இறந்துபோகும் வரை, 22 வயது குர்ப்ரீத் சிங் அவரது கிராமத்தில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஊர்வலங்கள் சென்று கொண்டிருந்தார். அவரின் அப்பாவான ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி ஜக்தர் சிங் கடாரியா மகனின் கடைசி உரையை நினைவுகூருகிறார். 15 பார்வையாளர்கள் அவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்திருக்கின்றனர். தில்லியின் எல்லைகளில் வரலாறு நிகழ்த்தப்படுவதாகவும் அங்கு சென்று அவர்களும் பங்களிக்க வேண்டும் எனவும் பேசியிருக்கிறார். அந்த உணர்ச்சிமிகு பேச்சுக்குப் பிறகு டிசம்பர் 2020ல் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, அக்குழு தலைநகரத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றது.
பஞ்சாபின் ஷாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் பலாசவுர் தாலுகாவில் இருக்கும் மகோவல் கிராமத்திலிருந்து கடந்த வருடத்தின் டிசம்பர் 14ம் தேதி அவர்கள் கிளம்பினர். ஆனால் 300 கிலோமீட்டர் கடந்திருந்த நிலையில் ஒரு கனரக வாகனத்தால் அவர்களின் டிராக்டர் ட்ராலி ஹரியானாவின் அம்பாலா மாவட்டமருகே இடிக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. “அது ஒரு பெரும் மோதல். குர்ப்ரீத் இறந்துபோனார்,” என்கிறார் இளங்கலைப் பட்டதாரியான மகனைப் பற்றி ஜக்தர் சிங். “இந்தப் போராட்டத்துக்கு அவர் தன் உயிரையேக் கொடுத்தார்.”
செப்டம்பர் 2020ல் இந்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து உயிரிழந்த 700க்கும் மேற்பட்டவர்களில் குர்ப்ரீத்தும் ஒருவர். குறைந்தபட்ச ஆதார விலை முறையை அழித்து தனியார் வணிகர்களையும் பெருநிறுவனங்களையும் விலை நிர்ணயிக்க அனுமதித்து சந்தையில் அவற்றுக்கு பெரும் ஆதாயத்தை உருவாக்க வேளாண் சட்டங்கள் வழிவகை செய்யும் என்பதால் நாடு முழுவதும் இருந்த விவசாயிகள் அவற்றை எதிர்த்தனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியப் பகுதிகளி விவசாயிகளை தில்லி எல்லைகளுக்கு போராட்டங்கள் நவம்பர் 26, 2020 அன்று கொண்டு வந்தன. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, தில்லி ஹரியானா எல்லையில் சிங்குப் பகுதியிலும் தில்லி உத்தரப்பிரதேச எல்லையில் காசிப்பூர் மற்றும் திக்ரியிலும் போராட்டக் களங்களை அவர்கள் அமைத்தனர்.
போராட்டங்கள் தொடங்கி ஒரு வருடத்துக்கும் அதிகமான நாட்கள் கழிந்த பிறகு, நவம்பர் 19, 2021 அன்று சட்டங்கள் திரும்பப் பெறப்படுமென பிரதமர் அறிவித்தார். விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறும் மசோதா நவம்பர் 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போராட்டம், விவசாயச் சங்கங்களில் பல கோரிக்கைகளை அரசு ஏற்ற பிறகு டிசம்பர் 11, 2021 அன்றுதான் நிறுத்தப்பட்டது.
நீண்டப் போராட்டத்தில் நெருக்கமானவர்களை இழந்த குடும்பங்களிடம் நேரிலும் தொலைபேசியின் வழியாகவும் பேசினேன். நிலைகுலைந்து சோகமாக இருந்தாலும் கோபத்துடன் இருக்கின்றனர். போராட்டத்துக்காக உயிரைத் தியாகம் செய்த தியாகிகளாக அவர்களை நினைவுகூருகின்றனர்.
“விவசாயிகளின் வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். ஆனால் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை,” என்கிறார் ஜக்தர் சிங். “விவசாயிகளுக்கு எந்த நல்லதையும் அரசு செய்யவில்லை. அது விவசாயிகளையும் உயிர்த்தியாகம் செய்தவர்களையும் அவமதித்திருக்கிறது.”
“எங்களின் விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். எங்களின் ராணுவ வீரர்கள் பஞ்சாபுக்காகவும் நாட்டுக்காகவும் இறந்திருக்கிறார்கள். நாட்டின் எல்லையில் நின்று போராடுபவர்களோ அல்லது உள்ளிருந்து போராடுபவர்களோ, உயிர்த்தியாகம் செய்தவர்களைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. எல்லையில் நின்று போராடும் ராணுவ வீரர்கள் மற்றும் உணவை விளைவிக்கும் விவசாயிகள் ஆகியோரை அரசு கேலியாக்கியதுதான் மிச்சம்,” என்கிறார் பஞ்சாபின் மன்சா மாவட்ட தோட்ரா கிராமத்தைச் சேர்ந்த 61 வயது க்யான் சிங்.
போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் சகோதரரான 51 வயது ராம் சிங்கை க்யான் சிங் இழந்தார். பாரதிய கிசான் சங்கம் என்கிற விவசாய அமைப்பின் உறுப்பினராக இருந்தவர் ராம். போராட்டக் களத்துக்கு தேவையான விறகுகளை மன்சா ரயில்நிலையத்தில் சேகரிப்பது அவரது வேலை. கடந்த நவம்பர் 24ம் தேதி, அவர் மீது ஒரு கட்டை விழுந்து அவர் இறந்து போனார். “ஐந்து விலா எலும்புகள் உடைந்தன. ஒரு நுரையீரல் பாதிப்புக்குள்ளானது,” என்கிறார் க்யான் சிங் வலியை மறைக்கும் உறுதியான குரலில்.
“சட்டங்கள் திரும்பப் பெறப்படுமென அறிவிக்கப்பட்டதும் கிராமத்திலிருக்கும் மக்கள் பட்டாசுகள் வெடித்தனர். விளக்குகள் ஏற்றினர்,” என்கிறார் க்யான். “குடும்பத்தில் ஓர் உயிரிழப்பு இருப்பதால் நாங்கள் கொண்டாட முடியாது. ஆனாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.”
முன்பே அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் 46 வயது சிர்விக்ரம்ஜீத் சிங் ஹுண்டால். உத்தரப்பிரதேசத்தின் திப்திபா கிராமத்தைச் சேர்ந்தவர். “விவசாயத் தலைவர்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியபிறகும் அரசு அதைச் செய்யவில்லை.” விக்ரம்ஜித்தின் 25 வயது மகனான நவ்ரீத் சிங் ஹுண்டால் , ஜனவரி 26, 2021 அன்று தில்லியில் நடந்த விவசாயிகள் பேரணியில் கொல்லப்பட்டார். தில்லிப் போலீஸால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் ஏறியதில் அவர் ஓட்டிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்தது. அதற்கு முன் நவ்ரீத் சுடப்பட்டார் என்கிறார் அவரின் தந்தை. காவல்துறைதான் சுட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார். அச்சமயத்தில் டிராக்டர் கவிழ்ந்து பட்ட காயத்தினால் நவ்ரீத் இறந்துவிட்டதாக தில்லி போலீஸ் கூறியது. ”விசாரணை நடந்து கொண்டிருக்கிறது,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத்.
“அவனை இழந்தபிறகு எல்லாமே தலைகீழாகிவிட்டது,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத். “சட்டங்களைத் திரும்பப் பெற்று அரசாங்கம் ஒன்றும் விவசாயிகளுக்கு மருந்து கொடுக்கவில்லை. அதிகாரத்தைப் பற்றிக் கொண்டிருப்பதற்கு அது செய்யும் ஓர் உத்திதான் இது,” என்கிறார் அவர். “எங்களின் உணர்வுகளுடன் அது விளையாடுகிறது.”
உயிரோடு இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, விவசாயிகளிடம் அரசு கொண்டிருக்கும் அணுகுமுறை மோசமாக இருப்பதாக சொல்கிறார் உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைக் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது ஜக்ஜீத் சிங். “இந்த அரசாங்கம் வர நாங்கள் ஓட்டு போட்டோம். இப்போது அவர்கள் எங்களை ‘காலிஸ்தானி’, ‘தேசவிரோதி’ என்கிறார்கள். தாக்குகிறார்கள். என்ன துணிச்சல் அவர்களுக்கு?” என்கிறார். செப்டம்பர் மாதத்தில் விவசாயிகளுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய உள்துறை அமைச்சர் அஜய் குமாரைக் கண்டித்து அக்டோபர் 3, 2021 அன்று விவசாயிகள் போராட்டம் நடத்த லக்கிம்புர் கெரியில் கூடியபோது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையில் ஜக்தீத்தின் சகோதரர் தல்ஜீத் சிங் கொல்லப்பட்டார்.
அமைச்சரின் வாகனம் ஏற்றி நான்கு விவசாயிகளும் ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டச் சம்பவத்தின் விளைவாக வன்முறை வெடித்தது. குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் தெனியின் மகன் அசிஸ் மிஷ்ராவும் ஒருவர். குற்றத்தை விசாரிக்கும் ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ திட்டமிடப்பட்ட சதியாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகிறது.
35 வயது தலிஜீத்தை இரண்டு வாகனங்கள் இடித்துத் தள்ளி மூன்றாவது வாகனம் அவர் மீது ஏறி இறங்கியது. “எங்களின் 16 வயது மகன் ராஜ்தீப் மொத்த சம்பவத்தையும் பார்த்தான்,” என்கிறார் தல்ஜீத்தின் மனைவியான பரம்ஜீத் கவுர். “அந்தக் காலை, போராட்டத்துக்கு செல்வதற்கு முன்பு தல்ஜீத் புன்னகையுடன் எங்களை நோக்கி கையசைத்து விடைபெற்றார். சம்பவத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன் கூட நாங்கள் தொலைபேசியில் பேசினோம்,” என அவர் நினைவுகூருகிறார். “எப்போது வருவாரென அவரிடம் கேட்டேன். ‘இங்கு நிறைய மக்கள் இருக்கிறார்கள். விரைவில் வருகிறேன்’ என்றார் அவர்.” ஆனால் அது நடக்கவில்லை.
விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானபோது துயர்மிகுந்த சூழல் வீட்டில் நிலவியதாக பரம்ஜீத் கூறுகிறார். “எங்களின் குடும்பம் அந்த நாளில் தல்ஜீத்தின் இழப்புக்கு மீண்டும் அஞ்சலி செலுத்தியது.” ஜக்தீஜ் சொல்கையில், “சட்டங்களை திரும்பப் பெறுவதால் என் சகோதரரின் உயிர் திரும்பி வராது. உயிர் தியாகம் செய்த 700 பேரை அவர்களின் உறவுகளுக்கு திரும்பக் கொண்டு வந்து சேர்க்காது,” என்கிறார்.
லகிம்பூர் கெரியில் போராட்டக்காரர்களை இடித்து ஏறிய வாகனங்கள் அதிகக் கூட்டம் இருந்த பகுதியில் மெதுவாக நகர்ந்தன, குறைந்த கூட்டம் இருந்த இடத்தை வேகமாகக் கடந்தன என்கிறார் 45 வயது சத்னம் தில்லன். அவரின் 18 வயது மகனான லவ்ப்ரீத் சிங் தில்லனும் உயிரிழந்தவர்களில் ஒருவர். “அவர்கள் தொடர்ந்து அடித்து மக்களை ஒடுக்கினர்,” என்கிறார் உத்தரப்பிரதேசக் கெரி மாவட்டத்தைச் சேர்ந்த சத்னம். சம்பவம் நடந்தபோது அவர் போராட்டக் களத்தில் இல்லை. சம்பவத்துக்கு பிறகு அவர் அங்கு சென்றபோது என்ன நடந்தது என அவருக்கு விளக்கப்பட்டது.
லவ்ப்ரீத்தின் தாயான 42 வயது சத்விந்தர் கவுர் இரவு தூக்கம் கலைந்து எழுந்து மகனின் நினைவில் அழுவதாக சொல்கிறார் சத்னம். “அமைச்சர் பதவி விலக வேண்டுமென்றும் அவரின் மகனுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு நீதி தேவை.”
“நீதி வழங்குவதற்கான எந்த விஷயத்தையும் அரசாங்கம் செய்யவில்லை,” என்கிறார் ஜக்தீப் சிங். அவரின் தந்தையான 58 வயது நச்சட்டர் சிங்கும் லகிம்பூர் கெரி வன்முறையில் கொல்லப்பட்டார். சம்பவத்தை பற்றி கேட்கும்போது எதிர்ப்பு மனநிலையுடன், “எங்களின் மனநிலை என்ன எனக் கேட்பது சரியில்லை. பசியோடு இருக்கும் ஒருவனின் கையைப் பின்னால் கட்டிப் போட்டுவிட்டு, முன்னால் உணவை வைத்துவிட்டு, ‘உணவு எப்படி இருக்கிறது?’ எனக் கேட்பதைப் போல இது. நீதிக்கான போராட்டம் எந்த இடத்தில் இருக்கிறது என வேண்டுமானால் கேளுங்கள். இந்த அரசாங்கத்துடன் எங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் விவசாயிகள் அடக்கப்படுகிறார்கள்?”
ஜக்தீப் ஒரு மருத்துவர். அவரின் தம்பி சஷாஸ்த்ரா சீமா பால், மத்திய ஆயுதப் படைக் காவலராக நாட்டின் எல்லையில் பணிபுரிகிறார். “நாங்கள் நாட்டுக்கு பணிபுரிகிறோம்,” என்கிறார் ஜக்தீப் கோபத்துடன். “தந்தையை இழந்த மகனிடம் சென்று எப்படி உணர்கிறார் எனக் கேளுங்கள்.”
மன்ப்ரீத் சிங்கும் அவரின் தந்தை சுரேந்தர் சிங்கை டிசம்பர் 4, 2020 அன்று ஒரு விபத்தில் இழந்தார். 64 வயது சுரேந்தர் ஷாகித் பகத் சிங் நகரின் ஹசன்பூர் குர்த் கிராமத்திலிருந்து தில்லிப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார். ஹரியானாவின் சோனிபட்டில் விபத்து நேர்ந்தது. “நான் துயரத்தில் இருக்கிறேன். அதே நேரம் பெருமையாகவும் இருக்கிறது. போராட்டத்துக்காக அவரின் உயிரைக் கொடுத்திருக்கிறார். தியாகியின் மரணத்தை அவர் எய்தியிருக்கிறார்,” என்கிறார் 29 வயது மன்ப்ரீத். “சோனிபட்டில் இருக்கும் காவல்துறை என் தந்தையின் உடலை நான் பெற உதவியது.”
தில்லி எல்லைகளில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, பஞ்சாபின் பாடியாலா மாவட்ட விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் 73 வயது ஹர்பான்ஷ் சிங். பாரதிய கிசான் சங்க உறுப்பினரான ஹர்பான்ஷ், அவரது மெகமூதுபூர் ஜட்டன் கிராமத்தில் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். கடந்த வருடத்தின் அக்டோபர் 17ம் தேதி, பேசிக் கொண்டிருக்கும்போதே நிலைகுலைந்து விழுந்தார். “சட்டங்களை பார்வையாளர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும்போது அவர் விழுந்தார். மாரடைப்பில் இறந்துபோனார்,” என்கிறார் அவரின் 29 வயது மகனான ஜக்தார் சிங்.
“இறந்தவர்கள் இறக்காமல் இருந்திருந்தால் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம்,” என்கிறார் ஜக்தார்.
சகாலி கிராமத்தில் 1.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் 58 வயது பால் சிங் தில்லியின் போராட்டங்களுக்குக் கிளம்பும்போது, “உயிருடன் திரும்ப வருவேனென எதிர்பார்க்காதீர்கள் எனச் சொன்னார்,” என்கிறார் அவரின் மருமகள் அமந்தீப் கவுர். டிசம்பர் 15, 2020 அன்று அவர் சிங்குவில் மாரடைப்பில் இறந்தார். “இறந்துபோனவர்களை யாரும் திரும்பக் கொண்டு வர முடியாது,” என்கிறார் நூலக மேலாண்மை படிப்பை கல்லூரியில் படித்த 31 வயது அமந்தீப். “தில்லியை விவசாயிகள் அடைந்தபோதே சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்கள் (அரசாங்கமும் காவல்துறையும்) விவசாயிகளை தடுப்பதற்கான வேலைகளைச் செய்தார்கள். தடுப்புகளை போட்டார்கள். பள்ளங்கள் தோண்டினார்கள்.”
நான்கு உறுப்பினர்களும் கடனும் கொண்ட குடும்பத்தில் பால் சிங்தான் வருமானம் ஈட்டும் உறுப்பினர். அமந்தீப் தையல் வேலை செய்கிறார். அவரின் கணவர் வேலை பார்க்கவில்லை. அவரின் மாமியார் வீட்டில் இருக்கிறார். “அவர் இறப்பதற்கு முந்தைய இரவில் தூங்கச் செல்கையில் ஷூக்களை அணிந்து தூங்கச் சென்றார். அடுத்த நாள் காலை வேகமாக கிளம்பி வீட்டுக்கு வர திட்டமிட்டிருந்தார்,” என்கிறார் அமந்தீப். “அவர் வராமல் அவரின் உடல்தான் வீட்டுக்கு வந்தது.”
பஞ்சாபின் லூதியானா மாவட்ட இகொலகாவைச் சேர்ந்த 67 வயது ரவிந்தர் பால் மருத்துமனையில் இறந்தார். டிசம்பர் 3ம் தேதி சிங்குவிலிருந்து அவர் புரட்சிப் பாடல்கள் பாடும் காணொளி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிவப்பு மையில் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்றும் தலைப்பாகையும் இல்லை தொப்பியும் இல்லை, பகத் சிங்கின் சிந்தனைகளுக்கு வணக்கம் என்றும் எழுதப்பட்ட ஒரு நீண்ட வெள்ளை குர்தாவை அவர் அணிந்திருந்தார்.
ஆனால் ரவிந்தரின் ஆரோக்கியம் அந்த நாளின் பிற்பகுதியில் மோசமானது. டிசம்பர் 5ம் தேதி அவர் லூதியானாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அடுத்த நாள் அங்கு இறந்து போனார். “பலருக்கு அவர் விழிப்புணர்வு ஊட்டினார். இப்போது அவர் மீளமுடியாத நித்திரைக்கு சென்றுவிட்டார்,” என்கிறார் பூட்டான் நாட்டின் ராணுவ வீரர்களை 2010-2012ம் ஆண்டுகளில் பயிற்றுவித்த 42 வயது ராஜேஷ் குமார். குடும்பத்துக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. “விவசாயத் தொழிலாளர்களின் சங்கத்தில் என் தந்தை உறுப்பினராக இருந்தார். அவர்களின் ஒற்றுமைக்காக உழைத்தார்,” என விளக்குகிறார் ராஜேஷ்.
பஞ்சாபின் மன்சாவிலிருக்கும் மஸ்தூர் முக்தி மோர்ச்சாவின் உறுப்பினரான 60 வயது மல்கித் கவுர் தொழிலாளர் உரிமைகளுக்காக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். நிலமற்ற பட்டியல்சாதிப் பெண்ணான அவர், கடந்த வருடம் டிசம்பர் 16ம் தேதி தில்லிக்கு சென்ற 1,500 விவசாயிகளில் ஒருவராக சென்றார். “ஹரியானாவின் ஃபதேகபாத்தில் ஒரு சமூக சமையலறையில் அவர்கள் நின்றார்கள். சாலையைக் கடக்கும்போது ஒரு வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்,” என்கிறார் தொழிலாளர் அமைப்பின் உள்ளூர் தலைவரான குர்ஜந்த் சிங்.
34 வயது ராமன் கஷ்யப்தான் அக்டோபர் 3, 2021 அன்று நேர்ந்த லகிம்பூர் கெரி சம்பவத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர். இரு குழந்தைகளுக்கு தந்தையான அவர், சத்னா ப்ளஸ் என்கிற செய்தித் தொலைக்காட்சியின் வட்டாரச் செய்தியாளராக இருந்தார். “சமூக சேவையில் அவருக்கு எப்போதும் ஆர்வமிருந்தது,” என்கிறார் அவரின் சகோதரரும் விவசாயியுமான பவன் கஷ்யப். அவரும் ராமனும் மூன்றாம் சகோதரரும் சேர்ந்து மூன்று ஏக்கர் நிலத்தை சொந்தமாக கொண்டிருந்தனர். “வாகனத்தின் சக்கரத்தில் மாட்டி அவர் விழுந்தார். மூன்று மணி நேரங்களாக அவரை யாரும் கவனிக்கவில்லை. நேரடியாக அவரின் உடல் கூராய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டது,” என்கிறார் நிலத்தில் விவசாயம் பார்க்கும் 32 வயது பவன். “சவக்கிடங்கில் அவரைப் பார்த்தேன். டயர்கள் மற்றும் சரளைக் கல் ஆகியவற்றின் தடங்கள் அவரின் உடலில் இருந்தன. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.”
குழந்தைகளின் இழப்பு குடும்பங்களின் மீது அழுத்தத்தை சுமத்தியிருக்கிறது. பஞ்சாபின் ஹோஷியர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குர்ஜிந்தர் சிங்குக்கு 16 வயதுதான். “எங்களின் குடும்பம் அழிந்துவிட்டது. இந்தக் கொடூரமானச் சட்டங்களை ஏன் அரசாங்கம் கொண்டு வந்தது?” எனக் கேட்கிறார் அவரின் தாயான 38 வயது குல்விந்தர் கவுர். தில்லிக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்டக்களத்துக்கு டிசம்பர் 16, 2020 அன்று டிராக்டரில் சென்று கொண்டிருக்கும்போது, கீழே விழுந்து உயிரிழந்தார் குர்ஜிந்தர். அதற்கு 10 நாட்களுக்கு முன், டிசம்பர் 6ம் தேதி, 18 வயது ஜஸ்ப்ரீத் சிங் ஹரியானாவின் கைதால் மாவட்டத்திலிருந்து சிங்குவுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வாகனம் ஒரு வாய்க்காலில் விழுந்தபோது அவர் இறந்தார். ஜஸ்ப்ரீத்தின் 50 வயது மாமா பிரேம் சிங் சொல்கையில்,” குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதால் என்ன பயன்?” எனக் கேட்கிறார்.
இறந்தவர்களின் குடும்பங்களுடன் பேசியதில் சாலை விபத்துகளும் மன அழுத்தமும் தில்லியின் கொடுங்குளிரும் மரணத்துக்கான பிரதானக் காரணங்களாக இருப்பது தெரிகிறது. விவசாயச் சட்டங்கள் கொடுத்த கோபமும் அதற்குப் பின் தொடரக் கூடிய நிச்சயமற்ற தன்மையும் அரசின் அக்கறையின்மையும் தற்கொலைகளுக்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
நவம்பர் 10, 2021 அன்று 45 வயது குர்ப்ரீத் சிங், சிங்கு போராட்டக் களத்தில் இருந்த ஓர் உணவகத்துக்கு வெளியே தூக்கிட்டுக் கொண்டார். பொறுப்பு என்கிற ஒற்றை வார்த்தை அவரின் இடது கையில் எழுதப்பட்டிருந்ததாக அவரின் 21 வயது மகன் லவ்ப்ரீத் சிங் கூறினார். பஞ்சாபின் ரூர்கி கிராமத்தில் குர்ப்ரீத்துக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் இருந்தது. குடும்பத்தின் கால்நடைகளுக்கு தேவையான புல் அங்கு விளைவிக்கப்பட்டது. 18 கிலோமீட்டர் தொலைவில் மண்டி கோபிந்த்கரில் இருக்கும் பள்ளிக்கு குழந்தைகளை படகில் கொண்டு சென்றுவிட்டு வருமானம் ஈட்டினார். “10 நாட்களுக்கு முன் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தால், என் தந்தை இப்போது எங்களுடன் இருந்திருப்பார்,” என்கிறார் வணிகவியல் பட்டப்படிப்பு படிக்கும் லவ்ப்ரீத். “என் தந்தை எடுத்த முடிவை இன்னொருவர் எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் விவசாயிகளின் எல்லா கோரிக்கைகளையும் அரசு ஏற்க வேண்டும்.”
பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலைப் பெற்ற ஆகஸ்டு 15, 1945 அன்று பிறந்தவர் கஷ்மீர் சிங். உத்தரப்பிரதேச ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான அவர், காசிப்பூர் களத்தின் சமூக சமையலறை ஒன்றில் உதவிக் கொண்டிருந்தார். ஆனால் ஜனவரி 2, 2021 அன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “விவசாயச் சட்டங்களை எதிர்ப்பதற்காக என் உடலை பலி கொடுக்கிறேன்,” எனக் குறிப்பு எழுதியிருந்தார்.
”உயிர் கொடுத்த 700 தியாகிகளின் குடும்பங்கள் தற்போது எப்படி உணரும்?,” எனக் கேட்கிறார் கஷ்மீர் சிங்கின் பேரனான குர்விந்தர் சிங். “சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், எங்களின் 700 விவசாயிகள் திரும்ப வர மாட்டார்கள். 700 குடும்பங்களின் விளக்கு அணைந்துவிட்டது.”
தில்லியின் போராட்டக்களங்கள் காலி செய்யப்பட்டாலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான அங்கீகாரத்தையும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனினும் டிசம்பர் 1, 2021 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், அரசிடம் மரணங்கள் பற்றியத் தரவுகள் இல்லாததால் நிவாரணம் பற்றிய கேள்விக்கே இடமில்லை என குறிப்பிட்டிருக்கிறார்.
அரசு கவனம் செலுத்தியிருந்தால் எத்தனை பேர் இறந்து போனார்கள் எனத் தெரிந்திருக்கும் என்கிறார் குர்விந்தர். “விவசாயிகள் நெடுஞ்சாலைகளில் அமர்ந்திருந்தபோது அரசு மாளிகைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.” தொழில்நுட்பமும் தரவுகளும் எளிதாகக் கிடைக்கும்போது, “போராட்டத்தில் இறந்தவர்களின் தகவல்களைப் பெறுவது எப்படி கடினமாக இருக்க முடியும்?” எனக் கேட்கிறார் மஸ்தூர் முக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த குர்ஜந்த் சிங்.
குர்ப்ரீத் சிங் மீண்டும் ஓர் உரை கொடுக்க முடியாது. அவரைப் போன்ற 700 விவசாயிகள் தில்லியின் எல்லையில் எழுதப்பட்ட வரலாற்றின் கடைசி அத்தியாயத்தை பார்க்கவில்லை. சக போராட்டக்காரர்களின் கண்ணீரைத் துடைத்துவிடவோ வெற்றியை ருசிக்கவோ அவர்கள் யாரும் இல்லை. பூமியில் இருந்து விவசாயிகள் வணக்கம் செலுத்த வானில் அவர்கள் வெற்றியின் கொடியை ஏற்றிக் கொண்டிருக்கலாம்.
எல்லா புகைப்படங்களும் உயிரிழந்த குடும்பங்கள் கொடுத்தவை. முகப்புப் படம் அமிர் மாலிக்குடையது.
நீங்கள் தற்கொலை எண்ணம் கொண்டவராக இருந்தாலோ நெருக்கடியில் இருக்கும் எவரும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலோ தேசிய உதவி எண்ணான 1800-599-0019-லோ (24/7 கட்டணமற்ற சேவை) அல்லது இந்தப் பிற
உதவி எண்களை
யோ தொடர்பு கொள்ளுங்கள். மனநல வல்லுனர்கள் மற்றும் சேவைகள் தெரிந்து கொள்ள
SPIF-ன் மனநல விவரப் புத்தகத்துக்குச்
செல்லுங்கள்.
தமிழில்: ராஜசங்கீதன்