குடும்பத்துக்கான உணவுப் பொருட்களை வாங்க நிஷா யாதவ் வழக்கமான தூரத்தையும் தாண்டி கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டிருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியிலிருக்கும் பெட்டிக்கடை அவருக்கு எதையும் விற்பதில்லை. “அப்பா மருத்துவமனைக்கு சென்றதிலிருந்து ராஜன்வாலா (கடை உரிமையாளர்) கடைக்குள் எங்களை அனுமதிப்பதில்லை,” என்கிறார் அவர்.
ஜூன் மாதக் கடைசியில் என் அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பெற்று தற்போது குணமாகிவிட்டார்,” என்கிறார் நிஷா. “வீட்டிலிருக்கும் நாங்கள் இரு வாரங்களுக்கு தனிமையில் இருந்தோம். அப்பா ஒரு மாதத்துக்கு முன்னரே சரியாகிவிட்டாலும் கடைக்குள் நாங்கள் நுழைந்தால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என சொல்கிறார் கடைக்காரர். ஆகவே எங்களில் ஒருவர் முழங்கால் அளவு சேற்றிலும் சகதியிலும் நடந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் உறவினர்களிடமிருந்து காய்கறிகள் வாங்கி வர வேண்டியிருக்கிறது.”
ஆறு வருடங்களுக்கு முன் பதினோறாம் வகுப்பு படிப்பை நிறுத்திய நிஷாவுக்கு 24 வயதாகிறது. உத்தரப்பிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்திலுள்ள ஹதா ஒன்றியத்தின் சோஸா மதியா கிராமத்தில் வசிக்கிறார். கோரக்பூர் டவுனிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவரது கிராமம் கடுமையான மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
”என்னுடைய மாமாவும் அத்தையும் எங்களுக்கான பொருட்களை வாங்கி வைப்பார்கள். பிறகு நாங்கள் பணம் கொடுத்துவிடுவோம்.” பேசிக் கொண்டிருக்கும்போது கூட தன் சல்வாரை மூன்று மடிப்பு மடித்துக் கொண்டிருந்தார் நிஷா. அவருடைய வீட்டுக்கு மழை நீரின் ஊடாக நடந்து செல்லவிருக்கிறார். மாலை தேநீருக்கு அவர் குடும்பத்திடம் சர்க்கரை தீர்ந்து போயிருந்தது.
47 வயதாகும் ப்ரஜ்கிஷோர் யாதவ்தான் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். ஜூன் மாதம் தில்லியிலிருந்து வந்தார். அவரின் மூத்த மகள்தான் நிஷா. தில்லியில் ஜீன்ஸ் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து மாதத்துக்கு 20000 ரூபாய் சம்பாதித்தார். ஆறு வருடங்களுக்கு முன் நிஷாவின் தாய் பாம்பு கடித்து இறந்துபோனார். அப்போதிலிருந்து இரண்டு தம்பிகளையும் நிஷாதான் கவனித்துக் கொள்கிறார். 14 வயதாகும் பிரியான்ஷு எட்டாம் வகுப்பும் 20 வயதாகும் அனுராக் இளங்கலை இரண்டாம் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது ஊரடங்கால் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். இரண்டு வேளை சாப்பாட்டுக்கு கூட திண்டாடும் ஒரு குடும்பத்தில் ஸ்மார்ட்ஃபோன் இருப்பதோ இணையவழிக் கல்வி கற்பதோ யோசித்து கூட பார்க்க முடியாத விஷயம். புலம்பெயர்ந்து வேலை பார்க்கும் அவர்களின் தந்தையிடமே சாதாரண செல்ஃபோன்தான் இருக்கிறது. அடுத்தக்கட்ட படிப்புக்கு செலுத்த இருவரிடமும் பணம் இல்லை.
”இந்த வருடம் நாங்கள் படிக்க முடியாது. கல்வி முக்கியமான விஷயமாக கருதும் நிலையை நாங்கள் கடந்துவிட்டோம். அடுத்த வருடம் ஒருவேளை படிக்கலாம்,” என்கிறார் அனுராக்.
”மாதந்தோறும் 12000த்திலிருந்து 13000 ரூபாய் வரை அப்பா அனுப்பிக் கொண்டிருந்தார்,” என்கிறார் நிஷா. “ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்து நாங்கள் உயிர் வாழ பட்ட பாடு அதிகம். சில நாட்களை வெறும் ஒரு வேளை உணவோடு முடித்திருக்க்கிறோம்.”
”அப்பா ஜூன் மாத பிற்பகுதியில் வந்தார். புலம்பெயர் தொழிலாளர்களின் தனிமை சிகிச்சைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பள்ளியில் பரிசோதனை செய்து கொண்டார். துரிதப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே அங்கேயே அவர் தங்க வைக்கப்பட்டார். ஒரு வாரம் கழித்து விரிவான பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என கண்டறியப் பட்டது. எனவே ஜூலை 2ம் தேதி அனுப்பப்பட்டார். அவர் குணமாகி விட்டார். ஆனால் நாங்கள் அவதூறுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறோம்.”
”தில்லியிலிருந்து கோரக்பூர் வர லாரி டிரைவருக்கு 4000 ரூபாய் கொடுத்தேன்,” என்கிறார் ப்ரஜ்கிஷோர். பின் ஒரு பொலேரோவில் கிராமத்துக்கு வந்து சேர 1000 ரூபாய் கொடுத்தேன். தில்லியில் என் நண்பர்களிடம் வாங்கியிருந்த 10000 ரூபாய் கடனிலிருந்து அவற்றுக்கு செலவு செய்தேன். குழந்தைகள் வெறும் பருப்பு ரொட்டியும் உப்பு-அரிசியும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் அப்பணம் எனக்கு தேவைப்பட்டது. ஆனால் கையில் மிஞ்சியது வெறும் 5000 ரூபாய்தான். அந்த காசும் கொரோனா சிகிச்சையில் கழிந்துவிட்டது. மருந்துகளின் விலை அதிகம். மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டபின் வீட்டுக்கு 500 ரூபாய் செலவழித்து ஆட்டோவில் வந்தேன். இப்போது எனக்கு வேலை ஏதும் இல்லை.”
“சொல்லுங்கள், நான் எப்போது தில்லிக்கு போக முடியும்?” என கேட்கிறார் அவர். “இங்கே எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக பக்கத்து வீட்டுக்காரர்களும் கடைக்காரர்களும் எங்களை எதிர்க்கிறார்கள். என் மீது என்ன தப்பு இருக்கிறது?”
இந்த மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் பெரிய ஆலைகள் எதுவும் இல்லை. இருந்திருந்தால் இப்படி குடும்பத்தை விட்டுச் சென்று இப்போது இப்படி அவதிப்பட்டிருக்க மாட்டோம்,” என்கிறார் ப்ரஜ்கிஷோர்.
*****
வழக்கமாக அருந்துவதை விட குறைவான குடிநீரையே சில நாட்களாக அருந்துகிறார் சூரஜ் குமார் ப்ரஜபதி. கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகும் சிகிச்சை மையத்தில் இருக்கும் அசுத்தம் வேறு நோய்களை கொண்டு வந்து விடுமோ என அஞ்சுகிறார். “குடிப்பதற்கு தகுதியற்ற குடிநீர் இது. நீர்க்குழாயும் அது இருக்கும் பகுதியும் முழுக்க பான்பராக் எச்சில்தான். அதை நீங்கள் பார்த்துவிட்டால், தாகத்தோடயே இருந்துவிடலாம் என நினைப்பீர்கள்,” என்கிறார் அவர்.
ஓர் அரசு முகாமில் தொற்று உறுதியான பிறகு சூரஜ், உத்தரப்பிரதேசத்தின் சண்ட் கபீர் மாவட்டத்திலுள்ள கலீலாபாத் ஒன்றியத்தின் செயிண்ட் தாமஸ் பள்ளியில் தனிமை சிகிச்சையில் இருந்தார். இரண்டாமாண்டு இளங்கலை படிக்கும் 20 வயதான மாணவர் அவர். இருமல் அதிகமானதும் சென்று பரிசோதித்துக் கொண்டார்.
“என் பெற்றோர், இரு சகோதரர்கள் ஒரு சகோதரி என அனைவரும் கலீலாபாத் டவுனில்தான் வாழ்கிறோம். (அவரின் சகோதரர்களும், அனைவரும் இளையவர்கள், அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள்.) ”கடந்த சில மாதங்களாக என் தந்தை தேநீரும் பக்கோடாவும் விற்கிறார். மிகவும் குறைந்த வருமானமே கிடைக்கிறது.,” என்கிறார் சூரஜ். “சாலையில் யாருமே செல்வது கிடையாது. யார் வாங்குவார்? ஜூலை மாதத்தில் கொஞ்சம் வியாபாரம் ஆனது. ஆனால் அதுவும் கொஞ்சம்தான். ஊரடங்கால் சனி மற்றும் ஞாயிறு கடைக்கு விடுமுறை (அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டுமென அரசின் உத்தரவு இருந்தது). ஒவ்வொரு நாளும் சுத்தமான குடிநீரை வாங்கி அனுப்ப சொல்லி என் அப்பாவை நான் கேட்க முடியாது.”
துரித பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 80 பேரும் சூரஜ்ஜுடன் பள்ளியில் தனிமை சிகிச்சையில் இருந்தனர். 25 அடி நீளமும் 11 அடி அகலமும் கொண்ட அறையில் சூரஜ் இருக்கிறார். அவருடன் ஏழு பேரும் இருக்கின்றனர்.
“காலை 7 மணிக்கு தேநீருடன் ப்ரெட் பக்கோரா தருவார்கள். மதிய உணவாக பருப்பு-ரொட்டி அல்லது அரிசி 1 மணிக்கு கிடைக்கும். நாங்கள் இளைஞர்கள் என்பதால் எங்களுக்கு வேகமாக பசிக்க ஆரம்பித்துவிடும்,” என சொல்லி சிரிக்கிறார். “மாலையில் திரும்ப தேநீர் கொடுப்பார்கள். இரவுணவு (பருப்பு-ரொட்டி) 7 மணிக்கு கொடுப்பார்கள். இங்கு உணவுக்கு பிரச்சினையில்லை. சுத்தமின்மைதான் பெரும் பிரச்சினை.”
பள்ளியின் ஒவ்வொரு அறைக்கும் வெளியே குப்பை குவியல் இருக்கும். உள்ளே இருப்பவர்களுக்கு உணவு கொடுத்த அட்டைபெட்டிகள், மிச்சமீதி, அட்டை தம்ளர்கள் எல்லாம் மொத்த தாழ்வாரத்திலும் கிடக்கிறது. “கடந்த எட்டு நாட்களில் ஒருவர் கூட பெருக்கி நான் பார்க்கவில்லை. டாய்லெட்டுக்கு செல்லும்போது மூக்கை பொத்திக் கொள்வோம். மொத்த சிகிச்சை மையத்துக்கு ஒரே ஒரு டாய்லெட்தான். பெண்களுக்கான டாய்லெட் பூட்டப்பட்டிருக்கிறது. ஏனெனில் பெண்கள் யாரும் இங்கில்லை. சில சமயம் வாந்தி வருவது போல் கூட உணர்ந்திருக்கிறேன்.”
”கவனித்துக் கொள்பவர்களிடம் பலமுறை புகார் செய்துவிட்டோம். பலனில்லை. அவர்களை கோபப்படுத்திவிடக் கூடாது என்கிற பயமும் இருக்கிறது. நாங்கள் அதிகம் பேசுவதால் எங்களுக்கு உணவு கொடுப்பதை அவர்கள் நிறுத்தி விட்டால் என்ன செய்வது? சிறைகள் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். நாங்கள் குற்றங்கள் மட்டும்தான் செய்யவில்லை. மற்றபடி சிறைவாசம்தான்,” என்கிறார் சூரஜ்.
******
கான்பூர் மாவட்டத்தின் கதாம்பூர் ஒன்றியத்திலுள்ள வீட்டுக்கு வெளியே நின்று கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தியிருக்கும் மருத்துவர் அறிக்கைகளை கோபத்துடன் ஆட்டிக் கொண்டிருந்தார் இத்தான்.
குஜராத்தின் சூரத்திலிருந்து பத்ரி லால்பூர் கிராமத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். கூடவே 50களில் இருக்கும் கணவரும் 30 வயது மகனும் ஏப்ரல் 27ம் தேதி வந்துவிட்டனர். அப்போதிலிருந்து கையில் ஒரு பைசா கூட தங்கவில்லை. “திரும்பி வரும் பயணம் (இரண்டு இரவுகள் மூன்று நாட்களில் 1200 கிலோமீட்டர்) மிகவும் மோசமாக இருந்தது. மூடப்படாத லாரி ஒன்றில் 45 பேர் ஏற்றப்பட்டோம். திரும்பி வர நாங்கள் எடுத்த முடிவு உண்மையில் தவறானது,” என்கிறார் அவர். “ஒன்பது வருடங்கள் சூரத்திலிருந்த ஒரு நூல் ஆலையில் வேலை பார்த்தோம்.” உத்தரப்பிரதேசத்தில் விவசாயக்கூலிகளாக அவர் ஈட்டிய வருமானம் போதாததால் இடம்பெயர்ந்தனர்.
வெளிர்நீல வீடு ஒன்றின் வெளியே நின்று கொண்டிருந்தார். அந்த வீட்டுச் சுவர் அநேகமாக பூச்சை பார்த்திருக்கவேயில்லை. இத்தானின் கோபமான குரலும் செய்கையும் பார்த்து சில குழந்தைகள் எங்களை சுற்றி கூடினர்.
சமீபத்தில் என் மகனுக்கு முடி வெட்ட முடியாதென சலூன்கடைக்காரர் கூறியிருக்கிறார். ‘நீங்கள் அனைவரும் கொரோனா சுமந்து கொண்டிருக்கிறீர்கள்’
”ஒரு அறை கொண்ட வீட்டை சூரத்தில் 4000 ரூபாய் வாடகைக்கு எடுத்தோம்,” என்கிறார் அவர். ஆலையில், “நாங்கள் ஒவ்வொருவரும் 8000 ரூபாய் சம்பாதித்தோம். மொத்தமாக 24000 ரூபாய். இங்கு திரும்பிய பிறகு 2400 ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை.
“இங்கு விவசாய வேலைகளை பொறுத்தவரை 175 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை எங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த வேலை 365 நாட்களுக்கும் கிடைக்காது. அதனால்தான் நாங்கள் சூரத்துக்கு இடம்பெயர்ந்தோம். இங்கு கிடைத்த வருமானம் மிகக் குறைவாக இருந்தது.”
தன்னம்பிக்கை நிறைந்து 50 வயதுகளில் இருக்கும் அவர் தனக்கு குடும்ப பெயர் இல்லை என சொல்கிறார். “ஆவணங்கள் எல்லாவற்றிலும் இத்தான் என்றுதான் என் பெயரை எழுதுகிறேன்.”
அவர் பெயர் சொல்ல விரும்பாத அவருடைய கணவர் புலம்பெயர் தொழிலாளராக மே மாத முதல் வாரத்தில் திரும்பி வந்தபோது அரசு முகாமில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. “அப்போதிலிருந்து வாழ்க்கை நரகமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
“அவருக்கு தொற்று வந்தது பெரும் அழுத்தத்தை கொடுத்தது. ஆனால் உண்மையான பிரச்சினை அவர் குணமான பிறகே தொடங்கியது. என் மகனும் கணவரும் விவசாய வேலை தேடி போனபோது நிலவுடமையாளர்கள் அவர்களை கொரோனா பரப்புபவர்களென சொல்லி தூற்றினார்கள். நான் அவர்கள் நிலத்தில் கூட காலடி வைக்கக் கூடாது என ஒருவர் கூறினார். மற்ற நிலவுடமையாளர்களிடம் எங்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்றும் சொல்லி வைத்திருக்கிறார்.”
“ நாங்கள் இஸ்லாமியர்கள்”, என்கிறார் அவர் (இத்தான்). ”நாங்கள் மட்டும் திரும்ப அனுப்பப்படுகிறோம். வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைகள் கிடைக்கின்றன. சமீபத்தில் என் மகனுக்கு முடி வெட்ட முடியாதென சலூன்கடைக்காரர் கூறியிருக்கிறார். ‘உங்கள் ஆட்கள் அனைவரும் கொரோனா சுமந்து கொண்டிருக்கிறீர்கள்’ என சொல்லியிருக்கிறார்.”
இத்தானின் கணவருக்கு அரசு முகாமில் மே மாத இறுதியில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆவணத்தை கையில் வைத்துக் கொண்டு, “இந்த பெயர்களை படியுங்கள், எனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது. ஆனால் மருத்துவர்கள் நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஏன் இன்னும் இந்த பாகுபாடு காட்டுகிறீர்கள்?”
கணவரின் தங்கையிடமிருந்து 20000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார் இத்தான். “அவர் வசதியான குடும்பத்தில் கல்யாணம் செய்திருக்கிறார். எப்போது பணத்தை திரும்ப அடைக்க முடியுமென எனக்கு தெரியவில்லை. நூல் ஆலையில் திரும்ப வேலை பார்க்கத் தொடங்கினால் சாத்தியப்படலாம்….”
கடனுக்கான வட்டி எவ்வளவு? “வட்டியா… எனக்கு தெரியவில்லை. திரும்ப கொடுக்கையில் 25000 ரூபாய் நான் கொடுக்க வேண்டும்.”
சூரத்துக்கு திரும்ப செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார் இத்தான்.
ஜிக்யாசா மிஷ்ரா, தாகூர் குடும்ப அறக்கட்டளையில் பெற்ற சுயாதீன பத்திரிகையாளர் மானியம் கொண்டு பொது சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றிய செய்திகளை அளிக்கிறார். இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தில் எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை விதிக்கவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்