“அழாதீர்கள். நாம் ஏதேனும் செய்யலாம். உங்களுக்கு கண்டிப்பாக உதவி கிடைக்கும் என நான் உறுதியாக சொல்கிறேன்,” என்கிறார் சுனிதா போசலே. அஹமத்நகர் மாவட்டம், ஷிரோகொண்டா தாலுக்காவில் உள்ள கன்சிவாடி கிராமத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்திருந்தது.
தனது வயலில் பாத்தி கட்டியதற்காக சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஷாந்தாராம் சவானை கிராமத்தினர் சிலர் மோசமாக அடித்துள்ளனர். அஹமத்நகரில் உள்ள பொது மருத்துவமனைக்கு அவரது மகள் பிண்டி அழைத்துச் சென்றுள்ளார். 40 வயது பிண்டியிடம்தான் தொலைப்பேசியில் சுனிதா உறுதி அளித்துக் கொண்டிருந்தார்.
அவர் அஹமத்நகரில் உள்ள தன்னார்வலர் ஒருவரை அழைத்தார். “அந்த சவானை மீண்டும் அடித்திருக்கிறார்கள். இப்போது தானா காவல்நிலையத்திற்குச் செல்லுங்கள். 307 [இந்திய சட்டப்பிரிவின்படி கொலை முயற்சி] பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யச் சொல்லுங்கள். எனக்கு தொடர்ந்து தகவல் தெரிவியுங்கள்,” என்று சொல்லிவிட்டு சுனிதா தொலைப்பேசி இணைப்பை துண்டிக்கிறார்.
சிறிது நேரம் மவுனமாக இருந்த அவர் கோபமாக சொல்கிறார், “அவர்கள் எப்படி இதுபோல செய்யலாம்? அது அவரது நிலம். இது அவர் மீதான இரண்டாவது தாக்குதல். அவர்கள் ஏற்கனவே அவரது ஒரு கையை உடைத்துவிட்டனர். இப்போது அவரைக் கொல்ல நினைக்கிறார்களா?”
சவானைப் போன்று 33 வயது சுனிதா போஸ்லேவும் பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ள பழங்குடியினர் (எஸ்டி) பிரிவில் உள்ள ஃபன்சே பார்தீ சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சமூகம் பல தசாப்தங்களாக பாகுபாட்டையும், வன்முறையையும் எதிர்கொண்டு வருகிறது.
குற்றப் பழங்குடியினர் சட்டத்துடன் (சிடிஏ) காலனிய ஆங்கிலேய அரசு பார்தீக்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினரை ‘குற்றவாளிகள்’ என முத்திரை குத்தியது. “1871 சிடிஏ மற்றும் அதன் பிறகு வந்த திருத்தங்களில் 120க்கும் மேற்பட்ட சமூகங்களை “குற்றப் பரம்பரைகள்” என அறிவித்து இச்சமூகங்கள் பிறப்பால் குற்றவாளிகள் என்றும், குற்றங்களை தொழிலாக பயிற்சி செய்பவர்கள் என்றும் தெரிவித்தது. நாடோடி சமூகங்களை முத்திரை குத்தவும், தண்டிக்கவும், பிரிக்கவும் மற்றும் வலுக்கட்டாயமாக குற்றஞ்சாட்டவும் இந்த சட்டம் காலனித்துவ ஆங்கிலேய அரசுக்கு அதிகாரத்தை வழங்கியது,” என்கிறது மும்பையில் உள்ள சமூக அறிவியலுக்கான டாடா நிறுவனத்தில் உள்ள குற்றவியல் மற்றும் நீதிக்கான மையத்தின் மும்பை நகர பார்தீக்களின் நிலை பற்றிய அறிக்கை என்ற தலைப்பில் நடைபெற்ற ஓர் ஆய்வு.
1952ஆம் ஆண்டு இச்சட்டத்தை இந்திய அரச திரும்பப் பெற்றது. பழங்குடியினர் ‘குறியிடப்பட்டனர்.’ அவர்களில் சிலர் தாழ்த்தப்பட்டோர் என்றும், சிலர் பழங்குடியினர் என்றும், சிலர் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் இப்போது சேர்க்கப்பட்டனர்.
2011 கணக்கெடுப்பின்படி சுமார் 223,527 பார்தீகள் மகாராஷ்டிராவில் வசிக்கின்றனர். சிலர் சத்திஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசத்திலும் வசிக்கின்றனர். பார்தீகளுக்குள் பல்வேறு துணை குழுக்கள் அவர்களின் தொழில்கள் அல்லது மற்ற விளக்கங்களுக்கு ஏற்ப பெயரிடப்பட்டுள்ளனர். பல் பார்தீகள் (கொட்டகைகளில் வசித்தவர்கள்), பில் பார்தீகள் (துப்பாக்கிகளை பயன்படுத்தியவர்கள்), பன்சே பார்தீகள் (சுருக்கு கொண்டு வேட்டையாடியவர்கள்) உள்ளிட்டோரும் அதில் அடங்கும்.
சீர்மரபினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தால் பட்டியிலடப்பட்ட இந்தியாவில் உள்ள சுமார் 1500 நாடோடி மற்றும் நாடோடி பழங்குடி சமூகங்கள் மற்றும் 198 சீர் மரபினர் சமூகங்களில் பார்தீகள்தான் கல்வி, வேலைவாய்ப்பு, பிற வசதிகளில் பின்தங்கியுள்ளனர். இப்போதும் அவர்கள் குற்றவாளிகளாக, அவமதிக்கப்படுகின்றனர்.
“நாங்கள் இப்போதும் குற்றவாளிகள் என முத்திரையிடப்பட்டுள்ளோம்,” என்கிறார் சுனிதா. “கிராமத்தில் எந்த குற்றம் நடந்தாலும், காவல்துறையினர் பொதுவாக பார்தீகளை குற்றஞ்சாட்டுவர், அவர்கள் எளிய இலக்கு. அதேப்போன்று அவர்களுக்கு [பார்திகளுக்கு] எதிரான அராஜகங்களும் தீவிரமானது. இப்போதும் தொடர்வதை நீங்கள் பார்க்கலாம். எங்களுக்கு எதிரான இந்த அவமானம் முடிவுக்கு வர வேண்டும்.”
பார்தீகளின் உரிமைகளுக்காகப் போராடுபவராக சுனிதா மாறியுள்ளார். ஆனால் அவருக்கு இது ஒரு நெடிய பயணம்.
6ஆம் வகுப்பு வரை படித்த புனே மாவட்டம், ஷிருர் தாலுக்காவின் அம்பாலி கிராமத்தில் உள்ள சில்லா பரிஷத் பள்ளியில் அவரும் அவமானங்களைச் சந்தித்துள்ளார். “என் சமூகம் காரணமாக நிறைய கேலி செய்யப்பட்டுள்ளேன். அவர்கள் ஏன் எனக்கு இப்படி செய்கிறார்கள் என ஆச்சரியப்பட்டதுண்டு?”
சுனிதாவின் தந்தை ஏக்நாத் அவ்வப்போது பல்லிகள், காட்டுக்கோழிகள், முயல்கள், பிற சிறிய விலங்குகளை உணவிற்காக வேட்டையாடினார். அவரது தாயார் ஷாந்தாபா தனது மூத்த மகளுடன் உணவிற்கு யாசகம் பெற்றார். அவர்களின் இளைய தம்பி அவினாஷ் வீட்டிலேயே இருந்துள்ளான். “நாங்கள் அடிக்கடி பட்டினி கிடந்திருக்கிறோம்,” என்கிறார் அவர். “பள்ளியில் பால் கிடைக்கும், எனக்கு நினைவிருக்கிறது. வீட்டில் உண்ண எதுவும் இருக்காது என்பதால் நான் அதை வயிறு முட்ட குடிப்பேன். எனது ஆசிரியர் மிகவும் நல்லவர். நான் விரும்பும் அளவு பாலை எடுத்துக் கொள்ளச் செய்வார். அவருக்கு பார்தீகளின் நிலை தெரியும். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு யாசகம் பெற்று வரும் உணவு போதாது. நாங்கள் அரிதாகவே ரொட்டியை கண்டோம்.”
கிராமத்திற்கு வெளியே உள்ள குடிசையில் குடும்பம் வாழ்ந்து வந்தது. சுனிதாவிற்கு மூன்று வயது இருந்தபோது, ஒரு சண்டையின் போது, அவரது தாயின் இடது கையை தந்தை உடைத்துவிட்டார். 'எங்களுக்கு மருத்துவ உதவி எட்டாக்கனி,' என்கிறார் அவர். 'எனவே அவரது கை முடங்கிப்போனது...'
பிளாஸ்டிக் மற்றும் தகர ஷீட்டுகளால் வேயப்பட்ட குடிசையில் கிராமத்திற்கு வெளியே அச்சமயம் அக்குடும்பம் வசித்துள்ளது. சுனிதாவிற்கு மூன்று வயது இருந்தபோது அவரது தாயின் இடது கையை தந்தை உடைத்தார். 'எங்களுக்கு மருத்துவ உதவி எட்டாக்கனி,' என்கிறார் அவர். “எனவே அவரது கை முடங்கிப்போனது.”
இச்சம்பவத்திற்கு மூன்று மாதங்கள் கழித்து அவரது தந்தையின் உடல் அஹமத்நகரில் உள்ள ரஞ்ஜங்கான் ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடைத்தது. “அது விபத்து என காவல்துறையினர் கூறினர், ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம், விசாரணை நடத்த வேண்டும் என என் தாய் விரும்பினார்,” என்கிறார் சுனிதா. “ஆனால் அவர் பார்தீ என்பதால் யாரும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை. ஏதேனும் கொலை அல்லது கொள்ளை நடந்தால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவரை அடிக்கடி கைது செய்வார்கள். காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்திக்க அந்த தாய் முயன்றும் எதுவும் நடக்கவில்லை.”
தனது சமூகத்தின் மீதான பாகுபாட்டை சுனிதா நன்கு அறிந்திருந்தார். “பார்தீகள் பள்ளியில் இடைநிற்றலுக்கு குழந்தை திருமணமும் முதன்மை காரணம்,” என்கிறார் அவர். “பெண்கள் இப்போது கீழானவர்களாக கருதப்படுகின்றனர். திருமணமான பெண் தனது பொருட்களை வீட்டிற்குள் வைக்க முடியாது. அவள் வீட்டிற்குள் குளிக்க முடியாது.” பார்தி ஜாத் பஞ்சாயத்தின் (சாதிக்குழு) தன்னிச்சையான முடிவுகள், பெரும்பாலும் பெண்களின் 'தூய்மை' பற்றிய கருத்துக்களின் அடிப்படையில் இருப்பதால் பார்தீகளிடையே அச்சத்தையும் உருவாக்குகின்றன.
கல்வியை பரவலாக்கி, மாவட்டத்தில் உள்ள பார்தீகளுக்கு எதிரான சாதிரீதியான அராஜகங்களை எதிர்த்த செயற்பாட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியதால் காலப்போக்கில் சுனிதாவிற்கு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்றவற்றில் உள்ள குறிப்புகள் நன்கு பரிச்சயமாகிவிட்டது . “ஒவ்வொரு பார்தீகளும் சட்டங்களை அறிந்திருந்தால் தான் காவல்துறையினர் அவர்களை ஏமாற்ற முடியாது,” என்கிறார் அவர்.
அவர் பேரணிகளில் பங்கேற்கத் தொடங்கியதால், ஷிருர் தாலுக்கா, புனேவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று, ஏக்நாத் ஆவாத், ராஜேந்திரா கலே போன்ற நன்கு அறியப்பட்ட செயற்பாட்டாளர்களை சந்திப்பது அல்லது அவர்களின் உரையைக் கேட்டுள்ளார்.“அவர்கள் தான் ஊன்றுகோல். பார்தீ குடியிருப்புகளுக்கு வருகைபுரிந்து சமூகம் குறித்த தவறான புரிதல்களைப் போக்க அவர்கள் முயற்சிப்பதை நான் கண்டேன். இதுபோன்ற சூழலைக் கடக்க விழிப்புணர்வும், கல்வி கற்பதும் அவசியம் என்பதை நான் புரிந்துகொண்டேன்,” என்கிறார் அவர்.
அம்பாலி மற்றும் அருகமையில் உள்ள பார்தீ குடும்பங்களை சுனிதாவும் சென்று பார்க்கத் தொடங்கினார். அவர்களது சடங்குகளில் உள்ள எதிர்மறை தாக்கங்கள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசுகிறார். அதோடு தனது நிலத்தில் சகோதரி மற்றும் சகோதரனுடன் வேலையையும் அவர் தொடர்கிறார்.
பார்தீகளை கவனித்ததில் வேறு பல பிரச்னைகள் உள்ளதையும் அவர் கண்டறிந்துள்ளார். அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்கின்றனர், உதவிகள் கேட்கின்றனர், வேட்டையாடுதல் அல்லது வித்தியாசமான வேலைகளை செய்தல் என்று இருப்பதால் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நிலையான கல்வி அல்லது மருத்துவ வசதி என எதுவும் கிடைப்பது இல்லை. தனது சமூகத்திற்கு உழைக்க முழுமையாக தன்னை சுனிதா அர்ப்பணித்துள்ளார். எனவே அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.
2010ஆம் ஆண்டு அவர் தனது வேலையுடன் சேர்ந்து கிராந்தி எனும் லாப நோக்கமற்ற நிறுவனத்தைத் தொடங்கினார். புனே மாவட்டம் ஷிருர் மற்றும் தவுண்ட் தாலுக்காக்கள், அஹ்மெத்நகர் மாவட்டம் (அஹ்மத்நகர் என்று கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளது) ஸ்ரீகோண்டா தாலுக்கா என 229 கிராமங்களில் கிராந்தி இப்போது செயல்படுகிறது என்கிறார் அவர்.
229 கிராமங்களில் சுமார் 25,000 பார்தீ மக்கள் வசிப்பதாக சுனிதா மதிப்பீடு செய்கிறார். 50 தன்னார்வலர்கள், செயற்பாட்டாளர்களின் உதவியோடு வாரத்தில் மூன்று வழக்குகளை அவர் கையாளுகிறார். அடித்தல், பாலியல் பலாத்காரம் செய்தல், திருட்டு மற்றும் கொலையில் பொய்யான குற்றச்சாட்டு என அவை வேறுபடுகிறது. அவர் பாதித்தவர்களை சந்தித்துப் பேசி காவல்நிலையத்தில் தேவைப்பட்டால் புகாரளிக்க உதவுகிறார். அவர் வழக்கறிஞருக்கு ஏற்பாடு செய்து, வழக்கு கட்டணங்களை செலுத்தி, வழக்குகளை தொடர்ந்து கவனிக்கிறார். “ஒரு அராஜக வழக்கில் கூட நீதி கிடைப்பதில்லை. பொய் குற்றச்சாட்டுகளில் 99 சதவீதம் அப்பாவிகள் தான்,” என்கிறார் அவர்.
மகாராஷ்டிராவின் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சுனிதாவிற்கு காலப் போக்கில் பல்வேறு கல்வி உதவித்தொகை, விருதுகள் கிடைத்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை தனது சமூக பள்ளி மாணவர்களுக்கு அல்லது மருத்துவ தேவையுள்ளோருக்கு உதவிட அவர் பயன்படுத்துகிறார். தனது நிறுவனத்திற்கான நிதியுதவியும் தனிப்பட்ட நன்கொடைகள் மூலம் வருகிறது. “நோக்கம் உயிர்ப்புடன் இருப்பதற்கு நான் சிறிய தொகைகளை பெறுகிறேன். என்னுடன் இருக்கும் தன்னார்வலர்களும் பார்தீகள்தான். எனது ஒன்பது ஏக்கர் நிலத்தில் சோளம், கம்பு, கொண்டைகடலை போன்றவற்றை விளைவிக்கிறேன். ஆண்டுக்கு 15-20 குவிண்டால் அறுவடை செய்து அவற்றில் கொஞ்சம் தன்னார்வலர்களுக்கு தருகிறேன். என்னால் அவர்களுக்கு பணம் தர முடியாது, ஆனால் தேவை இருந்தால் உதவி செய்கிறேன்.பெரும்பாலானோர் வேலைவாய்ப்பின்றி அல்லது விவசாயத் தொழிலாளர்களாக அல்லது இளம் மாணவர்களாக உள்ளனர்.”
அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு உதவும் சாதிச் சான்றிதழை தனது சமூகத்தினர் அனைவருக்கும் பெற்றுத் தர வேண்டும் என்பது சுனிதாவின் இலக்குகளில் ஒன்று. “பார்தீகள் குறித்த மிகப்பெரும் புள்ளி விவரங்களை உருவாக்க நான் விரும்புகிறேன், கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தால் உண்மையில் செய்யப்பட வேண்டும்,” என்கிறார் அவர். “அரசின் எந்த திட்டங்களும் எங்களை வந்தடைவதில்லை.”
“நிதிநிலை அறிக்கையில் ஆயிரக்கணக்கான கோடிகள் [பழங்குடியினருக்கு] ஒதுக்கப்பட்டாலும், இச்சமூக முன்னேற்றத்திற்கு எந்த பணமும் செலவிடப்படுவதில்லை,” என்கிறார் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத பழங்குடியினரின் தேசிய கூட்டமைப்பின் மகாராஷ்டிரா மாநில லோக்தாரா தலைவரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் பல்லவி ரெங்கி. 2016ஆம் ஆண்டு இந்தியாஸ்பெண்ட் தொடர் வெளியானது, அதில் கடந்த 35 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான மதிய உணவுகள், கல்வி உதவித்தொகைகள், பயிர் காப்பீடு போன்றவற்றிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.8 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது தெரியவந்தது.
'நிதிநிலை அறிக்கையில் ஆயிரக்கணக்கான கோடிகள் [பழங்குடியினருக்கு] ஒதுக்கப்பட்டாலும், இச்சமூக முன்னேற்றத்திற்கு எந்த பணமும் செலவிடப்படுவதில்லை ' என்கிறார் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத பழங்குடியினரின் தேசிய கூட்டமைப்பின் மகாராஷ்டிரா மாநில லோக்தாரா தலைவரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் பல்லவி ரெங்கி
229 கிராமங்களில் உள்ள பார்தீகளில் 50 சதவீதம் பேருக்கு இப்போது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டைகள் உள்ளதாக சுனிதா மதிப்பிடுகிறார். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பத் தயாராக உள்ளனர் – மகாராஷ்டிராவில் 64 சதவீதம் (கணக்கெடுப்பு 2011) மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளதால் இச்சமூகத்தின் இந்த முடிவு விகிதத்தை மேம்படுத்த உதவும். “இளம் தலைமுறையினர் முன்னேற தயாராக உள்ளனர்,” என்கிறார் அவர்.
“கல்வி நம் வாழ்வை மாற்றுகின்றன. நல்ல வேலையைப் பெற்று நன்கு சம்பாதித்து என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதே இப்போதைய என் நோக்கம்,” என்கிறார் கராடி கிராமத்தைச் (10 பார்தீ குடும்பங்கள் உள்ளன) சேர்ந்த 24 வயது ஜிதேந்திரா கலே. அவரது பெற்றோர் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். வேளாண் துறையில் அவர் டிப்ளமோ முடித்துள்ளார். அவரது இளைய சகோதரர் காவலர் பணிக்கான தேர்வுக்குத் தயாராகி வருகிறார். இதேபோன்று கராடியில் உள்ள சில்லா பரிஷத் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது ஆர்த்தி கலேவும் காவல்துறையில் சேர விரும்புகின்றனர். “எனக்கு திருமணம் வேண்டாம். நான் படித்துவிட்டு, அதைச் செய்வேன்,” என்கிறார் அவர்.
அம்பாலியில் 2003ஆம் ஆண்டு இரண்டு அறையுடன் கட்டப்பட்ட வீட்டில் சுனிதா இப்போது வசிக்கிறார். அவரது சகோதரிக்கு திருமணமாகிவிட்டது, சகோதரர் புனே தேசிய பாதுகாப்பு அகாடமியில் தோட்டத்தொழிலாளராக உள்ளார். அங்கு அவர் குடும்பத்துடன் வசிக்கிறார். சுனிதாவின் தாய் அவரை நினைத்துப் பெருமை கொள்கிறார். “நான் பெண்ணாக நிறைய துன்பங்களை தாங்கியிருக்கிறேன். எங்கள் சமூகத்தில் பெண்களின் நிலை பிற பெண்களைவிட மிகவும் மோசமானது. எங்கள் சமூகத்திற்காக என் மகள் ஏதாவது செய்வது எனக்கு பெருமையாக உள்ளது,” என்கிறார் ஷாந்தாபாய்.
அவரது புதிய வீட்டில் அலமாரியில் நிறுவனத்தின் ஆவணங்களும், கோப்புகளும் நிரம்பியுள்ளன. “நான் பாபாசாஹேப் அம்பேத்கர், சாவித்ரிபாய் புலேவின் பாதையை பின்பற்றி நடக்கிறேன். அவர்கள் சமஉரிமை, கல்வி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள்,” என்கிறார் சுனிதா. “இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. அதற்கு எனக்கு ஆதரவு தேவை... எங்களுக்கு என எந்த அரசியல் பிரதிநிதியும் இல்லை. எங்களுக்காக யார் பேசப் போகிறார்கள்...?”
தமிழில்: சவிதா