகவே என்னை பணியமர்த்தி அதிக ஊதியமும் வழங்குவார்கள். ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும், ஒரே இடத்தில் தங்குபவர்களும் குறைவான ஊதியம் பெறுவார்கள். நான் குறைந்த காலத்தில் சிறப்பாக வேலையை முடித்துக்கொடுப்பேன்” என்று அவர் கூறுகிறார்.
“பின்னர் எனது கிராமத்திற்குச் சென்று, எந்த வேலை கிடைத்தாலும் செய்வேன். வீடுகளுக்கு வர்ணம் பூசுபவராக, உணவகங்களில் பரிமாறுபவராக வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.600 சம்பாதிப்பேன்.” என்று சிம்மாசனத்தில் நின்றுகொண்டு விநாயகர் சிலையின் முகத்திற்கு வெள்ளை வண்ணத்தை அடித்துக்கொண்டே அவர் மேலும் கூறுகிறார்.
சங்கரைப்போலவே தெலுங்கானா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து தூல்பெட்டில் உள்ள பட்டறைகளுக்கு விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா பண்டிகை காலங்களுக்கு முன்னதாக தொழிலாளர்கள் வந்துவிடுவார்கள். அந்த மாதங்களில் பட்டறைகளிலேயே தங்கிக்கொள்வார்கள். அதில், நந்தேட் மாவட்டத்தைச் சேர்ந்த, பிலோலி தாலுகாவில் உள்ள பதூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பாப்பன் தவ்லேக்ரும் ஒருவராவார். 5 ஆண்டுகளாக ஜீன் மாதத்தின் முதல் வாரத்தில் அவர் இங்கு வந்துவிடுவார். பின்னர் தனது கிராமத்திற்கு ஆட்டோ ஓட்டுவதற்கு சென்றுவிடுவார். அவரது தந்தையும் ஆட்டோ ஓட்டுனர். தாய், அங்கன்வாடி பணியாளர். “நாங்கள் காலை 8 மணிக்கு வேலைகளை துவக்குவோம். அது நள்ளிரவு அல்லது அதற்கு மேலும் செல்லும். எங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கிடையாது. “ என்று அவர் கூறுகிறார்.
பல்வீர் சிங்(32), மங்கள்ஹாட் பகுதியையே சேர்ந்தவர், தூல்பெட்டின் மற்றொரு பட்டறையில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். “நான் மாதத்திற்கு ரூ. 12 ஆயிரம் பெறுகிறேன். ஆனால், எனது பணிக்காலம் ஆண்டில் 6 முதல் 8 மாதம் மட்டுமே. மஹாராஷ்ட்ராவில் இருந்து வரும் சிலைகளுக்கு புகழ் அதிகரித்து வருவதால், தூல்பெட் சிலைகளின் புகழ் மங்கிவிட்டது. பேகன் பஜாரில் (ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) உள்ள கடைகளில் குறைந்த விலைக்கு அவற்றை விற்கின்றனர். வேலையில்லாத மாதங்களில் நான் வீட்டிற்கு வர்ணம் அடிப்பவராக அல்லது காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன். ஆனால், இதை நான் விடமாட்டேன். ஏனெனில் நான் இந்த வேலையை செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ” என்று அவர் கூறுகிறார்.
கண்பத் முனிக்வரர் (38), தூல்பெட்டில் உள்ள ஒரு சிற்பியின் பட்டறையில் பணிபுரிகிறார். மழைக்காலத்தில் சிலைகள் ஈரமாகும்போது அவற்றை காயவைப்பதற்கு பயன்படுத்தப்படும் கரிக்கொட்டைகளை சூடாக்கிக்கொண்டிருக்கிறார். மணற்துகள்கள் கொண்ட காகிதத்தை வைத்து சிலைகளை மெருகூட்வதற்கும், கைகளை சேர்ப்பதற்கும், டிரக்கில் ஏற்றுவதற்கும் உதவுகிறார். தெலுங்கானாவின் தற்போது நிர்மல் மாவட்டமாக மாற்றப்பட்டுள்ள அடிலாபாத் மாவட்டத்தின் தானூர் மண்டத்தில் உள்ள தனது டவுட்டடாபாத் கிராமத்தில் விவசாய வேலைகள் தடைபட்டுள்ளதால், அவரது மைத்துனருடன் அவர் இங்கு முதல் முறையாக வருகிறார். அங்கு அவர் விவசாய கூலித்தொழிலாளி, நாளொக்கு ரூ.250 சம்பாதிப்பார். அவர் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்கிறார். “நான் இங்கு ஜீலை மாதத்தின் மத்தியில் இருந்து வேலை செய்கிறேன். மாதத்திற்கு ரூ.13 ஆயிரம் பெறுகிறேன். விவசாயத்தில் இருந்து, ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பெறுகிறேன். நான் சோயா, உளுந்து, பாசிபருப்பு, சுண்டல், சோளம் ஆகியவற்றை விளைவிக்கிறேன். எனக்கு இந்த சிலை செய்யும் வேலை பிடிக்கவில்லை. இரவு நேரங்களிலும் பணி செய்ய வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டு வரமாட்டேன். ” என்று அவர் கூறுகிறார்.
அவருக்கு பின்னர், சங்கர் மற்றும் மற்ற கலைஞர்கள் அச்சிலிருந்து மற்ற சிலைகளை செய்து, அலங்காரப்பணிகளை துவங்குகின்றனர். அவர்கள் கொஞ்சம் வர்ணமும் தீட்டுகிறார்கள், வேறு சில வர்ணம் தீட்டுபவர்கள், 2, 3 பேர் சேர்ந்து குழுக்களாக பணி செய்கிறார்கள். ஒருவர் முகத்திற்கும், மற்றொருவர் கைகளுக்கும் என பிரித்து வர்ணம் தீட்டுகிறார்கள். “நாங்கள் விநாயகர்சதுர்த்திக்கு இரண்டு மாதத்திற்கு முன், ஜீன் மாதத்தில் இருந்து பணிகளை துவங்குவோம்.” என்று 31வயதான பத்ரி விஷால் கூறுகிறார். வர்ணம் தெளிக்கும் கருவி மற்றும் வர்ண பாட்டிலையும் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் தூல்பெட்டைச் சேர்ந்தவர். “ஒரு சிலைக்கு வர்ணம் தீட்டுவதற்கு அரை நாள் அதாவது 8 மணி நேரமாகும். ஒரே நேரத்தில் 5 முதல் 6 சிலைகள் வரை வர்ணம் தீட்டுவோம். நான் 15 ஆண்டுகளாக வர்ணம் தீட்டி வருகிறேன். எஞ்சியுள்ள மாதங்களில் நான் கான்பூரில் இருந்து வாங்கி வந்து மொத்த விலைக்கு பட்டம் விற்பேன். இங்கு ரக்சா பந்தனுக்கு அரைநாள் விடுப்பு எடுத்தேன். மற்றபடி இரண்டு மாதங்களுக்கு எங்களுக்கு எந்த விடுமுறையும் கிடையாது. வர்ணம் தெளிக்கும் இயந்திரம் மூலம் செய்யும்போது, வர்ணமடிக்கும் வேலை கொஞ்சம் எளிதாக உள்ளது. ஆனால், நுணுக்கமாக செய்ய வேண்டிய வேலைகள் அதிக நேரமெடுக்கும். இந்த முறை எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் செய்யும் வேலையைப்பொறுத்து எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் ” என்று 15 ஆண்டுகளாக சிலைகளுக்கு வர்ணமடிக்கும் வேலை செய்துவரும் பத்ரி விஷால் கூறுகிறார்.
கண்களுக்கு வர்ணம் தீட்டுவதுதான் மிகக் கடினமான வேலை என்று கூறுகிறார் அதே பட்டறையில் பணிபுரியும் 20 வயது சைலேந்திர சிங். மிகக்கவனமாக அவர், விநாயகர் சிலையின் கண்கள் மற்றும் நெற்றிக்கு வர்ணம் தீட்டுகிறார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வர்ணம் தீட்டுபவராக பணியை துவங்கினேன். இரண்டு மாதங்களுக்கு இங்கு பணிபுரிந்துவிட்டு, எஞ்சிய மாதங்களில் படிக்கச் சென்றுவிடுவேன். (அவர் 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற முயற்சி செய்து வருகிறார்). எனது பெற்றோரின், தூல்பெட்டில் உள்ள இட்லி, தோசை கடையில் அவர்களுக்கு உதவியாகவும் இருப்பேன். விநாயகரின் கண்களுக்கு வர்ணம் தீட்டும் முக்கிய வர்ணம் தீட்டுபவராக நான் இருக்க வேண்டும். கண்களுக்கு வர்ணம் தீட்டுவது மிகக்கடினமான வேலை. அதில், பக்தர்கள் எந்தப்புறத்தில் இருந்து பார்த்தாலும், விநாயகர் அவர்களை பார்த்து ஆசிர்வதிப்பதை போல் உணரவேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.
சுமித் ஜாவுடன் சேர்ந்து
தமிழில்: பிரியதர்சினி.R.