பொலமரசெட்டி பத்மஜாவை 2007-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொடுக்கும் போது வரதட்சணையாக 250 கிராம் தங்கத்தை அவரது குடும்பத்தினர் கொடுத்தனர். “என் கணவர் எல்லாவற்றையும் செலவழித்தப் பிறகு என்னையும் கை கழுவி விட்டார்” என்கிறார் 31 வயதான பத்மஜா. இப்போது வாட்ச் பழுது பார்த்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
பத்மஜாவின் கணவர் குடித்து குடித்தே அத்தனை நகைகளையும் விற்று தீர்த்துவிட்டார். “எனக்கும் என் குடும்பத்திற்கும், குறிப்பாக என் குழந்தைகளுக்கும் ஏதாவது நான் ஏற்பாடு செய்தாக வேண்டும்” எனக் கூறுகிறார் பத்மஜா. 2018-ம் ஆண்டு குடும்பத்தை விட்டு தன் கணவர் பிரிந்துச் சென்றதும் கைக்கடிகாரங்களை பழுது பார்க்க தொடங்கினார் பத்மஜா. ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வாட்ச் பழுது பார்க்கும் ஒரே பெண் இவராகத்தான் இருக்கக்கூடும்.
அன்றிலிருந்து சிறிய வாட்ச் கடையில் ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலைப் பார்த்து வருகிறார். ஆனால் கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவரது வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தன்னுடைய சம்பளத்தில் பாதித் தொகையையே பெற்றார். ஏப்ரல், மே மாதங்களில் அதுவும் இல்லை.
“எப்படியோ எனது சேமிப்பிலிருந்து மே மாதம் வரை வாடகை கொடுத்து சமாளித்துவிட்டேன். என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப முடியும் என நம்புகிறேன். என்னை விட (பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்) அவர்கள் அதிகமாக படிக்க வேண்டும்” எனக் கூறும் பத்மஜா, தனது மகன்கள் அமன், 13 மற்றும் ராஜேஷ், 10 ஆகியோரோடு கஞ்சரப்பாளம் பகுதியில் வசித்து வருகிறார்.
தனது பெற்றோர்கள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பத்மஜாவின் வருமானமே ஆதரவாக இருக்கிறது. எந்த வேலைக்கும் செல்லாத அவரது கணவரால் ஒரு பயனும் இல்லை. “இப்போதும் பணம் இல்லாத சமயத்தில் இங்கு வருவார்” எனக் கூறும் பத்மஜா, அவர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் தங்க அனுமதிக்கிறார்.
“கைக்கடிகாரம் பழுது பார்க்க கற்றுக்கொண்டது எதிர்பாராத விதமாக எடுத்த முடிவு. என் கணவர் பிரிந்துச் சென்றதும், எல்லாம் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். நான் சாதுவானவள். எனக்கென்று ஒரு சில நண்பர்களே இருந்தனர். என் நண்பர் ஒருவர் சொல்லாதவரை வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்” என நினைவு கூர்கிறார் பத்மஜா. அவருடைய நண்பரின் சகோதரர் எம்.டி. முஸ்தஃபா பழுது பார்க்கும் வேலையை பத்மஜாவிற்குக் கற்றுக் கொடுத்தார். விசாகப்பட்டினத்தின் பரபரப்பான ஜகதாம்பா ஜங்ஷன் பகுதியில் அவருக்குச் சொந்தமாக வாட்ச் கடை உள்ளது. அப்பகுதியில்தான் பத்மஜாவும் வேலைப் பார்க்கிறார். ஆறு மாதத்திற்குள் பழுது பார்ப்பதில் உள்ள நெளிவு சுளிவுகளை நன்றாகக் கற்றுக் கொண்டார் பத்மஜா.
ஊரடங்கிற்கு முன்பு ஒரு நாளைக்கு 12 கைக்கடிகாரங்களை பழுது பார்ப்பார் பத்மஜா. “வாட்ச் மெக்கானிக்காக மாறுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் இதை ரசித்து செய்கிறேன். ஊரடங்கு காரணமாக பழுது பார்க்க குறைவான வாட்சுகளே இருக்கின்றன. வாடிக்கையாளர் ஒருவரின் உடைந்துபோன வாட்ச் கண்ணாடியை சரி செய்தபடியே, “இதன் கிளிக், டிக்-டாக் மற்றும் உடைந்த வாட்ச்சை சரி செய்யும் சத்தம் இல்லாமல் வெறுமையாக உள்ளதாக” கூறுகிறார் பத்மஜா.
வருமானம் ஏதும் இல்லாமல் சமாளிப்பது பெரும் சிரமமாக உள்ளது. ஊரடங்கு தளர்விற்குப் பிறகு, ஜூன் மாதம் மறுபடியும் பத்மஜா வேலைக்குச் செல்லத் தொடங்கினாலும், அவரது சம்பளத்தில் பாதியை மட்டுமே – ரூ.3000 - இப்போது பெறுகிறார். இப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்ததால், ஜகதாம்பா ஜங்ஷனில் உள்ள வாட்ச் கடைகள் ஜூலை மாதத்தில் இரண்டு வாரங்கள் மூடியிருந்தன. “இன்னும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை. தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு வேலைப் பார்க்கிறேன். இதனால் வேறு வேலைக்கும் என்னால் செல்ல முடியாது” என்கிறார்.
அவர் பணியாற்றும் கடைக்கு எதிரில் உள்ள நடைபாதையில்தான் முஸ்தஃபாவின் சிறிய கடை உள்ளது. நீல வண்ணத்திலான கடையில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான டிஜிட்டல் மற்றும் அனலாக் வாட்சுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உதிரி பாகங்கள், இடுக்கி முள் போன்ற உபகரணங்கள் மற்றும் அவர் பயன்படுத்தும் கண் குவி ஆடி ஆகியவற்றை அலமாரிக்கு கீழ் வைத்துள்ளார்.
ஜூன் மாதம் கடையைத் திறந்த பிறகு, முஸ்தஃபாவின் ஒருநாள் வருமானம் 700-1000 ரூபாயிலிருந்து வெறும் 50 ரூபாயாக குறைந்துப் போனது. கட்டுப்பாட்டு மண்டலம் காரணமாக ஜூலை மாதம் கடையை மூடியபோது அப்படியே மூடி இருக்குமாறு விட்டுவிட்டார். “எந்த வியாபாரமும் இல்லை. எனது வருமானத்தை விட பயணச் செலவு அதிகமாக உள்ளது” என அவர் கூறுகிறார். ஸ்டாக்குகளை மாற்ற ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவருக்கு ரூ. 40,000-50,000 வரை தேவைப்படுகிறது. அதனால் ஜூலை மாதத்திலிருந்து தன்னுடைய சேமிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அரை நூற்றாண்டுகளாக கைக்கடிகாரத்தோடு வேலை செய்து வருகிறார் முஸ்தஃபா. “இந்த கலையை என் தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து பத்து வயதில் கற்றுக் கொண்டேன்” என்கிறார் இந்த பி.காம் பட்டதாரி. இவருக்கு வயது 59. அவர்கள் இருவருமே கால அளவியலாளர்கள் (வாட்ச் மற்றும் கடிகார தயாரிப்பாளர்கள் மற்றும் பழுது பார்ப்பவர்கள்). அவர்களுக்குச் சொந்தமாக கஞ்சரப்பாளத்தில் கடை உள்ளது. 1992-ம் ஆண்டு முஸ்தஃபா சொந்தமாக கடை வைத்துக் கொண்டார்.
“கடந்த காலங்களில் எங்கள் தொழிலுக்கு மதிப்பளித்தார்கள். வாட்ச் தயாரிப்பாளராக நாங்கள் அறியப்பட்டோம். மொபைல் போன் அறிமுகமானதும் வாட்சுகளைப் போல் நாங்களும் மதிப்பிழந்து விட்டோம்” என்கிறார். 2003 வரை விஷாகா வாட்ச் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். “60 மூத்த வாட்ச் மெக்கானிக்குகள் கொண்ட சங்கம் இது. ஒவ்வொரு மாதமும் நாங்கள் சந்தித்துக் கொள்வோம். சிறப்பான நாட்கள் அவை” என நினைவுகூர்கிறார். 2003-ல் இந்தக் குழு பிரிந்தது. இவரது கூட்டாளிகள் பலர் தொழிலைக் கைவிட்டனர் அல்லது வேறு ஊருக்குச் சென்றனர். ஆனால் இன்றும் தன்னுடைய உறுப்பினர் அட்டையை தனது பையில் வைத்துள்ளார் முஸ்தஃபா. “இது எனக்கு ஒரு அடையாள உணர்வை கொடுப்பதாக” அவர் கூறுகிறார்.
முஸ்தஃபாவின் சிறிய கடைக்குச் சற்று தொலைவிலேயே, தன்னுடைய கடையில் இருந்தவாறு கால மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசுகிறார் முகமது தஜூதின்: “தொழில்நுட்ப முன்னேற்றத்தால் இந்த வேலை கொஞ்ச கொஞ்சமாக மறைந்து வருகிறது. ஒருநாள் கைக்கடிகாரத்தை பழுதுபார்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.” தற்போது 49 வயதாகும் தஜூதின், கடந்த 20 வருடங்களாக கைக்கடிகாரங்களை பழுது பார்த்து வருகிறார்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எழுரு அவருக்குச் சொந்த ஊராக இருந்தாலும், நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகனோடு விசாகப்பட்டினத்திற்கு வந்தார் தஜுதீன். “இங்குள்ள தொழில்நுட்ப கல்லூரியில் சிவில் இஞ்சினீயரிங் படிப்பதற்கு என் மகனுக்கு முழு உதவித்தொகை கிடைத்துள்ளது” என்கிறார்.
“இந்த ஊரடங்கினால் பல விதமான கைக்கடிகாரங்களை ஆராய எனக்கு நேரம் கிடைத்துள்ளது. ஆனால் சம்பளம்தான் எதுவும் கிடைக்கவில்லை” என்கிறார். மார்ச் முதல் மே வரை, அவருடைய மாதச் சம்பளமான 12,000 ரூபாயில் பாதித் தொகையை மட்டுமே பெற்றுள்ளார். அடுத்த இரண்டு மாதங்கள் எந்தச் சம்பளமும் இல்லாமல் வேலை பார்த்துள்ளார்.
ஒரு நாளைக்கு 20 கைக்கடிகாரங்கள் வரை பழுது பார்ப்பார் தஜூதின். ஆனால் இந்த ஊரடங்கில் ஒன்றைக் கூட பழுது பார்க்கவில்லை. சில கைக்கடிகாரங்களை வீட்டிலிருந்து பழுது பார்த்தார். “பெரும்பாலும் நான் பேட்டரிகளை பழுது பார்ப்பேன், கண்ணாடியை மாற்றுவேன் (கிரிஸ்டல்) அல்லது மலிவான, பிராண்ட் அல்லாத கைக்கடிகாரங்களுக்கு வார் மாற்றுவேன்” எனக் கூறும் தஜூதின் ஆகஸ்ட் மாதம் தன்னுடைய முழு சம்பளத்தைப் பெற்றார்.
வாட்ச் பழுது பார்ப்பது என்பது எந்தவொரு குறிப்பிட்ட சமுகத்தின் பாரம்பரிய தொழில் இல்லை என்பதால் எந்த ஆதரவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார் தஜூதின். வாட்ச் பழுது பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இதுபோன்ற கடினமான சமயங்களில் நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார் எஸ்.கே.இலியாசீன். இவர் ஜகதாம்பா ஜங்ஷனில் உள்ள பிரபலமான கடையில் வாட்ச் பழுது பார்ப்பவராக இருக்கிறார். இவருக்கும் ஏப்ரல் முதல் ஜூன் வரை சம்பளத் தொகையான ரூ. 15,000 வழங்கப்படவில்லை. மார்ச், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இதில் பாதித் தொகையையேப் பெற்றார். “பள்ளிக் கட்டணத்தைக் கட்டவும் புதிய புத்தகங்களை வாங்கவும் உடனடியாக வருமாறு என் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து தொடர்ந்து அழைப்பு வருகிறது. என் மனைவியின் வருமானத்தில்தான் எங்கள் குடும்பம் நடந்துக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறார் 40 வயதாகும் இலியாசீன். இவருக்கு 10 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கும் இவரது மனைவி அபிதா, மாதம் ரூ.7000 சம்பாதிக்கிறார். பள்ளிக் கட்டணத்திற்கு புத்தகத்திற்கும் இவர் பெற்றோரிடமிருந்து ரூ. 18,000 கடன் வாங்கியுள்ளனர்.
25 வயதாக இருக்கும் போது இந்தத் துறையில் பணியாற்ற தொடங்கினார் இலியாசீன். “வாட்சுகளை பழுது பார்ப்பது என் மனைவியின் குடும்பத் தொழில். இதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதால் திருமணம் முடிந்ததும் என் மாமனாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். உயிர் வாழ்வதற்கான சக்தியை இந்த திறன் எனக்கு கொடுத்திருக்கிறது”. விசாகப்பட்டினத்தில் வளர்ந்த இலியாசென், பள்ளிக்குச் சென்றதில்லை.
தான் பழுது பார்க்கும் விலையுயர்ந்த வாட்சுகளை சொந்தமாக வாங்க முடியாவிட்டாலும் கவனத்தோடு கையாள்கிறார் இலியாசீன். ஆனால் பெரிய வாட்ச் பிராண்டுகள் பழுது பார்ப்பதை புறக்கணிக்கின்றன. இந்த வேலைக்கு அவர்கள் யாரையும் நியமிப்பது கூட இல்லை என அவர் கூறுகிறார். பெரும்பாலும் இந்த ‘அசைவை’ (வாட்ச்சின் உட்புற இயங்கமைவு) சரி செய்வதற்குப் பதில் புதிய ஒன்றை மாற்றிவிடுகிறார்கள். “வாட்ச் மெக்கானிக்கான நாங்கள் இந்த ‘அசைவை’ பழுது பார்த்து விடுவோம். உலகின் பிரபலமான வாட்ச் பிராண்டுகள் தேவையில்லாமல் மாற்றச் சொல்வதைக் கூட நாங்கள் பழுது பார்த்து சரி செய்வோம். என்னுடைய வேலை எனக்கு பெருமிதத்தைக் கொடுக்கிறது” என அவர் கூறுகிறார்.
இவர்களது இலியாசீன், முஸ்தஃபா மற்றும் ஜகதாம்பா ஜங்ஷனில் உள்ள பிற வாட்ச் மெக்கானிக்குகளும் 68 வயதாகும் முகமது ஹபிபூர் ரஹ்மானைப் பெரிதும் புகழ்கிறார்கள். பெண்டுலம் கடிகாரம் போன்ற பழைய கால கடிகாரங்கள் என அனைத்து வகையான வாட்சுகளையும் அவர் பழுது பார்த்துவிடுவார் என அவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், சிக்கலான இயங்கமைவைக் கொண்ட பழைய வாட்ச்சுகளை எளிதில் கையாள்வார். இன்று எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக ஹபிபூரை வீட்டிலியே இருந்து கொள்ளுமாறு அவரது கடையின் உரிமையாளர் கூறிவிட்டார். ஆனாலும் நான் கடைக்கு வந்தேன். பழுது பார்க்க வாட்சுகள் உள்ளது. 2014-ம் ஆண்டு வரை ரூ. 8,000-12,000 வரை சம்பளமாக பெற்று வந்த இவர், கடந்த 5-6 வருடங்களாக ரூ. 4,500 மட்டுமே பெற்று வருகிறார்.
கொரோனா வைரஸுக்கு முன்பே ஒரு சில கைக்கடிகாரங்களையே பழுது பார்த்து வந்தேன். ஒரு மாதத்திற்கு 40 வாட்ச்சுகளை பழுது பார்ப்ப்பேன். இப்போது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டே வருகிறது என்கிறார் ஹபிபூர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஜூன் மாதத்திலிருந்து முழு சம்பளம் பெறுகிறார். என் வ ஊரடங்கிற்கு முன்பு அவரது மனைவி துணி தைப்பதன் மூலம் மாதத்திற்கு ரூ. 4000-5000 வரை வருமானம் ஈட்டுகிறார்.
15 வயதாக இருக்கும் போது வேலை தேடி விசாகப்பட்டினம் வந்துள்ளார் ஹபிபூர். ஒடிஸா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பாரலேகமுண்டியில் இவர் தந்தை வாட்ச் தயாரிப்பவராக இருந்துள்ளார். அவருக்கு 20 வயதாக இருக்கும் போது விசாகப்பட்டினத்தில் 250-300 வாட்ச் மெக்கானிக்குகள் இருந்ததாக நினைவு கூர்கிறார். ஆனால் தற்போது 50 பேர் மட்டுமே உள்ளனர். “நோய்தொற்று முடிந்ததும் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்”.
தன்னுடைய நான்கு மகள்களில் இளைய மகளுக்கு தன் திறனை கற்றுக் கொடுத்துள்ளார்; மற்ற மூவருக்கும் திருமணமாகிவிட்டது. பி.காம் படித்து வரும் தன் 19 வயது மகள் பற்றி அவர் கூறுகையில், “அவளுக்குப் பிடித்திருக்கிறது. எதிர்காலத்தில் சிறந்த வாட்ச் மெக்கானிக்காக அவள் வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.”
ஹபிபூருக்கு மற்றொரு கனவும் உள்ளது: சொந்தமாக வாட்ச் பிராண்ட் ஒன்றை நிறுவ வேண்டும். “கைக்கடிகாரத்தைப் பழுது பார்ப்பது என்பது காலத்தையே சரி செய்வது போன்றது. என் வயதைப் பற்றி எனக்கு கவலையில்லை. கைக்கடிகாரத்தோடு வேலை செய்யும் போது எனக்கு நேரம் போவதே தெரியாது. எவ்வுளவு நேரமானாலும் வேலை செய்வேன். இப்போது எனக்கு 20 வயது ஆனது போல் உணர்கிறேன்” எனக் கூறுகிறார் ஹபிபூர்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா