"அங்க பாருங்க, காய்கறி மூட்ட டூ வீலர் ஓட்டிட்டு வருது" சந்திரா தனது விளைபொருட்களை சிவகங்கை காய்கறி சந்தையில் விற்க, தனது மேலகாடு கிராமத்தில் இருந்து டூ வீலரில் போகும் போது சாதாரணமாக கேட்கும் இளைஞர்களின் குரல்... "ஏன்னா, முன்னாடி பின்னாடி காய்கறி மூட்டை மறச்சுக்கும். ஓட்றவங்க தெரியல இல்ல, அதான் அப்படி சொல்றாங்க.." விளக்கம் தந்து சிரிக்கிறார் இந்த இளம் பெண் விவசாயி.
பார்ப்பதற்கு 18 வயது பெண் போலத் தெரியும் இவருக்கு 28 வயது. இரு குழந்தைகளுக்குத் தாய், வெற்றிகரமான விவசாயி, தான் ஒரு கைம்பெண் என்பதற்காக இரக்கம் காட்டுவதை வெறுப்பவர்.
"எல்லாரும், என் அம்மா கூட ஆச்சரியப்படுறாங்க.. எனக்கு என்ன ஆச்சுன்னு. எனக்கு 24 வயசு இருக்கும்போது என் கணவர் இறந்துட்டார்.. என்னைச் சுற்றி இருந்தவர்கள் என் தன்னம்பிக்கையை குறைக்க நான் அனுமதிக்கவில்லை. வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ள விரும்பினேன். "
அவரைச் சுற்றி இருந்தது வலியும் வேதனையும் தான். ஆனால் அதையும் தாண்டி அவரது உதடுகள் புன்னகைக்கின்றன. அவரின் நகைச்சுவை உணர்வு, சிறுவயதின் வெறுமையான நினைவுகளையும் சிரிப்புடனே விவரிக்கிறது."எனக்கு அப்போ 10 வயசு கூட இருக்காது. ஒருநாள் இராத்திரி அப்பா என்னை எழுப்பினார். அன்னைக்கு பௌர்ணமி. நிலா வெளிச்சம் பிரகாசமாகவே இருக்கு. இந்த வெளிச்சத்துலயே கதிர் அறுக்கலாம்னு கூட்டிட்டு போனாரு. நான், அக்கா, அண்ணன் எல்லாம் விடியப்போகுதுனு நெனச்சு கூட போனோம். நாலு மணிநேரம் ஆச்சு கதிர் அறுத்து முடிக்க. கொஞ்ச நேரம் படுத்து தூங்குங்க, காலையில பள்ளிக்கூடம் போனும்ல. மணி 3 தான் ஆகுதுனு சொன்னாரு. உங்களால நம்ப முடியுதா 11 மணிக்கு எங்கள வயலுக்கு இழுத்துட்டு போயிருக்காரு" வெள்ளந்தியாய் சிரிக்கிறார்.
ஆனால் இதை அவர் தம் குழந்தைகளுக்கு இந்நிலை வர அவர் விடவில்லை. தனியாளாய் நின்று அவர் குழந்தைகளின் படிப்பையும் பார்த்துக்கொள்கிறார். சந்திராவின் மகன் தனுஷ்குமார்(8), மகள் இனியா (5) இருவரும் அருகில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கிறார்கள்.
அதன் பிறகு தனது தாய் வீட்டிற்கே திரும்பியவருக்கு, மீண்டும் தையல் வேலைக்குச் செல்வதா இல்லை பட்டப்படிப்புக்கு போவதா என்ற குழப்பம். சந்திராவைப் பொறுத்தவரையில் இரண்டுமே கடினமாகத்தான் இருந்தது. வேலைக்குச் செல்வதாக இருந்தால் குழந்தைகளை விட்டுத் தனியே தொலை ஊருக்குச் செல்ல வேண்டும். படிக்கச் செல்லலாம் என்றால் 12ம் வகுப்பை அவர் முடித்திருக்கவில்லை. மேலும் படித்து முடிக்கும் வரையில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது என்ற எண்ணம் வேறு.
இந்த சூழலில் வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் வேலை செய்வது அவருக்கு எளிதாக இருந்தது. அது நினைத்த நேரத்தில் செய்யும் வேலையாகவும் இருந்தது. அவரின் 55 வயது தாயார் சின்னப்பொண்ணு ஆறுமுகமும் அவருக்கு துணையாக இருக்கிறார்.
சந்திராவின் தந்தை இறந்த பின் 12 ஏக்கர் நிலத்தை 3 பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார். இருவரும் சேர்ந்து காய்கறிகள், நெல், கரும்பு மற்றும் சோளம் பயிரிட்டு வருகிறார்கள். சந்திராவிற்கு ஒரு வீடும் கட்டிக்கொடுத்திருக்கிறார். கழிவறை வசதி மட்டும் குறையாக இருக்கும் அந்த வீட்டில், இனியா வளர்வதற்குள் அதுவும் சரிசெய்யப்பட்டுவிடும்.
இதுபோன்ற அடிப்படைத் தேவைகள் மற்றும் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக கரும்பு அறுவடையை நம்பி இருக்கிறார் சந்திரா. அன்றாடத் தேவைகளை காய்கறிகள் மற்றும் நெல் அறுவடை மூலம் கிடைக்கும் சில நூறுகள் பூர்த்தி செய்கின்றன.
ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உழைக்கிறார். காலை 4 மணிக்கு இவரது நாள் தொடங்குகிறது. வீட்டுவேலைகளை முடித்து, சாப்பாடு தயாரித்து, குழந்தைகளுக்கு மதிய உணவை எடுத்து வைத்து, பின் தோட்டத்தில் காய்கறிகளைப் பறிப்பது என நீள்கிறது இவரது பணிகள். "பெற்றோர் பள்ளிக்கு வரும் போது முறையாக உடை அணிந்து வர வேண்டும் என்பதால், சில நேரம் அவசரத்தில் இரவு உடையின் மீதே சேலை கட்டிக் கொண்டு போவதும் நடக்கும்" என்று சிரிக்கிறார். மதிய உணவு வரை தோட்டத்தில் வேலை செய்பவருக்கு அரைமணிநேரம் ஓய்வு கிடைப்பதே அரிது. "தோட்டத்தில் வேலை எப்போதும் இருக்கும்" என காரணமும் சொல்கிறார்..
சந்தை நாட்களில் தன் டூ வீலரில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சிவகங்கைக்குச் செல்கிறார். "சின்ன வயசுல தனியா எங்கயும் போக மாட்டேன். ரொம்ப பயப்படுவேன். ஆனா இப்போ விதை, உரம், பூச்சிக்கொல்லி வாங்கனு ஒருநாளைக்கு 4 முறை போய்ட்டு வரேன்."
"நேத்து இனியா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்னு புது ட்ரெஸ் கேட்டுச்சு. இன்னிக்கு வாங்கி குடுக்கணும்." என்று இடைவெளி விட, அதையும் புன்னகையால் நிறைக்கிறார்.
"சில வாரங்களில் 4000 ரூபாய் வரை கிடைக்கும். விலை குறையும் நாட்களில் இதில் பாதிகூட கிடைக்காது." என்கிறார். சந்தையில் தன் விளைபொருட்களை விற்பதில் கிலோவிற்கு அதிகபட்சம் 20 ரூபாய் வரை லாபம் வருகிறது.
பிள்ளைகள் வீடு திரும்பும் நேரத்திற்குள் தானும் வீடு திரும்பிவிடுகிறார். வயலில் சிறிதுநேரம் விளையாடிய பின் இனியாவும் தனுஷும் படிக்க செல்ல, தோட்டவேலையில் இறங்குகிறார் சந்திரா. பின்னர் சிறிது நேரம் டி. வி, தங்கள் செல்ல நாய்க்குட்டிகள் மற்றும் கினி பன்றியுடன் விளையாட்டு என இனிதே செல்கிறது அவர்களின் மாலைப்பொழுது.
பேசிக்கொண்டு வரும்போது தென்னை மரத்தைப் பார்த்தவர் "இப்போல்லாம் ஏறுரது இல்லங்க. 8 வயசு பையனோட அம்மா எப்படி மரம் ஏறுரது?" ஏக்கம் தொனித்தது குரலில். அடுத்த நொடி விவசாயிகள் எப்படி எல்லாம் விலக்கப்படுகிறார்கள் என்பதை வருத்தத்துடன் கூறினார். அரசு அலுவலகங்களில் தன்னை விவசாயி என அடையாளப்படுத்தினால் ஓரமாக சென்று நிற்கச் செல்கிறார்கள். உலகத்திற்கே படியளக்கும் விவசாயிக்கு ஏன் இந்த நிலை என்ற கேள்விக்கு என்ன விடை தருவது?
இந்தக் கட்டுரையின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணவும் .
தமிழில் மொழியாக்கம்: ஜூலி ரெயோனா J