“இப்போது புயல் ஓய்ந்ததும், எங்களை இங்கிருந்து கிளம்புமாறு கூறுகிறார்கள்” என என்னிடம் மே மாதம் கூறினார் காளிதாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமினா பாய். “ஆனால் நாங்கள் எங்குச் செல்வது?”
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பராக்னாஸ் மாவட்டத்தில் உள்ள அமினாவின் கிராமத்திலிருந்து 150கிமீ தொலைவில் அம்பன் சூறாவளி தரையிறங்கியது. அதற்கு முந்தைய நாள், பல கிராமங்களில் உள்ள குடும்பங்களை அப்புறப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர் உள்ளூர் அதிகாரிகள். மே 19-ம் தேதி அமினாவும் அவரது குடும்பமும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் தற்காலிக அறைகளுக்குச் சென்றனர்.
சுந்தரவனத்தின் கோசபா ப்ளாக்கில் இருக்கும் அமினாவின் மண் வீட்டைப் புயல் அடித்துச் சென்றது. அவரது உடைமைகள் அனைத்தும் கூட அடித்துச் செல்லப்பட்டன. அமினா, 48, அவரது கணவர் முகமது ரம்ஜான் மோலா, 56, மற்றும் 2 முதல் 16 வயது வரையிலான அவர்களின் ஆறு குழந்தைகளும் எப்படியோ பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
சூறாவளி தாக்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கிராமத்திற்கு திரும்பியிருந்தார் முகமது மோலா. 56 வயதான இவர், புனேயிலுள்ள மாலில் துப்புரவாளராக பணியாற்றி, மாதம் ரூ. 10,000 சம்பாதித்து வந்தார். இந்த முறை இங்கேயே இருந்து, அருகிலுள்ள மோலா காலி பஜாரில் டீக்கடை வைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.
தனது வேலை முடிந்த பிறகு, அருகிலுள்ள கோமார் ஆற்றில் மீனும் நண்டும் பிடித்து குடும்ப வருமானத்திற்கு உதவியாக இருக்கிறார் அமினா. தான் பிடித்ததை பஜாரில் விற்பனை செய்கிறார். “ஆனால் தினமும் 100 ரூபாய் கூட தன்னால் சம்பாதிக்க முடியவில்லை” என அவர் கூறுகிறார்.
இவர்களின் மூத்த மகனான ரகீப் அலி, 14 வயதாக இருக்கும் போது பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். “அப்பா அனுப்பும் பணத்தை வைத்து நாங்கள் குடும்பம் நடத்த முடியாது. அதனால்தான் நான் வேலைக்குச் சென்றேன்” என்கிறார். கொல்கத்தாவில் உள்ள தையல் கடையில் உதவியாளராக இருக்கும் ரகீப், மாதம் ரூ. 5,000 சம்பாதிக்கிறார். கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் தாக்கிய அம்பன் புயலின் போதுதான் இவர் வீட்டிற்கு வந்திருந்தார்.
கோமார் நதிக்கரையில் இருந்தது இவர்களது கூரை வேயப்பட்ட மண்வீடு. ஒவ்வொரு தடவை புயல் இவர்களை தாக்கும் போதும் – சிதிர் (2007), அய்லா (2009) மற்றும் புல்புல் (2019) - வீட்டிற்கருகே நெருங்கி வந்த ஆறு, கொஞ்ச கொஞ்சமாக அவர்களின் ஒரு ஏக்கர் நிலத்தை மூழ்கடித்தது. அதில் அவர்கள் வருடம் ஒருமுறை நெல்லும் சில காய்கறிகளும் பயிரிடுவார்கள். அம்பன் புயல் வந்தபோது அவர்களிடம் எந்த நிலமும் மீதமில்லை.
மே 20-ம் தேதி மறுபடியும் கிராமத்திலுள்ள வீடுகளையும் விளை நிலங்களையும் உப்பு நீரால் மூழ்கடித்தது அம்பன். அமினாவின் குடும்பமும் மற்றவர்களும் பிதய்தாரி மற்றும் கோமார் ஆற்றின் கரையோரங்களில் உள்ள சோட்டா மோலா காளி கிராமத்தில் தற்காலிகமாக குடியேறினர். மாநில அரசாங்கமும் உள்ளூர் அரசு சாரா நிறுவனமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவையும் தண்ணீர்ப் பைகளையும் கொடுத்தனர். தற்காலிக அறைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மின்சாரம் இல்லை. கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் தனிநபர் இடைவெளியை யாரும் பின்பற்றுவதில்லை.
“எவ்வுளவு நாள் அவர்கள் இங்கு தங்கியிருப்பார்கள்? ஒரு மாதம், இரண்டு மாதம், அதன்பிறகு (எங்கு அவர்கள் செல்வார்கள்)?” என கேட்கிறார் சுந்தர்பன் நகரிக் மான்ச்சா செயலாளர் சந்தன் மைதி. இந்த உள்ளூர் நிறுவனம்தான் நிவாரண முகாம்களுக்கு உணவு வழங்கி வருகிறது. “ஆண்கள் – இளைஞர்கள் கூட – வாழ்வாதாரத்தை தேடிச் செல்ல வேண்டும். புலம்பெயர முடியாதவர்கள் ஆறுகளில் மீன், நண்டு பிடித்தும் காடுகளில் தேன் எடுத்தும் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.”
கடந்த இரண்டு தசாப்தங்களில், புயல், வெள்ளம் மற்றும் பெரும் அலைகளால் கொண்டு வரப்படும் உப்பு கலந்த நீரால் பல ஏக்கர் பயிர் நிலங்களை சுந்தரவனப் பகுதியில் வசிப்போர் இழந்துள்ளார்கள். இப்பகுதியில் வசிக்கும் 85 சதவிகிதத்தினர் வருடத்திற்கு ஒருமுறையே நெல் பயிரிடுகிறார்கள் என 2020-ல் உலக வனஉயிர் நிதியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் உப்புத்தன்மை மண்ணின் உற்பத்தி திறனை அழித்து குளங்களை உலர்த்தி நண்ணீர் மீன்கள் குறைவதற்கு காரணமாக இருக்கிறது. மறுபடியும் பயிர் செய்வதற்கு ஏற்ற நிலமாக மாற பல வருடங்கள் ஆகும்.
“10 முதல் 15 நாட்களுக்கு நிலத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும்” என்கிறார் நம்ஹானா வட்டத்திலுள்ள மவுசினி தீவின் பாலியரா கிராமத்தைச் சேர்ந்த 52 வயது அபு ஜபயர் அலி ஷா. “உப்பின் காரணமாக, இந்த நிலத்தில் எந்தப் பயிரும் விளைவதில்லை. குளத்திலும் மீன்கள் இருப்பதில்லை.” அலி ஷா இறால் வியாபாரம் செய்கிறார்; அருகிலுள்ள ஆற்றில் கிராமத்தினர் பிடிக்கும் இறாலை வாங்கி, அதை உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்.
அவரும் அவரது குடும்பமும் – ரோகியா பீபி, 45, இல்லத்தரசி, சில வேளைகளில் தையல் வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார். இவர்களின் இரண்டு குழந்தைகள் உள்பட வீட்டிலுள்ள அனைவரும் இவர்களின் மூத்த மகனான 24 வயது சகேப் அலி ஷாவின் வருமானத்தை நம்பியே உள்ளனர். சகேப் கேரளாவில் கொத்தனராக வேலை பார்க்கிறார். “அங்கு அவன் யாரோ ஒருவரின் வீட்டைக் கட்டுகிறான். இங்கு அவனது சொந்த வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது” என்கிறார் அபு ஜபயார்.
2014 மற்றும் 2018-க்கு இடைபட்ட காலங்களில் சுந்தரவனப் பகுதிகளில் ஏற்பட்ட 64% புலப்பெயர்விற்கு பொருளாதார பிரச்சனைகளே காரணம். ஏனென்றால், இங்கு விவசாயம் நிலையானதாக இல்லை என ஐநா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களின் ஆய்வு திட்டத்தின் கீழ் கழிமுக பாதிப்பு மற்றும் பருவநிலை மாற்றம்: இடம்பெயர்வு மற்றும் தகவமைத்துக் கொள்தல் என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வு கூறுகிறது. அதேப்போல், சுந்தரவனத்தில் உள்ள 200 வீடுகளில் அவிஜித் மிஸ்திரியால் (மேற்கு வங்காள புருலியாவில் உள்ள நிஸ்தரினி பெண்கள் கல்லூரியில் உதவி பேராசியராக இருக்கிறார்) எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், குடும்பத்தில் ஒரு உறுப்பினராவது வேலை தேடி வேறு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.புலம்பெயர்வு காரணமாக இப்பகுதியில் உள்ள பல குழந்தைகள் தங்கள் படிப்பைக் கைவிட்டுள்ளனர். “எங்கள் வீடுகளையும் நிலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆறு முழ்கடிப்பது போல், கல்வித்துறை மெல்ல குழந்தைகளை இழந்து வருகிறது” என அவர் கூறுகிறார்.
“கடந்த 3, 4 வருடங்களில் (2009-ல் வந்த அய்லா புயலுக்குப் பிறகு) நிலைமை கொஞ்சம் மேம்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர்களில் பலர் மறுபடியும் சுந்தரவனத்திற்கு வந்து விவசாயம் செய்தும், குளங்களில் மீன் பிடித்தும் அல்லது சிறு தொழிலை தொடங்கியும் உள்ளனர். ஆனால் முதலில் வந்த புல்புல், அதன்பிறகு வந்த அம்பன் எல்லாவற்றையும் சீரழித்துவிட்டது” என்கிறார் கோரமாரா பஞ்சாயத்தின் தலைவர் சஞ்சிப் சாகர்.
அருகிலுள்ள வடக்கு 24 பராக்னாஸ் மாவட்டத்தில், நஸ்ருல் மோலா, 56, மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் அதிர்ஷ்டவசமாக அம்பன் புயலில் உயிர் பிழைத்தனர். ஆனால் அவர்களின் கூறை வேய்ந்த களிமண் வீடு அடித்துச் செல்லப்பட்டது. மோலாவும் கேரளாவில் கொத்தனாராக பணியாற்றுகிறார். அம்பன் புயல் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, மினகன் வட்டத்தின் உசில்தாஹா கிராமத்திலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தார்.
மே 21, புயலுக்கு முந்தைய நாள், கூரையாக பயன்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் விநியோகித்துக் கொண்டிருந்த பிளாஸ்டிக் விரிப்பை வாங்கச் சென்றார் நஸ்ருல். நஸ்ரூலின் முறை வருவதற்குள் விரிப்பு காலியாகிவிட்டது. “பிச்சைக்காரர்களை விட இப்போது நாங்கள் மோசமாக உள்ளோம்” என என்னிடம் அவர் கூறினார். “இந்த ஈகை பெருநாள் (மே 24) வானத்திற்கு கீழ் திறந்தவெளியில்தான் கழியும் போல”.
பதர்பிராதிமா வட்டத்திலுள்ள கோபால்நகர் உத்தர் கிராமத்தில், 46 வயதான சபி புனியா, தன்னுடைய தந்தை சங்கர் சர்காரின் உடைந்த புகைப்பட சட்டகத்தை இறுகப் பிடித்தபடி இருக்கிறார். 2009 அய்லா புயலின் போது குடிசை சரிந்து விழுந்ததில் அவர் இறந்து போனார். “இந்தச் சூறாவளி (அம்பன்) எங்கள் வீட்டை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, என்னுடைய கனவரையும் என்னிடமிருந்து பிரித்துவிட்டது (மொபைல் நெட்வொர்க் இடைஞ்சல் காரணமாக),” என அவர் கூறுகிறார்.
அய்லா புயலுக்குப் பிறகு சபியின் கனவர் ஸ்ரீதம் புனியா தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து விட்டார். அங்குள்ள உணவகத்தில் பணிபுரியும் அவர், திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் ஊருக்கு வர முடியவில்லை. “கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் பேசினோம். பெரும் துயரத்தில் இருப்பதாக என்னிடம் கூறினார். உணவும் பணமும் இல்லாமல் அவர் இருப்பதாக” என்னிடம் மே மாதம் கூறினார் சபி.
கோபால்நகர் உத்தரில் உள்ள மிருதங்காபங்கா (கோபடியா என உள்ளூரில் அழைக்கப்படுகிறது) ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருக்கும் பெரியவர் சனாதன் சர்தார் கூறுகையில், “சில வருடங்களுக்கு முன்பு வரை, மந்தை மந்தையாக வலசைப் பறவைகள் இப்பகுதிக்கு (சுந்தரவனம்) வரும். இப்போது எதுவும் வருவதில்லை. தற்போது நாங்கள்தான் புலம்பெயர்ந்தவர்களாகி விட்டோம்.”
பின்குறிப்பு: அமினா பாய் மற்றும் அவரது குடும்பத்தை மறுபடியும் ஜூலை 23 அன்று இந்த நிருபர் சந்தித்த போது, அவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பியிருந்தனர். வெள்ளநீர் வடிந்ததால், மூங்கில் மற்றும் பிளாஸ்டிக் விரிப்பைக் கொண்டு தற்காலிக வீடை அமைத்துள்ளனர். ரம்ஜான் அன்று வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர். ஊரடங்கு தடை காரணமாக வேலைக்கு வெளியே செல்ல முடியவில்லை. சொந்தமாக டீக்கடை வைக்க கூட இப்போது அவரிடம் பணம் இல்லை.
நஸ்ருல் மோலாவும் அவரது குடும்பத்தினர்களும் மற்றும் இவர்களைப் போல் மற்றவர்களும், உடைந்து போன தங்கள் வீடுகளை சீர்படுத்தி முடிந்தவரையில் வாழ்க்கையை ஓட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா