பக்கிங்ஹாம் கால்வாய்ப் பகுதிக்கு 2019ம் ஆண்டில் சென்றபோதுதான் முதன்முறையாக அவரைக் கவனித்தேன். ஒரு முக்குளிப்பான் பறவை போல, கால்வாய்க்குள் முங்கி நீருக்கடியில் நீந்தும் அவரின் திறன் என் கவனத்தை ஈர்த்தது. கால்வாய்க்கரையின் கரடுமுரடான மணலுக்குள் வேகமாக கைகளால் துழாவி, அங்கிருக்கும் எவரையும் விட முன்னதாக இறால்களை எடுத்தார் அவர்.
கோவிந்தம்மா வேலு இருளர் சமூகத்தை சார்ந்தவர். தமிழ்நாட்டில் பட்டியல் பழங்குடியினமாக அச்சமூகம் பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே இருக்கும் கொசஸ்தலையாற்றில் சிறு வயது முதற்கொண்டு அவர் சிரமத்துடன் நடந்து இறால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது 70 வயதுகளில் அவர் இருந்தாலும், குடும்பம் எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களால், இந்த வேலையைத் தொடரும் கட்டாயத்தில் அவர் இருக்கிறார். பார்வைக் குறைபாடும் சிராய்ப்புகளும் கூட அவரைத் தடுக்கவில்லை.
இக்காணொளியை, வடசென்னையின் கொசஸ்தலையாறுக்கு அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் பதிவு செய்தேன். இறால் பிடிக்க முங்கும் இடைவெளிகளில் அவரது வாழ்க்கை பற்றியும், இது மட்டுமே அவருக்கு தெரிந்த வேலையாக ஏன் இருக்கிறது என்பதைப் பற்றியும் பேசினார்.
கோவிந்தம்மாவின் வாழ்க்கையைப் பற்றி இங்கு நீங்கள் படிக்கலாம் .
தமிழில் : ராஜசங்கீதன்