”பள்ளிக்கு செல்வதற்கு முன் இந்த வேலைகளை நான் செய்தாக வேண்டும். வேறு யார் செய்வார்?” என தாய்மாட்டின் பாலை குடிக்க கன்றை கழற்றியபடி 15 வயது கிரண் கேட்கிறார். அவரது ஓரறை வீட்டில் நோய்வாய்ப்பட்ட தாயும் தம்பி ரவியும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். வீட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் அவர் கன்றை மீண்டும் தொழுவத்தில் கட்ட வேண்டும். பிறகு அவரது தாத்தா பசுவில் பால் கறப்பார்.
வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்டாலும் இன்று கிரண் வேலை பார்க்கவும் போவதில்லை. பள்ளிக்கு செல்லவும் போவதில்லை. அவருக்கு இது மாதவிடாயின் முதல் நாள். உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். தொற்றுக்கு பிறகு அவரின் வயிற்று வலி இன்னும் மோசமடைந்திருக்கிறது. ஆனாலும் அவர் வீட்டு வேலைகளை காலை 6.30 மணிக்கு முன்னரே முடித்துவிட வேண்டும். “பள்ளிக்கூடத்தில் காலை கூடுகை 7 மணிக்கு தொடங்கும். பள்ளிக்கு நான் நடந்து செல்ல 20-25 நிமிடங்கள் பிடிக்கும்,” என்கிறார் அவர்.
கிரண் தேவி 11ம் வகுப்பு படிக்கும் அரசாங்கப் பள்ளி உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்திலுள்ள கர்வி தாலுகாவின் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு. அவர் அங்கு தம்பி ரவி, 40 வயது தாய் பூனம் மற்றும் 67 வயது தாத்தா குஷிராம் ஆகியோருடன் வசித்து வருகிறார். வீட்டுக்கு பின் இருக்கும் 800 சதுர அடி நிலத்தை தாத்தா பார்த்துக் கொள்கிறார். அங்கு அவர்கள் கோதுமை, சுண்டல் மற்றும் சில காய்கறிகள் போன்றவற்றை விளைவிக்கின்றனர். பூனத்துக்கு கை மூட்டுகளிலும் கால் மூட்டுகளிலும் கடுமையான வலி உண்டு. அதனால் அவர் வீட்டில் வேலை பார்ப்பது குறைவுதான். விளைவாக கிரணுக்கு அதிக பொறுப்புகள் சுமத்தப்படுகின்றன.
கிரணின் அன்றாட வேலைகள் தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. “இந்த சிறு வேலைகளை செய்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. மாதவிடாய் வலி வருகையில்தான் பிரச்சினை ஆகிறது.”
கோவிட் தொற்றால் தடைபட்டிருக்கும் கிஷோரி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சானிடரி நாப்கின்கள் பெறும் வாய்ப்பு கொண்ட உத்தரப்பிரதேசத்தின் ஒரு கோடி சிறுமிகளில் கிரணும் ஒருவர். உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் அத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான இளம்பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும். 2015ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த அகிலேஷ் யாதவால் தொடங்கப்பட்ட அத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு சிறுமியும் 10 சானிடரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட்டுகளை பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் உண்மையிலேயே உத்தரப்பிரதேச பெண்களில் எத்தனை பேர் சானிடரி நாப்கின்கள் பெறுகின்றனர் என்பதற்கான தரவறியும் சாத்தியம் இல்லை. பத்தில் ஒரு பங்காக இருந்தாலும் கூட அதன் அர்த்தம் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் தொற்றுக்கு பிறகான ஒன்றரை வருடங்கள் சானிடரி நாப்கின்கள் பெறாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.
மேலும் இத்திட்டம் மீள்வதற்கான வாய்ப்புகளும் குறைவுதான். சில நகரப்பகுதிகளில் திட்டம் திரும்ப செயல்படத் தொடங்கியபோதும் கிரணால் இன்னும் சானிடரி நாப்கின்கள் பெற முடியவில்லை. விலை கொடுத்து வாங்குவதற்கான வசதியும் இல்லை. அவரும் நாப்கின் வாங்க முடியாத ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவர் மட்டும்தான்.
வீடு, மாட்டுத் தொழுவம் மற்றும் வீட்டுக்கு முன்னிருக்கும் பகுதி எல்லாவற்றையும் கிரண் பெருக்கி முடித்துவிட்டார். அலமாரியில் இருக்கும் பழைய கடிகாரம் ஒன்றை ஓடிச் சென்று பார்க்கிறார். “ஓ 6.10 ஆகிவிட்டது!” என்கிறார் அவர். “அம்மா.. எனக்கு நீ வேகமாக சடை பின்னிவிட வேண்டும். இதோ வந்து விடுகிறேன்,” எனக் கத்தியபடி, வீட்டுக்கு வெளியே இருக்கும் பிளாஸ்டிக் தொட்டியை நோக்கி ஓடுகிறார் சாலையோரத்தின் திறந்தவெளியில் குளிப்பதற்காக.
குளியலறை பற்றிய என் கேள்விக்கு அவர் சிரிக்கிறார். “என்ன குளியலறை? கழிவறைக்கு கூட எங்களுக்கு போதுமான நீர் இல்லை. குளியலறை எப்படி எங்களிடம் இருக்கும்? கழிவறையை நான் மாதவிடாய் துணியை மாற்றத்தான் பயன்படுத்துகிறேன்,” என்கிறார் அவர். கோவிட் தொற்று வந்த பிறகு அறிவிக்கப்பட்ட முதல் ஊரடங்கினால் பள்ளியில் வழங்கப்படும் சானிடரி நாப்கின்கள் நிறுத்தப்பட்டதிலிருந்து பருத்தி துணி பயன்படுத்தும் தகவலை சொல்ல கிரண் தயங்குகிறார்.
“சமீபத்தில் ஒரு வகுப்புத் தோழிக்கு வகுப்பறையிலேயே மாதவிடாய் ஏற்பட்டதும் ஆசிரியரிடம் ஒரு நாப்கின் கேட்டாள். ஆனால் இருப்பு இல்லை என சொல்லப்பட்டது. எனவே இன்னொரு தோழி அவளது கைக்குட்டையை கொடுத்தாள்,” என்கிறார் கிரண். “தொடக்கத்தில் பள்ளியில் எங்களுக்கு நாப்கின்கள் தேவைப்பட்டால், ஆசிரியர்களை நாங்கள் கேட்போம். பிறகு ஊரடங்கு வந்தது. பள்ளிகள் மூடப்பட்டன. அதற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் நாப்கின்கள் இல்லை. பள்ளிக்கு நாப்கின்கள் இனி வராது என எங்களுக்கு சொல்லப்பட்டது,” என்கிறார் அவர்.
கிரணின் மாதவிடாய் வலி நிறைந்ததாக மாறத் தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களில் தொற்று வந்தபிறகு, மாதவிடாயின் முதல் நாளில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. குடும்பத்தில் எவருக்கும் கோவிட் வரவில்லை என்றபோதும் மொத்த சித்ரகூட் மாவட்டமும் பாதிப்புக்குள்ளானது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். சிலர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாவட்ட மருத்துவமனையில் கூட அனுமதிக்கப்பட்டனர்.
கோவிட் தொற்றின் நேரடித் தாக்கம் அதிகமான வலி நிறைந்த மாதவிடாய் போக்கை தருமென்றாலும், “அழுத்தம், பதற்றம், சத்துகுறைபாடு, தூக்கத்தில் மாறுபாடு, உடலுழைப்பு போன்ற மறைமுக பாதிப்புகள் இனவிருத்தி சுகாதாரத்தையும் மாதவிடாயையும் பாதிக்கும்,” எனக் குறிப்பிடுகிறது யுனிசெஃப் . அக்டோபர் 2020-ல் ‘Mitigating the impacts of COVID-19 on menstrual health and hygiene’ என்ற தலைப்பில் வெளியான ஆய்வின்படி “மாதவிடாய் சிக்கல்கள் கோவிட் தொற்றுக்கு பிறகு அதிகமாகியிருக்கிறது.”
கிரண் வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஃபூல்வடியா, பள்ளியிலிருந்து சானிடரி நாப்கின்கள் பெறுவது நின்றுவிட்டது. “பள்ளி (தொற்றுக்குப் பிறகு) மூடப்பட்டதும் நான் துணி பயன்படுத்த தொடங்கி விட்டேன். அவற்றை துவைத்து வீட்டிலேயே காய வைக்கிறேன்,” என பாரியிடம் 2020ல் கூறினார். அவரும் கிராமப்புற சித்ரகூட்டில் இருக்கும் அவரை போன்ற ஆயிரக்கணக்கான சிறுமிகளும் சானிடரி நாப்கின்களை நன்கொடைகளாகக் கூட அச்சமயத்தில் பெறவில்லை. கிட்டத்தட்ட 3-4 மாதங்களுக்கு அந்த நிலை நீடித்தது. இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் மீண்டும் துணி பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். “பள்ளி நாப்கின்களை தராததால் நான் துணியைத்தான் பயன்படுத்துகிறேன். அந்த வசதி எங்களுக்கு முடிந்துவிட்டது என நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.
எனினும் மாநிலத்தின் தலைநகரில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்கிறார் லக்நவ் மாவட்டத்தின் ககோரி ஒன்றியத்திலுள்ள சரோசா பரோசாவின் கம்போசிட் பள்ளி ஆசிரியரான ஷ்வேதா ஷுக்லா. “எங்களது பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் நாப்கின்கள் பெறுகின்றனர். வழங்கப்படும் நாப்கின்களை கணக்கில் வைக்க ஒரு பதிவேடையும் வைத்து பராமரிக்கிறோம்,” என்கிறார் அவர். ஆனால் கிராமப்புற உத்தரப்பிரதேசத்தின் நிலை அவருக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. “அரசாங்கப் பள்ளிகளில் இது போன்ற சூழல் இயல்புதான். நாம் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் வசதியோ நம் குழந்தைகளுக்கு நல்ல சூழலோ இல்லாதிருக்கும் நிலையில் எதுவும் செய்ய முடியாது,” என்கிறார் அவர்.
கிரண் மற்றும் ரவி ஆகியோரை தனியார் பள்ளிக்கு அனுப்பும் கனவில் பூனம் தேவியும் அவரது கணவரும் இருந்தனர். “என் குழந்தைகள் படிப்பில் கெட்டி. கேந்திரா வித்யாலயா போன்ற பள்ளியில் படிக்க என் குழந்தைகளை அனுப்ப ஏதும் வழி இருக்கிறதா?” என கேட்கிறார் அவர். ”எங்களிடம் பெரியளவில் பணம் இல்லை எனினும் அவர்களின் தந்தை நல்ல பள்ளிக்கு எங்கள் குழந்தை செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். அப்போதுதான் அவர்கள் நகரங்களுக்கு சென்று வேலை பார்த்து வசதியாக வாழ முடியும்,” என்கிறார். ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு கிரணுக்கு ஐந்து வயது ஆகும்போது எலக்ட்ரீசியனாக இருந்த அவரின் தந்தை வேலையிலிருக்கும்போது இறந்தார். பூனம் நோய்வாய்ப்பட்ட பிறகு சூழல் சவால் நிறைந்ததானது. விவசாயத்திலிருந்து அதிக வருமானம் இல்லை. இத்தகைய பின்னணியில் மாதவிடாய் சுகாதாரத்தை பள்ளி பார்த்துக் கொள்வதென்பது அவர்களுக்கு பெரும் வரம்.
கிரண் போன்ற லட்சக்கணக்கான சிறுமிகள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற வழிகள் கடைபிடிக்கும் நிலைக்கு திரும்பியிருக்கின்றனர். தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் இந்திய பள்ளிக் கல்வி 2016-17 அறிக்கையின்படி 1 கோடிக்கும் மேலான சிறுமிகள் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படிக்கின்றனர். மாணவிகள் மாதவிடாய் காலத்தில் வகுப்புகளை தவற விடக் கூடாது என்பதற்காகதான் சானிடரி நாப்கின் விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015ம் ஆண்டில் மாநில அளவில் அந்த எண்ணிக்கை 28 லட்சமாக இருந்தது. தற்போது இந்த திட்டம் இல்லாமல் பெண்களின் சுகாதாரம் உத்தரப்பிரதேசத்தில் எப்படி இருக்குமென்பது தெரியவில்லை.
சித்ரக்கூட் மாவட்ட மாஜிஸ்திரேட் ஷுப்ரந்த் குமார் ஷுக்லா எளிமையாக இச்சூழலை பார்க்கிறார். “தொற்றுக்கு பிறகு விநியோகச் சங்கிலியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்குமென நினைக்கிறேன்,” என்கிறார் அவர். ”அப்படி ஏதும் இல்லையெனில் சிறுமிகளுக்கு நாப்கின்கள் கிடைக்க வேண்டும். உடனடி தீர்வாக, தேவை இருக்கும் சிறுமி அருகே இருக்கும் அங்கன்வாடி மையத்தை அணுகி சானிடரி நாப்கின்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து மாத்திரைகள் கூட அங்கு அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்,” என்கிறார் அவர். கிரண் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் அவரது தோழிகள் எவருக்கும் இப்படியொரு சாத்தியம் இருப்பது தெரியாது. சித்ரக்கூட்டின் அங்கன்வாடிகளில் கிடைக்கும் நாப்கின்களும் கூட பிரசவாமான புதுத்தாய்களுக்குதான் என சிதாப்பூர் ஒன்றியத்தின் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் சொல்கிறார்.
2020ம் ஆண்டின் சுதந்திர தின உரையில் பெண்களின் சுகாதாரத்தை பற்றி பேசும்போது “ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின் வழங்கும் மிகப்பெரிய பணியை அரசாங்கம் செய்திருக்கிறது,” எனக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. “குறைந்த காலத்தில் 5 கோடி நாப்கின்களுக்கும் மேல் 6,000 மையங்களிலிருந்து ஏழைப் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டிருக்கின்றன,” என்றார் அவர்.
இம்மையங்கள் பிரதான் மந்திரி பார்திய ஜனௌஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ் மலிவான விலைகளில் பொது மருந்துகளை கொடுக்கிறது. ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான ஒன்றிய அமைச்சகத்தின்படி 1616 மருந்துகளும் 250 அறுவை சிகிச்சை உபகரணங்களும் வழங்கும் 8,012 மையங்கள் ஆகஸ்ட் 2021 நிலவரப்படி இயங்குகின்றன.
ஆனால் இத்தகையவொரு மையம் கிரண் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் எங்குமில்லை. நாப்கின் அவர் வாங்க முடிகிற இடம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மருந்தகம் மட்டும்தான். ஒரு பாக்கெட் 45 ரூபாய் விலை. அவரால் கொடுக்க முடியாத விலை.
நாப்கின்கள் கிடைப்பதில்லை என்பதை தாண்டி, மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு பள்ளிகளில் இருக்கும் வசதிகள் போதுமானதாக இல்லை. “நான் பள்ளியிலிருக்கும்போது நாப்கின் மாற்ற வீடு வரும் வரை நான் காத்திருக்க வேண்டும். ஏனெனில் சரியான குப்பைத்தொட்டிகள் அங்கு இல்லை. சில நேரங்களில் ஒரு நாப்கின் அதிக ஈரமாகி பள்ளியிலிருக்கும்போதே என்னுடைய சீருடையை கறையாக்கி விடும். பள்ளி முடியும்வரை நான் எதுவும் செய்ய முடியாது,” என்கிறார். கழிவறைகள் கூட சுத்தமாக இருப்பதில்லை. “ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் அவை சுத்தப்படுத்தப்படும். திங்கட்கிழமைகளில் மட்டும்தான் கழிவறைகள் சுத்தமாக இருக்கும். நாளாக ஆக மோசமாகிவிடும்,” என்கிறார் அவர்.
லக்நவ் நகரத்தில் குப்பங்களில் வாழும் இளம்பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் தொடர்பான சவால்களை குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று, இந்த சவால்கள் பல்வேறு மட்டங்களில் - தனிப்பட்ட, சமூக, நிறுவன) இருப்பதாகக் குறிப்பிடுகிறது. “தனிப்பட்ட மட்டத்தில் இளம்பெண்களுக்கு இதை பற்றிய புரிதல் கிடையாது. சமூகத்தில் இளம்பெண்கள் மாதவிடாய் சார்ந்து பல பாரபட்சங்களை எதிர்கொள்கின்றனர். அதை பற்றி பேசக் கூட இடம் கிடையாது. மாதவிடாய் காலத்தில் அதிகம் நடமாடவும் செயல்படவும் தடைகல் இருக்கின்றன. நிறுவன மட்டத்தில் உதாரணமாக ஒரு பள்ளியில் மாதவிடாய் பெண்களுக்கு தேவையான வசதிகள் கிடையாது. கழிவறைகள் மோசமாக இருக்கின்றன. கதவுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறது அந்த ஆய்வு.
லக்கிம்புர் கெரி மாவட்டத்தின் ராஜாப்பூர் கிராமத்து தொடக்கப் பள்ளியின் முதல்வரான ரிது அவஸ்தி, சுத்தப்படுத்தும் ஊழியர்கள்தான் உண்மையான பிரச்சினை என்கிறார். மேலும் உத்தரப்பிரதேச பள்ளிகளில் இருக்கும் குப்பை நிர்வாகமும் மோசம் என்கிறார். “இங்கு சானிடரி நாப்கின்கள் சிறுமிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. கழிவுகளை எரித்துவிடும் வசதியும் இருக்கிறது. ஆனாலும் பிரச்சினை இருப்பதற்கு காரணம் சுத்தப்படுத்தும் ஊழியர்கள்தான். அரசாங்கம் கூட்டுவதற்கு பணியமர்த்தும் ஆட்கள் ஊர்த் தலைவரின் கீழ் பணிபுரிகிறார்கள். எனவே அவர்கள் சொல்வதைத்தான் ஊழியர்கள் கேட்கிறார்கள். பள்ளிகள் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் வாரத்துக்கு இருமுறைதான் சுத்தப்படுத்தப்படுகின்றன,” என்கிறார் அவர்.
சூரியக் கதிர்கள் கிரணின் வீட்டுக்குள் நுழைந்து மூன்று மரக்கட்டில்களினூடாக செல்கையில் அவர் வீட்டு வேலைகளை முடித்து தயாராகிக் கொண்டிருக்கிறார். மகளுக்கு பூனம் அழகான இரட்டை சடை போட்டி ரிப்பன் கட்டியிருக்கிறார். “கிரண், சீக்கிரம் வா, நான் இங்கு காத்திருக்கிறேன்,” என வெளியே இருந்து கத்துகிறார் ரீனா சிங். கிரணின் வகுப்புத் தோழியான அவர் பள்ளிக்கும் அவருடன் சேர்ந்து பயணிப்பவர். வெளியே ஓடி வரும் கிரண் அவருடன் சேர, இரு சிறுமிகளும் வேகவேகமாக பள்ளி நோக்கி நடக்கின்றனர்.
ஜிக்யாசா மிஷ்ரா, தாகூர் குடும்ப அறக்கட்டளையில் பெறும் சுயாதீன இதழியலுக்கான மானியத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றிய செய்திகளை எழுதுகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்