60 வயதை கடந்துவிட்ட கமலாபாய் குத்தே பல நேரங்களில் சோளத்தை கூலியாக பெற்று விவசாய கூலியாக வேலை செய்பவர். கூலியாக பணம் பல நேரங்களில் கிடைக்காத நிலையில், 12 மணி நேரம் வரை வேலை செய்வதன் மூலம் ரூ.25/ மதிப்பிலான சோளம் தான் கூலியாக கிடைக்கிறது. இதனோடு தனது நான்கரை ஏக்கர் நிலத்தில் கடினமாக உழைப்பையும் செலுத்துகிறார். வனப்பகுதியின் எல்லையை ஒட்டி இருப்பதால் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் வனவிலங்குகள் அவற்றை அழித்து விடும் துயரம் வழக்கமாக நடக்கிறது. சோயாவும், பருத்தியும் காட்டுப் பன்றிகளை இவரது நிலத்தை நோக்கி ஈர்த்து விடுகிறது. இவரது நிலத்தை சுற்றி வேலி அமைக்க சுமார் ஒரு லட்சம் தேவைப்படும். இத்தொகை இவரால் கற்பனையிலும் நினைத்து பார்க்க இயலாதது.

1990ம் ஆண்டு காலத்தில் விவசாய நெருக்கடியால் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் இவரது கணவரும் ஒருவர். நாட்டிலேயே அதிக நெருக்கடியை சந்தித்த விதர்பா பகுதியை சார்ந்தவர். ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய இப்பகுதியின் வார்தா மாவட்டம் லோன்ஸ்வாலா கிராமத்தில் வசிக்கிறார். விதர்பா பகுதியில் மட்டும் 2001ம் ஆண்டிற்க்கு பின்னர் 6000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அவரது கணவர் பலாஸ்ராம் கடன் தொல்லையால் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு பாதி சேதமடைந்த கூரையும், இருபக்க சுவர்கள் இடியும் தருவாயிலும் இருக்கும் குடிசையில் வசித்துக் கொண்டு விவசாயத்தை கைவிடாமல் தொடர்கிறார். எப்போது வேண்டுமானாலும் தகரும் அபாயத்திலிருக்கும் குடிசை தான் அவரது மகன், மருமகள், இரு பேரப்பிள்ளைகள் ஆகிய ஐந்து பேருக்கும் பாதுகாப்பளிக்கும் வீடு. சமூகத்தின் பார்வையிலோ கமலாபாய் ஒரு விதவை ஆனால் விவசாயம் மூலம் தனது குடும்பத்தை பாதுகாக்க எத்தனிக்கும் ஒரு விவசாயி என்பது தான் யதார்த்தம்

PHOTO • P. Sainath

லோன்ஸ்வாலா கிராமத்தில் தனது வீட்டில் கமலாபாய் குத்தே. ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் ரூ.25/ மதிப்பிலான சோளம் தான் இவருக்கு கிடைக்கும் கூலி

ஒரு நிலமற்ற தலித் எவ்வாறு விவசாயி ஆனார்? கமலாபாய்க்கு தனது வாழ்நாள் முழுவதுமே போராட்டம் தான். விவசாய தொழிலாளியாக தனது வாழ்வை தொடங்கிய கமலாவிற்கு அப்போது ரு.10 முதல் 12/ வரை கூலியாக கிடைத்தது. “இத்தொகை அப்போது அதிக மதிப்புடையதாக இருந்ததால் நிலம் வாங்க முடிந்தது”, என்கிறார். கூலி வேலையுடன் மாட்டு தீவன விற்பனையும் செய்து வந்துள்ளார்.

“எனது தாயார் பல மணி நேரம் மிகுந்த சிரமத்துடன் மாட்டுத் தீவனம் சேகரித்து மறுநாள் விற்பனை செய்வார்”, என்றார் கமலாவின் மகன் பாஸ்கர். தனது மகனை நம்பியே விவசாயத்தை கமலா தொடர்கிறார். “ஒரு கை நிறைய தீவனம் சேகரித்தால் பத்து காசுகளுக்கு விற்பனை செய்யலாம். ஒரு நாளைக்கு ரூ.10/ வரை சம்பாத்தித்திருக்கிறேன்”, என்றார் புன்னகையோடு. தன்னால் கணக்கிட முடியாத அளவு தூரம் நடந்தே 100 கையளவு தானியம் சேகரித்து ரூ.10/ சம்பாத்தித்துள்ளார். தினமும் 16 முதல் 18 மணி நேரம் அவர் கடுமையாக உழைத்ததன் பலன் தான் இந்த நான்கரை ஏக்கர் நிலம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது உழைப்பின் பலனாக ரூ.12,000/ என்ற விலைக்கு இந்த நிலத்தை வாங்கியுள்ளார். வனப்பகுதிக்கு அருகாமையில் இருந்த நிலத்தை வேறு எவரும் விலைக்கு வாங்க துணியவில்லை. வாங்கிய நிலத்தை பண்படுத்த மொத்த குடும்பமும் கடுமையாக பணியாற்றியுள்ளனர். “எனக்கு இன்னொரு மகனும் இருந்தான், ஆனால் இறந்து போய் விட்டான்”, என்றார்.

60 வயது கடந்து விட்ட போதும் கமலாபாய் தினமும் அதிக தூரம் நடந்து கொண்டு தான் இருக்கிறார். “என்ன செய்வது? எங்கள் நிலம் நாங்கள் வாழும் கிராமத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேலை ஏதும் கிடைத்தால் அதனை முடித்து விட்டு நடந்தே பாஸ்கர், வனிதா ஆகியோருக்கு உதவி செய்ய செல்வேன்”, என்றார். அரசு திட்டங்களில் அவருக்கு வயது முதிர்வின் காரணமாக வேலைகள் கிடைப்பதில்லை. அங்கும் தனியாக வாழும் பெண்கள் மீது, குறிப்பாக விதவைகள் மீது பாரபட்சமான கண்ணோட்டங்கள் உள்ளன. ஆகையால் கிடைக்கும் வேலைகளை செய்து கொள்கிறார்.

PHOTO • P. Sainath

மகராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டம் லோன்ஸ்வாலா கிராமத்தில் தனது மருமகள் வனிதாவுடன் கமலாபாய்

கடின உழைப்பின் மூலம் இக்குடும்பம் அவர்களது நிலத்தை விவசாயத்திற்க்கு உகந்ததாக மாற்றியுள்ளது. “இந்த கிணறு எங்கள் உழைப்பால் உருவாக்கப்பட்டது. இதனை சுத்தப்படுத்தினால் அதிக நீர் கிடைக்க வழி பிறக்கும்”, என்றார். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ரூ.15,000/ வரை செலவாகும். நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்க மேலும் ஒரு லட்சம் தேவைப்படும். அவர்களது நிலத்தில் சரிவான பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை நீர் சேகரிக்க குளமாக மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு மேலும் பணம் தேவைப்படும். வங்கிக் கடன் பெறுவது எவ்வகையிலும் சாத்தியமில்லை. தகரும் நிலையிலிருக்கும் வீட்டை சரி செய்ய ரூ.25,000/ வரை தேவைப்படும். “எனது கணவர் விளைச்சல் இல்லாமல் போனதால் ஏற்பட்ட கடன் சுமையான ஒன்றரை லட்சத்தை திரும்ப செலுத்த இயலாது என முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டார்”, என்றார் கமலா. அக்கடனின் பெரும்பகுதியை இழப்பீடாக கிடைத்த ஒரு லட்சம் மூலம் திரும்ப செலுத்திவிட்டார். ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் தொல்லையிலிருந்து முழுமையாக விடுபட இயலவில்லை. “இப்போது பெரும் சிரமங்கள் இல்லை. ஆனால் தொடர்ந்து விவசாயம் பொய்த்து வருவதால் பெரும் நஷ்டங்களை சந்தித்தித்தே வருகிறோம்”, என்றார்.

பல லட்சம் விவசாயிகளை போல பல பத்தாண்டுகளாக தொடரும் நெருக்கடி இவரது குடும்பத்தையும் பாதித்துள்ளது. அதிகரிக்கும் இடுபொருட்கள் விலை, குறைவான வருவாய், கடன் வசதி இல்லாமை, அரசின் மானியங்கள் இல்லாமையால் நெருக்கடி அதிகரிக்கவே செய்துள்ளது. “எங்கள் கிராமத்தினர் அனைவரும் நெருக்கடியில் தான் விவசாயத்தை தொடர்கின்றனர்”, என்றார். கடந்த வருடமும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி பெரு நஷ்டத்தை உருவாக்கியது. வெறும் இரண்டு குவிண்டல் மட்டுமே விளைச்சல் கிடைத்தது.

அரசு தனது நடவடிக்கையால் இவர்களுக்கு மேலும் சிரமத்தை உருவாக்கியது. அரசின் நிவாரண திட்டத்தின் பலனாளியாக தேர்வு செய்யப்பட்டு, கமலாவிற்க்கு ஒரு ஜெர்சி கலப்பின பசு வழங்கப்பட்டது. மானியத்துடன் வழங்கப்பட்ட பின்னரும் பயனாளிகளிடமிருந்து ரூ.5,500/ வசூல் செய்யப்பட்டது. “நாங்கள் உட்கொள்வதை விட அதிக உணவு எடுத்துக் கொண்டு குறைவான அளவு பால் மட்டுமே கொடுத்தது”, என்றார் (தி இந்து, நவம்பர் 23, 2006).

மாற்று வாடகை முறை

“இரண்டு முறை அப்பசுவை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். ஆனால் பெற்றுக் கொண்டவர்கள் அதிக செலவின் காரணமாக அதன என்னிடமே திரும்ப தந்து விட்டனர்”, என வருந்துகிறார். “ஆகையால் பசுவை பராமரிக்க அண்டை வீட்டாருக்கு மாதம் ரூ.50/ கட்டணமாக செலுத்துகிறேன்”, என்கிறார். நடைமுறைக்கு சாத்தியமில்லாத உடன்பாடாக இவ்வகை பசுக்கள் கொடுப்பதாக சொல்லப்படும் அளவை கொடுக்கும் போது இருவரும் சரியளவு பகிர ஒப்புக்கொண்டுள்ளனர். இவரை பாதுகாக்க அரசு வழங்கிய பசுவை தனது சிறு வருவாய் மூலம் கமலாபாய் பாதுகாக்கும் பரிதாப நிலையே நிலவுகிறது.

ஆயினும் அவரது உற்சாகம் சற்றும் குறையவில்லை. இன்றளவும் வீட்டிலிருந்து விளை நிலம் வரையிலான நீண்ட கால் நடை பயணத்தை தொடர்கிறார். இந்த பயணத்தில் அவரது உற்சாகமான பேரப்பிள்ளைகள் உடன் பயணிக்கின்றனர். இவர்களது எதிர்காலமே கமலாவை ஊக்குவிக்கும் காரணியாக திகழ்கிறது. தன்னம்பிக்கையுடன் வீறு நடை போடும் கமலாவால் தனது பேரப்பிள்ளைகளை எண்ணிப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் ததும்புவதை தவிர்க்க இயலவில்லை. கமலாபாய் தற்கொலை என்பது மரணித்தவர்கள் குறித்தானதல்ல, உயிரோடிருப்பவர்கள் குறித்தது என்ற தீர்க்கமான முடிவை எட்டியிருக்கிறார். தன்னை நம்பியிருப்பவர்களுக்காக அவரது பயணம் தொடர்கிறது.

இந்த கட்டுரை தி இந்து 21 மே 2007 தேதியிட்ட நாளிதழில் முதலில் வெளியானது.

https://www.thehindu.com/todays-paper/tp-opinion/Suicides-are-about-the-living-not-the-dead/article14766288.ece

தமிழில்: ஆ நீலாம்பரன்

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Neelambaran A

Neelambaran A is a post graduate in Engineering and had taught in Engineering colleges of Tamil Nadu for thirteen years. Now works for NewsClick as a Journalist and is interested in politics, labour and rural agrarian issues.

کے ذریعہ دیگر اسٹوریز Neelambaran A