பீகாரின் அராரியா மாவட்டத்தில் உள்ள இராம்பூரைச் சேர்ந்த (ஆசா) சமூக நலத் திட்டப் பணியாளர், 35 வயதான நஸ்ரத் பன்னோ. இவர், ’பதின் பருவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என கிராமப்புறப் பெண்களை ஒப்புக்கொள்ளச் செய்துவருகிறார். அதற்காக கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதை அனுமதிக்க அந்தப் பெண்களின் மாமியார்களுடன் அவர் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது; பிரசவத்துக்கும் அவரே அந்தப் பெண்களை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று வருகிறார். ஆனாலும், ஆண்களைக் கருத்தடை செய்யவைப்பது கடினமானது என நினைக்கிறார் நஸ்ரத்.
"போபஸ்கஞ்ச் வட்டாரத்தில் 3,400 பேர் வசிக்கும் அந்த ஊரில், சென்ற 2018ஆம் ஆண்டு ஒரே ஒருவர்தான், ஆண்களுக்கான (வாசக்டமி) கருத்தடை செய்துகொள்ள ஒப்புக்கொண்டார்” என்று நம்மிடம் சொன்னார், நஸ்ரத். ”ஆனால், அவர் கருத்தடை செய்துகொண்ட பிறகு அவருடைய மனைவி என்னை செருப்பைக்கொண்டு அடிக்கவந்துவிட்டார்” என்றார், சிரித்துக்கொண்டே!
இராம்பூரின் இந்த தயக்கம்தான் பீகாரின் மற்ற ஊர்களிலும் நிலவுகிறது. பீகாரில் நவம்பர் தோறும் மாநில அரசால் ஆண் கருத்தடைக்கான பரப்புரை வாரம் கடைப்பிடிக்கப்படும். கடந்த ஆண்டு அந்த பரப்புரை தொடங்கவிருந்த சமயத்தில், விகாஸ் மித்ரா பணியிலிருந்த வினய்குமாரிடம் பேசினேன். அப்போது, அவர்,”அவர்களுக்கு இருக்கும் பெரிய அச்சம் என்னவென்றால், தங்களைப் பார்த்து மற்ற ஆண்கள் சிரிப்பார்கள், கேலிசெய்வார்கள் என்பதுதான். இத்துடன், அவர்களுக்கு இன்னொரு மூடநம்பிக்கையும்.. அதாவது, கருத்தடைக்குப் பிறகு தாங்கள் பலவீனமடைந்துவிடுவோம்; அதற்குப் பிறகு ‘உறவே’ வைத்துக்கொள்ளமுடியாது என்றும் நினைக்கிறார்கள்!” என்பதைப் போட்டுடைக்கிறார், வினய்.
அம்மாநிலத்தின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் வட்டாரத்தில் 3,400 பேர் வசிக்கும் பிர்ரா கிராமம்தான், வினய்க்கு சொந்த ஊர். 38 வயதான அவர், அரசாங்கத்தின் விகாஸ் மித்ரா பணியாளராக கடந்த ஆண்டு இருந்தார். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதும் அவற்றைச் செயல்படுத்துவதில் பங்களிப்பதும் அவருக்கான பணிகள். அதில், ஆண்களுக்கான கருத்தடையைச் செய்துகொள்ள வைப்பதும் தட்டவேமுடியாத ஒரு வேலை ஆகும். (அதாவது, வாசக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை என்பது விந்துநாளத்தைத் துண்டித்தோ அல்லது கட்டிவைத்தோ செய்யப்படும் சிறு அறுவைச்சிகிச்சை ஆகும்.)
ஆண் கருத்தடைகளின் அளவு இறக்கத்தில் குறைவாக இருக்கும் ஒரு மாநிலத்தில், இது குறிப்பான முக்கியத்துவம் உடையது. இம்மாநிலத்தில், மூன்றாவது (2005-06) தேசிய குடும்ப நல ஆய்வின்படி கருதத்தகாத அளவுக்கு - 0.6 சதவீதமே இருந்த ஆண் கருத்தடை வீதம், நான்காவது (2015-16) தேசிய குடும்ப நல ஆய்வின்போது 0 சதவீதம் எனும் இடத்துக்கு கீழே வந்துவிட்டது. இதே காலகட்டத்தில், பெண்களுக்கான கருத்தடை வீதமும் குறைந்தே இருந்தது. திருமணமான 15 வயது முதல் 49வயதுவரையிலான பெண்களில், 23.8 சதவீதமாக இருந்தது 20.7 சதவீதமாக கீழிறங்கிவிட்டது. ஆனாலும் ஆண்கள் கருத்தடையைவிட அதிகமான அளவிலேயே தொடர்கிறது.
ஆண்களுக்கான கருத்தடை தொடர்பான பீகார் புள்ளிவிவரமானது இதில் தேசிய அளவிலான தயக்கத்தை எதிரொலிக்கிறது. நான்காவது (2015-16) தேசிய குடும்ப நல ஆய்வில், இப்போது திருமணம் செய்துகொண்ட பெண்களில் 36 சதவீதம் பேர், கருத்தடை செய்துகொண்டுள்ளனர்; இதேவேளை, ஆண்களில் 0.3 சதவீதம் பேர்தான் இதுதொடர்பான நடைமுறைகளுக்கே வந்திருக்கிறார்கள்.
நாடளவில் ஆணுறைப் பயன்பாடும் மோசமான அளவுக்கு குறைந்துவிட்டது. அண்மையில் திருமணம் செய்துகொண்ட (15 - 49 வயது) பெண்களில் 5.6 சதவீதம் பேர் மட்டும்தான், ஆணுறையானது கருத்தடைக்குப் பயன்படுகிறது எனக் கூறியுள்ளனர்.
இந்த சமமின்மையைச் சரிசெய்வதற்காக விகாஸ் மித்ரா எனப்படும் வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்கள் / மேம்பாட்டுக்கான நண்பர்கள் 2018ஆம் ஆண்டு முதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதாவது, ஆண்களைக் கருத்தடை செய்துகொள்ளவைப்பதில் உதவுவதும் கருத்தடையின் அளவை அதிகரிப்பதும் இவர்களின் முதன்மையான பணியாகும். ஜெகன்னாபாத் மாவட்டத்தில் 123 பேர், அராரியா மாவட்டத்தில் 227 பேர் உள்பட பீகார் மாநிலத்தில் மொத்தம் 9,149 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என இந்திய மக்கள்தொகை அமைப்புக்கு கிடைத்துள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.
விகாஸ்மித்ரா பணியிலுள்ள வினய்குமாரைப் பொறுத்தவரை, ஊரில் முறையாக குடிநீர் வழங்கப்படுகிறதா, கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளனவா, கடன்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளனவா என்பனவற்றை உறுதிப்படுத்துவதும் அவருடைய மற்ற கடமைகள் ஆகும். வெள்ளத்தையும் வறட்சியையும் அடிக்கடி எதிர்கொள்ளும் இந்த மாநிலத்தில், வறட்சி நிவாரணம் முறையாகப் போய்ச்சேர்ந்து விட்டதா என்பதையும் வெள்ள நிவாரணத்துக்கு உரியவர்கள் யார் யார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தவும் வேண்டும்.
இவர்களுக்கு பீகார் மகாதலித் விகாஸ் மிசன் சார்பில் மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மகாதலித் என பட்டியலிடப்பட்ட 21 சாதியினர் குறித்து அக்கறைசெலுத்த வேண்டும் என்பது திட்டத்தின் எதிர்பார்ப்பு. மாவட்ட நிர்வாகத்தின் சம்பளப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு கட்டுப்பட்டவராக இருப்பார்கள். ஆண்களைக் கருத்தடை செய்துகொள்ள வைப்பதற்காக ஒவ்வொரு அறுவைச்சிகிச்சைக்கும் இவர்களுக்கு ரூ.400 கூடுதல் படியாக வழங்கப்படுகிறது.
வினய்குமாரை நான் சந்தித்த நேரம், பீகாரின் வருடாந்திர ஆண்கருத்தடை பரப்புரையில் அவர் மும்முரமாக இருந்தார். குடும்பக் கட்டுப்பாடு என்பதில் முக்கியமான வார்த்தை, ’ஆண் கருத்தடை’. இந்திய அளவில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முதன்மை கவனம் அளிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக, பீகார் இருக்கிறது. ஏனென்றால், இங்கு (15-49 வயதினர்) மொத்த கருவுறுதல் வீதம் நாட்டிலேயே அதிக அளவாக 3.41 ஆக இருக்கிறது. (இதிலும் அராரியா மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் இன்னும் அதிகமாக 3.93 என்கிற அளவில் இருக்கிறது.) நான்காவது தேசிய நலவாழ்வு ஆய்வின்படி, மொத்த கருவுறுதல் வீதத்தின் தேசிய சராசரியானது 2.18 ஆகும்.
விகாஸ்மித்ராகளின் நியமனத்துக்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னரே 1981 முதல் குடும்பக்கட்டுப்பாட்டை 'ஆண்களுக்குச் செய்யவைக்கும்’ முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கருத்தடைச் சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக மைய அரசின் சார்பில் ரூ.3,000 அளிக்கப்படுகிறது.
கருத்தடையில் பாலின சமநிலையை எட்டும் இலக்கில் முன்னேற்றமானது இன்னும் மெதுவாகத்தான் இருக்கிறது. பெண்களே இந்தப் பொறுப்பைச் சுமக்கவேண்டியதும் மகப்பேறுகளுக்கான இடைவெளியை உறுதிப்படுத்துவது, விரும்பாத பிரசவங்களைத் தவிர்ப்பது ஆகியவற்றையும் அவர்களே உறுதிப்படுத்தும் நிலையும் நாடு முழுவதும் நீடிக்கிறது. கருத்தடை அறுவைச்சிகிச்சையை மட்டுமின்றி, இப்போது திருமணமான பெண்களில் 48 சதவீதம் பேர், (நான்காவது தேசிய நலவாழ்வு ஆய்வில் நவீன முறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள) ஐ.யு.டி.-கருவகக்கருவிமுறை, மாத்திரைகள், ஊசிமருந்து ஆகியவற்றைக் கைக்கொள்கிறார்கள். இவற்றில், பெண்களுக்கான குழாய் இணைப்பு அறுவைச்சிகிச்சையே நாடளவில் மிகவும் பிரபலமான கருத்தடை முறையாக உள்ளது.
மாத்திரைகள், ஆணுறைகள், கருவகக்கருவிகள் போன்ற கருவுறுதலுக்கு மீளக்கூடிய முறைகள், பரவலாக விமர்சிக்கப்படும் நிலையில், நிரந்தரமான இந்த முறையில் இந்தியா மிகவும் கூடுதலாக கவனம்குவிக்கிறது. ”இந்தியாவில் பெண்களுக்கான தற்சார்போ தனியான முகமையோ இல்லை. குடும்பக்கட்டுப்பாட்டில் அவர்களை இலக்குவைப்பது எளிதாக இருக்கிறது. இதனால், பெண்களுக்கான கருத்தடை அறுவைச்சிகிச்சை முதன்மையாக இருக்கிறது.” என்கிறார், அப்சர்வர் ஆராய்ச்சி அமைப்பின் மூத்த உறுப்பினரும் அதன் நலவாழ்வு முயற்சிகள் தலைவருமான ஓமன் சி.குரியன்.
பிறப்புக் கட்டுப்பாட்டு உரிமை, கருக்கலைப்புக்கான சட்டவாய்ப்புகள், இனப்பெருக்க சிகிச்சை போன்ற தங்களின் இனப்பெருக்க உரிமைகள் குறித்து பெண்கள் அறிந்துகொள்ளவும், அவற்றைக் கைக்கொள்ளும் அளவுக்கும் அவர்களைக் கொண்டுவர மாநில குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சி செய்கிறது. இப்படியான பல முயற்சிகள் நஸ்ரத் பன்னோ போன்ற ஆசா திட்டப் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இவர்களே இனப்பெருக்க நலவியல் ஆலோசனையிலும் தொடர்கவனிப்பிலும் முன்னணி சமூக நலப் பணியாற்றுகிறார்கள். பெண்களுக்கான கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்ய வைப்பதற்காக இவர்களுக்கு ரூ.500 ஊக்கத்தொகையும் குழாய் வெட்டிணைப்பு அறுவை செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 3,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
கருத்தடைச் சிகிச்சைக்குப் பிறகு ஆண்கள் ஒரு வாரத்தில் வழக்கமான அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிவிடுகிறார்கள்; பெண்களுக்கோ சராசரி வாழ்க்கைக்குத் திரும்ப சில நேரம் இரண்டு மூன்று மாதங்கள்கூட ஆகிவிடுகிறது. சிகிச்சைக்குப் பிறகு ஆண்கள் உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிட முடிகிறது; பெண்களோ குறிப்பிட்ட நலவாழ்வு மையத்தில் குறைந்தது ஓர் இரவுப்பொழுதாவது தங்கியிருக்க வேண்டியதாகிறது.
இப்படி ஒருபக்கம் இருந்தாலும், குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாவிட்டால் மீண்டும் மீண்டும் குழந்தைப்பேறுக்கு ஆளாக்கப்படுவோம் என பெண்கள் அச்சமடைகின்றனர். பல இடங்களில் தங்களுடைய கணவனுக்கோ மாமியாருக்கோ தெரியாமல் பெண்கள் கருத்தடை செய்துகொள்கின்றனர்; வினய்குமாரின் வாழ்விணையர்கூட இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார்.
வினய்குமார் ஆலோசனை தரக்கூடிய ஆண்களைப் போலவே, வாசக்டமி குறித்து அவரிடமும் அச்சமும் மூடநம்பிக்கையும் இருக்கிறது. கருத்தடைக்குப் பிறகு பலவீனமாகிவிடுவோமோ என்கிற பீதி அவரிடமும் வெளிப்பட்டது. யாரிடம் இது குறித்து பேசுவதெனத் தெரியவில்லை என்கிறார், வினய். இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, அவருடைய வாழ்விணையர் குழாய் வெட்டியிணைப்பு சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார். தன் இணையரிடம் தெரிவிக்காமலேயே அவர் செய்தும்முடித்தார்.
வினயும் மற்ற விகாஸ்மித்ராகளும் தலித், மகாதலித்தாக உள்ள அவரவர் சாதிச் சமூகத்திற்குள்தான் பணியைச் செய்கின்றனர். வாசக்டமிக்காக அவர்கள் சில நேரங்களில் ஆதிக்க சாதியினர்வரை தங்கள் எல்லையை நீட்டித்துக்கொள்கின்றனர். அது இயல்பிலேயே சவாலானதாகவும் இருக்கிறது.
"சிகிச்சை நடைமுறைகள் பற்றி ஆதிக்க சாதியினர் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு பதில்கூற முடியாதபோது எங்களுக்கு பீதியாகிவிடும். ஆகவே, எங்களுடைய சாதிச்சமூகத்திற்கு உள்ளேயே மக்களைத் தேடுகிறோம்.” என்கிறார், 42 வயதான அஜித்குமார் மாஞ்சி. இவர், ஜெகன்னாபாத் மாவட்டத்தின் மக்தும்பூர் வட்டாரத்தில் உள்ள கலனேர் கிராமத்தைச் சேர்ந்தவர். மாஞ்சிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
சில சமயங்களில், இவர்களின் வேலைக்கு கூடுதல் பலனும் கிடைப்பதுண்டு. 2018-ல் இரண்டு பேரை மாஞ்சி பிடித்துவிட்டார். ” ஒருவரிடம் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள பேசிக்கொண்டிருந்தேன். தனியாகவெல்லாம் நான் வரமாட்டேன் என்று அவர் சொன்னார். மற்றவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். ஆகையால் அவருடன் இருந்தவர்களிடம் பேசினேன். அப்படித்தான் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது.” என விவரித்தார், மாஞ்சி.
ஆனால், வாசக்டமி செய்து 13 மாதங்களுக்குப் பிறகும், சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு இன்னும் ஊக்கத்தொகையான ரூ.3 ஆயிரம் வந்தபாடில்லை. அடிக்கடி இப்படி நடப்பதாலும் ஆள்களை இணங்கச்செய்வது எளிதாக இல்லை என்கிறார் மாஞ்சி. தொகையானது பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது; ஆனால் ஊர்ப்புறத்தில் எல்லாரிடமும் வங்கிக் கணக்கு இல்லை. இது, விகாஸ்மித்ராகளின் வேலையை இன்னும் அதிகரிக்கச்செய்கிறது. ” யாருக்காவது வங்கிக்கணக்கு இல்லாதபோது, அவர்களுக்கு நானே வங்கிக்கணக்கைத் தொடங்கித் தருகிறேன்” என்கிறார் வினய்குமார். 2019-ல் ஒட்டுமொத்த ஆண்டுக்கும் மூன்று அல்லது நான்கு ஆண்களை மட்டுமே, வாசக்டமிக்கு ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தது என விகாஸ்மித்ராகள் என்னிடம் தெரிவித்தனர்.
ஆண்களைக் கருத்தடை செய்யவைப்பதற்கு அவர்களின் வாழ்விணையருடன் ஆலோசனை நடத்தவேண்டி இருக்கிறது. மக்தம்பூர் வட்டாரத்தில் உள்ள கோகரா கிராமத்தில் விகாஸ்மித்ராவாக இருக்கிறார், மாலதி குமார். ஆண்களிடம் பேசுவதற்கு தன் வாழ்விணையரையே இவர் நம்பியிருக்கிறார். “ நாங்கள் ஒரே குழுவாகப் பணியாற்றுகிறோம். பெண்களிடம் நானும் அவர்களின் இணையருடன் அவரும் பேசுகிறோம்.” என்கிறார் மாலதி.
"ஏற்கெனவே இத்தனை குழந்தைகளை வைத்திருக்கும் உங்களுக்கு கூடுதல் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டால் எப்படி அவர்களை கவனித்துக்கொள்ள முடியும் என்று கேட்பேன்.” என்கிறார் நந்த்கிசோர் மாஞ்சி. ஆனால், அவருடைய அறிவுரை அடிக்கடி அலட்சியப்படுத்தப்படும்.
ஆசா பணியாளர்களும் தங்கள் கணவரை உதவிக்கு அழைத்துக்கொள்கிறார்கள். ” பெண்ணாக இருப்பதால், ஆண்களிடம் கருத்தடை செய்துகொள்வது பற்றிப் பேசமுடிவதில்லை. அவர்கள், எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள்? பெண்களிடம் பேசுங்கள் எனச் சொல்கிறார்கள். ஆகையால் அவர்களை ஒப்புக்கொள்ளவைக்க என் இணையரைப் பேசவைக்கிறேன். என்று சொல்கிறார் நஸ்ரத் பன்னோ.
பெண்களின் நோக்கில், ஆண் கருத்தடைக்கு அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்வது என்பது கருத்தடைச் சிகிச்சை என்கிற அளவில் நடந்துவிடுவதில்லை. முதலில் அவர்களிடம் பேசவேண்டும்- அவர்களின் பெண் இணையர் தனக்கு எத்தனை குழந்தைகள் பெற விரும்புகிறார் என்பதையும் என்ன வகையான கருத்தடை முறையை அவர்கள் தெரிவுசெய்கிறார்கள் என்பதையும் விளக்கவேண்டும். ”அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. இதன் சாதக பாதகங்களைப் பற்றி இருவருமே ஒத்த கருத்துக்கு வரவேண்டி இருக்கிறது.” என்கிறார், 41 வயதான ஆசா பணியாளர், நிகாத் நாஸ். மூன்று பிள்ளைகளின் தாயான இவர், அராரியா மாவட்டம், இராம்பூரைச் சேர்ந்தவர்.
வாசக்டமியால் தங்களின் மண உறவின்பாலான சமூகரீதியான பாதிப்புகள் ஏற்படுமோ என பெண்கள் அச்சப்படுகின்றனர். இப்படி ஒரு சிகிச்சை விவகாரத்தில் குறிப்பிட்ட ஆணின் இணையர், தன்னை செருப்பால் அடிக்கவந்ததை நினைவுகூரும் நஸ்ரத், “அந்தப் பெண்ணும் தன் இணையருக்கு வாசக்டமியால் ஆண் தன்மை போய்விடுமோ, அவரை ஊரில் எல்லாரும் கேலிகிண்டல் செய்வார்களோ என பீதி ஆகிவிட்டார். அதனாலேயே என்னிடம் வன்முறையாக நடந்துகொண்டார்.” எனக் கூறுகிறார்.
"ஆண்களைப் பொறுத்தவரை தாங்கள் கேலிக்கு ஆளாக்கப்படுவோம் என்கிற பயம்.. பெண்களுக்கோ வாழ்க்கையைப் பற்றிய அச்சம்..” என்கிறார் நஸ்ரத்.
முகப்பு ஓவியம்:
ப்ரியங்கா போரர்,
தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.
ஊரக இந்தியாவில் கன்னிப்பருவ சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் குறித்து செய்தியாக்கம் செய்வதற்காக - பாரியும் கௌண்டர் மீடியா அறக்கட்டளையும் கைகோர்த்துள்ள செயல்திட்டம், இது. இந்திய மக்கள்தொகை அமைப்பின் பகுதி ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவது, இம்முனைப்பு; இது, எளிய மக்களின் வாழ்க்கை அனுபவம் மற்றும் அவர்களின் குரல்கள் மூலம் அவர்களின் சூழலை வெளிக்கொண்டுவருவதாகும்.
இந்தக் கட்டுரையை மறுவெளியீடுசெய்ய விருப்பமா? [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதிக்கடிதமும் [email protected] எனும் முகவரிக்கு அதன் படியையும் அனுப்புக