அரபிக் கடலோரம் அமைந்திருக்கும் துளுநாட்டின் கடல் வணிகத்துக்கென ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பூத வழிபாட்டு பாரம்பரியம் இங்கு பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.
“பூத வழிபாட்டு சடங்குகளில் இசைப்பதுதான் என் பிழைப்பு,” என்கிறார் சையது நசீர். இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக இருக்கும் துளு நாட்டின் இசைக்குழு ஒன்றில் அவர் இருக்கிறார். “சடங்குகளில் இசைப்பதில் நாங்கள் எந்த இடையூறையும் எதிர்கொண்டதில்லை.”
பூத வழிபாட்டில் பல சமூகங்கள் ஒன்றிணைகின்றன என்கிறார் கர்நாடகாவின் மணிபால் உயர்கல்வி நிறுவனத்தின் உதவி ஆய்வாளராக இருக்கும் நிதேஷ் அஞ்சன். “பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்கள் துளுநாட்டில் தங்கி வசித்து, துளு சடங்குகளின் ஒரு பகுதியாக மாறும் சூழல் இருக்கிறது,” என்கிறார் அஞ்சன்.
நான்கு தலைமுறைகளாக நசீரின் குடும்பம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல இசைக்கருவிகளை பூத சடங்குகளில் இசைத்து வருகின்றனர். இக்கலையை தந்தையிடமிருந்து அவர் கற்றுக் கொண்டார். இசை பாரம்பரியத்தை குடும்பத்தில் தொடரும் கடைசி நபர் அவர்தான். “இளம் தலைமுறை இந்த இசை மீது எந்த ஆர்வத்தையும் காட்டுவதில்லை,” என்கிறார் அவர். “சூழலும் முன்பிருந்ததைப் போல் இல்லை. தற்கால சூழல் மோசமாகிக் கொண்டு வருகிறது,” என்கிறார் ஐம்பது வயதுகளில் இருக்கும் இசைஞர்.
“பூதங்கள்தான் துளு நாட்டின் தெய்வங்கள்,” என்கிறார் அஞ்சன். பூதங்கள் வழிபாடாக மட்டுமின்றி, இங்கிருக்கும் மக்களின் அங்கமாகவும் இருக்கிறது என்கிறார் அவர். பூதக் கலையில் பெண் கலைஞர்கள் கிடையாது. ஆனால் பூத வழிபாட்டுக்கான கோலா சடங்கில் பெண் பாத்திரங்கள் இருக்கின்றன. பெண் பாத்திரங்களில் ஆண்கள் நடிக்கின்றனர்.
இப்படம் நசீரையும் பல்வேறு பூத விழாக்களின்போதான அவரது குழுவின் நிகழ்ச்சிகளையும் பதிவு செய்கிறது.
முகப்பு படம்: கோவிந்த் ராதேஷ் நாயர்
இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் (MMF) உதவியில் எழுதப்பட்டது.
தமிழில்
:
ராஜசங்கீதன்