1980களில் வெளிவந்த பாலிவுட் திரைப்பட பாடல் ஒன்று ஒலிப்பெருக்கியில் ஒலிக்க, சிங்குவில் போராடி வரும் விவசாயிகள் குழு எனும் அசாதாரண பார்வையாளர்கள் முன்னிலையில் அடுத்த 45 நிமிட நிகழ்ச்சிக்கு இளம் ராணி தயாராகி கொண்டிருந்தார்:
“ஏ ஆன்சு ஏ ஜஸ்பாத்
தும் பேச்தே ஹோ, கரிபோன் கி ஹாலத்
தும் பேச்தே ஹோ, அமிரோன் கி ஷம் கரிபோன் கி நாம்”
(“இந்த கண்ணீர்,
இந்த உணர்வுகள், ஏழைகளின் துன்பம்
அனைத்திலும் நீங்கள் விடுபட வேண்டும்
செல்வத்தின், வளமையின் விழா
ஏழ்மையின் பெயரில் கொண்டாடப்படுகிறது”)
இது 2021 செப்டம்பர். கோவிட்-19 இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தது. 26 வயது விக்ரம் நட், அவரது மனைவியான 22 வயது லில், சகோதரி மகளான 12 வயது ராணி ஆகியோர் டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்குவில் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
2021 ஏப்ரல் மாதம் சத்திஸ்கரில் உள்ள தங்களின் பர்கான் கிராமத்திற்கு கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக சென்றுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் குறித்த செய்திகளை நான் ஒரு மாதமாக சேகரித்து வருகிறேன். அவர்களைச் சந்தித்து ஒரு மாதம் இருக்கும். மார்ச் மாதம் அவர்கள் விவசாயிகளிடையே நிகழ்ச்சி நடத்த சிங்கு வந்தனர். இப்போது மீண்டும் அவர்கள் வந்துள்ளனர்.
16 அடி நீளத்தில் சுமார் நான்கு கிலோ எடையில் உள்ள மரக்கட்டையை ராணி கையில் பிடித்துள்ளார். இரண்டு கம்புகளுக்கு நடுவே 18-20 அடி தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள கயிற்றின் மீது அவர் மெதுவாக வெறும் காலுடன் தலையில் வெண்கல பானையை சுமந்தபடி நடக்கிறார். வெண்கல பானையின் உச்சியில் சிறிய கொடி ஒன்று பறக்கிறது; அதில் இடம்பெற்றுள்ள வாசகம்: விவசாயிகளின்றி உணவு கிடையாது.
கொஞ்ச தூரம் சென்றதும் தன் கால்களுக்கு இடையே ராணி தட்டு வைத்து அதில் முழங்காலிட்டு அதே தூரத்தை மீண்டும் கடக்கிறார். அதற்கு முன் சைக்கிள் சக்கரத்தை ஓட்டுகிறார். நிலையான கவனத்துடன் 10 அடி உயரத்தில் உள்ள கயிற்றின் மீது காற்றில் ஆடியபடி இசைபட ஆடுகிறார்.
“அவள் விழ மாட்டாள்,” என என்னிடம் விக்ரம் உறுதி அளிக்கிறார். “இது எங்கள் நூற்றாண்டு பழமையான நடனம். இத்திறமை தலைமுறைகளாக எங்களுக்கு கடத்தப்படுகிறது. நாங்கள் இதில் வல்லுநர்கள்,” என இசையிலும், ஒலிப்பெருக்கியிலும் கவனம் செலுத்தியபடி விளக்குகிறார் அவர்.
டெல்லியிலிருந்து 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்திஸ்கரின் ஜஞ்ஜிர்-சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தலித் சமூகத்தில் நாட் இனத்தைச் சேர்ந்த புலம்பெயர் கலைஞர்கள். அக்ரோபாடிக் திறனுக்காக அறியப்படுபவர்கள்.
கயிற்றுக்கு அடியே விக்ரமின் மனைவி லில் நடக்கிறார். ஒருவேளை ராணி விழுந்தாலும் அவளை பிடிப்பதில் லில் வல்லவர் என்று விக்ரம் உறுதி அளிக்கிறார். “ராணி வயதிருந்தபோது நான் கூட கயிற்றில் ஆடியிருக்கிறேன்,” என்கிறார் லில். “இப்போது இல்லை. என் உடல் அதை அனுமதிப்பதில்லை.” லில் பல முறை விழுந்துள்ளார். “ராணி” பற்றி அவர் பேசுகையில் “மூன்று வயதிருக்கும்போது அவள் பயிற்சியை ஆரம்பித்து, விரைவில் நிகழ்ச்சியைத் தொடங்கிவிட்டாள்.”
பர்கானின் நாட் மொஹல்லா பகுதியில் விக்ரம் குடும்பத்தைப் போலவே சிலர் கயிற்றில் ஆடும் நடனத்தை பயிற்சி செய்து நிகழ்ச்சி நடத்துகின்றனர் – ஐந்து தலைமுறைகள் வரை விக்ரமிற்கு நினைவில் இருக்கிறது. அவர்கள் வாழ்வாதாரத்திற்காக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்குச் சென்று தெருவோரத்தில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
டெல்லியில் தனது தாத்தாவுடன் முதன்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது விக்ரமிற்கு ஒன்பது வயதுதான் இருக்கும். மூத்த கலைஞர்கள் அதற்கு முன்பே - “நேரு தனது கோட்டில் ரோஜா வைத்திருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டனர்,” என்கிறார் அவர்.
விக்ரமும், அவரது குடும்பமும் கடந்தாண்டு மேற்கு டெல்லியின் படேல் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதியில் தங்கினர். 2020 மார்ச் தேசிய ஊரடங்கு அறிவிப்புக்கு முன் தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர். “கரோனா வைரஸ் பற்றி நாங்கள் அறிந்தோம்,” எனும் விக்ரம், “எங்களைப் போன்ற மக்களை கவனிக்க மருத்துவமனையோ, மருத்துவர்களோ கிடையாது. அவர்கள் பணக்காரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பரபரப்பாக இருப்பார்கள். செத்தால்கூட எங்கள் பெற்றோர், குடும்பத்தினர் வாழும் எங்கள் வீட்டில் சாகவே விரும்பினோம்.”
2020 நவம்பர் மாதம் இக்குடும்பம் டெல்லிக்குத் திரும்பியது. சொந்த ஊரியில் நிலையான வருமானம் கிடையாது. 100 நாள் வேலை திட்டத்தில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லை. “ஓர் அறை அளவிற்கு பூமியில் பள்ளம் தோண்ட எனக்கு 180 ரூபாய் கொடுப்பார்கள். மீந்த சோற்றில் உப்பு, தண்ணீர் போட்டு சாப்பிடுவோம். ஒன்பது மாதங்களில் எட்டு முதல் ஒன்பதாயிரம் ரூபாய் வரை எப்படியாவது சேமித்து விடுவேன். இப்பணத்தை ரயிலில் டெல்லி திரும்ப நாங்கள் பயன்படுத்துவோம். அப்பயணத்தின்போதும் பசி வந்தால் ஒரு கரண்டி உணவுதான் ஒவ்வொருவரும் உண்போம்,” எனும் அவர், “அப்போதுதான் உணவு தீராது.”
2021 தொடக்கத்தில் அவர்கள் காசியாபாத்தில் நிகழ்ச்சி நடத்தி வந்தனர். டெல்லி எல்லைகளான சிங்கு, டிக்ரியில் விவசாயிகளின் போராட்டம் குறித்து கேள்விப்பட்டு சிங்குவில் நிகழ்ச்சி நடத்த வந்துள்ளனர். போராட்டக் களத்திற்கு அருகே மாதம் ரூ.2000க்கு வாடகைக்கு வீடு பிடித்து அவர்கள் தங்கியுள்ளனர். விவசாய குடும்ப பின்னணி இல்லாதபோதும் அவர்களின் போராட்டத்தை புரிந்துகொள்வதாக விக்ரம் சொல்கிறார். “எங்களிடம் நிலம் இருந்ததா, இல்லையா என்பது தெரியாது,” எனும் விக்ரம், “எங்கள் குடும்பம் விவசாயம் செய்ததாக சொல்வதுண்டு. ஒருவேளை எங்கள் முன்னோர்கள் விற்று இருக்கலாம் அல்லது யாரேனும் அதனை ஆக்கிரமித்து இருக்கலாம்.”
சிங்குவில் இக்குடும்பத்தின் அனுபவம் என்பது முற்றிலும் வேறுபட்டது. பொதுவாக அவர்களை மக்கள் மோசமாகவே நடத்துவார்கள்,“போராடும் விவசாயிகள் எங்களை சிறப்பாக வரவேற்றனர்,” என்கிறார் லில்
கயிற்றின் மீது நடந்தால் பொதுவாக ஒருநாளுக்கு ரூ.400-500 தான் கிடைக்கும். ஆனால் சிங்குவில் ஒரு நாளுக்கு ரூ.800 முதல் ரூ.1,500 வரை கிடைக்கிறது. “நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்க தான் வந்தோம். இப்போது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அவசியத்தைப் புரிந்துகொண்டோம். நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என இறைவனிடம் நான் வேண்டுகிறேன்,” என்கிறார் லில். சிங்குவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் மனதுடன் நிகழ்ச்சியை நடத்துவதாக விக்ரம் சொல்கிறார். 2020 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக விவசாயிகள் தீர்க்கமாக போராடி வருகின்றனர் .
டெல்லியில் உள்ள மற்றவர்களைப் போன்று இல்லாமல் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் அவர்களை பாகுபாடின்றி நடத்துகின்றனர். டெல்லி மெட்ரோவில் ராணி பயணிக்க விரும்பியதை அவர் நினைவுகூர்கிறார். பல முறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. “மெட்ரோ பாதுகாவலர்கள் எங்களை நுழைய விடுவதில்லை. ‘நீங்கள் அழுக்காக தெரிகிறீர்கள்’ என்கின்றனர் அவர்கள்,” என விளக்குகிறார் விக்ரம். மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே துவைத்த ஆடையை அணிந்து வந்தாலும் அவர்களால் பயணிக்க முடிவதில்லை. அவர்கள் தங்கள் கருவிகள், பொருட்களை வைக்க மோட்டார் பொருத்திய இழுவை வண்டி வைத்துள்ளனர். “இதுதான் எங்கள் மெட்ரோ பயணம். எங்களிடம் வண்டி உள்ளது, இதில் அமர்ந்துதான் நாங்கள் டெல்லியை பார்க்கிறோம்,” என தொடர்கிறார் விக்ரம்.
“பூங்காக்கள், சந்தைகளில் நிகழ்ச்சி நடத்த நாங்கள் முயன்றால் மக்கள் விரட்டுகின்றனர். போக்குவரத்து சிக்னலில் வண்டி நின்றால் கூட அங்கு நிகழ்ச்சி நடத்தி பாதசாரிகளிடம் 10 ரூபாயை மகிழ்ச்சியாக பெறுகிறோம். சில சமயம் அதுகூட கிடைப்பதில்லை. மக்கள் எங்களை வெளியேறச் சொல்கின்றனர்,” என்கிறார் விக்ரம்.
சிங்குவில் இக்குடும்பத்தின் அனுபவம் என்பது முற்றிலும் வேறுபட்டது. பொதுவாக அவர்களை மக்கள் மோசமாகவே நடத்துவார்கள், “போராடும் விவசாயிகள் எங்களை சிறப்பாக வரவேற்றனர்,” என்கிறார் லில். “அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போல கருதி எங்களுக்கு உணவளிக்கின்றனர். மற்ற இடங்களைப் போன்றில்லாமல், இங்கு யாரும் எங்களை திட்டுவதில்லை. இங்கு எங்களுக்கு கிடைக்கும் மரியாதை வேறு எங்கும் இதுவரை கிடைத்தது இல்லை.”
“எங்களை இந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை. ஊடகங்களும் எங்களை மதிப்பதில்லை. அதனால் தான் நாங்கள் அவர்களிடம் பேசுவதில்லை,” என்கிறார் லில். “இதனால் தான் எங்களை காவலர்கள் சிறையில் அடைக்கின்றனர். சிறைக்குள் எங்கள் உடல்கள் இருக்கின்றன, அவர்களிடம் லத்தி உள்ளது.”
சிங்குவிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரேலாவில் ஒருமுறை அவர்கள் நிகழ்ச்சி நடத்தியபோது, “காவலர்கள் வந்து, நாங்கள் இரண்டு நாள் உழைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்றனர், அவர்கள் வாழ்க்கையுடன் நாங்கள் விளையாடுகிறோம் என்கின்றனர்,” என விக்ரம் புகார் கூறுகிறார். ஒருமுறை திருட்டு சந்தேகத்தின் பேரில் காசியாபாத்தில் சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். “நான் உண்மையில் திருட விரும்பினால் அம்பானியின் வீட்டிற்குத்தான் செல்வேன்,” என்று அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். “ஆனால் காவலர்கள் என்னை இரக்கமின்றி அடித்தனர்.”
விவசாயிகள் வேறுபட்டவர்கள். “எங்களுக்கு எதிராகவோ, இடத்தை காலி செய்யவோ அவர்கள் சொல்வதில்லை. பாத் [குரு கிராந்த் சாஹிப் பற்றி படிக்கும்போது] நடக்கும்போது மட்டும் எங்கள் ஒலிப்பெருக்கியின் ஒலியை குறைக்குமாறு பணிவுடன் அவர்கள் கேட்கின்றனர்,” என்கிறார் விக்ரம்.
சிங்குவில் தங்கி ஐந்து மாதங்கள் ஆவதற்குள் பெருந்தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து தப்பிக்க இக்குடும்பம் தங்கள் கிராமத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது செப்டம்பரில் அவர்கள் திரும்பியபோது வாடகைக்கு முன்பிருந்த வீடு கிடைக்கவில்லை. விவசாயிகள் கட்டிய சிறு குடில்களும், டென்டுகளும் போராட்டக் களத்தில் இப்போதும் உள்ளன. கிராமங்களில் இருந்து போராட்டக் களத்திற்கு டிராக்டர், டிராலிகளில் மக்கள் வந்து செல்கின்றனர். விவசாய பருவம் தொடங்கிவிட்டதால், சில மாதங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது சிங்குவில் மக்கள் குறைந்துவிட்டனர். கழைக் கூத்தாடிகளின் வருவாயும் இதனால் குறைந்துவிட்டது.
வருமானத்தைப் பெருக்குவதற்காக அவர்கள் அருகமை பகுதிகளுக்கும் செல்கின்றனர். விக்ரம், லில், ராணி ஆகியோர் சிங்கு அருகிலேயே வாழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
தமிழில்: சவிதா