நான்கு வருடத்திற்கு ஒரு முறை, கோண்டு பழங்குடியின மக்கள், வெகுதூரம் பயணித்து, சத்திஸ்கர் மாநிலம் கங்கெர் மாவட்டத்தின் அந்தகர்க் தாலுக்காவில் உள்ள, செம்மர்கான் கிராமத்தை நோக்கி பயணிக்கின்றனர். இவர்கள் இந்த மாவட்டத்தின் அண்மையில் உள்ள கொண்டகான், நாராயண்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்கள் மூதாதையர்களைக் கொண்டாடும் ஜாத்ராவிற்காக(விழா) செம்மர்கனை நோக்கி வருகின்றனர். கோண்டு பழங்குடியினர் தங்கள் சமுகத்தைச் சார்ந்த முன்னோர்கள் இறந்த பின்னரும் வாழ்வதாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்களை கடவுளராகவும், பெண் தெய்வங்களாகவும் வழிபடுகின்றனர். அவர்கள் இந்த விழாவிற்கு வருகை தருவதாகவும் கருதுகின்றனர். நான் கடந்த மார்ச் 2018 ஆம் ஆண்டு இந்த விழாவில் பங்கேற்றேன்.
இந்த ‘தெய்வங்களுக்கானக் கூடுகை’ பகந்தி பரி குபார் லிங்கோ கர்சத் ஜாத்ரா என்று அழைக்கப்படுகிறது. மேலும், மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா சுமார் 20,000 பேரை ஈர்க்கிறது. இந்த விழாவானது கோண்டு வழக்காற்றுக் கதைகளில் கூறப்படும், முதியவரான பரி குபார் லிங்கோவின் பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் கோண்டுக்களின் தனித்துவமான அடையாளமாக விளங்கும், கோண்டுக்களின் பண்பாடு மற்றும் இசை மரபை கோண்டு உள்ள பலருக்கும் பரப்பியவர் என்பதால் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார்.
“முன்பு, இந்த ஜாத்ரா(விழா) 12 வருடங்களுக்கு ஒரு முறை நடந்தது. பின் ஒன்பது வருடங்களுக்கு ஒரு முறை, பின்னர் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு, தற்போது நான்கு வருடங்களுக்கு ஒரு முறைக் கொண்டாப்பட்டு வருகிறது,” என்று இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், கொண்டகான் மாவட்டத்திலுள்ள கேஹலேமூர்பெத் கிராமத்தைச் சார்ந்த கோண்டு பழங்குடியான பிஷ்ணுதேவ் பட்டா கூறினார். மேலும், “முன்பு குறைவான நபர்களே பங்கேற்றதால், குறைந்த வெளிச்சமே கொண்டிருந்தது. தற்போது, மிகுந்த வீரியத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனைக் குறித்து படித்துவிட்டு, கேட்டுவிட்டு நிறைய பேர் வருகிறார்கள்” என்றார். அதுமட்டுமின்றி, தொலைபேசி, இருசக்கர வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் இந்த இடத்தை அடைய முடிவதால் அவர்கள் மூலமாக இந்த விழாவைப் பற்றி பலருக்கு தெரிய வந்ததும், இதனை பிரபலமான விழாவாக மாற்றியுள்ளது என்றார்.
இந்த விழாவில் மக்கள் என்ன செய்வார்கள் என்று நான் பிஷ்ணுதேவ்விடம் கேட்ட போது, அவர், “கோயாக்களில் (இது இப்பகுதியில் பாரம்பரியமாக வாழுபவர்களைக் குறிக்கிறது, ஆனால், கோண்டு, முரியா, கோயா ஆகியோர்கள் ஒரே ஆதிவாசிக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் முறையே பாஸ்டர், தெலுங்கானா, ஆந்திர மாநிலம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்.) மொத்தமுள்ள 750 கோத்ராகளில்(குடிகளில்), சுமார் 72 கோத்ராக்கள் பாஸ்டரில் உள்ளனர். இந்த குடியைச் சேர்ந்த மக்கள், மண்டகு பென்களை(தெய்வங்களை) அவர்களோடு எடுத்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் சந்திக்கின்றனர்.” என்றார் அவர். (கோத்ராக்கள்(குடிகள்) அவர்களது குல அடையாளத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது ஆடு,புலி, பாம்பு மற்றும் ஆமை போன்ற பல விலங்குகளையும், உயிர்களையும் குறியீடுகளாகக் கொண்டதன் அடிப்படையில் ஆனது. கோண்டுக்கள் தங்கள் குலக்குறியீட்டை வணங்கவும், பாதுகாக்க உதவவும் செய்கின்றனர்).
பென்கள் யார்? என கங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த, கோண்டு இனத்தைச் சார்ந்த சமூகச்செயல்பாட்டாளரான கேஷவ் சோரி கூறுகையில், ”பென்கள் எங்கள் முன்னோர்கள், எங்களைப் பொறுத்தவரை, எங்களிடம் இருந்து இல்லாமல் போன மூத்தவர்கள், இன்னும் இறக்கவில்லை(ஸ்வர்கியா); மாறாக, அவர்கள் பென்களாக(தெய்வங்களாக) மாறிவிடுகிறார்கள். அவர்கள் எங்களோடு இப்போதும் இருப்பதாக நாங்கள் நம்பி வழிபடுகிறோம். மேலும், நாங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பென்களையும் சந்திக்கிறோம். கோண்டுகள் அவர்களது பென்களுடன் கூடுகிறார்கள். எல்லாருடனும் பேசுகிறார்கள், கொண்டாடுகிறார்கள்.” என்றார். இவர் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக பணியாற்றி வரும் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த ஜாத்ராவின் போது, பென்கள் அதாவது ஆண் தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்கள், ஆடுவதாகவும், அழுவதாகவும், ஒருவரை ஒருவர் தழுவுவதாகவும் நம்பப்படுகிறது. மக்கள் தங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கு வருகிறார்கள், மேலும் அவர்கள்(பென்கள்) தீர்வுகளை வழங்குகின்றார்கள். பழங்குடியினர் சிலர் பென்களுக்கு மேரிகோல்ட் பிஸ்கட்டினால் ஆன மாலைகளைச் சூட்டுகின்றனர். ஆனால், பென்களுக்கு பூக்கள் பிடிக்கும் என்று என்னிடம் கூறப்பட்டது. அவையே ஜாத்ராவில் அதிகம் விற்பனையாகிறது.
இந்நிலையில், கங்கர் மாவட்டத்தின் கோட்டியா கிராமத்தைச் சார்ந்த பூசாரி, தியோசிங் குரேட்டி கூறுகையில், “நாங்கள் அங்காவை (தெய்வம்) சுமந்து வந்து, லிங்கோ டோக்ராவிற்கு( டோக்ரா மூத்தவர், தியோ அல்லது தெய்வம் என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாக அன்பின் மிகுதியால் பயன்படுத்தப்படுகிறது) எங்களது சேவைகளைச் செய்வோம். அவர்களுக்கு மலர்கள், சுபாரி,லாலி மற்றும் லிம்போவையும் [வெற்றிலை,சேமியா மற்றும் எலுமிச்சை]; பன்றி மற்றும் ஆட்டையும் கூட பலி கொடுக்கின்றோம்(அவர்களுக்கு)”என்றார் அவர்.
முன்பு பாரம்பரியமாக அங்காவை மரப்பல்லக்குகளில் சுமந்தபடி, வேண்டுதல் பொருட்களான பூக்கள்,கோழிகள் மற்றும் ஆட்டினை எல்லாம் உடன் எடுத்துக்கொண்டு, வெகு தொலைவில் இருந்து இரவு முழுவதும் நடந்து மக்கள் இத்திருவிழாவிற்கு வந்தடைந்தனர். ஆனால், இந்த ஆண்டு, சில வாகனங்களில் சிலர் அங்காகளைக் கொண்டு வந்ததையும் நான் கவனித்தேன் - இது ஒரு புதிய வளர்ச்சியாகத் தெரிகிறது, என விழாவிற்குச் சென்ற கேசவ் சோரி கூறினார்.
இந்நிலையில், அங்காவை(தெய்வம்) போலீரோ வாகனத்தில் எடுத்து வந்த,சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரான ஜே.ஆர் மாண்டவி கூறுகையில்,”நான் கொண்டகான் பகுதியில் இருந்து வருகிறேன். எங்கள் தியோ, கங்கர் மாவட்டத்தின் தெல்வாத் கிராமத்தில் உள்ளது. அங்காவை எங்கள் தோள்களில் சுமந்துக் கொண்டு கால்நடையாக நடந்து வருவோம். ஆனால், எங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறைந்ததில் இருந்து, இவ்வளவு தூரத்தைக் கடப்பது மிகவும் கடினமாக உள்ளது. [சுமார் 80 கிலோமீட்டர்]. எனவே, அங்காவிடம் அனுமதி கேட்டோம். அங்கா உதும் குமாரி (எல்லா அங்காவும் லியோ தியோவுக்கு சொந்தக்காரர்கள்) அனுமதி கொடுத்ததும், நாங்கள் அவரை வாகனத்தில் இங்கு கொண்டு வந்தோம்.” என்றார்.
இதேவேளையில், இந்த ஜாத்ராவிற்கு அங்காவை தோளில் சுமந்து வந்த, கங்கர் மாவட்டத்தின் டோமஹரா கிராமத்தைச் சார்ந்த மைத்தூரம் குரேதி, அது குறித்து கூறுகையில்,” இது எங்களின் முன்னோர்கள் வாழ்ந்த இடம். எங்களோடு எங்களின் மூத்த தாயையையும் கூட்டி வருகிறோம்;அவர் லிங்கோ தியோவின் உறவுக்காரர். அவர் எங்களெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறாரோ (அடுத்த தெய்வங்களைச் சந்திக்க)அந்த இடங்களுக்கும் மற்றும் மற்றவர்களை தன்னை சந்திப்பதற்கு அழைப்பதற்காகவும் கூட செல்கிறார்.” என்றார்.
லிங்கோ வாழும் இடமாக கருதப்படும், புனிதமான திருவிழா இடத்திற்குள் நுழைவதற்கு முன்னர், விழாவிற்கு வருகை தரும் குடும்பங்கள் மரத்தின் கீழ் இளைப்பாருகின்றனர். மேலும், அரிசி, காய்கறிகள், கோழிக்கறி மற்றும் இதர பொருட்களை விறகடுப்பில் சமைத்து உண்கின்றனர். வேகவைத்த ராகி(திணை) நீரை குடிக்கின்றனர். இந்நிலையில், இவர்களில் ஒருவரான கங்கர் மாவட்டத்தின் கோலியாரி கிராமத்தைச் சேர்ந்த காஸ்சு மாண்டவி கூறுகையில்,” நாங்கள் மூத் டோக்ராவை கொண்டு வருகிறோம், இவர் லிங்கோ தியோவின் மூத்த சகோதரர். இவரின் இளையமகன் மற்றும் அவரது மகன்கள், மகள்கள் ஆகியோரும் இங்கு இருக்கின்றனர். இங்கு லிங்கோ டோக்ராவின் குடும்பத்தினர் கூடி, ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இது பழைய மரபு.” என்றார்.
இந்த திருவிழா நடைபெறும் இடத்தில், புகைப்படமோ, காணொளியோ எடுப்பதற்கு அனுமதியில்லை. சமீபகாலத்திற்கு முன்னர், இவ்வாறு செய்தவர்கள் கோண்டு கலாச்சாரம் மற்றும் மரபை தவறாக சித்தரித்து விட்டனர், குறிப்பாக காட்சி ஊடகத்தின் வழியாக காட்சிப்படுத்தியவர்கள் தவறாக சித்தரித்து விட்டனர். எனவே, அதன் பிறகு அவர்கள் மிகுந்தக் கவனத்தோடு உள்ளனர். நானும், இந்த திருவிழா நடைபெறும் இடத்திற்கு வெளியே தான் இந்த புகைப்படங்களை எடுத்தேன் என்பதை உறுதி செய்கிறேன்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்.