2017 ம் ஆண்டு ஜுலை முதல் நவம்பர் மாதம் வரை, விதர்பாவின் பருத்தி விளைவிக்கும் மாவட்டங்களிலிருந்து, குறிப்பாக யாவத்மாலில் மக்கள் வயிற்று வலி, மயக்கம், பார்வை குறைபாடு மற்றும் பதற்றம் போன்ற பிரச்சினைகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கத் துவங்கியது. அவர்கள் அனைவரும் பருத்தி விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்களாக இருந்தார்கள். அவர்கள் வயல்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகப்படுத்தும்போது பாதிப்பு அடைந்திருந்தனர். குறைந்தது 50 பேராவது இறந்திருப்பார்கள். ஆயிரம் பேருக்கு மேல் சில மாதங்களுக்கு  பாதிக்கப்பட்டிருந்தார்கள். கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக அளவில் பருத்தி மற்றும் சோயா பயிர்கள் மீது பயன்படுத்தியதன் விளைவாக இப்பேரிடர் ஏற்பட்டது. விதர்பாவின் விவசாய பொருளாதாரத்தில் நீடித்த பாதிப்பை இது ஏற்படுத்தும்.

மூன்று பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் கட்டுரையில், அந்தக் காலகட்டத்தில் அப்பகுதிகளில் என்ன நடந்தது மற்றும் மஹாராஷ்ட்ரா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு என்ன கண்டுபிடித்தது என்று பாரி அவதானிக்கிறது.

இதே போன்ற மற்றொரு தொடரில், ஏன் இப்பகுதி அதிகளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறது என்பதையும் ஏன் - மரபணு மாற்றப்பட்ட வகை காய்ப்புழுக்களை தாங்கி வளரும் சக்தியை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய - பி.டி பருத்தி பழைய பூச்சியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம். உண்மையில், காய்ப்புழு மீண்டும் வந்து பயிர்களை கடுமையாக தாக்கியது. அஞ்சியதுபோலவே, அது பரவலாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

* * * * *

நாம்தேவ் சோயம், மெதுவாக நடக்கிறார். அவர் நிலைகுலைந்துள்ளார். கேள்விகளுக்கு தயக்கத்துடன் ஏதோ தொலைவிலிருந்து கேட்பதுபோல் பதிலளிக்கிறார்.  அவரது மனைவி தொலைவில் இருந்து அவரை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். “அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்“ என்று அவரது உறவினர் ஒருவர் மென்மையாக கூறுகிறார்.

மொட்டையான தலை மற்றும் நெற்றியில் குங்குமம் பூசி, தனது குடும்பத்தினருடன் கூட்டமாக அமர்ந்திருக்கும் நாம்தேவின் ரத்தச்சிவப்பேறிய கண்கள் அச்சமூட்டும் வகையில் இருக்கிறது. அவரது வயதான பெற்றோர், 25 வயதான நாம்தேவிற்கு பின்னால் அமர்ந்திருக்கும் இருவருக்கும் நீண்ட காலத்திற்கு முன்னரே கால்கள் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டன. அவர்கள் கூலித்தொழிலையே சுவாசமாக கொண்டவர்கள். பெரும்பாலும், உறவினர்களும் கிராமமக்களுமாக இருக்கும் அவர்களின விருத்தாளிகள் தங்களின் மதிய உணவை அப்போதுதான் முடித்திருந்தனர். ஆனால், அனைவரும அமைதியாக இருந்தனர்.

அவர்கள் வீட்டின் கூரைக்குக் கீழ், நாம்தேவிற்கு அருகில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில், ஒரு இளம் நபரின் படம் புதிதாக ப்ரேம் போட்டு வைக்கப்பட்டு அதற்கு ரோஜா மற்றும் சாமந்திப்பூக்களால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் இதழ்கள் சுற்றிலும் சிதறிக்கிடக்கின்றன. அந்த புகைப்படத்திற்கு அருகில் ஊதுபத்திகளும் ஏற்றப்பட்டுள்ளன.

Namdev Soyam, with his parents, Bhaurao and Babybai, mourning the death of his younger brother, Pravin, at their home in village Tembhi of Yavatmal in September 2017
PHOTO • Jaideep Hardikar

நாம்தேவ் சோயம் மற்றும் அவரது பெற்றோர், பாவ்ராவ் மற்றும் பேபி பாய், தெம்பி கிராமத்தில் உள்ள தங்களது வீட்டில் இளம்வயதில் இறந்துவிட்ட பிரவீனுக்காக துக்கம் அனுசரிக்கின்றனர்

தெம்பியில் உள்ள பர்தா ஆசிவாசி விவசாய குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துக்கத்தை அந்த புகைப்படம் உணர்த்துகிறது. இந்த கிராமம் மஹாராஷ்ட்ராவின் யாவத்மால் மாவட்டம் கீழாப்பூர் தாலுகாவில் உள்ள பருத்தி வணிகம் நடைபெறும் பந்தர்கோடா நகரத்திற்கு தெற்கில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

செப்டம்பர் 27ம் தேதி பின்னிரவில், 23 வயதான பிரவீன் சோயம் இறந்து 48 மணி நேரம் கூட ஆகவில்லை. நாங்கள் இந்த வீட்டிற்கு 2017ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தசரா பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக சென்றிருந்தோம்.

பிரவீன், நாம்தேவின் தம்பி. அவருக்கு சிறந்த நண்பரும் ஆவார். அங்கு கூடியிருந்த சோகமான கூட்டத்திலும் பதட்டமாக இருப்பவர் நாம்தேவாகத்தான் இருக்க முடியும். நாம்தேவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது முதல் அவரது தந்தை பிரவீனை வயலுக்கு அனுப்பினார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தார். “அது செப்டம்பர் 25ம் தேதி திங்கட்கிழமை“ என்று அவரது தந்தை பாவ்ராவ் நம்மிடம் கூறினார். பிரவீன், நாம்தேவைவிட ஆரோக்கியமாகவே இருந்தார் என்று பிரவீனின் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்தை வெறித்துப் பார்த்து நம்மிடம் கூறினார்.

One of the relatives of the Soyams shows the different chemicals – pesticides, growth promoters, etc – that the Soyam brothers used for spraying on their cotton plants
PHOTO • Jaideep Hardikar

பூச்சிக்கொல்லி மருந்துகளின் கலவை : பூச்சிகளை கொல்வதற்காகவும், பயிர் விளைவதற்காகவும் சோயம் வயலில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்தது

“அவர் என்ன பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தார்?“ நாம்தேவ் எழுந்து வீட்டிற்குள்ளே சென்று பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்களுடனும், பூச்சி மருந்து தெளிக்கும் பையுடனும் வெளியே வந்தார். அவை அசாடாப், ரூபி, போலோ, ப்ரோபெக்ஸ் சூப்பர் மற்றும் மோனோக்ரோடோபாஸ் ஆகும். அவற்றை, பிரவீனின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ள நாற்காலிக்கு  அருகில் அந்த திண்ணையின் மண் தரையில் அவர் வைத்தார்.

“இவற்றை எதற்காக பயன்படுத்துவது?“ என்று நாம் மீண்டும் கேட்டோம். நாம்தேவ் நம்மை அமைதியாக பார்த்தார். “யார் உங்களுக்கு இவற்றை பயன்படுத்த அறிவுறுத்தியது?“ அந்தக் கேள்விக்கும் அவர் அமைதியாகவே இருந்தார். பந்தர்கோடாவில் உள்ள உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் மற்ற விவசாய இடுபொருட்கள் விற்கும் வினியோகஸ்தர் அவருக்கு இவற்றை வயல்களில் தெளிக்கும்படி அறிவுறுத்தியதாக அவரது தந்தை தெரிவித்தார். அவர்கள் குடும்பத்திற்கு மொத்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது. முழுவதுமே வானம் பார்த்த பூமி. மழையிருந்தால் பயிர் விளையும். அதில் அவர்கள் பருத்தி, குறைந்தளவில் சோயா பீன்ஸ், பருப்பு மற்றும் சோளம் ஆகியவற்றை விளைவித்தனர்.

ஒரு நீல நிற பெரிய பிளாஸ்டிக் டிரம்மில் அனைத்து பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தண்ணீருடன் கலந்து, பிரவீன் அந்த வெயில் நாளில் தெளித்ததுதான் அவர் மயங்கி விழுவதற்கு காரணமானது. அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டதால் இறக்கவில்லை. ஆனால், அவற்றை வயலுக்கு தெளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவாசித்ததால் ஏற்பட்டது. இந்த பூச்சி தாக்குதல் அவர்களின் வயலில் நடந்த அபூர்வமான சம்பவமாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

திடீரென அவர்கள் பிரவீனை இழந்தது அந்த குடும்பத்தினரை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏற்படுத்தும் பேரிடர் விதர்பாவில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

* * * * *

2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை யாவத்மால் மற்றும் விதர்பாவின் மற்ற பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டனர். (இந்த எண்ணிக்கை மாநில அரசால் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து சேகரிப்பட்டது.) சிலருக்கு பார்வை பறிபோனது. ஆனால் அவர்கள் உயிருடன் உள்ளனர். அந்த விளைவும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் கலவையை எதிர்பாராதவிதமாக முகர்ந்ததால் ஏற்பட்டது.

சுகாதார துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு மிக தாமதமாகவே எதிர்வினையாற்றியது. ஆனால், பிரச்சினையின் தீவிரமும் அளவும் அரசை சிறப்பு புலனாய்வு குழுவை நவம்பர் மாதத்தில் அமைத்து இந்த விஷயம் குறித்து ஆய்வுக்கு அனுப்புமளவுக்கு நிர்பந்தப்படுத்தியது. (பார்க்க: எஸ்.ஐ.டி அறிக்கை: முன்னெப்போதும் இல்லாத பயிர்களின் மீதான பூச்சித் தாக்குதல் )

யாவத்மால் முழுவதும் அந்த மூன்று மாதங்களில் மருத்துவமனைக்கு வெள்ளமென விவசாயிகள் வந்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பார்வையிழந்து, சுவாசக்கோளாறுகள், நரம்பியல் பிரச்சனை என பல்வேறு குறைபாடுகளுடன் வந்தனர். (பார்க்க: யவத்மாலின் சீற்றமும் பயமும் )

“இது வழக்கத்துக்கு மாறான ஒன்றாக இருந்ததுடன், நான் இதுவரை சந்தித்திராததாகவும் இருந்தது“ என்று டாக்டர் அசோக் ரத்தோட் கூறினார். அவர் யாவத்மாலில் உள்ள வசந்த்ராவ் நாயக் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக உள்ளார். “நாங்கள் இதுபோன்ற பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் பார்த்தோம்“ என்று அவர் மேலும் கூறினார். “அவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம், படபடப்பு, சுவாசக் கோளாறுகள், பார்வை இழப்பு, நடுக்கம் ஆகிய பிரச்சினைகளுடன் வந்தனர். மாவட்ட மருத்துவமனையின் 12, 18 மற்றும் 19 ஆகிய வார்டுகள் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தன.

Ward number 18 of the Yavatmal Government Medical College and Hospital was flooded with patients mostly farmers who had accidentally inhaled toxic pesticides while spraying on their fields between July and November. This photo was taken in September 2017
PHOTO • Jaideep Hardikar
Raghunath Shankar Kannake, 44, a marginal farmer, was among the tens of farmers who were admitted to Ward 19, of the Yavatmal Government Medical College and Hospital, during the September-November 2017 incidence following accidental inhalation of pesticide while spraying it on their farms
PHOTO • Jaideep Hardikar

தங்களின் வயல்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது தவறுதலாக அதை சுவாசித்ததால் ஏற்பட்ட கோளாறுகளுடன் வந்த விவசாயிகளால் யாவத்மாலில் உள்ள அரசு மருத்துவமனை நிரம்பி வழிந்தது

2017ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 41 நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். ஆகஸ்டில் 111 பேராக அந்த எண்ணிக்கை உயர்ந்து, செப்டம்பரில் 300 நோயாளிகள் என ஆனது.  அக்டோபர் மற்றும் நவம்பரில் 1,000 விவசாயிகளுக்கு மேலாக அதிகரித்தது. அவர்கள் யாவத்மால் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதே போன்ற நோய் தாக்கங்கள் அகோலா, அமராவதி, நாக்பூர், வர்தா மற்றும் வாஷிம் ஆகிய மாவட்டங்களில் இருந்தன என்று டாக்டர் ரத்தோட் கூறினார்.

மாநில வேளாண் அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் குழம்பினர். இறுதியில் மாநில அரசு டாக்டர் ரத்தோடை இந்த விஷயத்தில் விரைந்து பணியாற்றாததற்காக கட்டாய விடுப்பில் செல்ல அறிவுறுத்தியது. தடயவியல் துறை தலைவரை நாக்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியது. டாக்டர் மணிஷ் ஷிரிங்கிரிவாரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பொறுப்பு தலைமை மருத்துவராக ஆக்கியது.

நவம்பர் இறுதியில் விவசாயிகளின் வருகை குறைந்தது. பனியும் வந்தது. பயத்தில் விவசாயிகள் நன்றாகவே பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்திருந்தனர். ஆனால் அதற்குள் மனிதர்களுக்கும், பருத்தி பயிர்களுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டிருந்தது. அது ஒரு எதிர்பார்த்திராத பூச்சி தாக்குதலாகும்.

* * * * *

அக்டோபரின் முதல் வாரத்தில், 7வது நாளாக தொடர்ந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்ததால், 21 வயதான நிகேஷ் கத்தானே மதிய வேளையில் மயங்கி சரிந்தார். அவர் அந்த வயலில் ஆண்டு ஒப்பந்தத்தில் வேலை செய்திருந்தார்.

“எனக்கு தலை பாரமாக உள்ளது. என்னால் எதையும் பார்க்க முடியவில்லை“ என்று அவர் அக்டோபரின் மத்தியில், யாவத்மால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கையில் தெரிவித்தார். அங்கு பதற்றத்துடன் அவரது பெற்றோரும் இருந்தனர். “அன்று மாலையே நாங்கள் அவசர அவசரமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டோம்“ என்று அவரது சகோதரர் லட்சுமணன் கூறுகிறார். அதுவே அவரை காப்பாற்ற உதவியது. ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவர் இறந்திருப்பார். தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிகேஷ் இனி நான் ஒருபோதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கமாட்டேன் என சபதம் எடுத்தார். அவர் ஆபத்துக் கட்டத்தை தாண்டியிருந்தார். ஆனால், அவசர சிகிச்சைப்பிரிவில் 9 நோயாளிகள் உயிருடன் போராடிக் கொண்டிருந்தனர். நாம் அவருடன் பேசியபோது ஒருவாரம் அவசர சிகிச்சை பிரிவில் இருந்திருந்தார்.

Nikesh Kathane, a 21-year-old farm labourer, recuperating in the ICU of the Yavatmal Government Medical College and Hospital in September 2017, after falling sick in the wake of accidental inhalation of pesticide while spraying it on his owner’s field. With him are his parents Keshavrao and Tarabai and his elder brother Laxman
PHOTO • Jaideep Hardikar

21 வயது விவசாய கூலித்தொழிலாளி நிகேஷ் கத்தானே, யாவத்மாலில் உள்ள மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அருகில் அவரது பெற்றோரும் அச்சத்துடன் அவரது சகோதரரும்

அவர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பேட்டரியால் இயக்கக்கூடிய தெளிக்கும் கருவியை பயன்படுத்தினார். அது மருந்து தெளிப்பதை வேகமாகவும், எளிதாகவும் ஆக்குகிறது. ஆனால் மிகவும் ஆபத்தானது. “உங்களால் அந்த தெளிப்பான் மூலம் குறைந்த நேரத்தில் அதிக மருந்தை தெளிக்க முடியும்“ என்று நிகேஷ் கூறினார்.

கத்தானே குடும்பத்தினர் ராலேகான் தாலுகாவில் உள்ள தாஹேகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். யாவத்மால் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அவரது கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் வேறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று லட்சுமண் தெரிவித்தார். அவர்கள் மிக மோசமான நிலையில் இல்லை. ஆனால், பூச்சிக்கொல்லியின் பின்விளைவுகளுக்கு ஆளாகியிருந்தனர்.

மருத்துவமனையின் 18வது வார்டில் இருந்தவர் பெயர் இண்டல் ரத்தோட். 29 வயதான அவர் டைக்ராஸ் தாலுகா வட்கான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆவார். அவரது குடும்பத்தினருக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. அவர் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் தங்கினார். அவர் இன்னும் நோய்வாய்ப்பட்டுதான் இருக்கிறார் என்று அவரது தம்பி அணில் நம்மிடம் கூறினார்.

அச்சமும், பீதியும் கூட்டமான மருத்துவமனைகளில் மட்டுமல்ல மாவட்டம் முழுவதுமே இருந்தது.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை இந்த நிருபர் பேசிய எண்ணிலடங்கா விவசாயிகளும் தாங்கள் தற்போது அச்சத்தால் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதை நிறுத்திவிட்டோம் என்று கூறினர். அதே போல், மனோலி கிராமத்தைச் சேர்ந்த நாராயண் கோட்ராங்கே என்பவர், ஒருநாள் அவரது 10 ஏக்கர் நிலத்தில் ப்ரோபெக்ஸ் சூப்பர் தெளித்தபோது மயக்கம் வருவதுபோல் உணர்ந்தார். “நான் ஏற்கனவே 9 முறை தெளித்திருந்தேன். 10வது முறை தெளிப்பதை நான் நிறுத்த முடிவெடுத்துவிட்டேன். என்னால் அதற்குப் பின்னர் ஒரு வாரத்திற்கு ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்“ என்று அவர் கூறினார்.

A four-acre farmer from Manoli village, Vilas Rathod, in Yavatmal’s Ghatanji tehsil inspects his cotton crop; Rathod stopped spraying after he fell sick, but did not need hospitalization
PHOTO • Jaideep Hardikar
One of the farmers, completely disoriented, had to be tied to his bed in the ICU of the Yavatmal hospital so that he did not fall down as his body jerked
PHOTO • Jaideep Hardikar

விலாஸ் ரத்தோட் (இடது), நச்சுக்கலந்த பூச்சிக்கொல்லி மருந்தை சுவாசித்தபோதும் மருத்துவமனையில் தங்குவதிலிருந்து தப்பியிருந்தார். ஆனால், மற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

ஒவ்வொரு கிராமத்திலுமே மருந்தை தெளித்தபின் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். “நோயாளிகளின் ரத்தப் பரிசோதனை முடிவுகள் நச்சுக்கிருமிகள் அவர்களுக்கு நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக காண்பித்தது“ என்று டாக்டர் பராக் மனாப்பே கூறினார். அவர் இளநிலை மருத்துவர்.  நிகில் மற்றும் மற்றவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார். பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொள்ளும்போது ஏற்பட்டதைப் போன்ற பாதிப்புதான் இருக்கும். ஆனால், இதற்கு சிகிச்சையளிப்பது கடினம். அதில் நஞ்சை அகற்றுவதற்கு வயிற்றை கழுவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பூச்சிக்கொல்லி மருந்துகளை சுவாசிக்கும்போது அது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

விவசாயிகளை சோதித்ததில் இரண்டு விதமான நோய்த்தாக்கங்களை இரண்டு விதமான மருந்துகள் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மருந்து பவுடராக இருந்த ஒரு பூச்சிக்கொல்லி, பயன்படுத்தியவர்களுக்கு பார்வை கோளாறுகளை ஏற்படுத்தியது. தண்ணீராக இருந்த பூச்சிக்கொல்லி, பயன்படுத்தியவர்களுக்கு  நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தியிருந்தது.

இவற்றில் ப்ரபெனோபாஸ் (ஆர்கனோபாஸ்பேட் ), சைபர்மெத்ரீன் (செயற்கை பைரீதராய்டு) மற்றும் டையாபென்தியூரான் ஆகியவை இருந்தன. பல்வேறு பயிர்களிலும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்த அவை அறிவுறுத்தப்பட்டிருந்தன. அவற்றைக் கலந்தால் ஒருவரை கொல்லக்கூடிய அளவிற்கான விஷமாகும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

* * * * *

தெம்பி கிராமத்தில் உள்ள சோயமின் வீட்டில், பிரவீனின் உடல்நிலை சிறிது சிறிதாக நலிவடைந்து வந்தது. முதலில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர் வாந்தி மற்றும் குமட்டல் தொடர்ந்து  மயக்கம் ஏற்பட்டது. 24 மணி நேரத்திற்குள்ளாகவே அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு, மூன்று மணி நேரத்தில் பந்தர்கோடாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையை அடைவதற்குள் இறந்துவிட்டார். எல்லாமும் இரண்டு நாட்களில் நடந்து முடிந்துவிட்டது.

மருந்துகளை தெளிக்கும்போது பிரவீன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் விஷத்தை கடுமையாக சுவாசித்தால் இறந்துவிட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட யாருமே மருந்து தெளிக்கும்போது கையுறை, முகக்கவசம், உடலை பாதுகாக்கும் உடை ஆகிய எதையுமே அணியவில்லை.

“நாம்தேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அனைத்து மருந்தையும் தெளித்து முடித்துவிட வேண்டும் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன்“ என்று பாவ்ராவ் கூறினார். அவர் பகுதி மற்றும் கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளைப்போலவே, சோயமும் இந்த ஆண்டு நிறையப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்ததை ஜுலை மாதத்தில் இருந்து பார்த்திருந்தார். அதுவே அவரையும் பலமுறை அவற்றை பயன்படுத்த தூண்டியது.

அவற்றை தெளித்த பின் பிரவீன் தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரித்தார். ஆனால் மருத்துவரிடம் செல்ல மறுத்துவிட்டார். “அது சூட்டால் ஏற்பட்டது என்று நாங்கள் நினைத்தோம். இங்கு கடும் வெயில் இருந்ததுடன், கிராமத்தில் பெரும்பாலானோருக்கு காய்ச்சலும் இருந்தது“ என்று பாவ்ராவ் நினைவு கூறுகிறார். பிரவீனின் உடல்நிலை மோசமடைந்த அடுத்த நாள் மாலை நாம்தேவும், அவரது தாய் பேபிபாயும் அவரை அடுத்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தவர்தான் இவருக்கு அவசரசிகிச்சை தேவைப்படுகிறது என்று எச்சரித்து, 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்தர்கோட் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார்.

அவர்கள் அந்த மருத்துவமனையை இரவு 7 மணிக்கு அடைந்தனர் என்று பேபிபாய் கூறினார். ஆனால், அவர் இரவு 10 மணிக்கே இறந்துவிட்டார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை அவரது மரணம் ஆர்கானோபாஸ்பேட் விஷத்தால் ஏற்பட்டது என்று தெரிவித்தது.

தமிழில்: பிரியதர்சினி. R.

Jaideep Hardikar

جے دیپ ہرڈیکر ناگپور میں مقیم صحافی اور قلم کار، اور پاری کے کور ٹیم ممبر ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز جے دیپ ہرڈیکر
Editor : Sharmila Joshi

شرمیلا جوشی پیپلز آرکائیو آف رورل انڈیا کی سابق ایڈیٹوریل چیف ہیں، ساتھ ہی وہ ایک قلم کار، محقق اور عارضی ٹیچر بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز شرمیلا جوشی
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

کے ذریعہ دیگر اسٹوریز Priyadarshini R.