கடினமாகி இருக்கும் இந்த மண்ணில் ஒரு சிறிய வளைக்குள் இறந்த நண்டு ஒன்று கிடக்கிறது, அதன் கால்கள் உடலிலிருந்து பிரிந்து கிடக்கின்றது. "அவை வெப்பத்தால் இறக்கின்றன", என்று தேவேந்திர பாங்கடே, தனது ஐந்து ஏக்கர் நெல் வயலில் உள்ள வளைகளை சுட்டிக்காட்டி கூறுகிறார்.
மழை பெய்திருந்தால் வயலில் தண்ணீரில் நண்டுகள் திரண்டு வருவதை நீங்கள் கண்டிருக்கலாம், அவை அடைகாக்கும் என்று காய்ந்து பழுப்பான பச்சை நிறத்தில் இருக்கும் பயிர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு கூறுகிறார் அவர். 30 களின் முற்பகுதியில் இருக்கும் இந்த விவசாயி, "எனது நாற்றுகள் பிழைக்காது", என்று பதட்டமாகக் கூறி விலகி இருக்கிறார்.
(2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) 542 பேரைக் கொண்ட அவரது கிராமமான ராவணவாடியில், ஜூன் மாதத்தின் முற்பகுதியில் பருவமழை துவங்கும் சமயத்தில், தங்கள் நிலத்தில் உள்ள சிறிய இடத்தில், விவசாயிகள் நாற்றாங்காலில் விதைகளைப் பாவுகின்றனர். சில கனமழைகளுக்குப் பிறகு, பாத்தி பிரிக்கப்பட்ட இடத்தில் சேற்று நீர் தேங்கி இருக்கும், அவர்கள் 3 முதல் 4 வாரங்களான நாற்றுகளை தங்களின் வயல்களில் இடமாற்றம் செய்து மறு நடவு செய்கின்றனர்.
ஆனால் வழக்கமாக பருவமழை துவங்கி ஆறு வாரங்கள் கடந்த பிறகும் இந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி வரைக்கும் கூட ராவணவாடியில் மழை பெய்யவில்லை. இரண்டு முறை தூரல் விழுந்தது, ஆனால் அது போதாது, என்று பாங்கடே கூறுகிறார். கிணறுகள் உள்ள விவசாயிகள் தங்கள் நெல் நாற்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தனர் ஆனால் பெரும்பாலான பண்ணைகள் வறண்டு போயுள்ள நிலையில் வேலைகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, அதனால் நிலமற்ற தொழிலாளர்கள் தங்களின் அன்றாட ஊதியத்திற்காக கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
*****
இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரடா ஜங்கிலி கிராமத்தில் லக்ஷ்மன் பாந்தேவும் சில காலமாக இதே பற்றாக்குறையை சந்தித்து வருகிறார். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழை இல்லாமல் போகின்றன எனக் கூறி விவசாயிகள் ஒருமித்த முடிவெடுத்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். மேலும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் கிட்டத்தட்ட காரீப் பருவப் பயிர்களை இழந்து வருகின்றனர்.
50 வயதாகும் பாந்தே தனது பால்ய கால நினைவுகளை நினைவு கூர்ந்து அந்தக் காலத்தில் இப்படியான போக்கு இல்லை என்று கூறுகிறார். மழைப்பொழிவு சீரானதாக இருந்தது மேலும் நெர்பயிர்களும் நிலையானதாக இருந்தது என்று கூறுகிறார்.
ஆனால் 2019 ஆம் ஆண்டும் இழப்பினை ஏற்படுத்திய மற்றொரு ஆண்டாகும், இதுவும் புதிய மழை போக்கின் ஒரு பகுதியாகும். விவசாயிகள் கலக்கத்தில் இருக்கின்றனர். என் நிலம் காரீப் பருவத்தில் தரிசாகிவிடும் என்று பயந்தபடி நாராயண் யுகே கூறுகிறார் (அட்டைப் படத்தில் காண்க: தரையில் அமர்ந்திருப்பவர்). அவர் தனது 70 -களில் இருக்கிறார் மற்றும் அவர் கடந்த 50 ஆண்டு காலமாக தனது 1.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார், மேலும் அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியில் விவசாயத் தொழிலாளராகவும் பணியாற்றியுள்ளார். "இது 2017 லிலும் 2015 லிலும் தரிசாக தான் கிடந்தது...", என்று அவர் நினைவு கூர்கிறார். "கடந்த ஆண்டு கூட மழை தாமதமாக பெய்ததால் எனது விதைப்பு தாமதமானது". தாமதங்கள் விளைச்சலையும் வருமானத்தையும் குறைக்கிறது என்று யுகே கூறுகிறார். விவசாயிகள் விதைப்பதற்கு தொழிலாளர்களை ஈடுபடுத்த முடியாத நிலை இருப்பதால் விவசாய கூலி வேலைகளும் குறைந்து வருகிறது.
பந்தாரா நகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கரடா ஜங்கிலி என்ற சிறிய கிராமம், இது பந்தாரா தாலுகா மற்றும் மாவட்டத்தில் ஆளுகையின் கீழ் வருகிறது இங்கு 496 பேர் வசித்து வருகின்றனர். ராவணவாடியைப் போலவே இங்குள்ள பெரும்பாலான விவசாயிகளும் சிறிய அளவிலான நிலங்களை வைத்திருக்கின்றனர் - 1 முதல் 4 ஏக்கர் வரை - மேலும் அவர்கள் பாசனத்திற்காக மழையையே நம்பியுள்ளனர். மழை பொய்த்துவிட்டால், பண்ணைகள் தோல்வியுறும், என்று கோண்டு ஆதிவாசி இனத்தை சேர்ந்த யுகே கூறுகிறார்.
இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி வரை அவர்களது கிராமத்தில் உள்ள அனைத்து வயல்களிலும் விதைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அதே வேளையில் நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் கருக ஆரம்பித்து இருந்தன.
ஆனால் துர்காபாய் திகோரின் வயலில் அவசரகதியில் பாதி வளர்ந்த நாற்றுகளை நடவு செய்து கொண்டிருந்தனர். அவர்களது குடும்ப நிலத்தில் ஒரு ஆழ்துளை கிணறு இருக்கிறது. கரடாவிலுள்ள நான்கு அல்லது ஐந்து விவசாயிகளே அத்தகைய வசதியை பெற்று இருந்தனர். அவர்களது 80 அடி ஆழ்துளை கிணறு வறண்ட போது அதனை மூழ்கடித்து அதற்குள்ளேயே 150 அடி ஆழம் வரை சென்று ஆழ்துளைக்கிணறு இட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் அதுவும் வறண்ட பிறகு, வேறொரு புதிய ஆழ்துளை கிணற்றை அமைத்திருக்கின்றனர்.
ஆழ்துளை கிணறுகள் இங்கே புதியதாக தோன்றி இருப்பவை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதியில் பெரும்பாலும் அவை காணப்படவில்லை என்று பாந்தே கூறுகிறார். "கடந்த காலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை", என்று அவர் கூறுகிறார். "இப்போது தண்ணீரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது, மழையையும் நம்பமுடியவில்லை, எனவே மக்கள் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கின்றனர்" என்று கூறுகிறார்.
கிராமத்தைச் சுற்றியுள்ள இரண்டு சிறிய கண்மாய்களும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வறண்டு போய் இருக்கிறது என்று பாந்தே கூறுகிறார். வழக்கமாக அவை வறட்சியான மாதங்களில் கூட தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும். உயர்ந்து வரும் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை நிலத்தடி நீரை கண்மாய்களில் இருந்து உறிஞ்சுகிறது என்று அவர் கருதுகிறார்.
இத்தகைய நீர்த்தேக்கும் கண்மாய்கள் உள்ளூர் மன்னர்களின் மேற்பார்வையில் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 18 நூற்றாண்டின் நடுப்பகுதி வரை விதர்பா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் நெல் பாசனம் செய்யப்படும் பகுதிகளில் உருவாக்கப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் பெரிய நீர்த்தேக்கங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை மாநில நீர்ப்பாசனத்துறை ஏற்றுக்கொண்டது அதேவேளையில் ஜில்லா பரிஷத்துகள் சிறிய நீர்த்தேக்கங்களை கையகப்படுத்தி கொண்டன. இத்தகைய நீர்நிலைகள் உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு மீன் வளம் மற்றும் நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பந்தாரா, சந்திரபூர், கட்சிரோலி, கோண்டியா மற்றும் நாக்பூர் மாவட்டங்களில் இதுபோன்ற 7000 நீர்த்தேக்கங்கள் உள்ளன, ஆனால் பெரும்பான்மையானவை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு பழுதடைந்த நிலையில் இருக்கிறது.
பந்தாரா, நாக்பூர், மும்பை, புனே, ஹைதராபாத், ராய்ப்பூர் மற்றும் பிற நகரங்களுக்கு இங்குள்ள இளைஞர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். லாரிகளில் உதவியாளர்களாகவும், பண்ணைகளில் வேலை செய்யும் அல்லது கிடைக்கின்ற ஏதோ ஒரு வேலையைச் செய்யும் நாடோடி தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த வளர்ந்து வரும் இடம்பெயர்வு மக்கள் தொகை கணக்கிலும் பிரதிபலிக்கிறது: 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகையிலிருந்து 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை மகாராஷ்டிராவின் மக்கள் தொகை 15.99 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதே வேளையில் பந்தாராவில் மக்கள் தொகை இக்காலகட்டத்தில் 5.66 சதவீதமே அதிகரித்துள்ளது. இங்கு உரையாடல்களில் மீண்டும் மீண்டும் இது பேசப்படுவதற்கு மிக முக்கிய காரணம் விவசாயத்தின் கணிக்க முடியாத தன்மை, பண்ணை வேலைகள் குறைந்து வருதல் மற்றும் வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடியாமல் மக்கள் வெளியேறும் நிலை ஆகியவையே.
*****
பந்தாரா பெரும்பாலும் நெல் பாசனம் செய்யும் மாவட்டம் காடுகளுடன் பிணைக்கப்பட்ட விளைநிலங்களை கொண்டிருக்கிறது. இங்கு சராசரி ஆண்டு மழைப்பொழிவு 1250 மில்லி மீட்டர் முதல் 1500 மில்லி மீட்டர் வரை இருக்கும் (மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது). 7 தாலுகாக்களைக் கொண்ட இந்த மாவட்டத்தின் ஊடாக வற்றாத வைகங்கா நதி பாய்கிறது. பந்தாராவில் பருவகால ஆறுகள் மற்றும் சுமார் 1500 மால்குஜரி நீர் தேக்கங்கள் உள்ளன என்று விதர்பா நீர்பாசன மேம்பாட்டுக்கழகம் குறிப்பிடுகிறது. பருவகால இடம்பெயர்வுக்கு இது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், - மேற்கு விதர்பாவின் சில மாவட்டங்களைப் போலல்லாமல், அதிகளவிலான விவசாயிகள் தற்கொலையை பந்தாரா பதிவு செய்யவில்லை.
இது வெறும் 19.48 சதவீத நகரமயமாக்கலுடன், சிறு மற்றும் குறு விவசாயிகளை கொண்ட விவசாய மாவட்டமாகும், அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் இருந்தும் விவசாயக் கூலியாக பணியாற்றுவதன் மூலமும் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால் வலுவான நீர்ப்பாசன முறைகள் இல்லாமல் இங்குள்ள விவசாயம் பெரும்பாலும் மழையை நம்பியே இருக்கிறது; மழைக்காலம் முடிவடைந்து அக்டோபருக்கு பிறகு சில விவசாய நிலங்களுக்கு மட்டுமே நீர்த் தேக்கங்களில் இருக்கும் நீர் போதுமானதாக இருக்கிறது.
பந்தாரா அமைந்துள்ள மத்திய இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை பலவீனம் அடைந்து வருவதாகவும், கனமழையிலிருந்து மிக அதிக கனமழை பெய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புனேவின் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் 2009 இல் நடத்திய ஆய்வு இந்தப் போக்கினைப் பற்றி பேசுகிறது. 2018 ஆம் ஆண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் பந்தாரா மாவட்டம் இந்தியாவின் முதல் 10 பருவநிலை வெப்பப் பகுதிகளில் ஒன்றாக இருப்பதை கண்டறிந்துள்ளது, மற்ற ஒன்பது பகுதிகளும் விதர்பாவினை சுற்றியுள்ள தொடர்ச்சியான சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள் ஆகும். 'பருவநிலை வெப்பப்பகுதி' என்பது ஒரு இடத்தில் உள்ள சராசரி வானிலையின் மாற்றத்தால் வாழ்க்கை தரத்தில் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்துவது என்று இந்த ஆய்வு கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையே தொடர்ந்தால் இப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப் பெரிய பொருளாதார அதிர்ச்சிகள் குறித்தும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
2018 ஆம் ஆண்டில் புத்துயிர் அளிக்கும் மானாவாரி வேளாண்மை வலையமைப்பு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மழை பொழிவு தரவுகளின் அடிப்படையில் மகாராஷ்டிரா குறித்த உண்மையான அறிக்கையை தொகுத்தது. அதில்: 1, விதர்பாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 2000 முதல் 2017 ஆம் ஆண்டு வரை வறட்சியான நாட்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரத் தன்மை அதிகரித்துள்ளது. 2, நீண்டகால வருடாந்திர சராசரி மழை அளவு கிட்டத்தட்ட மாறாமல் இருக்கும் போதிலும் மழை பெய்யும் நாட்கள் குறைந்துவிட்டன என்று விளக்கப்பட்டிருக்கிறது. இதன் பொருள் இப்பகுதியில் குறைந்த நாட்களில் அதே அளவு மழை பெய்கிறது என்பதை - மேலும் இது பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது.
2014 ஆம் ஆண்டில் ஆற்றல் மற்றும் வள நிறுவனம் (டெரி) மேற்கொண்ட மற்றொரு ஆய்வு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: " 1901 முதல் 2003 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் மழைப் பொழிவின் தரவு ஜூலை மாதத்தில் பெய்யும் பருவ மழை (மாநிலம் முழுவதும்) குறைந்து வருவதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழை அதிகரித்து வருகிறது என்றும் காட்டுகிறது... மேலும் பருவமழை காலத்தில் அதிகமான கனமழை பெய்யும் நிகழ்வுகளின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது, குறிப்பாக பருவமழை காலத்தின் முற்பகுதியில் (ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில்)", என்றும் குறிப்பிடுகிறது.
விதர்பாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவிற்கான பருவநிலை மாற்ற பாதிப்பு மற்றும் தகவமைப்புகளை மதிப்பிடுதல்: மஹாராஷ்டிரா மாநிலத்தின் பருவநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு செயல் திட்டம் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, முக்கிய பாதிப்புகளாக "நீண்டகால வறட்சி மழைப் பொழிவு மாறுபாட்டின் சமீபத்திய அதிகரிப்பு மற்றும் மழையின் அளவு குறைதல்", ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
பந்தாரா, தீவிர மழைப்பொழிவு 14 முதல் 18 சதவீதம் வரை (அடிப்படையுடன் ஒப்பிடும்போது) அதிகரிக்கக்கூடிய மாவட்டங்களின் குழுவில் உள்ளது, மேலும் பருவமழை காலத்தில் வறண்ட நாட்களும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாக்பூர் பகுதியில் (பந்தாரா அமைந்துள்ள இடத்தில்) சராசரி ஆண்டு வெப்பநிலையான 27.19° யை விட 2030 ஆம் ஆண்டிற்குள் 1.18° முதல் 1.4° வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும், 2050ஆம் ஆண்டிற்குள் 1.95° முதல் 2.2° வரை அதிகரிக்கக்கூடும் என்றும், மற்றும் 2070 ஆம் ஆண்டிற்குள் 2.88° முதல் 3.16° வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
பாரம்பரியமான நீர் நிலைகள் ஆறுகள் மற்றும் போதுமான மழைப் பொழிவினை முன்பு பெற்றதன் காரணமாக 'சிறந்த நீர்ப்பாசன' பிராந்தியமாக பந்தாரா இன்னும் அரசாங்க ஏடுகள் மற்றும் மாவட்டத் திட்டங்களில் வகைப்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் உண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பந்தாரா விவசாய அதிகாரிகள் கவனித்து இருக்கின்றனர். "மாவட்டத்தில் தாமதமாக பருவமழை பெய்யும் ஒரு நிலையான போக்கை நாங்கள் காண்கிறோம், இது விதைப்பு மற்றும் விளைச்சலை பாதிக்கிறது", என்று பந்தாராவில் உள்ள மண்டல விவசாய கண்காணிப்பு அதிகாரியான மிலிந்த் லாட் கூறுகிறார். நாங்கள் 60 முதல் 65 மழை நாட்களை கொண்டிருந்தோம் ஆனால் அது கடந்த ஒரு தசாப்தத்தில் மட்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கு 40 முதல் 45 நாட்களாக குறைந்துவிட்டது. "பந்தாராவின் சில வட்டங்களில் - சுமார் 20 வருவாய் கிராமங்களில் - ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆறு அல்லது ஏழு நாட்களே இந்த ஆண்டு மழை பெய்திருக்கிறது என்று அவர் கண்டறிந்துள்ளார்.
"பருவமழை தாமதமாகி விட்டால் ஒருவரால் நல்ல தரமான அரிசியை விளைவிக்க முடியாது", என்று லாட் கூறுகிறார். "21 நாட்களுக்கு பிறகு நாற்றங்காலில் உள்ள பயிர்கள் வயலில் நடவு செய்யப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஹெக்டேருக்கு 10 கிலோ என்ற அளவில் உற்பத்தி திறன் குறையும்", என்றும் அவர் கூறுகிறார்.
நாற்றங்காலில் விதைத்த நாற்றுகளை எடுத்து வயலில் மறுநடவு செய்வதற்கு பதிலாக மீண்டும் பாரம்பரிய முறையில் விதைகளை விதைக்கும் முறை - நேரடியாக மண்ணில் விதைகளை விதைத்தல் - படிப்படியாக இம்மாவட்டத்தில் திரும்புகிறது. ஆனால் மறு நடவு முறையைப் போலல்லாமல் குறைந்த அளவு முளைப்புத்திறனைக் கொண்டிருப்பதால் நேரடியாக விதைக்கும் முறையில் விளைச்சலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், முதல் மழை பெய்யவில்லை என்றாலும் நாற்றங்காலில் நாற்றுகள் வளராமல் முழு பயிரையும் இழப்பதற்கு பதிலாக நேரடியாக விதைக்கும் முறையில் விவசாயிகள் ஓரளவு இழப்பை மட்டுமே சந்திக்க நேரிடும் என்று கூறினார்.
"நெல்லை நாற்றங்காலில் விதைப்பதற்கு மற்றும் வயலில் மறுநடவு செய்வதற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நல்ல மழை தேவைப்படுகிறது", என்று கிராமிய யுவ பிரகதி மண்டலின் தலைவரான அவில் போர்கர் கூறுகிறார், இது கிழக்கு விதர்பாவில் உள்ள நெல் விவசாயிகளுடன் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பது குறித்து பணியாற்றும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். மேலும் அவர் பருவமழை மாறிக்கொண்டு வருக்கிறது, என்று குறிப்பிடுகிறார். சிறிய மாறுபாடுகளை மக்களால் சமாளிக்க முடியும். "ஆனால் பருவமழையே தோல்வியடைந்தால் - அவர்களால் எதுவும் செய்ய முடியாது", என்று கூறுகிறார்.
*****
ஜூலை இறுதியில், பந்தாராவில் மழை பெய்யத் துவங்கியது. ஆனால் அதற்குள் காரீப் பருவ நெல் விதைப்பு பாதிக்கப்பட்டிருந்தது - ஜூலை மாத இறுதி வரை மாவட்டத்தில் 12 சதவிகித விதைப்பு மட்டுமே செய்யப்பட்டு இருந்தது என்று மண்டல விவசாய கண்காணிப்பு அதிகாரியான மிலிந்த் லாட் கூறுகிறார். மேலும் அவர் காரீப் பருவத்தில் பந்தாராவில் உள்ள 1.25 லட்சம் ஹெக்டேர் சாகுபடி நிலத்தில் கிட்டத்தட்ட அனைத்திலும் நெல்லே இடம் பிடித்திருக்கும் என்று கூறுகிறார்.
மீன்பிடி சமூகங்கள் நம்பியிருந்த பல நீர்நிலைகளும் வறண்டுவிட்டன. கிராம மக்களிடையே இருக்கும் ஒரே பேச்சு தண்ணீரைப் பற்றியதே. பண்ணைகள் மட்டுமே இப்போது வேலை வாய்ப்புக்கான ஒரே வழி. இங்குள்ள மக்கள் கூறுகையில் பருவமழைக்கான முதல் இரண்டு மாதங்களில் பந்தாராவிலுள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றும் மேலும் இப்போது மழை பெய்தாலும் காரீப் பருவத்தில் நடவு செய்ய முடியாதபடிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏக்கர் கணக்கில் தரிசு நிலங்களையும் உழவு செய்யப்பட்டு, வெப்பத்தால் இறுகி மற்றும் ஈரப்பதம் இல்லாமல், ஆங்காங்கே நாற்றாங்காலில் பழுப்பு நிறத்தில் கருகி வாடி இருக்கும் நாற்றுகளையும் இங்கே நீங்கள் காண்கிறீர்கள். சில நாற்றங்கால்களில் அபரிமிதமான அளவில் உரங்களை போட்டு இருப்பதால் இந்த தற்காலிக வளர்ச்சிக்கு உதவி அவை பசுமையாக தோற்றமளிக்கின்றது.
கரடா மற்றும் ராவணவாடி தவிர பந்தாராவின் தர்காவுன் வட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் இந்த ஆண்டும் மற்றும் கடந்த சில ஆண்டுகளாகவும், நல்ல மழை பெய்யவில்லை. 2019 ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை பந்தாரா ஒட்டுமொத்தமாக 20 சதவிகித பற்றாக்குறையை எதிர் கொண்டதாக மழைப்பொழிவின் தரவு காட்டுகிறது, மேலும் அது பதிவு செய்த 736 மில்லி மீட்டர் மழையின் பெரும்பகுதி (அதே காலத்திற்கான நீண்டகால சராசரி 852 மில்லி மீட்டர்) ஜூலை 25 ஆம் தேதிக்குப் பிறகு பெய்திருக்கிறது. ஆகஸ்ட் மாத முதல் பதினைந்து நாட்களில் மாவட்டம் ஒரு பெரிய பற்றாக்குறையை சமாளித்து இருக்கிறது, என்று லாட் கூறுகிறார்.
தவிர இத்தகைய மழை கூட சீராக இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வட்ட வாரியான தகவல்கள் காட்டுகின்றன. வடக்கில் இருக்கும் தும்சாரில் நல்ல மழையும், நடுவிலிருக்கும் தர்காவுனில் மழை பற்றாக்குறையும் மற்றும் தெற்கில் இருக்கும் பவுனியில் கொஞ்சம் நல்ல மழை பொழிவுமாக இருந்திருக்கிறது.
இருப்பினும், மேல்நிலைத் தரவுகள் இங்குள்ள மக்களின் நுண்ணிய அவதானிப்புகளை பிரதிபலிக்கவில்லை: மழை விரைவாகவும், மிகக் குறுகிய காலத்திலும், சில நேரங்களில் சில நிமிடங்களுக்கும் பெய்தாலும் மழை அளவிடும் நிலையத்தில் ஒருநாளுக்கு பெய்த மழையின் அளவாகவே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒப்பு வெப்பநிலை, வெப்பம் அல்லது ஈரப்பதம் குறித்த கிராம அளவிலான தரவுகள் எதுவும் இல்லை.
ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் நரேஷ் கிதே இந்த ஆண்டு 75 சதவீத நிலத்தில் விதைக்காத அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளார். ஆரம்ப மதிப்பீடுகளாக இதைப் போன்ற சுமார் 1.67 லட்சம் விவசாயிகள் இருப்பார்கள் என்றும் மொத்தமாக விதைக்கப்படாத நிலத்தின் அளவு 75,440 ஹெக்டேர் பரப்பளவு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்குள் பந்தாராவில் 1237. 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது (ஜூன் மாதத்திலிருந்து) அல்லது இதே காலத்திற்கான நீண்ட கால ஆண்டு சராசரியின் (1280. 2 மில்லி மீட்டர்) அளவில் 96 சதவிகிதம் பதிவாகி உள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாத மழையினை சார்ந்து இருக்கும் காரீப் பருவ விதைப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மழையின் பெரும்பகுதி பெய்திருக்கிறது. ராவணவாடி, கரடா ஜங்கிலி, மற்றும் வாகேஷ்வர் ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் சேர்ந்திருக்கிறது. பல விவசாயிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீண்டும் விதைகளை விதைத்திருக்கின்றனர், சிலர் குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் விதைகளை விதைத்து இருக்கின்றனர். இதனால் விளைச்சல் குறைவடையலாம் மற்றும் அறுவடை ஒரு மாத காலத்திற்கு தள்ளப்பட்டு நவம்பர் மாத இறுதியில் நடைபெறலாம்.
*****
ஜூலை மாதத்தில், 66 வயதான மரோத்தி மற்றும் 62 வயதான நிர்மலா மாஸ்கே ஆகியோர் கலக்கத்தில் இருந்தனர். கணிக்க முடியாத மழையுடன் வாழ்வது கடினமாக இருக்கிறது என்று அவர்கள் கூறினர். முன்னர் நீடித்த மழை 4 அல்லது 5 அல்லது 7 நாட்களுக்கு கூட நீடிக்கும், ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது மழை விரைவாக ஓரிரு மணி நேரங்களுக்குள் கன மழையாக பெய்து தீர்த்து விடுகிறது இது நீண்ட வறண்ட காலங்கள் மற்றும் வெப்பத்துடன் குறுக்கிடுகிறது என்று அவர்கள் கூறினர்.
சுமார் ஒரு தசாப்த காலமாக அவர்கள் மிருக நக்ஷத்திரத்தில் அல்லது ஜூனில் இருந்து ஜூலை முற்பகுதி வரையிலான காலகட்டததில் நல்ல மழையினைப் பெறவில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் அவர்கள் நாற்றங்காலில் விதைகளை விதைத்து 21 நாளான நாற்றுகளை வரப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கியிருக்கும் வயல்களில் மறு நடவு செய்வர். அப்போது தான் அக்டோபர் மாத இறுதிக்குள் இந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி இருக்கும். இப்போது அவர்கள் அறுவடைக்கு நவம்பர் மாத இறுதி வரை அல்லது டிசம்பர் மாதம் வரையோ கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது. தாமதமாக வரும் மழை விளைச்சலை பாதிக்கிறது மற்றும் நீண்ட கால பயிர்களான தரமான நெல் வகைகளை பயிரிடுவதையும் அது தடுக்கிறது.
நான் அவர்களை அவர்களது கிராமமான வாகேஷ்வரில் சந்தித்தபோது (ஜூலை மாத இறுதியில்) நிர்மலா என்னிடம், "இந்நேரத்திற்கெல்லாம் நாங்கள் மறு நடவு செய்து முடித்து இருப்போம்", என்று கூறினார். பிற விவசாயிகளை போலவே மாஸ்கேக்களும் மழைக்காக காத்திருக்கின்றனர், ஏனெனில் அப்போதுதான் நாற்றுகளை அவர்களது வயலில் பரவலாக நடவு செய்ய முடியும். கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் நிலத்தில் வேலை செய்யும் ஏழு தொழிலாளர்களுக்கும் எந்த வேலையும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
மாஸ்கேகளின் பழைய வீடு அவர்களது இரண்டு ஏக்கர் நிலத்தை பார்க்கும்படியாக அமைத்திருக்கிறது, அதில் அவர்கள் காய்கறிகளையும், உள்ளூர் ரக நெல் பயிர்களையும் பயிர் செய்து வருகின்றனர். அவர்களது குடும்பத்திற்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவர்களது கிராமத்தில் மரோத்தி மாஸ்கே, அவரது பயிர் திட்டமிடல் மற்றும் அதிக மகசூல் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார். ஆனால் மழையின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதன் வளர்ந்து வரும் கணிக்க முடியாத தன்மை மற்றும் மழையின் சீரற்ற பரவல் ஆகியவை அவரை ஒரு பிணைப்பில் வைத்திருக்கிறது, "எப்போது எவ்வளவு மழை பெய்யும் என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்காவிட்டால், நீங்கள் உங்கள் பயிர்களைப் பற்றி எப்படி திட்டமிட முடியும்?", என்று அவர் வினவுகிறார்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
தமிழில்: சோனியா போஸ்