நன்றாக இருட்டத் துவங்கிவிட்டது. “இங்கே பாம்பு எதுவும் இல்லையே?”, என்று கலவரத்துடன் கேட்டேன்.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் மேலக்காடு கிராமத்தின் ஒரு விவசாயப் பண்ணை அருகே நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். கிணறு வெட்டுபவர்களை சந்திப்பதற்காக நான் அங்கு சென்றிருந்தேன் - அந்தப் பகுதி முழுவதும் புழுதி படர்ந்து வறண்டு போயிருந்தது. பாசனத்திற்காகத் தண்ணீரைக் கண்டுபிடிப்பதே ஒரு தனி வேலையாக இருந்தது. இளையராஜா அங்குதான் வசிக்கிறார். ஒரு தனியார் பண்ணையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். மீதியிருக்கும் நேரத்தில் தன் பெற்றோரின் விவசாயப் பண்ணையில் உழுவார். அப்படியென்றால் ஒரு நாளைக்கு இரண்டு சுற்று வேலை. அவருக்கு 23 வயதுதான் ஆகிறது.
என் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு இளையராஜா புன்னகைத்து, “ஆம்”, என்றார். சில நாட்கள் முன்புதான் ஒரு நாகராஜ பாம்பு இங்கு ஊர்ந்ததாம். நான் இனியும் அங்கு நடக்க வேண்டுமா என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டேன். இளையராஜா ஒரு டார்ச் விளக்கை எடுத்து வந்தார்.
“பயப்படாதீர்கள், நான் உங்களுடன் கூட வருகிறேன்”, என்று உதவ முன்வந்தார். இருள் மெதுவாக எங்களை சூழ்ந்துகொள்ள, அதிலிருந்து எங்களைப் பாதுகாப்பதுபோல் அந்த டார்ச் வெளிச்சம் எங்களைச் சுற்றி ஒரு வெள்ளை வட்டத்தைப் பாய்ச்சியது. அந்த வட்டத்தோடு சேர்ந்து நாங்களும் நகர்ந்தோம். காற்று சில்லென்று வீச ஆரம்பித்தது.
பகல் முழுவதும் அடித்த வெயிலுக்கு ஆறுதலாக சூரியன் மறையும் வேளையில் மழை தாராளமாகப் பெய்திருந்தது. அந்த இரவு நடையில் மண்வாசனை மூக்கைக் கவ்வியது. தவளைகளின் சத்தம் அருகில் கேட்டது. வெட்டுக்கிளிகளின் இரவுச் சத்தம் பின்னணியில் ஒலிக்க, இளையராஜா சிரமத்துடன் மூச்சு விடுவது மையமாகக் கேட்டது. “எனக்கு ஆஸ்துமா இருக்கிறது”, என்றார் புன்னகை மாறாமல். அவர் குழந்தையாக இருக்கும்போது அவர் குடும்பம் சேலத்திலிருந்து சிவகங்கைக்குக் குடிபெயர்ந்தது. சிவகங்கையின் ஒவ்வொரு மேடு பள்ளமும், சாலையும் இளையராஜாவுக்கு அத்துப்படி. அதோ என்று ஒரு வண்டியைக் காட்டினால் அது என்ன வண்டி, யார் ஓட்டுகிறார் என்பது வரை அடையாளம் கண்டு சொல்லிவிடுவார். “23 வருடங்களுக்கு முன்பு இங்கு நிலம் மலிவாகக் கிடைத்தது. சேலத்தில் இருந்த சொத்துகளை விற்றுவிட்டு என் தந்தையும் அவர் சகோதரர்களும் இங்கு பத்து ஏக்கர் நிலத்தை வாங்கினர்”, என்றபடி டார்ச் விளக்கைப் பக்கவாட்டில் செலுத்த, இருபுறமும் மரவள்ளிக்கிழங்கு, கரும்பு வயல்கள் செழித்து வளர்ந்திருந்தன. “அப்பொழுது 10 ஏக்கர் விலை மொத்தமாகவே 50,000 ரூபாய்தான் ஆனது. இப்பொழுது ஒரு ஏக்கரே மூன்றிலிருந்து நான்கு லட்சத்திற்கு விலை போகும்”, என்றார்.





