காலடியில் பசியப் புல்வெளி, தலைக்கு மேல் திறந்த வானம், காட்டுக்குள் ஓடும் அமைதியான ஓடை போன்றவற்றை மகாராஷ்டிராவின் எந்த கிராமப்பகுதியிலும் பார்க்க முடியும்.
ஆனால் ஒரு நிமிடம். இன்னொரு விஷயமும் இருப்பதாக கீதா சொல்கிறார். ஓடையைச் சுட்டிக் காட்டி, "பெண்களான நாங்கள் இடது பக்கம் செல்ல வேண்டும். ஆண்கள் வலப்பக்கம் செல்ல வேண்டும்," என்கிறார். அவரின் குப்பத்தில் இருப்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பின்பற்றும் முறை அதுதான்.
"மழை பெய்தால், கணுக்கால் வரையிலான தண்ணீரில் குடை பிடித்தபடி நாங்கள் அமர வேண்டும். மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்குமென்பதை எப்படி சொல்ல முடியும்?" எனக் கேட்கிறார் 40 வயது கீதா.
புனே மாவட்டத்தின் ஷிருர் தாலுகாவிலுள்ள குருளி கிராமத்தின் வெளியிலிருக்கும் காலனியில்தான் அவர் வசிக்கிறார். 50 வீடுகள் கொண்ட காலனி. பில் மற்றும் பர்தி குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கும் இரு சமூகங்களும் மாநிலத்தின் விளிம்புநிலையிலுள்ள ஏழ்மைச் சமூகங்கள் ஆகும்.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் இருக்கும் அசவுகரியத்தை பில் சமூகத்தைச் சேர்ந்த கீதா பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறார். "நாங்கள் உட்காருகையில் புற்கள் காயப்படுத்தும். கொசுக்கள் கடிக்கும். பாம்புக் கடி பயம் எப்போதும் இருக்கும்."
அங்கு வசிப்போர் ஒவ்வொரு அடியிலும் சவாலை சந்திக்கின்றனர். குறிப்பாக பெண்கள். காட்டுக்குள் செல்லும்போது தாக்கப்படும் அச்சம் அவர்களுக்கு உண்டு.
"குழுக்களாக நாங்கள் அதிகாலை நான்கு மணிக்கு செல்வோம். யாரேனும் வந்து தாக்கினால் என்ன செய்வதென்கிற அச்சம் கொண்டிருப்போம்…" என்கிறார் பில் சமூகத்தைச் சேர்ந்த 22 வயது ஸ்வாதி.
கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவர்களின் வசிப்பிடம், குருளி கிராமப் பஞ்சாயத்துக்குள் வருகிறது. பல வேண்டுகோள்களும் கோரிக்கைகளும் விடுக்கப்பட்டும் காலனியில் இன்னும் மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. கழிவறைகள் இல்லை. "அவர்கள் (பஞ்சாயத்து) எங்களை பொருட்படுத்துவதே இல்லை," என்கிறார் 60 வயதுகளில் இருக்கும் விதாபாய்.
கழிவறை வாய்ப்பற்று மாநிலத்தில் இருக்கும் 39 சதவிகித பட்டியல் பழங்குடிகளில் அந்த தனி வசிப்பிடத்தில் வசிப்போரும் அடக்கம். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-21 ( NFHS-5 ), கிராமப்புற மகாராஷ்டிராவின் 23 சதவிகித குடும்பங்கள் "எந்த கழிப்பிட வசதியும் கொண்டிருக்கவில்லை; திறந்த வெளியையும் வயல்களையும் பயன்படுத்துகின்றனர்," எனக் குறிப்பிடுகிறது.
ஆனால் ஸ்வச்பாரத் கிராமத் திட்டமோ பூர்த்தி செய்ய முடியாத, 100 சதவிகித கழிப்பிட வசதித் தேவையைப் பூர்த்தி செய்து இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடமற்ற நாடாக குறிப்பிட்ட காலக்கெடுவில் (2014-19) மாற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டது .
வாழ்வின் பெரும்பகுதியை விதாபாய் கழித்த குருளி கிராமத்தின் வெளியில் இருக்கும் வசிப்பிடத்தில் ஒரு மரத்தை அவர் காட்டி, "இந்த மரம் நான் நட்டது. என் வயதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். காட்டுக்குள் எத்தனை வருஷமாக கழிப்பிடத்துக்காக சென்றிருப்பேன் என்பதையும் கணக்கு போட்டு பாருங்கள்," என்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்