ஆசிரியர் குறிப்பு: தமிழ்நாட்டின் ஏழு பயிர்களை பற்றிய ‘அவர்கள் அரிசியை உண்ணட்டும்’ தொடரின் முதல் கட்டுரை இது. விவசாயிகளின் வாழ்க்கைகளை அவர்களது பயிர்களின் உலகம் வழியாக பார்க்கும் 21 பல்லூடக அறிக்கைகளை பாரி அடுத்த இரண்டு வருடங்களுக்கு பதிப்பிக்கவிருக்கிறது. பெங்களூருவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக மானிய உதவியுடன் அபர்ணா கார்த்திகேயனால் இக்கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன.
தூத்துக்குடியில் தங்க நிறத்தில் அழகாக சூரியன் மேலெழுந்த நேரத்திலெல்லாம் ராணி அவரின் வேலையிடத்தில் இருந்தார். ஒரு நீண்ட மரத்துடுப்பைக் கொண்டு, நம் சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உப்பை, அவர் சேகரித்துக் கொண்டிருந்தார்.
செவ்வக உப்பளத்தின் அடிப்பகுதியை சுரண்டுகிறார். ஒரு நேரம் நொறுநொறுவென்றும் இன்னொரு நேரம் ஈரமாகவும் உள்ள நிலத்தை மிதித்தபடி படிகங்களைப் போலுள்ள அந்த வெள்ளைப் பொருட்களை ஓரமாக குவித்து வைக்கிறார். குவியலுக்கும் அவர் பணிபுரியும் இடத்துக்கும் தூரம் குறைவென்றாலும் அது அயற்சியை தரக்கூடியது. குவியலின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் வேலையும் கடினமாகிறது. காரணம், ஒவ்வொரு முறையும் பத்து கிலோ ஈர உப்பை இழுத்துக் குவியலின் மீது கொட்டுகிறார். அவரின் வயது 60. உடல் எடையில் நான்கில் ஒரு பகுதிக்கும் சற்றுக் குறைவான கனத்தை அவர் கையாளுகிறார்.
120 x 40 அடி உப்பளம் வானையும் அவரின் நிழலையும் பிரதிபலிக்குமளவு காலியாகும் வரை இடைவேளையின்றி அவர் வேலை பார்க்கிறார். இந்த உப்பு உலகம்தான் அவரின் பணியிடமாக 52 வருடங்களாக இருக்கிறது. அவருக்கு முன் அவரது தந்தைக்கும் அதுவே பணியிடமாக இருந்தது. தற்போது மகனுக்கும் பணியிடமாக அது இருக்கிறது. இங்குதான் எஸ்.ராணி அவரது கதையைச் சொல்கிறார். தென்தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 25,000 ஏக்கர் உப்பளங்களின் கதை.
மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாத பாதி வரை, உப்பு தயாரிப்பதற்கு சரியான மாவட்டமாக இது இருக்கிறது. காரணம், வெப்பம் மற்றும் வறட்சி. ஆறு மாதங்களுக்கு தொடர் உற்பத்தி நடத்தவும் முடியும். தமிழ்நாட்டிலேயே அதிக உப்பு தயாரிக்கும் மாவட்டம் இதுதான். இந்தியாவின் 11 சதவிகித உப்பு உற்பத்தியான 24 லட்சம் டன்கள் தமிழ்நாட்டில்தான் கிடைக்கிறது. ஆனால் உற்பத்தியில் பெரும் பங்கு வருவது குஜராத் மாநிலத்திலிருந்து. 1.6 கோடி டன்கள். கிட்டத்தட்ட நாட்டின் ஆண்டு சராசரியான 2.2 கோடி டன்னில் 76 சதவிகிதம். அந்த அளவுமே கூட 1947ம் ஆண்டில் மொத்த நாட்டிலும் உற்பத்தியான 19 லட்சம் டன்னை விட பெருமளவு ஆகும்.
2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதி. தூத்துக்குடியின் ராஜபாண்டி நகருக்கு அருகே இருக்கும் உப்பளங்களுக்கு பாரி செல்வது இதுவே முதன்முறை. ராணியும் அவரின் சக ஊழியர்களும் மாலை நேரத்தில் எங்களை சந்தித்தார்கள். ஒரு வேப்பமரத்தடியில் வட்டமாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் வசிக்கும் வீடுகள் எங்களுக்கு பின்னே அமைந்திருந்தன. அவற்றில் சில செங்கற்களாலும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளாலும் கட்டப்பட்டிருந்தன. சிலவை கூரை வேயப்பட்டிருந்தன. உப்பு தயாரிக்கும் இடங்கள் சாலைக்கு அப்புறத்தில் இருக்கிறது. பல தலைமுறைகளாக அவர்கள் வேலை பார்க்கும் இடம் அது. உரையாடல் தொடங்கும்போது வெளிச்சம் மங்கத் தொடங்கியது. உப்பின் ரசாயனப் பெயரான சோடியம் க்ளோரைட் தயாரிக்கும் சிக்கலான முறையைப் பற்றிய ஒரு வகுப்பாக, துரிதக் கல்வியாக அந்த உரையாடல் மாறியது.
கடல் நீரை விட அதிக உப்புத்தன்மை கொண்ட அடிமண்ணில் இருக்கும் உப்புநீரிலிருந்து இந்தப் ‘பயிர்’ அறுவடை செய்யப்படுகிறது. ஆழ்துளைக் கிணறுகளை கொண்டு மேலே கொண்டு வரப்படுகிறது. ராணியும் அவரின் நண்பர்களும் பணிபுரியும் 85 ஏக்கர் உப்பளங்களில் ஏழு ஆழ்துளைக் கிணறுகள் நான்கு அங்குல உயர நீரை மனைகளில் நிரப்புகின்றன. (ஒவ்வொரு ஏக்கரும் ஒன்பது மனைகளாக பிரிக்கப்பட்டு சுமாராக நான்கு லட்சம் லிட்டர் நீரைக் கொண்டிருக்கின்றன. 10,000 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட 40 பெரிய தொட்டிகளுக்கு இணையானது).
உப்பளத்தின் வடிவமைப்பை சரியாக விளக்கும் சிலரில் பி.அந்தோணிசாமியும் ஒருவர். 56 வருடங்களாக உப்பள வேலை செய்பவர். வெவ்வேறு பாத்திகளில் நீரின் அளவை சரியாக வைப்பதுதான் அவரது வேலை. பாத்திகளை ஆண் பாத்திகள் என்றும் பெண் பாத்திகள் என்றும் பிரிக்கிறார். ஆண் பாத்திகள் ‘ஆவியாக்கும்’ வேலையைச் செய்கின்றன. இயற்கையாக காய்ந்து நீர் ஆவியாகும் ஆழமற்ற செயற்கைப் பாத்திகள் அவை. பெண் பாத்திகள் உப்பைப் படிகங்களாக பெற்றெடுக்கின்றன.
“உப்புநீர் விசைக்குழாயின் துணையுடன் மேலே கொண்டு வரப்பட்டு, ஆவியாக்கும் பாத்திகள் முதலில் நிரப்பப்படும்,” என்கிறார் அவர்.
பிறகு அவர் தொழில்நுட்பத்தைப் பேசுகிறார்.
உப்புத்தன்மை பாம் நீர்மானியால் டிகிரிகளில் அளக்கப்படுகிறது. திரவங்களின் ஈர்ப்புசக்தியை அளக்கும் கருவி அது. பிரிக்கப்பட்ட நீரின் ‘பாம் டிகிரி’ பூஜ்யம். கடல்நீருக்கு அது 2லிருந்து 3 பாம் டிகிரியாக இருக்கிறது. ஆழ்துளைக் கிணற்று நீரின் டிகிரி 5லிருந்து 10 வரை இருக்கிறது. 24 டிகிரியில் உப்பு உருவாகிறது. “நீர் ஆவியானதும் உப்புத்தன்மை அதிகரித்ததும், அது படிகமாக்கும் பாத்திகளுக்கு அனுப்பப்படும்,” என்கிறார் அந்தோணிசாமி.
அடுத்த இரு வாரங்களுக்கு இங்கிருக்கும் பெண்கள் மிகப்பெரிய கனமான ஒரு வறண்டியை தங்களுக்குப் பின் இழுத்துச் செல்வார்கள். ஒவ்வொரு நாள் காலையும் அதை வைத்துதான் நீரை அவர்கள் கலக்குவார்கள். நீளவாரியாக ஒருநாள் வாருவார்கள். அகலவாரியாக அடுத்த நாள் வாருவார்கள். அப்போதுதான் உப்புப் படிகங்கள் பாத்தியின் அடியில் தேங்காமல் இருக்கும். 15 நாட்களுக்குப் பிறகு ஆண்களும் பெண்களும் பெரிய மரத்துடுப்பைக் கொண்டு உப்பைச் சேகரிப்பார்கள். பிறகு அவற்றைப் பாத்திகளுக்கு இடையே இருக்கும் வரப்பில் வைப்பார்கள்.
பிறகுதான் உண்மையான பளுதூக்கும் வேலை. பெண்களும் ஆண்களும் வரப்பிலிருந்து படிகங்களை தலையில் சுமந்து சென்று கரையில் சேர்ப்பார்கள். ஒவ்வொரு நபருக்குமென வரப்பின் சில துண்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து அவர்கள் 5-7 டன் உப்பை ஒவ்வொரு நாளும் தலையில் தூக்கிச் சுமக்கிறார்கள். 150லிருந்து 250 அடி தூரத்துக்கு 35 கிலோ கனத்தை தலையில் சுமந்து 150 முறை ஒருநாளில் சென்றுவர வேண்டியிருக்கும். அவர்கள் சுமைகளை கொட்டும் பகுதி சற்று நேரத்தில் ஒரு மலையைப் போல் உயர்ந்துவிடுகிறது. தகிக்கும் சூரியனுக்கு கீழ் வேகும் இந்தப் பழுப்பு நிலத்தில் அந்த உப்பு, வைரங்களைப் போல் மின்னுகின்றன.
*****
“உப்பு அமைந்தற்றால், புலவி; அது சிறிது மிக்கற்றால் நீள விடல்”
திருக்குறளில் இடம்பெறும் ஒரு குறள் அது . திருக்குறளில் 1,330 பாடல்கள் உள்ளன. அதை இயற்றியது தமிழ்ப்புலவரான திருவள்ளுவர். கிமு 4க்கும் கிபி 5க்கும் இடைப்பட்ட ஏதோவொரு காலத்தில் அவர் வாழ்ந்திருக்கக் கூடுமென வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உப்பை உவமையாக கொள்ளும் பழக்கம் தமிழ் இலக்கியத்தில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வந்திருக்கிறது. அதற்கு முன்னமே இன்றைய தமிழ்நாட்டுக் கடலோரத்தில் அறுவடை செய்யும் பழக்கமும் தோன்றியிருக்கலாம்.
உப்புப் பண்டமாற்றைப் பற்றிப் பேசும் 2000 வருடப் பழமையான சங்ககாலப் பாடல் ஒன்றும் இருக்கிறது. அதுவும்கூட காதலர்களை குறிப்பிடுவதாகத்தான் அமைகிறது.
சேயாறு
சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப்
பெறினே நன்றுமன் தில்ல-
வயச்
சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல
நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை
மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு
விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி
இரு பரப்பின் சேர்ப்பற்கு,
”இனி
வரின் எளியள்” என்னும் தூதே.
நாட்டுப்புற பாடல்களிலும் பழமொழிகளிலும் கூடப் பலவை உப்பு பற்றிய சொல்லாடல்களைக் கொண்டிருக்கின்றன. உப்பில்லா பண்டம் குப்பையிலே என ஒரு பழமொழியை ராணி குறிப்பிடுகிறார். அவருடைய சமூகத்தில் உப்பு, இந்து மதக் கடவுளான லஷ்மியாகக் கருதப்படுகிறது. “யாரேனும் வீடு மாற்றினால், நாங்கள் உப்பு, மஞ்சள், நீர் ஆகியவற்றை எடுத்துச் சென்று புதுவீட்டில் விட்டு வருவோம். மங்களகரமான விஷயம் அது,” என்கிறார் ராணி.
வெகுஜனப் பண்பாட்டில் உப்பு, விசுவாசத்துக்கு அடையாளமாக இருக்கிறது. எழுத்தாளர் ஆ.சிவசுப்ரமணியன், ‘சம்பளம்’ என்கிற வார்த்தை, சம்பா (நெல்) மற்றும் அளம் (உப்பளம்) என்கிற வார்த்தைகளின் சேர்க்கைதான் என்கிறார். அவரின் உப்பிட்டவரை என்கிற அற்புதமான புத்தகத்தில் (தமிழ்க் கலாசாரத்தில் உப்பின் பங்கு பற்றிய ஆய்வு) அதிகமாக வழங்கப்படும், உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிற பழமொழியைச் சுட்டிக் காட்டுகிறார். உங்களின் உணவுக்கு உப்புப் போட்டவரை மறக்கக் கூடாது என சொல்லும் பழமொழி. அடிப்படையில் உங்களுக்கு வேலை கொடுப்பவர் குறிக்கப்படுகிறார்.
மார்க் கர்லான்ஸ்கி எழுதிய Salt: A World History என்னும் அற்புதமான புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல , “தொடக்ககால சர்வதேச வணிகப்பண்டங்களில் ஒன்றாக உப்பு மாறியது. அதன் உற்பத்திதான் உலகின் முதல் தொழிற்துறை. தவிர்க்க முடியாமல் அரசின் முதல் ஏகபோகமாகவும் இருந்தது.”
இந்திய வரலாற்றிலும் உப்பு முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி உப்பின் மீது வரி விதித்தபோது, அதை எதிர்த்து மகாத்மா காந்தி 1930ம் ஆண்டின் மார்ச்-ஏப்ரலில் குஜராத்திலுள்ள தண்டியின் உப்பளங்களில் உப்பு சேகரிக்க யாத்திரை சென்றார். ஏப்ரல் மாதப் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தை திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை நடத்தினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தண்டி யாத்திரை ஒரு முக்கியமான அத்தியாயமாக திகழ்கிறது.
*****
“கடுமையான உழைப்புக்கு, மிகவும் குறைவான ஊதியங்கள்.”
–
அந்தோணிசாமி, உப்பளத் தொழிலாளர்
ராணியின் முதல் தினக்கூலி ரூ.1.25. அப்போது அவருக்கு எட்டு வயது. 52 வருடங்களுக்கு முன் சிறுமியாக நீளப் பாவாடை அணிந்து உப்பளங்களில் உழைத்துக் கொண்டிருந்தார். அந்தோணி சாமிக்கும் அவரது முதல் ஊதியம் நினைவிலிருக்கிறது: ரூ.1.75. பல ஆண்டுகளுக்கு பிறகு அது 21 ரூபாயாக உயர்ந்தது. பல பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்கான தினக்கூலி ரூ.395 ஆகவும் ஆண்களின் தினக்கூலி ரூ.405 ஆகவும் மாறியிருக்கிறது. அவர் சுட்டிக்காட்டியபடி, அதுவும் “கடுமையான உழைப்புக்கான குறைவான ஊதியங்கள்”தான்.
“ நேரம் ஆயிட்டு ,” என ராணியின் மகன் குமார் அடுத்த நாள் காலையில் அழைக்கிறார். நாங்கள் ஏற்கனவே உப்பளங்களில்தான் இருந்தோம். வேலை தாமதமாகக்கூடாது என்பதில் அவர் குறிப்பாக இருந்தார். தூரப்பார்வைக்கு உப்பளங்கள் ஓவியம் போல் தெரிந்தது. சிகப்பு, ஊதா, தங்க நிறங்கள் வானில் இருந்தன. தொட்டிகளிலிருந்த நீர் மின்னியது. இரக்கமான தென்றல் காற்றில், தூரத்திலிருந்த தொழிற்சாலைகள் கூட ஆபத்தற்றவையாக தெரிந்தன. அழகான நிலப்பரப்பு. அரைமணி நேரத்தில் வேலை தொடங்கியதும் அது எத்தனை கொடூரமானதாக மாறவிருக்கிறது என்பதை நான் காணவிருக்கிறேன்.
உப்பளங்களுக்கு நடுவே இருக்கும் அழுக்கான பாழடைந்த கொட்டகையில் ஆண்களும் பெண்களும் தயாராகின்றனர். பெண்கள் புடவைகளின் மீது சட்டைகளை அணிந்து கொள்கின்றனர். பருத்தித் துணியை வட்டமாக சுற்றி ஊக்குக் குத்தி சுமை தூக்குவதற்காக தலையில் வைத்துக் கொள்கின்றனர். பிறகு தங்களின் அலுமினியச் சட்டிகள், பக்கெட்டுகள், நீர்க் குடுவைகள், பழையசோறு கொண்ட தூக்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்கின்றனர். “வடக்குப் பக்கம் இன்று செல்கிறோம்,” என்கிறார் குமார் இடது பக்கம் சுட்டிக்காட்டி. குழு அவரை பின்தொடர்ந்து, அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு அவர்கள் பணிபுரியவிருக்கும் உப்பளங்களின் இரு வரிசைகளை அடைகின்றனர்.
வேகமாக அவர்கள் வேலையைத் தொடங்குகின்றனர். பெண்களும் ஆண்களும் அவர்களின் புடவைகள், பாவாடைகள், வேட்டிகள் முதலியவற்றை ஏற்றி முழங்காலளவு கட்டிக் கொண்டனர். இரண்டடி நீர் வாய்க்காலை தாண்டி, பக்கெட்டுகளில் உப்பை அள்ளி சட்டிகளில் நிரப்பிக் கொள்கின்றனர். நிரம்பியதும் அவை தூக்கி தலைகளில் வைக்கப்படுகிறது. பிறகு கயிற்றின் மீது நடப்பவர்கள் போலல்லாமல் இரு பக்கமும் நீர் இருக்கும் குறுகியப் பாதையின் மீதான பனைமரப் பாலத்தில் 35 கிலோ உப்பை தலைகளில் சுமந்து வேகமாக நடக்கின்றனர்.
ஒவ்வொரு நடையின் முடிவிலும் ஒரு சிறு அசைவிலேயே சட்டிகளில் இருக்கும் உப்பை, வெள்ளை மழை போல் தரையில் கொட்டி விட்டு மீண்டும் உப்பெடுக்கத் திரும்புகின்றனர். மீண்டும் மீண்டும் நடை தொடர்கிறது. அவர்களில் ஒவ்வொருவரும் அதே விஷயத்தை 150, 200 முறை செய்கின்றனர். மொத்த உப்பும் பத்தடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட அம்பாரமாகி விடுகிறது.
உப்பளங்களின் அந்தப் பக்கத்தில் 53 வயது ஜான்சி ராணியும் அந்தோணி சாமியும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வறண்டியைக் கொண்டு இழுத்து மரத்துடுப்பைக் கொண்டு சேகரிக்கிறார் ராணி. வெயில் கூடுகிறது. நிழல்கள் அடர்கின்றன. ஆனால் எவரும் வேலையை நிறுத்தவில்லை. முதுகை சற்று நிமிர்த்திக் கொள்ளவும் ஆசுவாசத்துக்கும் கூட அவர்கள் நிற்கவில்லை. அந்தோணியிடமிருந்து மரத்துடுப்பை வாங்கி உப்பை வரப்புக்கு வார முயற்சி செய்து பார்த்தேன். கொடுமையான வேலை. ஐந்து முறை இழுத்தப்பிறகு என் தோள்கள் பற்றி எறிந்தன. முதுகு வலித்தது. கண்களை வியர்வை நனைத்தது.
அமைதியாக அந்தோணி துடுப்பை திரும்ப வாங்கி உப்பகற்றத் தொடங்குகிறார். ராணி இருக்கும் பாத்திக்கு நகர்ந்தேன். அவரின் தசைகள் இறுகி தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தன. எல்லா உப்பும் ஒரு பக்கமாக சேர்ந்தது. ஏதுமற்று பழுப்பு நிறமடைந்த பாத்தி, நீர் பாய்ச்சப்படவும் அடுத்த அறுவடைக்கும் காத்திருந்தது.
சமமற்று இருந்தக் குவியலை துடுப்பால் சமப்படுத்தியபிறகு தன்னோடு அமர ராணி என்னை அழைத்தார். கண்ணைக் குருடாக்கும் வெள்ளை நிற உப்புக் குவியலருகே நாங்கள் அமர்ந்து தூரத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலைப் பார்த்தோம்.
“ஒருகாலத்தில் இந்த உப்பளங்களிலிருந்து உப்புக் கொண்டு செல்ல சரக்கு ரயில்கள் வந்தன,” என்கிறார் ராணி பழையப் பாதையைக் காற்றில் வரைந்தபடி. “சில ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் விட்டுச் சென்று விடுவார்கள். பிறகு, எஞ்சின் வந்து அவற்றை இழுத்துச் செல்லும்.” மாட்டு வண்டி, குதிரை வண்டி முதலியவற்றையும் உப்பு ஆலை இயங்கிய கொட்டகை பற்றியும் அவர் பேசினார். இப்போது சூரியனும் உப்பும் வேலையும் மட்டும்தான் இருக்கிறது என்கிறார். இடுப்பிலிருந்து ஒரு சுருக்குப் பையை எடுத்து, அதிலிருந்து இரண்டு ரூபாய் அமிர்தாஞ்சனையும் விக்ஸ் இன்ஹேலரையும் எடுத்தார். “இவைதான் (நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளும்) என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது,” எனப் புன்னகைக்கிறார்.
*****
“ஒரு நாள் மழை பெய்தால், ஒரு வாரத்துக்கு நாங்கள் வேலையிழப்போம்.”
– தூத்துக்குடியின்
உப்பளத் தொழிலாளர்கள்
பணி நேரங்களும் மாறிவிட்டன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலான ஒரு மணி நேர இடைவெளியுடன் கூடிய வேலைநாள் உண்டு. சில குழுக்கள் அதிகாலை 2 மணி முதல் காலை 5 மணி வரை வேலை பார்க்கின்றன. இன்னும் சிலர் அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை வேலை பார்க்கின்றனர். கடுமையான வேலை இருக்கும் நேரங்கள் இவை. இந்த வேலை நேரம் முடிந்தும் செய்வதற்கென சில வேலைகள் இருக்கும். சில தொழிலாளர்கள் தாமதித்து அவற்றைச் செய்வதுண்டு.
“பத்து மணிக்கு மேல் நிற்க முடியாதளவு அங்கு வெயில் அடிக்கும்,” என்கிறார் அந்தோணி சாமி. வானிலையிலும் தட்பவெப்பத்திலும் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களுக்கு அவர் முதல் சாட்சியாக இருக்கிறார். அவரே அவற்றை அனுபவிக்கவும் செய்திருக்கிறார். புவிவெப்பம் பற்றிய நியூயார்க் டைம்ஸ்ஸி ன் இணையதளம் ஒன்று அவரின் தனிப்பட்ட அனுவத்தை வானிலைத் தரவுகள் கொண்டு விவரிக்கிறது.
அந்தோணி பிறந்த 1965ம் ஆண்டிலெல்லாம் வருடத்துக்கு 136 நாட்கள் 32 டிகிரியை தூத்துக்குடியில் தாண்டும். இன்றோ அது 258 நாட்களாக மாறியிருப்பதாக தரவுகள் சொல்கின்றன. அவரின் காலக்கட்டத்திலேயே வெப்ப நாட்கள் 90 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
பருவம் தப்பிய மழையும் கூட அதிகரித்திருக்கிறது.
“ஒரு நாள் மழை பெய்தால், ஒரு வாரம் நாங்கள் வேலையிழப்போம்,” என்கின்றனர் தொழிலாளர்கள் ஒரு குரலாய். மழையால் அடித்து செல்லப்படும் உப்பு, படிவு, பாத்திகளின் அமைப்புகள் பற்றியும் பணமின்றி வெறுமனே அமர்ந்திருக்கும் நாட்களைப் பற்றியும் அவர்கள் பேசுகின்றனர்.
உள்ளூர் மாற்றங்கள் பலவும் கூட வானிலை மற்றும் தட்பவெப்பப் பிரச்சினைகளுக்கு காரணங்களாக இருக்கின்றன. நிழல் தந்த மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. இப்போது வெட்டவெளியும் நீல வானமும் மட்டும்தான். புகைப்படம் எடுக்க நன்றாக இருக்கும். வேலை பார்க்கக் கொடுமையாக இருக்கும். உப்பளங்களும் ஆரோக்கியமற்று விட்டன. “உரிமையாளர்கள் எங்களுக்காக முன்பு குடிநீர் வைத்திருப்பார்கள். இப்போது நாங்களே வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது,” என்கிறார் ஜான்சி. கழிவறைகளுக்கு என்ன செய்வார்கள் எனக் கேட்டேன். கேலியாக அப்பெண்கள் சிரிக்கின்றனர். “உப்பளங்களுக்கு பின்னால் இருக்கும் நிலங்களை பயன்படுத்துகிறோம்,” என்கின்றனர். ஏனெனில் கழிவறை இருந்தாலும் அதை பயன்படுத்த நீர் இருக்காது.
வீடுகளிலும் பெண்கள் பல சவால்களைச் சந்திக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளிடம். குழந்தைகளாக இருக்கும்போது ராணி அவர்களை அவருடன் கொண்டு வந்து கொட்டகையில் ஒரு தொட்டில் அமைத்து விட்டு வேலை பார்ப்பார். “ஆனால் இப்போது என் பேரக் குழந்தைகளை வீட்டில் விட்டு வர வேண்டியிருக்கிறது. உப்பளங்களுக்கு குழந்தைகள் வரக் கூடாது என்கிறார்கள்.” சரிதான். ஆனால் அதற்கு அர்த்தம் குழந்தைகள் அண்டைவீட்டாரிடம் விட்டு வர வேண்டும் அல்லது கவனிக்காமல் விட வேண்டும் என்பதுதான். “பால்வாடியில் கூட 3 வயதில்தான் குழந்தைகளை விட முடியும். ஆனாலும் 9 மணிக்கு மேல்தான் அது தொடங்கும். நாங்கள் கிளம்பும் நேரத்துக்கு சரியாக வராது.”
*****
“என் கைகளை தொட்டுப் பாருங்கள். ஆணின் கையைப் போலிருக்கிறதல்லவா?”
– பெண் உப்பளத் தொழிலாளர்கள்
பெண்கள் வேலைகளுக்குக் கொடுக்கும் அதிகபட்ச விலையான அவர்களின் உடல்களைப் பற்றி கேட்கும்போது உயிர்ப்பு கொள்கின்றனர். ராணி அவரின் கண்களிலிருந்து தொடங்குகிறார். மின்னுகிற வெள்ளை நிலப்பரப்பை தொடர்ந்து பார்ப்பதால் கண்ணீர் வருவதாக சொல்கிறார் ராணி. “கறுப்புக் கண்ணாடிகளை அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்,” என்னும் அவர், “ஆனால் இப்போது கொஞ்சம் பணம் தருகிறார்கள்,” என்கிறார். கண்ணாடிகளுக்கும் காலணிகளுக்கும் வருடத்துக்கு 300 ரூபாய் ஆகிறது.
சில பெண்கள் ரப்பர் அடிபாகத்தில் தைக்கப்பட்ட கறுப்பு காலுறைகளை அணிகின்றனர். உப்பளத்திலிருந்த ஒருவர் கூட கண்ணாடி அணியவில்லை. “ஒரு நல்ல கண்ணாடி 1000 ரூபாய் ஆகும். மலிவான கண்ணாடிகளால் பயனில்லை. இடையூறாகத்தான் இருக்கும்,” என அவர்கள் அனைவரும் சொல்கின்றனர். 40 வயதுகளை எட்டும்போது பார்வைக் கோளாறு ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.
ராணியுடன் பல பெண்கள் இணைகின்றனர். இடைவேளை மறுக்கப்படுவது, குடிநீர் இல்லாதது, சுட்டெரிக்கும் சூரியன், தகிக்கும் வெயில், தோலை பாதிக்கும் உப்பு நீர் ஆகியவற்றை பற்றி சத்தமாக புகார்கள் சொல்கின்றனர். “என் கைகளைப் பாருங்கள். ஆணின் கைகள் போல் இருக்கிறதல்லவா?” உள்ளங்கைகளும் பாதங்களும் விரல்களும் என்னிடம் காட்டினார்கள். பெருவிரல் நகங்கள் கறுப்படைந்திருக்கிறது. சுருங்கியிருக்கிறது. கைகள் தடித்துவிட்டன. கால்களில் கறைகள். குணமாகாத சிறு காயங்கள். ஒவ்வொரு முறை உப்புநீரில் வைக்கும்போது வலிக்கும்.
நம் உணவை ருசியாக்கும் விஷயம் அவர்களின் தசையை உண்கிறது.
பட்டியல் கருப்பை நீக்கம், சிறுநீரகக் கற்கள், குடலிறக்கம் என உள்ளுக்குள்ளும் நீள்கிறது. ராணியின் 29 வயது மகன் குமார் உறுதியாகவும் வலிமையாகவும் இருக்கிறார். ஆனால் அதிகச் சுமையை வேலையிடத்தில் தூக்குவதால் அவரின் குடல் இறங்கி விட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் படுத்த படுக்கை. இப்போது அவர் என்ன செய்கிறார்? “கடும் சுமைகளை நான் தொடர்ந்து சுமக்கிறேன்,” என்கிறார் அவர். அவருக்கு வேறு வழியுமில்லை. அந்த டவுனில் செய்வதற்கு வேறு வேலைகளும் இல்லை.
இப்பகுதியின் இளைஞர்கள் சிலர் இறால் பண்ணைகளிலோ மலர் ஆலைகளிலோ வேலை பார்க்கின்றனர். உப்பளத் தொழிலாளர்களில் பெரும்பாலும் 30 வயதானவர்கள். அந்த வேலையை பல பத்தாண்டுகளாக செய்பவர்கள். குமாரின் மனக்குறையோ ஊதியத்தை பற்றிதான் இருந்தது. “உப்பு கட்டுபவர்கள் ஒப்பந்த ஊழியர்கள் போல. எங்களுக்கு ஊக்கத் தொகை கிடையாது. ஒரு பெண் தொழிலாளர் ஒரு கிலோ உப்பை 25 பாக்கெட்டுகளில் கட்டினால் ரூ.1.70 அவருக்குக் கிடைக்கும். (ஒரு பாக்கெட்டுக்கு ஏழு பைசாவுக்கும் குறைவு). அந்த 25 பாக்கெட்டுகளையும் அடைக்கும் இன்னொரு பெண்ணுக்கு ரூ.1.70 கொடுக்கப்படுகிறது. அந்த 25 பாக்கெட்டுகளை ஒரு சாக்கில் கட்டி கையால் அதை தைத்து சரியாக அடுக்கி வைக்கும் ஆண் தொழிலாளருக்கு 2 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அடுக்கு வளர வளர தொழிலாளரின் உடல் நலிவடைகிறது. ஆனால் ஊதியம் மட்டும் அப்படியே இருக்கிறது: 2 ரூபாய்.”
ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் தமிழ்நாட்டின் திட்டக் கமிஷன் உறுப்பினராகவும் இருக்கும் டாக்டர் அமலோற்பவநாதன் ஜோசப், “மருத்துவரீதியாக அவர்கள் எந்த காலணி அணிந்தாலும் அது துளையற்றதாகவோ நச்சுத்தன்மைக்கு எதிரானதாகவோ இருக்க முடியாது. ஒருநாள், இரு நாட்கள் வேலை பார்த்தால் கூட சமாளிக்கலாம். இதுவே உங்களின் வாழ்நாள் வேலையாக இருந்தால், அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட காலணிகள்தான் தேவைப்படும். அவையும் அவ்வப்போது மாற்றப்படுதல் வேண்டும். இதை உறுதி செய்யவில்லையெனில், உங்கள் பாதத்தின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் இல்லை,” என்கிறார்.
உப்பிலிருந்து பிரதிபலிக்கும் கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் மட்டுமில்லாமல், “பலவகை தொந்தரவுகள் கண்ணாடியின்றி இத்தகையச் சூழலில் வேலை பார்ப்பதால் கண்களில் ஏற்படும்,” என்கிறார். தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவும் எல்லா தொழிலாளர்களின் ரத்தக் கொதிப்பு அளவு பரிசோதிக்கப்படவும் அவர் அறிவுறுத்துகிறார். “ஒருவரின் பார்வை 130/90-க்கும் அதிகமாக இருந்தால், உப்பளத்தில் அவர் வேலை பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன்.” அச்சூழலில் வேலை பார்ப்பதால் தொழிலாளர்களும் ஓரளவு உப்பை உட்கொள்வார்கள் என்கிறார் அவர். ஐந்தாறு நடைகளேனும் தேவைப்படும் அளவுக்கு உப்புச் சுமைகளை சுமக்கின்றனர். “செலவாகும் ஆற்றலை கணக்கிட்டால், அது அபரிமிதமாக இருக்கும்.”
இந்தத் தொழிலாளர்கள் இந்த வேலையில் நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக இருக்கின்றனர். எந்தவித சமூகப் பாதுகாப்போ ஊதியத்துடன் கூடிய விடுப்போ குழந்தை பராமரிப்போ கர்ப்பகால சலுகைகளோ கிடையாது. கூலி வேலை செய்பவர்களுக்கும் தங்களுக்கும் வித்தியாசமில்லை என்கின்றனர் உப்பளத் தொழிலாளர்கள்.
*****
“உப்புக்கு 15,000க்கும் மேற்பட்ட பயன்கள் உண்டு.”
– எம்.கிருஷ்ணமூர்த்தி,
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு
“உப்பை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது,” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. “உப்பு இன்றி வாழ முடியாது. எனினும் இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் உப்பைப் போல உப்புத்தன்மையுடனேயே இருக்கிறது!”
தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 50,000 உப்பளத் தொழிலாளர்கள் இருப்பதாக கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். அதாவது மாவட்டத்தின் 7.48 லட்சத் தொழிலாளர்களின் 15 பேரில் ஒருவர் இந்தத் துறையில் இருக்கிறார். ஆனாலும் அவர்களுக்கான வேலை 6-7 மாதங்களுக்கு மட்டும்தான் இருக்கும். கோடைகாலமான பிப்ரவரி முதல் செப்டம்பர் வரைதான். ஒன்றிய அரசின் தரவுகள் அவர்களின் எண்ணிக்கையை குறைவாக 21,528 உப்பளத் தொழிலாளர்கள் என குறிப்பிடுகின்றன. அதுவும் மொத்த தமிழ்நாட்டுக்கான எண்ணிக்கையாம். அந்த இடத்தில்தான் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேவை உருவாகிறது. அரசின் எண்ணிக்கையில் வராத தொழிலாளர்களை பெருமளவில் அவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
இங்கு இருக்கும் எல்லா வகை உப்பளத் தொழிலாளர்களும் ஒவ்வொரு நாளும் 5லிருந்து 7 டன் சுமையை சுமக்கின்றனர். இந்த அளவு உப்பின் மதிப்பு 8000 ரூபாய்க்கும் அதிகம். ஒரு டன் உப்பின் விலை ரூ.1,600. எதிர்பாராத ஒரு மழை அவர்களின் வேலையை 1 வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை இல்லாமல் ஆக்கவல்லது.
எனினும் அவர்களுக்கு பெரும் பாதிப்பை 1991ம் ஆண்டுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வரும் தாராளமயக் கொள்கைகளே ஏற்படுத்துவதாக கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். “பெரிய தனியார் நிறுவனங்கள் சந்தையில் அனுமதிக்கப்படுகின்றன.” அவர் சொல்கையில், “பல தலைமுறைகளாக தலித்களும் பெண்களும்தான் இந்த வறண்ட நிலத்திலிருந்து உப்பெடுக்கின்றனர். 70லிருந்து 80 சதவிகிதத் தொழிலாளர்கள் விளிம்புநிலைப் பின்னணிக் கொண்டவர்கள். உப்பளங்கள் நேரடியாக அவர்களுக்கு ஏன் குத்தகைக்கு விடப்படுவதில்லை? இந்த நிலத்துக்கான ஏலத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அவர்கள் எப்படி போட்டி போட முடியும்?” என்கிறார்.
பெருநிறுவனங்கள் நுழைந்துவிட்டால் சில நூறு ஏக்கர்களில் நடக்கும் இந்தத் தொழில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களாக மாறும். அப்போது இந்த வேலைகள் இயந்திரமயமாக்கப்படும் என உறுதியாக சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. “50,000 உப்பளத் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்?”
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபர் 15-லிருந்து ஜனவரி 15 வரை ஒவ்வொரு வருடத்திலும் வேலை இருக்காது. இந்த மூன்று மாதங்களும் கொடுமையாக இருக்கும். கடனிலும் மூழ்கிய கனவுகளிலும்தான் குடும்பங்கள் நடக்கும். 57 வயது உப்பளத் தொழிலாளரான எம்.வேலுசாமி உப்புத் தயாரிப்பில் மாறி வரும் சூழலைப் பேசுகிறார். “என்னுடைய பெற்றோரின் காலத்தில், சிறு உற்பத்தியாளர்களால் அறுவடை செய்து உப்பை விற்க முடிந்தது.”
இரண்டு கொள்கை முடிவுகளை அவை அனைத்தையும் முடித்து வைத்தது. 2011ம் ஆண்டில் மனித நுகர்வுக்கான உப்பில் ஐயோடின் கலக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்தது. பிறகு உப்பளங்களுக்கான குத்தகை ஒப்பந்தங்களை அது மாற்றியது. ஒன்றிய அரசின் பட்டியலில் உப்பு இடம்பெறுவதால் மாற்றுவதற்கான அதிகாரத்தை அது கொண்டிருக்கிறது.
2011ம் ஆண்டின் இந்திய அரசு விதிமுறையின்படி, “ ஐயோடின் கலக்கப்படாத உப்பை மனிதப் பயன்பாட்டுக்காக எவரும் வாங்கவோ விற்கவோ கூடாது. கொண்டிருக்கவும் கூடாது.” இதன் அர்த்தம் உப்பை, ஆலையில் மட்டுமே தயாரிக்க முடியும் என்பதுதான் (கல் உப்பு, கறுப்பு உப்பு, இந்துப்பு போன்ற வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.) இதன் அர்த்தம் பாரம்பரிய உப்பு அறுவடையாளர்களின் இடம் பறிக்கப்பட்டுவிட்டது என்பதுதான். இச்சிக்கல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விதிமுறையை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. எனினும் தடை நீடிக்கிறது. ஐயோடின் கலக்கப்படாத, உணவுக்கு பயன்படும் சாதாரண உப்பை விற்க முடியாது.
இரண்டாவது மாற்றம் அக்டோபர் 2013ல் நடந்தது. ஒன்றிய அரசின் அறிவிப்பு ஒன்று, “ஒன்றிய அரசின் நிலம் உப்புத் தயாரிப்புக்காக டெண்டர் முறையில் குத்தகைக்கு விடப்படும்,” என்றது. மேலும் ஏற்கனவே இருக்கும் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது. புதிய டெண்டர்கள் ஏலம் விடப்படும்போது பழைய குத்தகைதாரர்கள் மீண்டும் ஏலத்தில் வந்து கலந்து கொள்ளலாம். இதில் பெரிய தயாரிப்பாளர்கள்தான் பலனடைவார்கள் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஜான்சியின் பெற்றோர் நிலத்தை மறுக்குத்தகை எடுத்து கிணற்றில் கையால் (பனங்கூடையை வாளியாகக் கொண்டு) நீரிறைத்து 10 சிறிய மனைகளில் உப்பு அறுவடை செய்ததாக அவர் நினைவுகூர்கிறார். ஒவ்வொருநாளும் அவரின் தாய் 40 கிலோ உப்பைத் தலையில் (பனங்கூடையில்) சுமந்து டவுனுக்கு சென்று விற்றிருக்கிறார். “ஐஸ் நிறுவனங்கள் அவர் கொண்டு செல்லும் மொத்த உப்பையும் 25 அல்லது 30 ரூபாய் கொடுத்து பெற்றன,” என்கிறார் அவர். தாய் செல்ல முடியாதபோது ஜான்சியை சிறு கூடையுடன் அனுப்புவார். பத்து பைசாவுக்கு உப்பு விற்றதையும் நினைவுகூர்கிறார் அவர். “எங்களின் உப்பளங்கள் இருந்த இடங்களில் இப்போது கட்டடங்களும் குடியிருப்புகளும் இருக்கின்றன,” என்கிறார் ஜான்சி. “எங்களிடமிருந்து எப்படி நிலங்கள் பறிபோயின என எனக்குத் தெரியவில்லை,” என விரக்தியாக உப்படர்ந்த காற்றில் புலம்புகிறார்.
வாழ்க்கை எப்போதும் கடினமாக இருந்ததாக உப்பளத் தொழிலாளர்கள் சொல்கின்றனர். பல பத்தாண்டுகளாக அவர்களின் உணவு மரவள்ளிக் கிழங்காகவும் சிறுதானியமாகவும்தான் (அரிதாகத்தான் அரிசி) இருந்திருக்கிறது. உடன் மீன்குழம்பு. எளிதாகக் கிடைக்கக் கூடிய இட்லி கூட வருட விருந்தாக தீபாவளிக்குதான் கிடைக்கும். விழா நாளின் காலையில் இட்லி கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் முதல் நாள் இரவு உறங்கப் போன நாட்களை ஜான்சி நினைவுகூர்கிறார்.
தீபாவளி மற்றும் பொங்கல் நாட்களில்தான் புது உடைகள் கிடைக்கும். அதுவரை பழைய, கிழிந்த உடைகளையே போடுவார்கள். குறிப்பாக இளைஞர்கள். “அவர்களின் கால்சட்டைகளில் 16 ஓட்டைகள் இருக்கும். ஒவ்வொன்றும் ஊசி நூலால் தைக்கப்பட்டிருக்கும்,” எனக் கூறும் ஜான்சியின் கைகள் காற்றில் வேகமாக தைக்கின்றன. பாதத்துக்கு பனையிலை காலணி. ஒரு சணல் கயிறு கொண்டு அணியும் அந்தக் காலணியை பெற்றோர் செய்து கொடுப்பார்கள். உப்பளங்களில் இன்றைப் போல அப்போது உப்புத்தன்மை இல்லாததால் போதுமான அளவுக்கு அவை பாதுகாப்புக் கொடுத்தன. உப்பு இப்போது தொழிற்துறைப் பண்டமாகியிருக்கிறது. மொத்த நுகர்வை விட வீட்டுப் பயன்பாடு உப்புக்கு குறைவுதான்.
*****
“என் பெயரை என்னால் எழுத முடியும். பேருந்து வழிகளைப்
படிக்க முடியும். எம்ஜிஆர் பாடல்களும் பாட முடியும்.”
– எஸ்.ராணி, உப்பளத்
தொழிலாளர் மற்றும் தலைவர்
வேலை முடிந்த பிறகு மாலை நேரத்தில் ராணி எங்களை வீட்டுக்கு அழைத்தார். சிறிய உறுதியான அறையில் ஒரு சோபாவும் ஒரு சைக்கிளும் துணிகள் காயும் கயிறும் இருந்தது. தேநீர் அளித்தபிறகு, அவரது 29 வயதில் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த திருமணத்தைப் பற்றிப் பேசினார். கிராமத்துப் பெண்களுக்கு திருமணம் நடக்கும் வயதை விட அதிக வயது அது. அவரது குடும்பத்தில் நிலவிய வறுமையே அந்த தாமதத்துக்குக் காரணம். ராணிக்கு தங்கம்மாள், சங்கீதா, கமலா என மூன்று மகள்களும் குமார் என்றொரு மகனும் இருக்கின்ற்னர். மகன் அவருடன் வசிக்கிறார்.
திருமணம் முடிந்தபிறகும் கூட, “விழா நடத்தப் பணம் எங்களிடம் இல்லை,” என்கிறார் அவர். பிறகு புகைப்பட ஆல்பங்களை எங்களுக்குக் காட்டுகிறார். மகள் பூப்பெய்திய விழா, இன்னொரு திருமணம் முதலிய நிகழ்வுகளின் புகைப்படங்களில் குடும்பத்தினர் நல்ல உடைகள் அணிந்திருந்தனர். மகன் குமார் ஆடிப்பாடும் புகைப்படங்கள் இருந்தன. அவை அனைத்துக்குமான பணம் உப்பிலிருந்து வந்திருந்தது.
புகைப்படங்களை ரசித்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ராணி பச்சை நிறக் கூடை ஒன்றை பின்னி முடித்து கைப்பிடியை இறுக்கிக் கொண்டிருந்தார். யூ ட்யூப் காணொளி ஒன்றைப் பார்த்து நெல்லிக்காய் பின்னலுடன் குமார் செய்த கூடை அது. சில நாட்களில் இவற்றைச் செய்யும் நேரம் அவருக்கு இருக்காது. கொஞ்சம் அதிகம் வருமானம் ஈட்ட வேறொரு உப்பளத்துக்கு இரண்டாம் வேலை சென்றிருப்பார். பெண்களுக்கு வீட்டில் எப்போதுமே இரண்டாம் வேலை உண்டு என்கிறார் அவர். “அவர்களுக்கு ஓய்வு கிடைப்பதே அரிது.”
ராணிக்கு ஓய்வே இல்லை. இளமைக்காலத்தில் கூட ஓய்வு இருக்கவில்லை. மூன்று வயதாகும்போதே தாய் மற்றும் சகோதரியுடன் சர்க்கஸுக்கு அவர் அனுப்பப்பட்டார். “தூத்துக்குடி சாலமன் சர்க்கஸ் என அதற்குப் பெயர். என் தாய் ‘ஒரு சக்கர சைக்கிள்’ ஓட்டுவதில் சாம்பியன்.” சகோதரி சிரிக்கிறார். “என் சகோதரி கயிறில் நடப்பார். நான் பின்பக்கமாக வளைந்து வாயைக் கொண்டு கோப்பைகள் எடுப்பேன்.” சர்க்கஸ் குழுவுடன் அவர் மதுரை, மணப்பாறை, நாகர்கோவில், பொள்ளாச்சி முதலிய இடங்களுக்குப் பயணித்திருக்கிறார்.
அவருக்கு எட்டு வயது இருக்கும்போது சர்க்கஸ் தூத்துக்குடிக்கு வரும்போதெல்லாம் உப்பளத்தில் வேலை பார்க்க ராணி அனுப்பப்படுவார். அப்போதிருந்து உப்பளங்களே ராணியின் உலகமானது. கடைசியாக அவர் பள்ளிக்குச் சென்றதும் அப்போதுதான். “மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். என் பெயரை எழுதத் தெரியும். பேருந்து வழிகளை வாசிப்பேன். எம்ஜிஆர் பாடல்கள் கூட பாடுவேன்.” அந்த நாளின் தொடக்கத்தில் நல்லது செய்வதைப் பற்றிய எம்ஜிஆர் பாடலை ரேடியோவுடன் சேர்ந்து பாடினார்.
அவர் நன்றாக நடனம் ஆடுவாரென சக ஊழியர்கள் கிண்டல் அடிக்கின்றனர். சமீபத்தில் தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கிய ஒரு விழாவில் ராணி ஆடிய கரகாட்ட நடனத்தை அவர்கள் குறிப்பிடும்போது அவர் வெட்கப்படுகிறார். மேடைப் பேச்சு பேசவும் கற்றுக் கொண்டிருக்கிறார். பெண்கள் சுயஉதவிக்குழு மற்றும் உப்புத் தொழிலாளர்களின் தலைவராகவும் அரச விழாக்களில் கலந்து கொள்ள அவர் செல்வதுண்டு. "இந்த உப்பளங்களின் ராணி இவர்தான்," என சக ஊழியர்கள் சொல்கையில் அவர் புன்னகைக்கிறார்.
அத்தகைய ஒரு பயணத்தை 2017ல் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைத்தபோது ராணி சென்னை சென்றார். "எங்களில் பல பேர் மூன்று நாட்கள் பயணமாக அங்கு சென்றோம். அது ஒரு குதூகலமானப் பயணம்! ஒரு ஹோட்டல் அறையில் தங்கினோம். எம்ஜிஆர் மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று பார்த்தோம். நூடுல்ஸ், சிக்கன், இட்லி, பொங்கல் எல்லாம் சாப்பிட்டோம். மெரினா கடற்கரைக்கு செல்லும்போது இரவாகிவிட்டது. ஆனாலும் அற்புதமாக இருந்தது!"
அவர் வீட்டில் உணவு எளிமையாக இருந்தது. சோறும் மீன் அல்லது வெங்காயம் அல்லது பீன்ஸ் கொண்டு குழம்பும் வைப்பார். உடன் கருவாடும் முட்டைக்கோஸ் அல்லது பீட்ரூட்டும் இருக்கும். "பணம் குறைவாகத்தான் இருக்குமென்பதால் கடுங்காபிதான் குடிப்போம்." ஆனாலும் அவர் ஓயவில்லை. ஒரு கிறித்துவராக அவர் தேவாலயத்துக்கு செல்வார். கீர்த்தனைகள் பாடுவார். அவருடைய கணவர் சேசு ஒரு விபத்தில் உயிரிழந்தபிறகு, அவரின் குழந்தைகள் - குறிப்பாக மகன் - அவரை நன்றாக பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். "ஒண்ணும் குறை சொல்ல முடியாது. கடவுள் எனக்கு நல்ல பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறார்."
அவர்களை கருவில் தாங்கிக் கொண்டிருந்தபோதும் அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். உப்பளங்களிலிருந்து மருத்துவமனைக்கு நடந்தே சென்றிருக்கிறார். முட்டிக்கு அருகே இருக்கும் தொடைப்பகுதியை தட்டிக் காட்டி, "என் வயிறு இங்கு இருந்தது," என்கிறார். பிரசவம் முடிந்த 13 நாட்களில் அவர் உப்பளங்களுக்கு திரும்பினார். பசியில் குழந்தை அழாமலிருக்க மரவல்லிக்கிழங்கு மாவிலான கஞ்சி செய்வார். இரண்டு தேக்கரண்டி மாவு ஒரு துணியில் சுற்றப்பட்டு, தண்ணீரில் முக்கி, வேகவைக்கப்பட்டு க்ரைப் வாட்டர் குடுவையில் நிரப்பப்பட்டு ரப்பர் காம்பு கொண்டு மூடப்படும். அவர் தாய்ப்பாலூட்ட திரும்பி வரும் வரை யாரேனும் குழந்தைக்கு அக்குடுவை நீரைப் புகட்டுவார்கள்.
மாதவிடாய் காலமும் கஷ்டமாக இருக்கும். அரிப்பும் எரிச்சலும் ஏற்படும். “மாலையில் வெந்நீர் குளியலுக்குப் பிறகு என் தொடைகளில் தேங்காய் எண்ணெய் தடவுவேன். அப்போதுதான் அடுத்த நாள் நான் வேலைக்குச் செல்ல முடியும்…”
பல வருட அனுபவத்தில் வெறுமனே பார்த்தும் தொட்டும் உணவின் தரத்தில் உப்பு இருக்கிறதா என ராணி சொல்லி விட முடியும். நல்ல கல் உப்பு ஒரே அளவில் துகள்கள் கொண்டிருக்கும். பிசுபிசுப்பு இருக்காது. “பிசுபிசுப்பாக இருந்தால், நல்ல ருசி இருக்காது.” அறிவியல்பூர்வமாக பாம் வெப்பமானிகள் மற்றும் விரிவானப் பாசன வழிகள் கொண்டு உப்பு உற்பத்தி செய்யப்படுவதன் நோக்கம் அதிக அளவு கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான். அந்தத் தேவை பூர்த்தியானாலும் அந்த உப்பின் பெருமளவு தொழிற்துறைக்கு பயன்படும் தரத்தில்தான் இருக்கும்.
*****
“உப்பளங்கள் விவசயாயமாக கருதப்பட வேண்டும், தொழிற்துறையாக
அல்ல."
– ஜி.கிரகதுரை, தூத்துக்குடி சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர்
உப்பளங்களிலிருந்து அதிக தொலைவிலில்லாத புதுக் காலனியின் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் உப்புத் தொழில் பற்றி விரிவாக என்னிடம் கூறினார் ஜி.கிரகதுரை. அவருடைய சங்கத்தில் 175 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் 10 ஏக்கர் அளவில் நிலம் இருக்கிறது. மொத்த மாவட்டத்திலுள்ள 25,000 ஏக்கர் உப்பளங்களில் வருடத்துக்கு 25 லட்சம் டன் உப்பு தயாரிக்கப்படுகிறது.
சராசரியாக ஒவ்வொரு ஏக்கரிலும் வருடத்துக்கு 100 டன் உற்பத்தியாகிறது. அதிக மழையிருக்கும் வருடத்தில் அது 60 ஆக குறைகிறது. “அடிமண்ணின் உப்புநீரைத் தாண்டி அதை எடுக்க எங்களுக்கு மின்சாரம் தேவை. உப்பு உற்பத்தி செய்ய மனித உழைப்புத் தேவை,” என்கிறார் கிரகதுரை அதிகரிக்கும் கூலிகளைக் குறித்து. “அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. வேலைநேரங்கள் முன்பிருந்த எட்டு மணி நேரங்களிலிருந்து நான்கு மணி நேரங்களுக்குக் குறைந்துவிட்டது. காலை 5 மணிக்கு வந்து 9 மணிக்கே கிளம்பி விடுகிறார்கள். உரிமையாளர்கள் சென்றாலும் தொழிலாளர்கள் எங்களின் பார்வையில் படுவதில்லை.” தொழிலாளர்களோ வேலை நேரத்தை அவரின் கணக்கிலிருந்து வித்தியாசமாகக் கணக்கிடுகின்றனர்.
உப்பள உழைப்பு மிகவும் கடினம் என்பதை கிரகதுரை ஒப்புக் கொள்கிறார். “நீரும் கழிவறைகளும் இருக்க வேண்டும். ஆனால் 100 கிலோமீட்டர்களுக்கு உப்பளங்கள் இருப்பதால், அது சுலபம் இல்லை.”
தூத்துக்குடி உப்புக்கான சந்தை சுருங்கிக் கொண்டிருப்பதாக கிரகதுரை சொல்கிறார். “முன்பெல்லாம் எல்லா இடங்களிலும் சமையலுக்கு ஏற்ற உப்பாக இதுதான் இருந்தது. ஆனால் இப்போது இது நான்கு தென் மாநிலங்களுக்கு மட்டுமே செல்கிறது. கொஞ்சம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகம் தொழிற்துறையில்தான் பயன்படுத்தப்படுகிறது. மழைக்காலத்துக்குப் பிறகு உப்பளத்திலிருந்து சுரண்டி எடுக்கப்படும் ஜிப்சத்தால் கொஞ்சம் வருமானம் வருகிறது. ஆனால் உப்பு உற்பத்தி காலநிலை மாற்றத்தாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஏப்ரல், மே மாத மழை அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.”
குஜராத் கடும் போட்டியை கொடுக்கிறது. “தூத்துக்குடியைக் காட்டிலும் வெப்பமாகவும் வறட்சியாகவும் இருப்பதால் நாட்டின் 76 சதவிகித உப்பு உற்பத்தி அங்கிருந்து வருகிறது. அங்கு உப்பு உற்பத்தி செய்யப்படும் இடங்கள் மிகப் பெரியவையாக இருக்கின்றன. ஓரளவுக்கு இயந்திரமயமாகி இருக்கிறது. மிச்ச வேலையை (குறைவான ஊதியம் பெறும்) பிகாரின் புலம்பெயர் தொழிலாளர்கள் செய்கின்றனர். அவர்களின் உப்பளங்கள் கடலலைகளால் சுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே மின்சாரச் செலவும் மிச்சமாகிறது.”
தூத்துக்குடியில் ஒரு டன் உப்பு தயாரிக்க 600லிருந்து 700 ரூபாய் செலவாகிறது. “குஜராத்திலோ வெறும் 300 ரூபாய்தான்,” என்கிறார் அவர். “எப்படி நாங்கள் போட்டி போட முடியும்? குறிப்பாக 2019ம் ஆண்டைப் போல் ஒரு டன் உப்பின் விலை 600 ரூபாய்க்கு சரிந்தால் என்ன செய்வது?” இதை சரிசெய்ய கிரகதுரையும் பிறரும் “உப்பு உற்பத்தி, தொழிற்துறையாக அல்லாமல் விவசாயமாகக் கருதப்பட வேண்டும்,” என விரும்புகின்றனர். (அதனால்தான் உப்பு, பயிராகக் கருதப்படுகிறது.) சிறு உப்பு உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டி கடன்களும் மானியவிலை மின்சாரமும் தொழிற்துறை மற்றும் தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கும் தேவை.
“இந்த வருடத்தில் ஏற்கனவே குஜராத்திலிருந்து கப்பல்கள் வந்து தூத்துக்குடியில் உப்பு விற்றுவிட்டனர்.”
*****
“ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் மட்டுமே எங்களைப்
பற்றி எழுதுகிறார்கள்.”
– பெண் உப்பளத்
தொழிலாளர்கள்
உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் கிருஷ்ணமூர்த்தி பல கோரிக்கைகளை முன்வைக்கிறார். நீர், சுகாதாரம், ஓய்வெடுக்கும் பகுதி முதலிய அடிப்படைத் தேவைகளைத் தாண்டி தொழிலாளர்கள், வேலை கொடுப்பவர்கள் மற்றும் அரசு உள்ளடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, நிலுவையிலிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்கிறார்.
“குழந்தைப் பராமரிப்பு வசதிகள் எங்களுக்கு உடனடியாக வேண்டும். தற்போது அங்கன்வாடிகள் 9லிருந்து 5 மணி வரைதான் இயங்குகின்றன. உப்பளத் தொழிலாளர்கள் அதிகாலை 5 மணிக்குக் கிளம்புகின்றனர். சில இடங்களில் அதற்கும் முன்னமே கிளம்புகின்றனர். மூத்தக் குழந்தை - குறிப்பாக பெண் குழந்தை - வீட்டிலேயே இருந்து தாயின் வேலைகளை பார்க்க வேண்டும். அவரின் கல்வி பாதிக்கப்படும். குழந்தைகளை பார்த்துக் கொள்ள அதிகாலை 5 மணியிலிருந்து காலை 10 மணி வரை அங்கன்வாடிகள் இயங்கக் கூடாதா?”
சிறு ஊதிய உயர்வுகள், ஊக்கத்தொகைகள் போன்ற சிறு வெற்றிகள் தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து உரிமைகளுக்குப் போராடியதால்தான் சாத்தியமானது என விளக்குகிறார் கிருஷ்ணமூர்த்தி. 2021ம் ஆண்டின் தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையில் புதிய திமுக அரசு ஒரு நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறது. மழைக்காலத்தில் 5,000 ரூபாய் நிவாரணம். முறைசாரா தொழில்கள் சுலபமாக முறைசார் தொழில்களாக முடியாது என்பதை கிருஷ்ணமூர்த்தியும் சமூக செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரியும் புரிந்து கொள்கின்றனர். ஆரோக்கியக் குறைபாடுகள், பணியிட சுகாதாரமின்மையால் நேர்கின்றன. “ஆனால் அடிப்படையான சில சமூக பாதுகாப்பு முறைகள் உருவாக்க முடியும்தானே?” என அவர்கள் கேட்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேல், வேலை கொடுப்பவர்கள் எப்போதும் லாபம் ஈட்டுவதாக சொல்கின்றனர் பெண் தொழிலாளர்கள். ஜான்சி உப்பளங்களை பனை மரங்களோடு ஒப்பிடுகிறார். இரண்டுமே கரடுமுரடானவை, வெப்பத்திலும் இருக்கக் கூடியவை, எப்போதும் பயன்படுபவை. ‘துட்டு’ என அவர் பலமுறை குறிப்பிட்டு, உப்பளங்கள் உரிமையாளர்களுக்குதான் பணம் கொடுப்பதாக சொல்கிறார்.
“எங்களுக்குக் கிடையாது. யாருக்கும் எங்கள் வாழ்க்கைகளும் தெரியாது,” என்கின்றனர் அப்பெண்கள் வேலை முடிந்து சிறு காகிதக் குவளைகளில் தேநீர் அருந்தியபடி. “எல்லா இடங்களிலும் நீங்கள் விவசாயிகள் பற்றி படிப்பீர்கள். நாங்கள் போராடினால் மட்டும்தான் ஊடகங்கள் எங்களைப் பற்றிப் பேசும்.” எரிச்சலுடன் கூர்மையான குரலில், “அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால்தான் அவர்கள் எங்களைப் பற்றி எழுதுகிறார்கள். சொல்லுங்கள், யாரும் உப்பு பயன்படுத்துவதில்லையா?” எனக் கேட்கின்றனர்.
பெங்களூருவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிதி நல்கை 2020-ன் கீழ் வெளியாகும் ஆய்வு இது.
தமிழில்: ராஜசங்கீதன்