வடக்கு கொல்கத்தாவின் குமார்துலி பகுதியின் குறுகிய பாதை, கையால் இழுக்கப்படும் ரிக்ஷா கடந்து செல்லும் அளவுக்கு அகலமாக இருப்பினும், அந்தப் பகுதியில் நீங்கள் வழக்கமாக சந்திக்கும் ஒரே நபர்கள் குமார்கள் எனப்படும் நகரத்திலுள்ள சிலைத் தயாரிப்பாளர்களாகவே இருப்பார்கள். இந்தப் பகுதியில் செய்யப்படும் துர்கை மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் தான் ஒவ்வொரு ஆண்டும் வழிபாட்டிற்காக கொல்கத்தாவிற்குள் செல்கின்றன..
கார்த்திக் பால் என்பவர் இந்தப்பகுதியில் ஒரு பட்டறை வைத்துள்ளார். அது உண்மையில் மூங்கில் மற்றும் நெகிழித் தாள்களால் ஆன ஒரு கொட்டகை மட்டுமேயேயாகும். அது 'பிரஜேஷ்வர் அண்ட் சன்ஸ்' (அவரது தந்தையின் பெயர்) என்று அழைக்கப்படுகிறது. அவர் ஒரு சிலையை உருவாக்கும் நீண்ட மற்றும் பல்வேறு செயல்முறைகள் குறித்து கூறினார். இதற்காக கங்கா மதி (நதியின் கரையில் உள்ள சேறு) மற்றும் பாத் மதி (சணல் துகள்கள் மற்றும் கங்கா மதி ஆகியவற்றின் கலவை) போன்ற பல்வேறு மண் கலவைகள் சிலை செய்யும் வெவ்வேறு கட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..
நாங்கள் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்த போது, ஈரமான களிமண்ணைக் கொண்டு கார்த்திகைக் கடவுளின் முகத்தை பால் அவரது அனுபவம் வாய்ந்த கைகளால் மெருகேற்றிக் கொண்டிருந்தார். அதற்காக வர்ணமடிக்கப் பயன்படும் தூரிகை மற்றும் சியாரி எனப்படும் மூங்கிலால் செய்யப்பட்ட கையால் மெருகூட்டப்பட்ட சிற்பக் கருவியினை அவர் பயன்படுத்தினார்.
அதன் அருகிலுள்ள மற்றொரு பட்டறையில், கைவினைக்கலைஞர் கோபால் பால், களிமண் சிலையில் தோல் போன்ற தோற்றத்தை உண்டாக்குவதற்காக ஒரு மெல்லிய துண்டு போன்ற பொருளை ஒட்டுவதற்கு பசை தயார் செய்துகொண்டிருந்தார். கொல்கத்தாவில் இருந்து வடக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் கோபால். இங்குள்ள தொழிலாளர்களில் பலர் – குறிப்பாக எல்லா ஆண்களும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே; அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பட்டறை உரிமையாளர்களால் வழங்கப்பட்ட அந்தப் பகுதியிலேயே வசித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் அதிக வேலை இருக்கும் சீசனிற்கு சில மாதங்களுக்கு முன்னரே பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் எட்டு மணி நேர பணிமுறையில் வேலை செய்கின்றனர். எனினும், இந்த கைவினைஞர்கள் இலையுதிர்கால திருவிழாவிற்கு முன்னர் இரவு முழுவதும் கூடுதலாக பணி செய்து அதற்கான ஊதியத்தையும் பெற்று வருகின்றனர்.
குமார்துலி பகுதியில் முதன்முதலாக பணி செய்த குயவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாநகரில் இருந்து இங்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் ஆற்றின் கரைகளில் இருந்து களிமண்ணை எளிதாக எடுக்க முடியும் என்பதன் காரணமாக பாக்பஜார் காட் அருகே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த குமார்துலி பகுதியில் சில மாதங்கள் தங்கியுள்ளனர். மேலும் இவர்கள் ஜமீன்தார்களின் வீடுகளில் உள்ள தகுர்தாலான் பகுதிகளுக்காக (ஜமீன்தார்களின் குடியிருப்பு வளாகத்திற்குள் மத விழாக்களுக்காக வரையறுக்கப்பட்ட பகுதிகள்) துர்கா பூஜை விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
காண்க: ‘குமார்துலியின் வழியே ஒரு பயணம்’ Photo album
கடந்த 2015-16 ஆம் ஆண்டு பி.எ.ஆர்.அய் (PARI) யின் பெல்லோஷிப்பின் ஒரு பகுதியாக சிஞ்சிதா மாஜியினால் இந்தக் கட்டுரையும், காணொளியும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்.