பாரத் ராவுத் தனக்கு சொந்தமான இடத்தில்  இருந்து நீரை எடுப்பதற்காக  மாதத்திற்கு சுமார் 800 ருபாய் வரை பெட்ரோலுக்காகச் செலவு செய்து வருகிறார். இவரைப் போன்றே ஒஸ்மானாபாத் மாவட்டத்தின்  மரத்வாடா பகுதியில் உள்ள தக்விகி கிராமத்தைச் சார்ந்த பலரும் இவ்வாறே செலவு செய்து வருகின்றனர். அவர்களால் எங்கிருந்தெல்லாம் நீர் எடுத்து வர முடியுமோ அங்கிருந்தெல்லாம் தண்ணீரை எடுத்து வருகின்றனர்.    இதன் காரணமாக தக்விகி கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலிருந்தும் ஒரு உறுப்பினராவது தினமும் இந்த ஒரு வேலையில் சிக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. ஒஸ்மானாபாத் சாலைகளில் பார்க்கக்கூடிய பெரும்பான்மையான வாகனங்கள் நீர் எடுக்கச் செல்லக் கூடிய வாகனமாகவே உள்ளது. மிதி வண்டியில் தொடங்கி, மாட்டு வண்டி, இருசக்கர வாகனம், ஜீப்கள், லாரிகள், வேன்கள் மற்றும் டாங்கர் லாரிகள் வரை இதில் அடங்கும். மேலும்,பெண்கள் தங்கள் தோளிலும் தலையிலும் இடுப்பிலும் குடங்களை சுமந்து செல்கின்றனர். வறட்சியால் பெரும்பாலான மக்கள் இதனைத் தங்கள் உயிர்வாழ்தலுக்காக செய்யவேண்டியுள்ளதை உறுதிப்படுத்துகின்ற  அதேவேளையில், சிலர் இதை தெளிவான லாபத்திற்காகவும் செய்து வருகின்றனர்.

PHOTO • P. Sainath

ஒஸ்மானாபாத் சாலையில் பார்க்கக்கூடிய பெரும்பாலான வாகனங்கள் எங்கிருந்தாவது நீர் எடுத்து வரக்கூடியதாகத் தான் இருக்கிறது

இதுகுறித்து கூறிய பாரத்,”ஆம், எல்லா குடும்பத்தினர் வீட்டிலும் ஒரு நபர் முழுநேரமாக நீர் எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். என்று தெரிவித்தார். இவர் ஐந்தரை ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறுவிவசாயி ஆகும். மேலும்,அவரது குடும்பத்திற்காக இவரே அந்த நீர் எடுத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ளார். “எங்கள் வயலில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிருந்து அவ்வப்போது வரக்கூடிய நீரினை நான் எடுத்து வருகின்றேன். ஆனால், அது எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது”  என்று கூறினார்.  எனவே, அவரது ஹீரோ கோண்டா வண்டியில்  நான்கு கடாஸ்சை(பிளாஸ்டிக் குடங்கள்) கட்டிக்கொண்டு  ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு முறைக்கு 60 லிட்டர் என நீர்  எடுத்து வருகிறார். “எனது ஆழ்துளைக் கிணறு கொடுக்கும் வெறும் குறைவான நீருக்காக நான் அங்கு சென்று வருகிறேன்”. என்று கூறிய அவர், ”பயிர்களும் மடிந்து வருகிறது” என்று குறிப்பிட்டார். இதேவேளையில், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 இருசக்கர வாகனங்கள் இந்தப் பணியில் எந்நேரமும் சுற்றித் திரிகின்றன.

PHOTO • P. Sainath

தக்விகி கிராமத்தைச் சார்ந்த பாரத் ராவுத் அவரது ஹீரோ ஹோண்டா வண்டியில் ‘கடாஸ்’(பிளாஸ்டிக் குடம்) கட்டிக்கொண்டு அவரது வீட்டிற்காக நீர் எடுத்து வருகிறார்

ஒவ்வொரு முறையும் நீர் எடுப்பதற்காக ஏறத்தாழ ஆறு கிலோமீட்டர் தூரம் பாரத் பயணித்து வருகிறார். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 20 கிலோமீட்டர் தூரம் அல்லது ஒரு வருடத்திற்கு 600 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த ஒரு வேலைக்காக மட்டும் ஒரு மாதத்திற்கு 11 லிட்டர் பெட்ரோல் அல்லது ஏறத்தாழ 800 ருபாய் செலவாகிறது. அரசு நிர்வகித்து வரும் நீர் ஆதாரத்தை ஆய்வு மேற்கொண்ட அஜய் நிதூர், இதுகுறித்து கூறுகையில், “நீர் வரக்கூடிய நேரம் என்பது ஒவ்வொரு வாரமும் மாறக்கூடியது. இந்த வாரம் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மின்சாரம் இருக்கும். எனவே அந்த நேரத்தில் தண்ணீர் வரும். அடுத்த வாரம் நள்ளிரவு முதல் காலை 10 மணி வரை தண்ணீர் வரும்”. என்று குறிப்பிட்டார். அவர் தண்ணீர் எடுத்து வருவதற்காக இரண்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் வரை ஏழு குடங்களைக் கட்டிக்கொண்டு மிதிவண்டியில் சென்று வருகிறார். “அது உண்மையில் தோள்பட்டைகளைக் காயப்படுத்துகிறது” என்று கூறிய நிதூர், இதன் காரணமாக இரண்டு முறை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மேலும், இதன் காரணமாக நிலமற்ற தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளிகளோடு சிக்கலும் எழுந்துள்ளது. ”சில நாட்கள் நீங்கள் வேலைக்கு தாமதமாக வருவீர்கள். சில நாட்கள் நீங்கள் வேலையை முழுமையாக முடிக்க மாட்டீர்கள்”.என்று கூறிய ஜாம்பார்.  “இது மோசமானது. இது விலங்குகளுக்கு உணவளிப்பது போன்ற வேலைகளைத் தாமதப்படுத்துகிறது. இது இப்போது ஐந்து மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது” என்று அந்த காலைப் பொழுதிலேயே ஆறு குடங்களை மிதிவண்டியில் கட்டிக்கொண்டு இரண்டுமுறை தண்ணீர் எடுத்து வந்த அவர் கூறினார்.

இதேவேளையில் ,இதுபோன்ற அவர்களின் முயற்சிகள் தக்விகி கிராமத்தைச் சார்ந்தப் பெண்களின் தண்ணீர் சேகரிக்கும்  முயற்சிகளால் மறைந்து விடும் அளவிற்கு உள்ளது. தினத்தோறும் அவர்கள் இரண்டு அல்லது மூன்று குடங்களை ஏந்தியபடி செருப்பணியாது வெறுங்காலுடன்  பல முறை  தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்தத் தொலைவு ஆண்கள் இருசக்கர வாகனங்களால் தண்ணீர் சேகரிக்கும் தொலைவை விட மிகவும் அதிகமாக உள்ளது. அவர்கள் ஒருநாளைக்கு சுமார் 15-20 கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் எடுப்பதற்காக பயணிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தண்ணீர் எடுப்பதற்காகக் கூட்டமாக கூடியிருந்த இடத்தில் இதுகுறித்து  விளக்கிய அவர்கள்    “ஒருநாளைக்கு 8-10 மணி நேரம் எடுக்கக்கூடிய வேலை இது” என்றும், அவர்கள் தண்ணீரினை எவ்வாறு மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்தனர். “முதலில் அந்த நீரினைக் குளிப்பதற்காகப் நாங்கள் பயன்படுத்துவோம். பின்னர் அதிலேயே  துணி துவைப்போம். இறுதியாக அந்த நீரினையே பாத்திரம் கழுவுவதற்காகவும்  பயன்படுத்துவோம்” என்று விளக்கி கூறினர். இந்நிலையில், இந்தச் சூழலின் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தின் பலர் நோய் வாய்ப்படும் நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

PHOTO • P. Sainath

தக்விகி கிராமத்தைப் பெண்கள் நீரினை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வரும் வழக்கம் குறித்து விளக்கிய போது: “முதலில் அந்த நீரினைக் குளிப்பதற்காகப் நாங்கள் பயன்படுத்துவோம். பின்னர் அதனையே  துணிதுவைப்பதற்காகப் பயன்படுத்துவோம். இறுதியாக அந்த நீரினையே பாத்திரம் கழுவுவதற்காகப் பயன்படுத்துவோம்” என்றனர்

புல்வந்திபாய் தேபே போன்ற பெண்களும் இந்த நீர் சிக்கலால் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர் தலித் என்பதால் நீர் கிடைக்கக்கூடிய  பல  இடங்களில் அவரை ஒதுக்கியே வைத்துள்ளனர். ஏன் அவர் நீர் எடுத்துவரும் அரசுக்குச் சொந்தமான கிணற்றிலும் கூட  “நான் எப்போதும் வரிசையின் கடைசியிலேயே இருப்பேன்” என தேபே அவர் நிலைகுறித்து குறிப்பிட்டார்.

இந்த வறட்சியானது அவர்கள் வளர்க்கும் கால்நடைகளையும் கூட பாதித்துள்ளது. குறைவானத் தண்ணீர் மற்றும் குறைவானத் தீவனத்துடன், “என்னைப் போல் பால் விற்பனை செய்பவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். என் பசுமாடுகள் பாதிப்புக்கு உள்ளகியுள்ளதால் நானும் பாதிப்புக்கு உள்ளகியுள்ளேன். பால் விற்பதின் வழியாக நாளொன்றுக்கு 300 ருபாய் வருமானம் ஈட்டி வந்தேன்”. என்று கூறிய சுரேஷ் வேத் பதக், மேற்கொண்டு கூறுகையில், “தற்போது வருமானம் சரிந்துள்ளது. முன்பை விட மூன்றில் ஒருபங்கு தான் வருமானம் ஈட்டி வருகிறேன்” என்று குறிப்பிட்டார்.

ஒஸ்மானபாத் மாவட்டத்தில் எழுந்துள்ள  பிரச்சனைகளின் நுண்ணிய வடிவம் தான் தக்விகி கிராமம். இந்த கிராமம் 4,000க்கும் குறைவான மக்கள் தொகையே கொண்டுள்ளது. ஆனால், பாசனத்தேவைகளுக்காக ஏறத்தாழ 1500 ஆழ்துளைக் கிணறுகள் இருக்கக்கூடும். மேலும், இந்த வறட்சி பாதித்த இந்த  பகுதியில் மிகமுக்கியமாக விளையக்கூடிய பயிர் கரும்பாகும். “இப்போது துளையிடப்படக்கூடிய ஆழ்துளைக் கிணறுகள் 550 அடி மற்றும் அதற்கும் அப்பாலும் செல்கின்றன” என்றார் பாரத் ராவுத். இதுகுறித்து தெரிவித்த ஒஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர் கே.எம்.நாகர்கோஜே ,”எங்கள் சராசரி மழைப்பொழிவான 767 மில்லி மீட்டருக்கும் மாறாக கடந்தப் பருவத்தில் குறைந்தபட்சமாக 397 மில்லி மீட்டர் மழையே பொழிந்தது. சில இடங்களில் 400 மில்லி மீட்டர் அளவு மழையே போதுமானதாகும். ஆனாலும்,  800 மில்லி மீட்டர் மழைப்பொழிவு என்பது மோசமான மழைப்பொழிவல்ல”. என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், உங்கள் கரும்பு உற்பத்தி என்பது 26 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள போது, ஒருவேளை 800 மில்லி மீட்டர் மழைப்பொழிந்தால் கூட போதுமானதாக இருக்காது. ஏனென்றால், ஒரு ஏக்கரில் கரும்பு விளைய தோராயமாக 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. (ஏழரை ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு போதுமான நீர்) மேலும், இந்தப் பகுதியில் சொட்டு நீர் பாசனமுறையில் விவசாயம் செய்து நீரை சேமிக்கும் விவசாயிகள் மிகக்குறைவு, தக்விகி கிராமத்தில் ஒரு சிலரே அவ்வாறு செய்து வருகின்றனர்

ஒஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர் நாகர்கோஜே கடுமையான இடரைக் கையாளவேண்டியுள்ளது. நிலத்தடி நீர் துறையுடன் தொடர்புக்கொண்ட அவருக்கு இதுகுறித்து தெரிந்தே இருக்கும். அந்த மாவட்டத்தில்  உள்ள பெரும்பான்மையான பெரிய மற்றும் நடுத்தர நீர் திட்டங்களில் உள்ள நீரின் அளவானது முழுவதும் வற்றிவிடும் நிலையிலேயே உள்ளது. அந்த நீர் திட்டப்பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றப்படும் அல்லது சேமித்து வைக்கப்படும் அளவைவிட மிகக்குறைவாகவே உள்ளது. இந்நிலையில், அது மீன்கள் மட்டுமே உயிர்வாழ போதுமானதாக இருந்துள்ளது. இதேவேளையில், அந்த மாவட்டத்தில் உள்ள சிறிய  நீர் திட்டங்களின் வழியாக சேமித்து வைக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 3.45 மில்லியன் மெட்ரிக் கன அடி நீர் மட்டுமே மிச்சமுள்ளது. ஆனால், 17 லட்சம் மக்கட்தொகை கொண்ட அந்த மாவட்டத்திற்கு இது நெடுங்காலத்திற்கு உதவாது. மேலும், தற்போது 169 தண்ணீர் லாரிகள் இரண்டு நகரங்கள் மற்றும் 78 கிராமங்களில் தண்ணீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், அம்மாவட்டத்தின் பாசனத்தேவைக்காக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

“இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிலத்தடி நீர்மட்ட அளவானது ஏறத்தாழ 10.75 மீட்டராக இருந்தது. இது இந்தப் பகுதியின் ஐந்தாண்டு சராசரியை விட 5 மீட்டரை விட குறைவாகும். இன்னும் சிலபகுதிகளில் நிலத்தடி நீர்மட்ட அளவு இதைவிடக் குறைவாகவும் இருக்கலாம்”. என்று ஒஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர் நாகர்கோஜே கூறினார். இந்தாண்டு நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மாவட்டத்தின் திறன் உள்ளது என அவர் நம்பிக்கைக் கொண்டுள்ளார். ஆனால், தற்போது விளைவிக்கப்பட்டுள்ள பயிர் வகை என்பது அடுத்த மீட்புத் திட்டங்களை தடுக்கக்கூடியதாகவே உள்ளது.

இதேவேளையில், தக்விகி கிராமத்து மக்களின் வருவாய் குறைந்து கடன் அதிகரித்துள்ளது. தற்போது சாஹுகரி (கடன் வட்டி) விகிதம் ஒரு மாதத்திற்கு நூறு ருபாய்க்கு 5 லிருந்து 10 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து விளக்கினார் சந்தோஷ் யாதவ் (ஆண்டுக்கு 60 லிருந்து 120 விழுக்காடு).  அவரது குடும்பம் குழாய் பதிப்பதற்காக மட்டுமே சுமார் 10 லட்சம் ருபாய் செலவிட்டுள்ளார்கள். ஆனால், அவை கோடைக்காலத்திற்கு நெருங்குவதற்கு முன்னமே சொட்டு நீர் இல்லாது வறண்டுள்ளது. இதுகுறித்து கூறிய யாதவ்,”இது குறித்து யார் சிந்திப்பார்கள். இன்று கவனம் செலுத்துவதிலேயே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒரு நாளில் ஒரு சமயத்தில் ஒரு வேளையில் மட்டுமே கவனம் செலுத்த இயலும்” என்று கூறினார்.


PHOTO • P. Sainath

ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் ஒவ்வொரு தெருக்களிலும் நீர் சேகரிப்பதற்காக எல்லா நேரமும் மக்கள் அலைந்துக் கொண்டே இருக்கின்றனர்

இந்த வறட்சி பலரை தங்கள் உயிரைக்காத்துக் கொள்ள போராட வேண்டிய சூழலில் தள்ளியுள்ள அதேவேளையில், வறட்சி காரணமாக ஏற்படும் வணிகத்திற்கும் வாய்ப்பளித்துள்ளது. இதை எங்கும் கண்கூடாகவே காண முடியும். “நாங்கள் சொந்தமாக ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களுக்கும் அல்லது பிற நீர் ஆதரங்களிலிருந்து நீர் வழங்குபவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து அவநம்பிக்கையோடு முழு நாளையும் செலவழிக்கிறோம்” என்றார், சமூக செயல்பட்டாளரான பாரதி தவாலே. மேற்கொண்டு கூறுகையில், “நான் நீரை விற்று வரக்கூடிய ஒருவரிடம் ஒரு உடன்படிக்கை செய்துள்ளேன். அவர் 500 லிட்டர் குடிநீரை 120 ரூபாய்க்கு விற்று வருகிறார். ஆனால், எங்களுக்கு  குடிநீரை வழங்க வரும் வழியில் ஒருவர் 200 ருபாய் அளிப்பதாகக் கூறிய உடன் அங்கேயே விற்றுவிட்டார். பின்னர், பலமுறை அழைத்ததற்கு பிறகே அடுத்த நாள் இரவு ஒன்பது மணிக்கு எனக்கு தேவையான நீரை அளித்தார்”. என்றார். இந்த நிகழ்வுக்குப் பின்னர் பாரதி தனது அண்டைவீட்டாரிடமிருந்து நீரினை வாங்கத்தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், ஒஸ்மானபாத் மாவட்டத்தில் நடக்கும் இந்த நீரைச் சார்ந்த  வணிகமானது இருபத்து நான்கு மணிநேரமும் வேகவேகமாக நடந்துக் கொண்டிருக்கும் நடந்தேறியுள்ளது. வறட்சியானது இதன் விலையும் கணிசமாக உயரக்கூடும். இதேவேளையில், பொதுமக்களுக்கு 720 ஆழ்துளைக்கிணறுகளின் வழியாக அரசு இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு கிணற்றின் உரிமையாளர்களுக்கும் மாதத்திற்கு 12,000 ரூபாய் அரசு வழங்குகிறது .  ஆயினும், அதிக தொலைவு மற்றும் பெரும் மக்கள் கூட்டம் ஆகியவை அரசின் இந்த பணியை அச்சுறுத்தியுள்ளது. அதாவது தனியாரின் விதிக்கு மக்கள் உட்படும் வகையில்  வழிகோலியுள்ளது. அவர்களுடன் தண்ணீருக்காக நீங்கள் விலைபேரத்தில் ஈடுபட வேண்டும். தண்ணீரின் விலையானது  500 லிட்டருக்கு 2௦௦க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒருவேளை, நீங்கள் குறைந்த அளவு தண்ணீர் வாங்கினால், விலையை கணிசமாக உயரக்கூடும். மேலும், இது இனிவரும் நாட்களில் இன்னும் மோசமாக மாறக்கூடும். அனைத்துக் காலனியிலும் யாரோ ஒருவரிடம் தற்போது ஆழ்துளைக் கிணறு உள்ளது அல்லது பிற நீர் ஆதாரமுள்ளது. இது வறட்சியை ஓரளவு சமாளிக்கும் வகையில் பால் வார்க்கும் வகையில் இருந்துள்ளது. என்றாலும், இங்கு தண்ணீர் பணம் போல் ஓடுகிறது.

இந்தக் கட்டுரை முதன்முதலாக மார்ச் 6, 2013 அன்று தி இந்துவில் வெளியானது.

மேலும் வாசிக்க: டாங்கர்களும், தண்ணீரின் பொருளாதாரமும் .

இந்தக் கட்டுரை ஒரு தொடரின் ஒரு பகுதியாகும். இந்தக் தொடருக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு பி. சாய்நாத் உலக ஊடக உச்சி மாநாட்டில் உலகளாவிய சிறப்பு விருதினைப் பெற்றார்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்.

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

کے ذریعہ دیگر اسٹوریز Pradeep Elangovan