தங்கள் அன்புக்குரிய தலைவன் போர்க்களத்தில் விழுந்து கிடப்பதை அருகிலுள்ள கிராமத்துப் பெண்களே கண்டுபிடித்தனர். தங்கள் குடும்பத்து ஆண்களை தேடியே அவர்கள் அங்கு வந்திருந்தனர். மாறாக, ரத்தக் காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கள் தலைவர் ஊமைத்துரையை பார்த்தனர். அவரை கவனமாக தூக்கி, மூன்று கிமீ தொலைவிலுள்ள தங்கள் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர்.
விரைவிலேயே ஊமைத்துரையை தேடி வீரர்கள் வந்தனர். உடனடியாக அவரை வெள்ளைத் துணியால் போர்த்திய பெண்கள், பெரியம்மை நோயால் இறந்து போனார் என கதறி அழுதபடி வீரர்களிடம் கூறினர். உயிருக்குப் பயந்து படையினர் ஓட்டம் பிடித்தனர். இதனால் ஊமைத்துரை உள்பட பல வீரர்கள் காப்பற்றப்பட்டனர்.
கதையாக கூறப்பட்டாலும் இது உண்மை. 200 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்தது இது. போர் குறித்த 19-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் குறிப்பேடுகளில் இந்த செய்தி காணப்படுகிறது. அதை இப்போது தன்னுடைய அழகான தமிழால் நம்மிடம் விவரிக்கிறார் எழுத்தாளர் சோ.தர்மன். பல நூற்றாண்டுகளாக கிராமங்கள் எப்படி வைரஸ், பிளேக் மற்றும் தொற்றுநோயை எதிர்கொண்டன என்பதை விலைமதிப்பற்ற வாய்மொழி வரலாறாக நமக்கு தருகிறார்.
“பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக இருந்த புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை. காது கேளாத வாய் பேச முடியாத ஊமைத்துரையை ஊமை (உள்ளூரில்) என்றும் போலி (பிரிட்டிஷாரால்) என்றும் அழைக்கப்பட்டார். தனது மக்களால் அளவுக்கதிகமாக நேசிக்கப்பட்டாலும் கிழக்கிந்திய கம்பனியால் வேட்டையாடப்பட்டார். “இவை எல்லாவற்றையும் நீங்கள் காலனல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய மிலிட்டரி ரெமினைசைன்ஸ் (Military Reminiscences) புத்தகத்தில் வாசிக்கலாம்” என்கிறார் தர்மன்.
கோவில்பட்டியிலுள்ள தர்மனின் வீட்டிலிருந்து 50கிமீ தொலைவில்தான் 1799-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பாஞ்சலாங்குறிச்சி போர் நடைபெற்றது. ஆனால் பிரிட்டிஷ் காலனல் வெல்ஷ், ஊமைத்துரையை காப்பாற்றிய பெண்களை “பரிதாபகரமான அற்ப உயிரினங்கள்” என தனது நினைவுக்குறிப்பில் கூறியிருப்பதற்கு மாறாக, கிராமத்தினரின் அறிவையும் போர்க்களத்திலிருந்து ஊமைத்துரையை வீட்டிற்கு அழைத்து வந்த பெண்களின் வீரத்தையும் மனதார பாராட்டுகிறார் தர்மன். “அவர் தேடப்படும் நபர் என்பதோ, வீரர்கள் தங்களை பின்தொடர்வார்கள் என்பதோ, தங்கள் வீடுகள் சூறையாக்கப்படும் என்பதோ அந்த வீரப் பெண்களுக்கு தெரியாது என நீங்கள் நினைக்குறீர்களா?” என கேட்கிறார் தர்மன்.
பிரபலமான கடலை மிட்டாய்க்கு 2015-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றதற்காக சமீபத்தில் செய்தியில் அடிபட்ட கோவில்பட்டியில் வைத்து தர்மனை நான் சந்தித்தேன்.
“தலித் இலக்கியம் என்ற ஒன்று இல்லை
. நான் பிறப்பால் தலித்தாக இருக்கலாம், ஆனால் என் எழுத்தை பிரிக்காதீர்கள்” என அந்த சமயத்தில் வலியுறுத்தியிருந்தார். சமீபத்தில் நாங்கள் தொலைபேசியில் பேசியபோது, “எனது தினசரி பழக்க வழக்கம் பெரிதாக மாறவில்லை (இந்த ஊரடங்கு காலத்தில்). தனிமைதான் என் வாழ்க்கையாக இருக்கிறது. நாளின் முதல் பாதியை எழுதுவதில் செலவழிப்பேன். மதிய வேளையில் கன்மாய்க்கும், மீன்பிடிக்கவும் செல்வேன்” என்றார்.
“கொரோனா பிரச்சனை இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நம்மால் எந்த வகையில் உதவி செய்ய முடியும்? புயலை, நிலநடுக்கத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என நமக்கு தெரியும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த உலகத்தில், ஒரு நாளில் பாதி உலகை சுற்ற முடியும் – வைரசும் இப்படித்தான் பயணம் செய்கிறது - என்றாலும் கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்த்து போராடி வருகிறோம்”.
வரலாற்று ரீதியாகவே, கிராமங்கள் பல தொற்று நோய்களை கண்டுள்ளன. அதில் சில கொரோனா போல் ஆபத்தானதும் கூட. இப்போது ஒழிக்கப்பட்டுள்ள பெரியம்மை நோயை எடுத்துக் கொள்ளுங்கள். நோய்வாய்ப்பட்ட நபரின் தோலில் நெல்லிக்காய் அளவிற்கு கொப்புளம் வெடிக்கும். இப்படி அந்த நபரின் தலை முதல் கால் வரை கொப்பளங்கள் மூடியிருக்கும், சில சமயங்களில் கண்களில் கூட இருக்கும். இது மிக எளிதாக கண்ணை குருடாக்கி, ஆளை கொன்றுவிடும். இதைக் குறிப்பிட்டதும் பிரிட்டிஷ் ரானுவ படை வீரர்கள் பயந்து போனார்களா என்பது ஆச்சர்யமாக உள்ளது? இதேப்போல் காலராவும் பிளேக்கும் அதிக உயிர் பலியை வாங்கும் மோசமான நோய்களாகும்.
“இந்த மூன்றும் (அம்மை, காலரா, பிளேக்) ‘ஒட்டுவார்-ஒட்டி நோய்’ என அழைக்கப்படும். நம் மூதாதையர்களிடம் இதற்கான மருந்துகளோ தடுப்பூசியோ இல்லை. அவர்களிடம் இருந்த ஒரே சிகிச்சை சிறந்த கிருமிநாசினியான வேம்பு மட்டுமே. ஆகையால் பச்சை வேம்பு இலையை பறித்து, அரைத்து கொப்பளங்களில் தடவுவார்கள். இதனால் அம்மை நோய் வந்த நபர் பச்சை நிறமாக தெரிவார்”.
தர்மன், 66, தன்னுடைய கிராமமான உருளைக்குடியில் – தூத்துக்குடி மாவட்ட எட்டையபுர தாலுகாவில் உள்ள கோவில்பட்டியிலிருந்து 10கிமீ தொலைவு – சிறுவனாக இருக்கும் போது அம்மை நோயை பார்த்துள்ளார். தன்னுடைய சிறுகதை மற்றும் நாவல்களில் இந்த கரிசல் பூமி குறித்தும் இதன் நிலப்பரப்பு குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். இவை அவருக்கு பல விருதுகளையும் புகழையும் பெற்றுக் கொடுத்துள்ளது. 2019-ம் ஆண்டு இவர் எழுதிய சூல் (தனது கிராமத்தை அடிப்படையாக கொண்டு சுற்றுச்சூழல் பற்றி எழுதிய நாவல்) நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
பரவலாகவும் ஆபத்துக்குரியதாகவும் அம்மை நோய் இருந்தாலும், இதை விவரிக்க குறிப்பிட்ட சொல்வழக்கு மக்களிடத்தில் உள்ளது என விளக்கம் தருகிறார் தர்மன். ‘தாய் கூட்டிக்கிட்டா’ – கடவுள் அந்த நபரை அழைத்துக் கொண்டார் – என்பது அம்மை நோயினால் ஏற்பட்ட இறப்பை குறிப்பிடுகிறது. இது நாகரிகமாகவும் கவனமாகவும் குறிப்பிடப்படுவதாக உள்ளது. நோய் பரவலை குறிப்பிடும் சொற்றொடர்களும் உள்ளன: ‘அம்மை வந்திருக்கு’ என்பதற்கு ஒரு சில பேருக்கு அம்மை நோய் வந்திருப்பதாக அர்த்தம். ‘அம்மை விளையாடுது’ என்பதற்கு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் பரவியுள்ளதாக அர்த்தம்”.
இது தற்போது கொரோனாவிற்கு (கோவிட்-19) வகைப்படுத்துவதை நியாபகப்படுத்துகிறது: தொற்று அதிகமுள்ள இடங்கள், சமூகப் பரவல் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்கள். ‘அம்மா இறங்கிட்டா’, ‘தண்ணி ஊத்தியாச்சு’ என்பதற்கு கடவுள் உடலிலிருந்து வெளியேறிவிட்டார், தண்ணீர் ஊற்றிவிட்டோம் என அர்த்தம். இதன் உண்மையான அர்த்தம் நோய்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்பதை இந்த சொற்றொடர் குறிக்கிறது. (தற்போதைய காலத்தில் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்தது போல)
“அம்மை நோய் முழுமையாக அகன்று, அந்த நபர் மூன்று முறை குளித்த பிறகே அவர் மற்றவர்களோடு சகஜமாக பழக முடியும். இப்போது கொரோனா வைரஸ் காலத்தில் நாம் செய்வதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இந்த முறை – சில சமயங்களில் ஊடகம் காரணமாகவும் - அதிகமான நாடகமும் பயமும் ஏற்பட்டுள்ளது.
“பழைய நோய்களுக்கு எதிராக போராட தனிமைப்படுத்தல் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. வெளியாட்களுக்கு உடல்நலக்குறைவை அறிவிக்க,நோய்தொற்று ஏற்பட்ட நபரின் வீட்டு வாசலில் வேம்பு இலையை தொங்க விட்டிருப்பார்கள். நோய் பரவத் தொடங்கியதும், ஊருக்குள் வருபவர்களிடமும் வியாபாரிகளிடமும் நோயின் தீவிரத்தை உணர்த்த, கிராம நுழைவாயிலில் வேம்பு இலையை கட்டித் தொங்கவிடுவார்கள். இதைப் பார்த்ததும் அவர்கள் வெளியே சென்று விடுவார்கள்.
முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பாலும் தயிரும் இருக்கும். அப்படி இல்லையென்றாலும் கூட, அருகிலுள்ள வீட்டில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான மக்கள் விவசாயிகளாக இருந்ததாலும் காய்கறிகளை விளைவித்ததாலும் எப்போதும் அரிசியும் பருப்பும் வீட்டில் இருக்கும். சுரைக்காய், பூசனிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை எங்கள் வயல்வெளிகளில் பறித்துக் கொள்வோம். பெரும்பாலும் பணமாக கொடுக்காமல் பண்டமாற்று முறையாகத்தான் இருக்கும். உங்களிடம் வத்தல் இல்லாவிட்டால் மல்லி விதையை மாற்றிக் கொள்ளலாம்.
அம்மை, கோடைக்கால நோய். வெயில் அதிகமாக இருக்கும் மாதங்களில்தான் இந்நோய் பரவும் என்கிறார் தர்மன். காலராவும் பிளேக் நோயும் மழைக்காலத்தில் வரக்கூடியது. இவை எல்லாம் இறப்பை தரக்கூடியவை. “அந்தக்கால கதைகளை என் தாத்தா கூறக் கேட்டுள்ளேன். நோய் தொற்றால் இறந்தவரை சுடுகாட்டில் புதைத்துவிட்டு கிராமத்திற்கு திரும்பி வரும்போது இன்னும் இரண்டு பேர் இறந்திருப்பார்களாம். அதை கையாள்வதற்கு அவர்கள் ஒருபோதும் மறுத்ததில்லை. ஏனென்றால் கிராமத்தில் உள்ள பலரும் உறவுக்காரரகளே. மேலும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இறந்த உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்”.
வாடகை வீட்டிலிருந்து சுகாதார பணியாளர்களை வெளியேற்றுவது, கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் பெற மறுப்பது, தங்கள் அருகாமையில் இறந்த உடலை புதைப்பதற்கு எதிராக குடிமக்கள் போராடுவது என இந்த கொரோனா காலத்தில் வரும் செய்திகள் யாவும் வித்தியாசமாக உள்ளன. தனது மாவட்டத்தில் கூட, மும்பையிலிருந்து வந்த சகோதரரை வீட்டை விட்டு வெளியேறுமாறு ஒருவர் கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன? கடற்கரை மெட்ரோ நகரமான மும்பையில் அதிகளவு நோய்தொற்று உள்ளதால், தங்களுக்கு எந்த ஆபத்தும் நேரக் கூடாது என உள்ளூர் மக்கள் நினைக்கின்றனர்.
“இது நமது அற மதிப்பீட்டின், மனித நேயத்தின் வீழ்ச்சி இல்லையா? கடந்த காலத்தோடு கொஞ்சம் ஒப்பீடு செய்து பாருங்கள்: அந்த துணிச்சலான பெண்கள் தங்கள் உயிருக்கு பயந்து ஊமைத்துரையை கைவிட்டார்களா அல்லது தைரியமாக அவரை காப்பாற்றினார்களா?” என கேட்கிறார் தர்மன்.
“ தூக்குமேடையில் சாக வேண்டியவர்கள் ” என ஊமைத்துரையை பற்றி காலனல் வெல்ஷ் எழுதியிருப்பது ஏற்ப, அவரும் அவருடைய சகோதரருமான கட்டபொம்மனும் 1799-ம் ஆண்டு பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டனர்.காலப்போக்கில் நமது ஒற்றுமை உணர்வு மாறியதோடு மட்டுமின்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியும் மாற்றம் அடைந்துள்ளது. இதற்கு நமது உணவு பழக்கத்தை காரணமாக கூறுகிறார் தர்மன். நமது உணவுப்பழக்கத்தில் சிறுதாணியங்களை இழந்ததுதான் காரணம் என அவர் புலம்புகிறார். மருத்துவர்கள் இதை எப்போதும் சிபாரிசு செய்வதையும் சுட்டிக் காட்டுகிறார். “ஏன் நாம் உள்ளூர் உணவுகளை சாப்பிடுவதில்லை? பாரம்பரிய பயிர்களுக்கு குறைவான நீரே தேவைப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று முறை நல்ல மழை பெய்தால் அறுவடைக்கு தயாராகி விடும்”.
“கொய்யாப் பழமே எனக்கு போதுமானது. இது கோடையில் வளரக் கூடியது; இது என் நிலத்தின் பழம். எங்கோ மழை பிரதேசத்தில், குளிரில் வளர்ந்து, நீண்ட தூரம் பயணம் செய்து வரக்கூடிய ஆப்பிள் எனக்கு எதற்கு?”
இவருடைய பாட்டி சீனியம்மாள் இவரை விட ஒரு படி மேல். கோவில்பட்டியிலிருந்து உருளைக்குடியில் உள்ள தன்னுடைய மூதாதையர் வீட்டிற்கு வரும் போதெல்லாம், தான் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தால் அது ‘இறந்து போனது’ எனக் கூறி தண்ணீர் பாட்டிலை வெளியே எறியச் சொல்வார். அதுமட்டுமல்லாமல், கினற்று நீரை குடிக்குமாறும் உத்தரவு போடுவார்.
கொரோனா நோய் வருவதற்கு முன்பாக, தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை ஊரடங்கை அணுபவித்துள்ளார் தர்மன். 1995-ம் ஆண்டு ஏற்பட்ட சாதி கலவரத்தால் எட்டு நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தங்கள் வீட்டை விட்டு ஆண்கள் வெளியே வந்தால் கைது செய்யப்படும் நிலை இருந்தது.
பதட்டமான அந்த நாட்களில், தன் சிறுகதைக்கு கதாபாத்திரமாகப் போகும் நபரை சந்தித்தார் தர்மன்: பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பினிப் பெண். எழுத்தாளரும் அவரது குடும்பமுமே பின்னிரவில் அந்தப் பெண்ணை மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு, மருத்துவர் கேட்ட மருந்தை வாங்க நகரம் முழுவதும் சுற்றியுள்ளார் தர்மன்.
“இதோடு முடியவில்லை. இந்த சம்பவத்தில் நடந்த விசித்திரமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணும் நானும் தற்போது கலவரம் நடப்பதற்கு காரணமாக இருக்கும் இரண்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்ததும் பெயர் வைக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர். கலாதேவி (அந்த சமயத்தில் நடந்த கலவரத்தை குறிக்கும் வகையில்) என பெயர் வைத்தேன். இந்த சம்பவத்தை புனைவாக்கி நான் எழுதிய கதையை எப்படி தொடங்கினேன் தெரியுமா? “பல ஆண்டுகளாக என்னோடு நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள், எதிரிகள் நண்பர்களாக மாறிவிட்டார்கள். இவையெல்லாம் சடுதியில் நடந்துவிட்டது……”
எங்கேயோ கேட்டது போல் உள்ளதா? வகுப்புவாதம், கொரொனா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றம் போன்ற காலகட்டத்தில் இது நிச்சியம் கேட்கும்.
தமிழில்: வி. கோபி மாவடிராஜா