நன்பகலுக்கு சற்று முன், ஒருவர் சத்தமாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்கிறார்: “பண்டு நாயக், உங்கள் மகள் காயத்ரி எங்களோடு உள்ளார். உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வரவும்”. முந்தைய நாள் இரவிலிருந்து இதுபோன்ற அறிவிப்புகள் குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் வந்த வண்ணம் உள்ளன. சிலர் கூட்டத்தில் சிக்கி, தங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் உடன் வந்தவர்களிடமிருந்தும் பிரிந்து விடுகிறார்கள். பின்னர் நீண்ட நேர தேடலுக்கு பின் ஒன்று சேர்கிறார்கள்.
முந்தைய நாள் இரவிலிருந்து யாத்ரீகர்களின் கூட்டம் பெருகி வருகிறது. உள்ளூர் ஊடகத்தின் கணிப்புபடி குறைந்தபட்சம் 50,000 பேராவது வந்திருப்பார்கள். அடுத்த நாள் காலை, சூர்யபெட் மாவட்டத்தின் ஜனாபஹத் கிராமத்தில் உள்ள தர்காவிற்கு செல்லும் பாதை கூட்டத்தால் நிரம்பி வழியும்.
வருடத்தின் முதல் மாதத்தில் நான்காவது வெள்ளிக்கிழமை ஹஸ்ரத் ஜன்பக் ஷகீத் இறந்த நாளாக உர்ஸ் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் ஜனவரி 24-ம் தேதி வந்துள்ளது.
இந்த நாளில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் உள்பட பல சமூகத்தினர் இங்கு வருகிறார்கள். பழங்குடி இனத்தவர்களான லம்பாடிகளுக்கும் இது முக்கியமான திருவிழாவாகும். தெலங்கானாவின் கம்மம், வராங்கல் மற்றும் மகுபாநகர் மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரபிரதேசத்தின் குண்டூர், பிராகாசம் மற்றும் கிருஷ்னா மாவட்டங்களிலிருந்தும் பெரும்பாண்மையான யாத்ரீகர்கள் வருகிறார்கள்.
மதச்சார்பற்ற ஈடுபாடு ஒருபுறம் இருக்க, தங்கள் நிலம் வளமாக இருக்க வேண்டும் என பல விவசாயிகள் உர்ஸ் திருவிழாவிற்கு வருகிறார்கள். “விளைச்சல், பயிர் மற்றும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். இதற்காகவே நாங்கள் தொடர்ந்து கந்தம் (சந்தனம்) திருவிழாவிற்கு வருகிறோம்” என்கிறார் ரஜாக்கா சமூகத்தைச் (தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்த விவசாயியான மொய்லோலா அஞ்சம்மா. இவர், தன்னுடைய கனவர் மொய்லோலா பாலையாவோடு சேர்ந்து ஹஸ்ரத் தர்காவிலிருந்து 160கிமீ தொலைவிலுள்ள அச்சம்பெட் மண்டலில் இருந்து வந்துள்ளார்.






