"எந்த நேரத்திலும் ஆண்களில் பாதிப்பேர் பொதுவாக கிராமத்திற்கு வெளியே இருப்பார்கள். சிலர் ஹைதராபாதில் உள்ள அம்பர்பெட் மார்க்கெட்டில், சிலர் விஜயவாடாவில் பெசன்ட் சாலையில், இன்னும் சிலர் மும்பையில் உள்ள வாசி மார்க்கெட் அல்லது கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு அருகில் அல்லது தில்லியிலுள்ள பாகர் கஞ்சில் - இவர்கள் அனைவரும் கூடைகள் மற்றும் ஊஞ்சல்களை விற்பனை செய்கின்றனர்", என்று தனது விற்பனை பயணத்தை முடித்துவிட்டு உத்தராஞ்சலில் இருந்து திரும்பி வந்த மயிலாபிலி பட்டையா கூறுகிறார்.
42 வயதாகும் பட்டயா தனது கிராமத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே நைலான் கயிறு கூடைகள், பைகள், ஊஞ்சல்கள் ஆகியவற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்ய தொடங்கினார். அதுவரை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரணாஸ்தலம் வட்டத்தில் வங்காள விரிகுடாவை ஒட்டி உள்ள சுமார் 250 பேர் வசிக்கும் சிறிய கடற்கரை கிராமமான கோவடாவில் (மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜீரூ கோவடா என்று பட்டியலிடப்பட்டுள்ளது) மீன்பிடித்தல் தான் முக்கியத் தொழிலாக இருந்தது.
பின்னர் நீர் மாசுபாடு, இப்பகுதியின் நீர் வளத்தை அழிக்க தொடங்கியது. 1990களில் இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைடிபீமாவரம் கிராமத்தில் மருந்து தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவை நிலத்தடி நீரையும், கடல் நீரையும் மாசுபடுத்தியதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மருந்து உற்பத்தியை அதன் அபாயகரமான கழிவுகள் காரணமாக 'சிவப்பு வகை' நடவடிக்கை என்று வகைப்படுத்துகிறது. 1990களின் முற்பகுதியில் உலகமயமாக்கல் செய்யப்பட்ட பிறகு, மருந்து உற்பத்தித் துறை பெருகத் தொடங்கியது, "இத்தொழில் இந்திய பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது", என்று இந்தியாவில் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் மருந்து தயாரிப்பு மாசுபாட்டின் தாக்கங்கள் என்ற தலைப்பில் செய்யப்பட்ட ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இத்தொழில்துறை மையங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவை இருக்கின்றன. "தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச பகுதியில் மருந்து உற்பத்தித் துறையின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட நீடித்த எதிர்மறையான தாக்கங்கள்", பற்றி இந்த அறிக்கை பேசுகிறது.
கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தொழிற்சாலைகளுடன், பைடிபீமாவரம் - ரணாஸ்தலம் பகுதி இப்போது ஆந்திர பிரதேசத்தில் ஒரு பெரிய மருந்து உற்பத்தி மையமாக உள்ளது. 2008 - 2009 ஆம் ஆண்டில் இந்த தொழில்துறை பகுதி ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாக ஆன பிறகு மேலும் பல புதிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி சாலைகளை இங்கே அமைக்கத் தொடங்கியதால் இத்துறைக்கு மேலும் ஊக்கம் கிடைத்தது. 2005 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல சட்டம், பல வரிகளை விலக்குகிறது மற்றும் தொழிலாளர் சட்டங்களை தளர்த்துவதுடன், தொழில்களுக்கு மானியங்களையும் வழங்குகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் 19 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன, அதில் பைடிபீமாவரத்தில் உள்ள 4 உட்பட - இது மருந்து உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.
"அவர்களின் (வெளியேற்ற) குழாய்கள் கடலுக்குள் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன, ஆனால் நாங்கள் மீன்பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் கடற்கரையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் மருந்து தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் எண்ணெய்கள் தென்படுகின்றன", என்று கூறுகிறார் கனகல்ல ராமுடு, கோவடாவில் எஞ்சியிருக்கும் தேபா (துடுப்பு படகு) ஒன்று அவருக்கு சொந்தமாக இருக்கிறது (அட்டைப்படம்). "இருபது வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு தேபா இருந்தது. இப்போது மொத்தமே பத்து தான் மீதமிருக்கிறது", என்று கூறுகிறார். "நாங்கள் ரணஸ்தலத்திலுள்ள மண்டல வருவாய் அலுவலகத்திற்கு முன்பு 2010ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று மாதங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால் யாருமே அதை பொருட்படுத்தவில்லை. அதனால் போராட்டத்தை கைவிட்டு விட்டு மீண்டும் பணிக்கு திரும்பினோம் என்றார்".
"மருந்து உற்பத்தித் தொழிற்சாலையால் ஏற்பட்ட மாசுபாட்டின் காரணமாக இப்பகுதியின் நீர்வாழ் வளம் அழிக்கப்பட்டது. இறந்த ஆமைகள் மற்றும் மீன்கள் கடற்கரையில் அடிக்கடி ஒதுங்கும் இதில் ஆலிவ் ரெட்லி ஆமைகளும் அடங்கும். கடல் படுகையில் உள்ள தாவரங்கள் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு நீர்வாழ் விலங்குகளையும் நச்சாக்கிவிட்டது", என்று புதுமுறு கிராமத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான குணம் ராமு கூறுகிறார், இவர் தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டணியுடன் தொடர்புடையவர்.
இதனால் கோவடா மற்றும் இங்குள்ள பிற கிராமங்களில் மீன்பிடித்தல் என்பது பயனற்ற செயலாக மாறிவிட்டது. 40 வயதாகும் மயிலபிலி ஆப்பண்ணா, "நீண்ட நேரம் கடினமாக உழைத்தும் மீன்கள் கிடைக்காததால், நாங்கள் இப்போது மீன்பிடிக்கச் செல்வதில்லை", என்று கூறினார். நாங்கள் அதிகாலை 4 மணிக்கு கடலுக்குச் சென்று 20 கிலோமீட்டர்கள் வரிசையாக 8 முதல் 9 மணிக்குள் வலையை விரித்து விடுவோம் மேலும் கரைக்கு திரும்பும் வரை சில மணிநேரங்கள் காத்திருந்து 2 அல்லது 3 மணிக்கு கரைக்கு திரும்புவோம். நான்கைந்து பேர் ஒரே தேபாவில் செல்வோம். நாளின் முடிவில் ஒரு ஆளுக்கு 100 ரூபாய் கூட மிஞ்சாது", என்று அவர் கூறினார்.
"நாங்கள் பிடிக்கும் மீன்கள் எங்கள் வீட்டில் குழம்புக்கு கூட போதுமானதாக இருப்பதில்லை, அதை விற்று பணம் சம்பாதிப்பதைப் பற்றி மறந்துவிட வேண்டியது தான். எங்கள் வீடுகளில் சமைக்க விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் அல்லது ரணாஸ்தலம் ஆகிய இடங்களில் இருந்து மீன்கள் வாங்கி வர வேண்டியிருக்கிறது", என்று கூறினார் பட்டையா.
எனவே ஆப்பண்ணாவும், பட்டையாவும், கோவடாவிலுள்ள பலரைப் போலவே கூடைகள், பைகள், ஊஞ்சல்கள் ஆகியவற்றை தயாரித்து நாடு முழுவதும் விற்கத் தொடங்கினார். அவர்கள் பல்வேறு வழிகளை ஆராய்ந்தனர், ஆனால் இதுவே லாபகரமானதாக இருந்தது, மேலும் நைலான் கயிறுகள் ஸ்ரீகாகுளத்தில் எளிதாக கிடைத்தன என்று அவர்கள் கூறினர். "கடந்த 20 வருடங்களாக 24 மாநிலங்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை நான் சென்றிருக்கிறேன்", என்று ஆப்பண்ணா கூறினார். "நான் கூடைகளை செய்கிறேன் என் கணவர் அவற்றை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்று வருவார்", என்று அவரது மனைவி லட்சுமி கூறினார்.
ஒரு கிலோ நைலான் கயிறுக்கு 350 முதல் 400 ரூபாய் வரை ஆகும், இதில் டெம்போ அல்லது ட்ரக் மூலம் கிராமத்திற்கு கொண்டு வரப்படும் செலவும் அடங்கும். "ஒரு கிலோ கயிற்றில் இருந்து 50 கூடைகள் தயாரித்து ஒவ்வொரு கூடையையும் 10 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கிலோ ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் லாபம் கிடைக்கும்", என்று ஆப்பண்ணா கூறுகிறார். ஊஞ்சல்கள் துணி மற்றும் நைலானால் செய்யப்பட்டவை ஒவ்வொன்றும் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
கிராமத்தில் உள்ள ஆண்கள் குழுவாக இணைந்து பொருட்களை விற்க தூர இடங்களுக்கு செல்கின்றனர். ஏப்ரல் மாதம் கேரளா பயணத்தில் அவருடன் வந்திருந்த ஆப்பண்ணாவின் நண்பரான கனகல்ல ராமுடு பயணத்தின் போது அவர்களின் உணவு, பயணம் மற்றும் தங்கும் இடத்திற்கான தினசரி செலவுகளை பட்டியலிட்டு காட்டுகிறார், மேலும் நான் மே 15ம் தேதி (ஒரு மாதம் கழித்து) திரும்பியபோது என்னிடம் 6,000 ரூபாய் சேமிப்பு மட்டுமே இருந்தது என்று கூறினார்.
பட்டையாவின் பயணங்கள் அவரை கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேச வைத்துள்ளது. "எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் முக்கியம் என்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் மொழியை கற்றுக் கொள்கிறோம்", என்று அவர் கூறுகிறார். "திருவிழா மற்றும் விசேஷங்களின் போது மட்டுமே இப்போது முழு கிராமமும் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. கூடைகள் மற்றும் ஊஞ்சல்கள் விற்க வெளியே சென்று ஆண்கள் முக்கியமான பண்டிகைகளுக்கு மட்டும் திரும்பி வருகின்றனர், பின்னர் அவர்கள் மீண்டும் சென்றுவிடுவர்", என்றார்.
லட்சுமியைப் போலவே, கிராமத்தில் உள்ள பல பெண்கள் கூடைகள், ஊஞ்சல்கள் ஆகியவற்றை தயாரிப்பது தவிர MGNREGA திட்டத்தில் வேலை செய்கின்றனர் அதற்கு பணம் எப்போதாவது கிடைக்கிறது. "நான் 4 வாரங்கள் வேலை செய்தேன், ஆனால் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் 2 வாரங்களுக்கு மட்டுமே ஊதியம் கிடைத்தது", என்று 56 வயதாகும் மயிலபிலி கண்ணம்பா கூறுகிறார், மேலும் இவர் அருகிலுள்ள கிராமங்களில் கருவாடு விற்பனை செய்துவருகிறார். 2018 - 19 நிதியாண்டிற்கான குறைந்தபட்ச MGNREGA ஊதியம் ஆந்திராவில் 205 ரூபாய். "நாங்கள் விசாகப்பட்டினத்திலிருந்து மீன்களை பெற்று அவற்றை விற்பதற்கு முன் இரண்டு நாட்களுக்கு உலர்த்துகிறோம். ஒரு காலத்தில் இந்த மீன்கள் எங்களுக்கு இலவசமாக கிடைத்தது. இப்போது 2,000 ரூபாய் லாபம் கிடைப்பதற்கு 10,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது", என்று கூறினார் கண்ணம்பா.
இன்னும் சிறிது காலத்துக்குப் பிறகு இந்த சிறிய லாபம் கூட சாத்தியமில்லை. கோவடா உட்பட மூன்று கிராமங்கள் மற்றும் இரண்டு குக்கிராமங்களில் 2,073 ஏக்கரில் முன்மொழியப்பட்ட அணுமின் நிலையம் வந்தால் அது கிராம மக்களை மொத்தமாக இடம்பெயர்த்து, கூடைகள் மற்றும் ஊஞ்சல் வியாபாரத்தை சீர்குலைத்து, மீன்பிடித்தலை மேலும் அழித்துவிடும். காண்க மின்மிகை மாநிலத்தில் அதிகாரமின்மை.
தமிழில்: சோனியா போஸ்