”பள்ளிக்கு அவர்களை வரவழைப்பதே ஒரு சவால்.”
தலைமை ஆசிரியர் சிவ்ஜீ சிங் யாதவின் வார்த்தைகள் அவரது 34 வருட அனுபவத்தின் கனத்திலிருந்து வெளிவந்தவை. ‘மாஸ்டர்’ என மாணவர்களால் அழைக்கப்படும் யாதவ், தப்லி சபோரியில் இருக்கும் ஒரே பள்ளியை நடத்துகிறார். அசாமின் மஜுலி மாவட்டத்தின் பிரம்மபுத்திர ஆற்றில் இருக்கும் தீவில் வசிக்கும் 63 குடும்பங்களின் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர்.
தோனகான ஆரம்பப் பள்ளியின் ஒரே வகுப்பறையில் இருக்கும் ஒரு மேஜையில் அமர்ந்திருக்கும் சிவ்ஜீ சுற்றிப் பார்த்து மாணவர்களைப் பார்த்து புன்னகைக்கிறார். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 6லிருந்து 12 வயது குழந்தைகளின் 41 பிரகாச முகங்கள் அவரை பார்க்கின்றன. “போதிப்பதும் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதும்தான் உண்மையான சவால்,” என்னும் அவர், “அவர்கள் ஓடி விடவே விரும்புகிறார்கள்,” என்றும் கூறுகிறார்.
இந்தியக் கல்வி அமைப்பை அலசுவதற்கு முன், அவர் நிறுத்தி, மூத்த மாணவர்களில் சிலரை அழைக்கிறார். மாநில அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பிய அசாமிய, ஆங்கில கதைப்புத்தகக் கட்டை பிரிக்கச் சொல்கிறார். புதிய புத்தகங்கள் கொடுக்கும் பரவசம் குழந்தைகளின் கவனத்தை அவற்றில் இருக்க வைத்து அவர் பேசுவதற்கான அவகாசத்தை வழங்கும் என தெரிந்திருந்தார்.
“கல்லூரி பேராசிரியருக்குக் கொடுக்கும் ஊதிய அளவுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டும். நாங்கள்தான் அடிப்படையை கட்டுகிறோம்,” என்கிறார் அவர் அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி. ஆனால் பெற்றோர் ஆரம்பக் கல்வியை முக்கியமாக கருதாமல் உயர்கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் எனவும் அவர் சொல்கிறார். தவறான அக்கருத்து மாற்றப்பட வேண்டும் என்கிறார்.
கிட்டத்தட்ட 350 பேர் வசிக்கும் தப்லி சபோரி ஒரு மணல்மேட்டுத் தீவு. சிவ்ஜீயின் கணக்குப்படி 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தீவு அது. சபோரி நில அளவைக்கு உட்படாத பகுதி ஆகும். தொடக்கத்தில் ஜொர்ஹாட் மாவட்டத்திற்குள் வந்த பகுதி அது. பிறகு வடக்கு ஜோர்ஹாட்டிலிருந்து 2016ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட மஜுலி மாவட்டத்துக்குள் அப்பகுதி வந்தது.
ஒருவேளை தீவில் பள்ளி இல்லாதிருந்திருந்தால், 6-12 வயது குழந்தைகள் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பயணித்து அருகே இருக்கும் திசாங்முக்கில்தான் பள்ளியை அடைய வேண்டும். 20 நிமிடங்கள் சைக்கிளில் சென்றால் படகுத்துறையை அடையலாம். அங்கிருந்து படகில் நதியை கடக்க 50 நிமிடங்கள் பிடிக்கும்.
தீவின் எல்லா வீடுகளும் பள்ளியிலிருந்து 2-3 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கின்றன. 2020-21 கோவிட் தொற்றுக்காலத்தில் பள்ளி மூடப்பட்டபோது அந்த சுற்றளவு தூரம் வரமாக இருந்தது. வீடு வீடாக சென்று சந்தித்ததில் சிவ்ஜீ பள்ளியின் மாணவர்கள் அந்த வகையில் கல்வியை தொடர முடிந்தது. பள்ளியில் நியமிக்கப்பட்ட இன்னொரு ஆசிரியர், நதியைத் தாண்டி 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் (சிவசாகர் மாவட்டத்திலுள்ள) கவுரி சாகரில் வசிக்கிறார். “ஒவ்வொரு குழந்தையையும் நான் வாரத்துக்கு இரு முறையேனும் சந்தித்தேன். வீட்டுப்பாடம் கொடுத்து, அவற்றை சரியாக செய்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொண்டேன்,” என்கிறார் சிவ்ஜீ.
அப்போதும் கூட ஊரடங்கு காரணத்தால் கற்றலில் இழப்பு நேர்ந்ததாக அவர் கருதுகிறார். தயாராக இருக்கிறார்களா என்பதை பொருட்படுத்தாமல் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சியுறச் செய்யும் அரசின் முடிவில் அவருக்கு விமர்சனம் இல்லை. எனவே அவர் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பினார். “அந்த வருடத்தை விட்டுவிடும்படியும் அதே வகுப்பில் மாணவர்கள் இருந்தால் பலனளிக்கும் என்றும் நான் அவர்களிடம் கூறினேன்.”
*****
அசாம் மாநிலத்தின் பெரியளவிலான வண்ண வரைபடம் தோனகான தொடக்கப்பள்ளியின் வெளிப்புறச் சுவர் கொண்டிருந்தது. அதில் பிரம்மபுத்திர ஆற்றில் குறிக்கப்பட்டிருக்கும் தீவில் விரலை சிவ்ஜீ வைத்து, “எங்களின் சபோரியை (மணல்மேட்டை) வரைபடத்தில் பாருங்கள். உண்மையில் எங்கு இருக்கிறது எனப் பாருங்கள்,” என்றவர் சிரித்தபடி, “இரண்டுக்கும் தொடர்பில்லை!” என்கிறார்.
வரைபடத்தின் பொருந்தா தன்மை சிவ்ஜீயை அதிகமாக உறுத்துவதற்கு காரணம், பட்டப்படிப்பாக அவர் புவியியல் படித்தவர் என்பதுதான்.
பிரம்மபுத்திராவில் நகர்ந்து கொண்டிருக்கும் மணல்மேடுகளிலும் தீவுகளிலும் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அங்கு வாழ்தலென்பது முகவரி மாற்றம் அதிகம் தேவைப்படும் சூழலைக் கொண்டது என்பதை சிவ்ஜீ அறிந்திருந்தார்.
“மழைப்பொழிவு அதிகமிருக்கும் சமயத்தில், உறுதியான நீரோட்டங்களுடன் கூடிய வெள்ளத்தை நாங்கள் எதிர்பார்க்கத் தொடங்குவோம். பிறகு மக்கள் அவர்களின் உடைமைகளையும் விலங்குகளையும் நீர் அடைய முடியாத தீவின் உயரமான இடத்துக்கு இடம்பெயர்த்துவார்கள்,” என்கிறார் சிவ்ஜீ வருடந்தோறும் நடக்கும் வழக்கத்தை விளக்கி. “வெள்ளம் வடியும் வரை பள்ளி நடத்துவதற்கான பேச்சுக்கே வாய்ப்பில்லை,” என்கிறார் அவர்.
இந்தியாவின் பிரம்மபுத்திர நதி கொண்டுள்ள 194,413 சதுர கிலோமீட்டர் அளவில் உருவாகி, மறைந்து, திரும்ப உருவாகும் மணல் மேட்டுத் தீவுகளை வரைபட உருவாக்கம் சரியாகக் குறிப்பிட முடியாது.
கோடை - மழைக்கால மாதங்களில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு என்பதால் தப்லி தீவிலுள்ள எல்லா வீடுகளும் மேடைகள் மீது அமைக்கப்படுகின்றன. அந்தக் காலக்கட்டத்தில்தான் இமயமலையின் பனியும் உருகும். விளைவாக ஆறுகள் பெருகி ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மஜுலியை சுற்றியிருக்கும் பகுதி வருடந்தோறும் 1,870 செண்டிமீட்டர் அளவு மழை பெறுகிறது. அதன் 64 சதவிகிதம் தென்மேற்கு பருவகாலத்தில் (ஜுன் - செப்டம்பர்) கிடைக்கிறது.
சபோரியில் இருக்கும் குடும்பங்கள் உத்தரப்பிரதேசத்தின் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பூர்விகத்தை காசிப்பூர் மாவட்டத்தில் இருந்ததாக சொல்கின்றனர். அங்கிருந்து பிரம்மபுத்திர தீவுகளுக்கு 1932-ல் வந்திருக்கின்றனர். வளமான, ஆக்கிரமிக்கப்படாத நிலத்தை தேடி வந்தவர்கள், அத்தகைய நிலத்தை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலவு கிழக்கில் பிரம்மபுத்திராவின் மணல் மேடுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். “பாரம்பரியமாக நாங்கள் மாடு வளர்ப்பவர்கள். எங்களின் முன்னோர் மேய்ச்சல் நிலம் தேடி வந்தார்கள்,” என்கிறார் சிவ்ஜீ.
“என் தாய் வழி தாத்தா-பாட்டி முதன்முதலாக 15-20 குடும்பங்களுடன் லக்கி சபோரிக்கு வந்தனர்,’ என்கிறார் சிவ்ஜீ. 1960ம் ஆண்டு யாதவ குடும்பங்கள் குடிபுகுந்த தானு கானா சபோரியில்தான் அவர் பிறந்தார். “இன்னும் அது இருக்கிறது,” என்னும் அவர், “ஆனால் யாரும் தானு கானாவில் இப்போது இல்லை,” என்கிறார். அவர்களது வீடுகளும் உடைமைகளும் நீருக்குள் அடிக்கடி மூழ்கும் நிலை அவரது நினைவில் இருக்கிறது.
90 வருடங்களுக்கு முன் அசாம் மாநிலத்துக்கு வந்ததிலிருந்து பிரம்மபுத்திராவில் இருப்பதற்காகவே நான்கு முறை யாதவக் குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டனர். கடைசியாக 1988-ல் தப்லி சபோரிக்கு இடம்பெயர்ந்தனர். யாதவ் சமூகத்தினர் வாழ்ந்த நான்கு மணல் மேடுகளுக்கு இடையே அதிக தூரம் இல்லை. 2-3 கிலோமீட்டர் தூரம் மட்டும்தான் இருக்கும். தற்போது அவர்கள் வசிக்கும் இடத்தின் பெயரான ‘தப்லி' என்கிற வார்த்தை ‘‘double’ என்கிற ஆங்கில வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த மணல்மேட்டின் பெரிய பரப்பளவை குறிப்பதற்கான வார்த்தை அது.
தப்லியின் எல்லா குடும்பங்களும் சொந்தமாக நிலம் வைத்திருக்கின்றன. அதில் அரிசி, கோதுமை மற்றும் காய்கறிகள் விளைவித்துக் கொள்கின்றனர். முன்னோரின் வழியில் அவர்களும் மாடுகள் வளர்க்கின்றனர். அனைவரும் அசாமிய மொழி பேசுகின்றனர். ஆனால் வீடுகளில் இந்தி பேசுகின்றனர். “எங்களின் உணவு முறை மாறவில்லை,” என்கிறார் சிவ்ஜீ. “ஆனால் எங்களின் உத்தரப்பிரதேச உறவினர்களை விட அதிகமாக அரிசி உண்ணுகிறோம்.”
புதிய புத்தகங்களில் இன்னும் ஈர்க்கப்பட்டிருந்த சிவ்ஜீயின் மாணவர்கள் நிலை மாறவில்லை. “அசாமிய மொழிப் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்கிறார் 11 வயது ராஜீவ் யாதவ். அவரின் பெற்றோர் விவசாயிகள். மாடுகளும் வைத்திருக்கின்றனர். இருவரும் 7ம் வகுப்பிலேயே படிப்பை விட்டுவிட்டனர். “அவர்களை விட அதிகமாக நான் படிப்பேன்,” என்னும் அவர் பிறகு, அசாமின் பிரபல இசைஞரான புபென் ஹசாரிகாவின் ‘அசோம் அமர் ருபாஹி தேஷ்' பாடலை பாடத் துவங்குகிறார். அவரது ஆசிரியர் பெருமையுடன் பார்க்க பார்க்க அவரின் குரல் வலுவடைகிறது.
*****
வருடந்தோறும் வெள்ளம் வரும் நதியின் நடுவே நகரும் மணல் மேடுகளில் தங்கியிருப்பதில் பல சவால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீடும் ஒரு படகு வைத்திருக்கிறார்கள். அவசரத்துக்கு மட்டும் பயன்படுத்தவென இரண்டு மோட்டார் படகுகள் ஊரில் இருக்கின்றன. வீடுகளுக்கு அருகே இருக்கும் கையடி குழாயில் தினசரி தேவைக்கான நீர் எடுக்கப்படுகிறது. வெள்ளக்காலங்களில் மாவட்டத்தின் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் குடிநீர் அளிக்கின்றன. அரசால் ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்கப்பட்ட சூரியத் தகடுகளிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது. ஊருக்கான நியாயவிலைக் கடை அருகாமை மஜுலித் தீவின் கெசெரா கிராமத்தில் இருக்கிறது. அங்கு செல்ல மட்டுமே நான்கு மணி நேரங்கள் பிடிக்கும். படகில் திசாங்முக்குக்கு சென்று, அங்கிருந்து மோட்டார் படகில் மஜுலிக்கு சென்று பிறகு கிராமத்துக்கு நிலத்துக்குள் செல்ல வேண்டும்.
பக்கத்தில் இருக்கும் சுகாதார மையமே 3-4 கிலோமீட்டர் தொலைவில், மஜுலித் தீவிலுள்ள ரதன்பூர் மிரி கிராமத்தில்தான் இருக்கிறது. “மருத்துவ சிக்கல்கள் பிரச்சினையை கொடுக்கிறது,’ என்கிறார் சிவ்ஜீ. “யாரேனும் நோய்வாய்ப்பட்டால், நாங்கள் அவரை மோட்டார் படகில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுவோம். ஆனால் மழைக்காலத்தில் ஆற்றில் செல்வது கடினமாகி விடுகிறது.” அவசரகால படகுகள் தப்லிக்கு வருவதில்லை. சில நேரங்களில் மக்கள் குறைவான நீர் மட்டம் கொண்ட பகுதிகளின் வழியாக ட்ராக்டர்கள் கொண்டு நோயாளிகளை கொண்டு செல்கின்றனர்.
“எங்களுக்கு ஒரு நடுநிலைப் பள்ளி தேவை. இங்கிருக்கும் குழந்தைகள் இங்கு படித்து முடித்துவிட்டால், திசாங்முக்கிலுள்ள பள்ளிக்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது,” என்கிறார் சிவ்ஜீ. “வெள்ளமில்லா சமயங்களில் சென்றுவிடலம். ஆனால் வெள்ளச் சமயங்களில் (ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை) பள்ளிப் படிப்பு அவர்களுக்கு நின்றுபோகிறது,” என்கிறார் சிவ்ஜீ. ஆசிரியர்களும் பள்ளிக்கு கிடைக்கவில்லை. “இப்பள்ளிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நீடிப்பதில்லை. சில நாட்களுக்கு வருகிறார்கள். பிறகு வருவதில்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுகிறது.”
4லிருந்து 11 வயது வரையுள்ள மூன்று குழந்தைகளின் தந்தையான 40 வயது ராம்வச்சன் யாதவ் சொல்கையில், “என் குழந்தைகளை படிக்க (ஆறு கடந்து) அனுப்புவேன். அவர்கள் படித்தால் மட்டும்தான் வேலை கிடைக்கும்,” என்கிறார். ஒரு ஏக்கருக்கும் சற்று அதிகமான நிலத்தில் விவசாயம் பார்க்கிறார் ராம்வச்சன். சுரைக்காய், முள்ளங்கி, கத்தரி, மிளகாய் போன்றவைகளை விற்பனைக்காக விளைவிக்கிறார். 20 மாடுகளும் அவரிடம் இருக்கின்றன. அவற்றின் பாலை விற்பனை செய்கிறார். அவரின் மனைவியான 35 வயது குசுமும் இதே தீவில்தான் வளர்ந்தார். 4ம் வகுப்புக்கு பிறகு படிப்பை அவர் நிறுத்த வேண்டியிருந்தது. அந்த காலத்தில் படிப்புக்காக ஓர் இளம்பெண் தீவைத் தாண்டி செல்வது குறித்து பேசவே முடியாது என்கிறார்.
நதியை நாளொன்றுக்கு இரு முறை கடக்க வேண்டிய சூழல் இருந்தாலும் தயங்காமல் ரஞ்சீத் யாதவ் அவரின் ஆறு வயது மகனை தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார். “பைக்கில் மகனை கொண்டு சென்று திரும்ப அழைத்து வருகிறேன். சில நேரங்களில் சிவசாகருக்கு செல்லும்போது என் சகோதரர் அவனை அழைத்துச் செல்வார்,’ என்கிறார் அவர்.
அவரது சகோதரின் மனைவியான பார்வதி யாதவ் பள்ளிக்கு சென்றதில்லை. ஆனால் அவரின் 16 வயது மகள் சிந்தாமணி திசாங்க்முக்கிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் படிப்பது அவருக்கு சந்தோஷம் தருகிறது. இரண்டு மணி நேரம் பள்ளிக்கு செல்ல ஆகும். ஊடாக ஒரு ஆற்றையும் கடக்க வேண்டும். “யானைகள் இருக்குமென்பதுதான் என் கவலை,” என்கிறார் பார்வதி. அடுத்ததாக பிரதான நிலத்திலுள்ள பள்ளிக்கு செல்ல தயாராக அவரது 12 மற்றும் 11 வயது மகன்கள் சுமனும் ராஜீவும் இருப்பதாக சொல்கிறார் அவர்.
ஆனால் தப்லி சபோரியிலிருந்து சிவசாகர் டவுனுக்கு இடம்பெயர்கிறீர்களா என மாவட்ட கமிஷனர் சமீபத்தில் கேட்டபோது ஒருவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. “இதுதான் எங்கள் வீடு. இதை நாங்கள் விட முடியாது,” என்கிறார் சிவ்ஜீ.
தலைமை ஆசிரியரும் அவரது மனைவி புல்மதியும் குழந்தைகளின் கல்விப்பயணத்தில் பெருமை கொள்கின்றனர். மூத்த மகன் எல்லை பாதுகாப்புப் படையில் இருக்கிறார். 26 வயது ரீடா பட்டதாரி. 25 வயது கீதா முதுகலைப் பட்டதாரி. 23 வயது ராஜேஷ் வாரணாசியின் ஐஐடியில் படிக்கிறார்.
பள்ளி மணி அடிக்கிறது. குழந்தைகள் தேசிய கீதம் பாட வரிசையில் நிற்கின்றனர். யாதவ் பிறகு கேட்டை திறக்கிறார். அவர்கள் மெதுவாக நடந்து பிறகு ஓடுகின்றனர். நாள் முடிந்துவிட்டது. தலைமை ஆசிரியர் இனி சுத்தப்படுத்தி பூட்ட வேண்டும். புதிய கதைப் புத்தகங்களை அடுக்கியபடி அவர், “பிறர் அதிகம் சம்பாதிக்கலாம். நான் ஆசிரியர் பணியில் சம்பாதிப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் என் குடும்பத்தை நடத்த முடிகிறது. முக்கியமாக நான் இந்த வேலையை, சேவையை விரும்பிச் செய்கிறேன். என் கிராமமும், மாவட்டமும் வளரும். அசாமும் முன்னேறும்,” என்கிறார்.
இக்கட்டுரை எழுத உதவிய பிபின் தானே மற்றும் அயங் அறக்கட்டளையின் கிருஷ்ண காந்த் பெகோ ஆகியோருக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்