இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத இளம் கம்ரி.
“அவன் மீண்டும் நலமடைய நாளாகும்,” என்கிறார் கம்மாபாய் லக்காபாய் ரபாரி.
தன் மந்தையில் இருக்கும் ஓர் இளம் ஆண் ஒட்டகத்தைப் பற்றி அந்த மேய்ப்பர் இப்படி கூறுகிறார்.
மகாராஷ்டிராவின் அமராவதியில் 2022 ஜனவரி மாதம் உள்ளூர் காவல்துறையினரால் 58 ஒட்டகங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட அசாதாரண சம்பவத்தை கம்மாபாய் விவரிக்கிறார். பிப்ரவரி மாதம் ஒட்டகங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட்ட போதிலும், அவை நல்ல உடல்நிலையில் இல்லை.
அடைக்கப்பட்ட இடத்தில் அவற்றுக்கு முறையான உணவு கொடுக்கப்படவில்லை என்றும் மேய்ப்பர்கள் கூறுகின்றனர். பசுக்களுக்கு உணவளிக்கும் கவுரக்ஷன் கேந்திரா தொழுவத்தில் அவை கட்டப்பட்டன. “அவை பொதுவாக திறந்தவெளியில் மேய்ந்து பெரிய மரங்களின் இலைகளை உண்பவை. அவை கால்நடை தீவனங்களை உண்ணாது,” என்கிறார் கம்மாபாய்.
ஒரு மாதத்திற்கு மேலாக கட்டாயப்படுத்தி சோயாபீன், பயிர் எச்சங்களை உணவாக அளித்ததால் ஒட்டகங்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளன. 2022 பிப்ரவரி மத்தியில் ஐந்து மேய்ப்பர்களிடம் ஒட்டகங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டபோது அவற்றின் இறப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியது. ஜூலை மாதத்திற்குள் 24 ஒட்டகங்கள் இறந்துவிட்டன.
திடீரென பிரித்து அடைத்து வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியே இதற்கு காரணம் என உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கம்மாபாய் உள்ளிட்ட நான்கு உரிமையாளர்கள் ரபாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் ஃபக்கிராணிஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் குஜராத்தின் கச்ச்-புஜ் மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய ஒட்டகம் மேய்ப்பர்கள்.
இன்னும் கொடுமை முடியவில்லை. நிர்க்கதியாக நின்ற மேய்ப்பர்களிடம், கேந்திரம் ஒட்டகங்களுக்கு அளித்த பொருந்தா உணவிற்காக ஒவ்வொரு ஒட்டகத்திற்கும் ஒரு நாளுக்கு ரூ.350 என பணம் கேட்கப்பட்டது. கவுரக்ஷன் சன்ஸ்தான் கணக்கின்படி ரூ.4 லட்சம் கட்டணத் தொகை வந்துள்ளது. தன்னார்வ அமைப்பு என்று கூறிக்கொள்ளும் அந்த கால்நடை தொழுவம், ஒட்டகங்களை கவனித்துக் கொள்ள ரபாரிகளிடம் கட்டணம் கேட்டுள்ளது.
“விதர்பா முழுவதும் இருக்கும் எங்கள் மக்களிடமிருந்து பணத்தை சேகரிக்க இரண்டு நாள் தேவைப்பட்டது,” என்று சரக்கு போக்குவரத்திற்கு ஒட்டகங்களை பயன்படுத்தி வரும் முன்னாள் மேய்ப்பர் ஜகாரா ரபாரி தெரிவித்தார். நாக்பூர் மாவட்டம் சிர்சி கிராமத்தில் உள்ள டேராவில் (குடியிருப்பு) அவர் வசிக்கிறார். இங்கிருந்து ஒட்டகங்களைப் பெறவிருந்த 20 குடும்பங்கள் மத்திய இந்தியா முழுவதும் அவற்றை கொண்டு செல்கின்றன.
*****
கடந்தாண்டு பிராணிகள் உரிமை ஆர்வலர் என்று கூறிக்கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஐந்து மேய்ப்பர்களுக்கும் எதிராக டலேகான் தஷாசர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். ஹைதரபாத்தில் உள்ள இறைச்சிக் கூடங்களுக்கு அந்த ஒட்டகங்கள் கொண்டு செல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அச்சமயம் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் ரபாரிகள் முகாமிட்டிருந்தனர். அமராவதி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டிற்குட்பட்ட நிம்கவுஹான் கிராமத்தில் வைத்து ஐந்து மேய்ப்பர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பிரிவு 11 (1)(d) பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் , 1960
https://www.indiacode.nic.in/show-data?actid=AC_CEN_16_18_00001_196059_1517807317734§ionId=4032§ionno=11&orderno=12
-ன் கீழ் அமராவதியில் உள்ள கவுரக்ஷக்கேந்திராவிற்கு ஒட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.(படிக்க: சிறைப்படுத்தப்பட்ட கச்ச் ஒட்டகங்கள் )
உரிமையாளர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் உடனடியாக பிணை வழங்கினாலும், விலங்குகளை மீட்க அவர்கள் மாவட்ட நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. ஒட்டகங்களை காவலில் வைக்க கோரிய கவுரக்ஷக் சன்ஸ்தா உள்ளிட்ட மூன்று விலங்குகள் உரிமைகள் அமைப்புகளின் மனுவை 2022 ஜனவரி 25ஆம் தேதி அமராவதி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த ஐந்து ரபாரி மேய்ப்பர்களின் விண்ணப்பத்தை மட்டுமே அது ஏற்றது.
பராமரிப்பிற்கு கவுரக்ஷன் சன்ஸ்தா நிர்ணயித்த ‘சரியான கட்டணத்தை’ செலுத்துமாறு மேய்ப்பர்களிடம் கூறப்பட்டது. 2022 பிப்ரவரியில், அமராவதியின் மாவட்ட, கீழமை நீதிமன்றம் ஒருநாளுக்கு ஒரு பிராணிக்கு ரூ.200 என கட்டணம் நிர்ணயித்தது.
ஏற்கனவே அதிக கட்டணம் செலுத்திவிட்டதால், கூடுதல் பணமின்றி தவித்த ரபாரிகளுக்கு இந்த உத்தரவு நிம்மதி அளித்தது.
“வழக்கறிஞர் கட்டணம், நீதிமன்ற செலவு, குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து மேய்ப்பர்களுக்கு என ரூ.10 லட்சம் நாங்கள் செலவிட்டோம்,” என்கிறார் ஜகாரா ரபாரி.
2022 பிப்ரவரி மத்தியில் ஒட்டகங்கள் இறுதியாக அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. அவை ஊட்டச்சத்தின்றி, சீக்கு கொண்டிருந்ததை அவர்கள் கவனித்தனர். அமராவதி நகரிலிருந்து புறநகருக்கு வந்த சில மணி நேரங்களில் அவற்றில் இரண்டு ஒட்டகங்கள் இறந்துவிட்டன.
அடுத்த 3-4 மாதங்களில் மேலும் பல ஒட்டகங்கள் இறந்தன. “மார்ச் முதல் ஏப்ரல் வரை மோசமான உடல்நிலையில் இருந்த ஒட்டகங்களை நீண்ட தூரம் எங்களால் அழைத்துச் செல்ல முடியவில்லை,” என்கிறார் சத்திஸ்கரின் பலோடா மாவட்ட முகாமிலிருந்து பாரியிடம் தொலைபேசியில் பேசிய சாஜன் ரபாரி. “எங்கள் டேராக்களுக்கு செல்லும் வழிகளில் கோடை காலம் என்பதால் பச்சிலைகளும் அவற்றிற்கு கிடைக்கவில்லை. மழைக்காலம் வந்தபோது உடல் பலவீனமடைந்து சீக்கு வந்து ஒவ்வொன்றாக இறந்தன,” என்றார். அவர் திருப்பிப் பெற்ற நான்கு ஒட்டகங்களில் இரண்டு இறந்துவிட்டன.
சத்திஸ்கர், ஆந்திர பிரதேசங்களில் ரபாரி சமூகத்திற்கு சொந்தமான பெரும்பாலான ஒட்டகங்கள் பாதி வழியில் அல்லது குடியிருப்பு முகாம்களுக்கு வந்தடைந்தவுடன் இறந்துவிட்டன.
உயிர் பிழைத்த 34 ஒட்டகங்கள் சிறைவைக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.
*****
கம்ரி உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்.
இரண்டு வயதாகும் அவன் முழுமையாக தேறும் வரை போக்குவரத்திற்கு பயன்படுத்த மாட்டேன் என்கிறார் கம்மாபாய்.
2023 ஜனவரியில் பருத்திக் காட்டை சுத்தம் செய்து அமைக்கப்பட்ட கம்மாபாய் முகாமில் கல் எறியும் தூரத்தில் இருந்த மரத்தில் மற்ற ஒட்டகங்களுடன் அவனும் கட்டப்பட்டுள்ளான். கம்ரிக்கு இலந்தை மர இலைகள் மிகவும் பிடிக்கிறது. இப்போது சீசனில் உள்ள இலந்தைகளையும் அவன் உண்கிறான்.
மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டம் ஹிங்கன்காட் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நாக்பூர்-அதிலாபாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறிய கிராமமான வாணி அருகே ரபாரி மேய்ப்பரும், அவரது கால்நடைகளும் தங்கியுள்ளன. ஆடு, செம்மறியாடு, ஒட்டக மந்தைகளுடன் இச்சமூகத்தினர் மேற்கு, மத்திய இந்தியா எங்கும் செல்கின்றனர்.
2022 துயர சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒட்டகங்கள் அவற்றின் உரிமையாளர்களால் கவனமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை கண்டிப்பாக அதன் முழு ஆயுட்காலமான 18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர் வாழும் என்று கம்மாபாய் நம்புகிறார்.
“துயரத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு முடிவில்லை, ” என்கிறார் அச்சமூகத்தின் சார்பாக விதர்பாவில் சட்ட போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ரபாரிகளின் தலைவரும், கம்மாவின் மூத்த சகோதரருமான மஷ்ருரபாரி. “ஹம்கோ பரேஷன் கர்கே இன்கோ கியா மிலா [எங்களை தொந்தரவு செய்வதில் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது]?” என்று அவர் வியக்கிறார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் இழப்பீடு கோரவும் அவர்கள் இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
அமராவதி கீழமை நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. “அந்த வழக்கை நாங்கள் எதிர்கொள்வோம்,” என்கிறார் மஷ்ரு ரபாரி.
“எங்களை அவமதிக்கிறார்கள்.”
தமிழில்: சவிதா