"1994 இல் பிளேக் வந்த போதும் அல்ல, 2006 இல் சிக்குன்குனியா வந்தபோதும் அல்ல, 1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் கூட இந்த கோயில் மூடப்படவில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த கோவில் மூடப்படுவதை காண்கிறோம்", என்று வருத்தத்துடன் கூறுகிறார் சஞ்சய் பெண்டே. தெற்கு மகாராஷ்டிராவின் துல்ஜாபூர் நகரில் உள்ள துல்ஜா பவானி தேவியின் கோவிலில் உள்ள பிரதான பூசாரிகளில் இவரும் ஒருவர்.
கோவிட் 19 பரவுவதை தடுப்பதற்காக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக மார்ச் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இந்த கோவில் மூடப்பட்டது. இது இங்குள்ள மக்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது. "இது என்ன வகையான நோய்? மாநிலத்திற்கு வெளியில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள் ஆனால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தான் தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதுவும் போலீசாருடன் சண்டையிட்ட பிறகு", என்கிறார் 38 வயதாகும் பெண்டே. அவர் தினசரி நடத்தும் பத்து பதினைந்து சிறப்பு பூஜைகளில் இருந்து அவர் சம்பாதிப்பதை இழந்துள்ளதால் அந்த கவலையின் ஒரு பகுதியாக அவ்வாறு கூறுகிறார். துல்ஜாபூரில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பூசாரிகள் இருப்பதாக பெண்டே மதிப்பிடுகிறார் அவர்கள் கோயில் தொடர்பான நடவடிக்கையால் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
மராத்வாடா பகுதியில் உள்ள உஸ்மானாபாத் மாவட்டத்தில், 34 ஆயிரம் மக்கள் (2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) வசிக்கும் இந்நகரத்தின் பொருளாதாரம், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று நம்பப்படும் மலையின் மேல் உள்ள இக்கோவிலையே சார்ந்துள்ளது. துல்ஜா பவானி தேவி, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் பலரால் குலதெய்வமாக கருதப்படுகிறாள், மேலும் இது மாநிலத்திலுள்ள யாத்திரை பாதையில் பவானி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய கோவில்களில் ஒன்றாகும்.
ஆனால் மார்ச் 17ஆம் தேதிக்கு பிறகு மொத்த நகரமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ளது. கோவிலுக்கு செல்லும் குறுகிய பாதைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கோவிலுக்கு எதிர்புறம் உள்ள காலணிகள் விடும் இடம் மற்றும் உடமைகள் வைக்கும் இடம் காலியாக உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்களைக் கொண்டு வரும் தனியார் வாகனங்களின் காரணமாக வழக்கமாக பரபரப்பாக காணப்படும் இச்சாலை அமைதியுடன் காணப்படுகிறது.
இங்கிருந்து கிட்டதட்ட 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையம் அமைதியாக இருக்கிறது சாதாரண நேரங்களில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் பேருந்துகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்டு வந்த படியும் ஏற்றிக்கொண்ட படியும் செல்லும். துல்ஜாபூர், மாநில போக்குவரத்து பேருந்துகளுக்கான மைய நிறுத்தம், இது மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நகரத்தின் கோயில் பொருளாதாரம் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், போக்குவரத்து நிலையங்கள், தங்குமிடங்கள், மற்றும் பூஜை பொருட்கள், பிரசாதம், தெய்வத்திற்கு படைக்கப்படும் புடவைகள், மஞ்சள் குங்குமம், சங்குகள், புகைப்படங்கள், பக்தி பாடல்கள் பதிவேற்றப்பட்ட குறுந்தகடுகள், வளையல் மற்றும் பலவற்றின் விற்பனையைச் சார்ந்து உள்ளது. கோவிலின் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்தது 550 முதல் 600 கடைகள் இருப்பதாக இங்குள்ள வணிகர்கள் மதிப்பிடுகின்றனர். கூடுதலாக இங்கு உள்ள சாலையோர விற்பனையாளர்கள் தங்களின் அன்றாட விற்பனையை கொண்டே தங்களது வாழ்வாதாரத்தை சம்பாதித்து வருகின்றனர்.
மார்ச் 20 ஆம் தேதி அன்று பிற்பகலில் பாதி கடைகள் அடைக்க துவங்கிவிட்டன, மற்றவர்களும் அன்றைய நாளுக்கான தங்களது விற்பனையை முடித்துக் கொள்ள தயாராகினர். சாலையோர விற்பனையாளர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
"இது என்ன வகையான நோய்?" என்று மூடப்பட்டுக் கொண்டிருக்கும் கடைகளின் முன்னால் அமர்ந்திருக்கும் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கேட்கிறார். "எல்லாம் மூடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் வெகு சிலரே இங்கு வந்தனர். அவர்கள் (கோயில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார்) எங்களை இங்கு அமர விடவில்லை. ஆனால் எங்களது வயிற்றுக்கு எதுவும் தேவைப்படாதா?" (அவர் மிகவும் கோபமாக இருந்தார் என்னை புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் அவரிடமிருந்து நான் ஒரு டஜன் கண்ணாடி வளையல்களை வாங்கினேன். அந்த இருபது ரூபாய் தான் அன்று நாள் முழுவதும் அவர் சம்பாதித்து வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய பணம்.)
அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து வெகு அருகிலேயே அமர்ந்திருந்த 60 வயதாகும் சுரேஷ் சூரியவன்ஷி, "நாங்கள் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களை எதிர்பார்த்து காத்திருந்தோம் என்று கூறினார். படுவா (ஹிந்து சந்திர நாட்காட்டியின் முதல்நாளான - கூடி படுவா மற்றும் சித்திரா பௌர்ணமி (ஏப்ரல் எட்டாம் தேதி) பின்னர் துவங்கும் சித்திரை யாத்திரை ஆகிய காலங்களில் தொடங்கி சராசரியாக தினசரி 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம்", என்று கூறினார். சூரியவன்ஷியின் கடை கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது மேலும் அவர் பேடா மற்றும் பிரசாதங்களான பொரி மற்றும் கடலை ஆகியவற்றை விற்பனை செய்கிறார். "இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வாரக்கடைசியில் ஒரு லட்சத்தைத் தாண்டும் (யாத்திரை நேரத்தில்). இப்போது யாத்திரையே ரத்து செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். வரலாற்றில் இதுவே முதல் முறை", என்று அவர் கூறினார்.
அவரது கடைக்கு அடுத்ததாக உள்ள உலோகச் சிலைகள் போட்டோ பிரேம்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்கும் அனில் சோலாப்பூரேவின் கடை நீண்டகாலமாக அவருக்கு நிலையான மாத வருமானமாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெற்று வந்தது, கோயிலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக கடை இரவுபகலாக திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த நாள் பிற்பகல் வரை அவருக்கு ஒரு பொருள் கூட வியாபாரம் ஆகவில்லை. "நான் இந்தக் கடையில் 38 வருடங்களாக பணிபுரிகிறேன். இங்கு நான் தினமும் வருவேன். நான் வீட்டில் எப்படி சும்மா அமர்வது?" என்று அவர் கண்ணீர் மல்க கேட்கிறார்.
இந்த ஊரடங்க 60 வயதாகும் நாகூர் பாய் கைக்குவாடையும் பாதித்துள்ளது. அவர் யாசகம் கேட்டு எதையாவது சம்பாதிக்க முயற்சிக்கிறார். (இங்கு வரும் பக்தர்களால், பெரும்பாலும் பெண்களால், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது, பெரும்பாலும் அவர்கள் மாவு மற்றும் உப்பை தானமாக வழங்குவது சில நேரம் பணத்தையும் தானமாக வழங்குவர் இதை வைத்தே அவர் வாழ்ந்து வருகிறார்). ஒரு வருடத்திற்கு முன்பு நாகூர் பாயின் இடது கை மின்சாரம் தாக்கி செயல்படாமல் போனது அதனால் அவரால் தினக்கூலியாக வேலை செய்ய முடியவில்லை. "இந்த சித்திரை யாத்திரை என்னை வாழ வைத்திருக்கும். ஆனால் இப்போது எனக்கு யாராவது ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் கூட என்னை அதிர்ஷ்டசாலியாக நான் கருதிக் கொள்வேன்", என்று அவர் கூறுகிறார்.
கோவிலில் இருந்து வெகுதொலைவில் அல்லாத துல்ஜாபூரின் வாராந்திர சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 450 முதல் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு வந்து பொருட்களை விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தனர். சந்தை இப்போது மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள், பெரும்பாலும் பெண் விவசாயிகள் தங்களது பசுமையான மற்றும் அழுகக் கூடிய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அதில் சிலவற்றை அவர்களால் அவர்களது கிராமங்களிலேயே விற்க முடியும் ஆனால் அது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது.
மராத்வாடாவில் இது திராட்சை பருவம், ஆனால் சந்தைகள் மூடப்பட்டிருப்பதால் பழங்களை அறுவடை செய்தல் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று விவசாயி மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றும் சுரேஷ் ரோகாடே கூறுகிறார். அவை மார்ச் 23ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று திறக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார். (எவ்வாறாயினும் அன்றைய தினம் மாநில அரசால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன). மார்ச் 17 மற்றும் 18ம் தேதிகளில் காலம்ப் போன்ற பக்கத்து ஊர்களில் மற்றும் மராத்வாடாவிலுள்ள பக்கத்து மாவட்டங்களில் பெய்த ஆலங்கட்டி மழை பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
துல்ஜாபூரில் இதுவரை எந்த கோவிட் 19 க்கான சோதனை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை, எனவே இங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை பற்றி அதிகம் தெரியவில்லை. மாநில அரசின் சமூக நலத் துறையால் நடத்தப்படும் ஒரு விடுதி 80 அறைகளைக் கொண்ட தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தமிழில்: சோனியா போஸ்