“சாக்கடைக் குழி 20 அடி ஆழமிருக்கும். பாரேஷ்தான் முதலில் உள்ளே போனார். இரண்டு அல்லது மூன்று பக்கெட்டுகள் கழிவை எடுத்துக் கொண்டு மேலே வந்தார். சற்று நேரம் அமர்ந்தார். மீண்டும் உள்ளே சென்றார். உடனே அலறினார்…”
“என்ன நடந்ததென எங்களுக்கு தெரியவில்லை. எனவே கல்சிங் பாய் உள்ளே சென்றார். அமைதியாக இருந்தது. அடுத்து அனிப் பாய் சென்றார். உள்ளே சென்ற மூவரில் எவரும் சத்தம் எழுப்பவில்லை. எனவே அவர்கள் ஒரு கயிற்றில் என்னைக் கட்டி உள்ளே அனுப்பினர். யாரோ ஒருவரின் கையை என்னை பிடிக்க வைத்தார்கள். அது யாருடைய கை என தெரியவில்லை. அதை பற்றியதும் அவர்கள் என்னை இழுக்க முயன்றனர். அப்போதுதான் நான் மூர்ச்சையானேன்,” என்கிறார் பாவேஷ் மூச்சு விடாமல்.
பாரேஷ்ஷையும் இரண்டு சக ஊழியர்களையும் கண்முன்னே பறிகொடுத்த ஒரு வாரத்துக்கு பிறகு நாங்கள் பாவேஷை சந்தித்தோம். துயரத்தை நினைவுகூரும்போது அவர் வலியுற்றது வெளிப்படையாக தெரிந்தது. குரலில் துயரமும் அழுத்தமும் தோய்ந்திருந்தன.
குஜராத்தின் தாகோத் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பாவேஷ் கடாரா ‘அதிர்ஷ்டவசமாக’ பிழைத்தவர். அதிர்ஷ்டவசமாக அந்தப் பேரழிவிலிருந்து உயிர் தப்பிய இருவரில் அவரொருவர். பாருச் மாவட்டத்தின் தாகெஜ் கிராமப் பஞ்சாயத்தின் விஷவாயு நிரம்பிய சாக்கடைக் குழியை ஐந்து பழங்குடிகள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். உயிர் தப்பிய இன்னொருவர் தாகோதின் பலெந்தியா-பெதாபூரை சேர்ந்த 18 வயது பார்மர்.
அவர்களுடன் சேர்ந்து ஜிக்னேஷின் கிராமத்தை சேர்ந்த 20 வயது அனிப் பார்மர், தாகோதின் தந்த்காத்-சகலியாவை சேர்ந்தவர் 25 வயது கல்சிங் முனியா. 24 வயது பாரேஷ் கடாரா, அவரது சகோதரர் பாவேஷ் இருக்கும் ஊரை சேர்ந்தவர். இந்த மூவரும் சாக்கடைக் குழியில் மூச்சு திணறி இறந்து போயினர். (இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வயதுகள் ஆதார் அட்டைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. உறுதிபடுத்தாத தகவல்களாக கையாளப்பட வேண்டும். பெரும்பாலான இத்தரவுகள் கடைமட்ட அதிகாரிகளே போட்டுக் கொள்பவையாக இருக்கின்றன.)
ஆனால் 325-330 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த ஐந்து பழங்குடி ஆண்கள் தாகேஜிலிருந்த சாக்கடைக் குழிகளை ஏன் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்? அவர்களில் இருவருக்கு இன்னொரு கிராமப் பஞ்சாயத்தில் மாதந்தோறும் பணம் கொடுக்கப்படுகிறது. மற்றவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் செய்யும் வேலைகளின் தாக்கமோ ஆழமோ தெரிந்திருக்கக் கூடவில்லை. அவர்கள் அனைவரும் விளிம்பு நிலையில் இருக்கும் பில் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
பேரிடர் ஏப்ரல் 4, 2023 அன்று தாக்கியது. “ஒரு நபர் உள்ளே இருந்தார்,” என அருகாமை சாக்கடைக் குழியில் அந்த தினம் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜிக்னேஷ் நினைவுகூறுகிறார். “விஷவாயுவை அவர் சுவாசித்து விட்டார். உதவி பெறும் நிலையில் இல்லை. இன்னொருவர் (கல்சிங்) உள்ளே சென்று அந்த நபரை காக்க முயன்றபோது விஷவாயு அவரையும் தாக்கியது. அவர் உள்ளே விழுந்தார். இருவரையும் காக்க, அனிப் உள்ளே சென்றார். ஆனால் விஷவாயு வலிமையாக இருந்தது. தலைகிறுகிறுத்து அவர் மூர்ச்சையானார்.
“அவரைக் காப்பாற்றுங்கள் என நாங்கள் கத்திக் கொண்டே இருந்தோம்,” என்கிறார் ஜிக்னேஷ். “அப்போதுதான் கிராமவாசிகள் வந்தனர். காவலர்களையும் தீ அணைப்பு படையையும் அழைத்தனர். பாவேஷ் உள்ளே அனுப்பப்பட்டபோது அவரும் விஷவாயுவால் மூர்ச்சையானார். வெளியே தூக்கியதும், பாவேஷை காவல் நிலையத்துக்கு முதலில் கொண்டு சென்றனர். அவருக்கு நினைவு வந்த பிறகு, காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.”
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் நினைவுமீளும் வரை ஏன் அவர்கள் காத்திருந்தனர்? யாரிடமும் பதிலில்லை. எனினும் பாவேஷ் காப்பாற்றப்பட்டார்.
*****
அனிப் திருமணமாகும் முன்பே தாகெஜ்ஜில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரின் மனைவி ரமிலே பென், 2019ம் ஆண்டில் திருமணம் முடிந்ததும் அங்கு சென்றார். “நான் காலை எட்டு மணிக்கே வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர். “அவர் மதிய உணவையும் முடித்து தனியாக காலை 11 மணிக்கு கிளம்புவார். ஊர்த் தலைவர் கொடுக்கும் வேலைகளை செய்வார்,” என்கிறார் ரமிலா பென், அனிப் இறந்தபோது ஏன் அவர் அருகிலில்லை என்கிற காரணத்தை விளக்கி.
“முன்பெல்லாம் நாங்கள் ஒன்றாக சாக்கடைக் குழியை தூய்மை செய்யும் பணி செய்தோம்,” என்கிறார் அவர். “திருமணத்துக்கு பிறகு நான்கு மாதங்கள் நாங்கள் சாக்கடைக் குழி சுத்தப்படுத்தும் வேலை செய்தோம். அவர்கள் எங்களை ‘ட்ராக்டர் வேலை’ பார்க்கக் கூறினர். நாங்கள் ட்ராக்டரில் ஊர் முழுக்க செல்வோம். குப்பைகளை மக்கள் ட்ராலியில் போடுவார்கள். குப்பையை நான் பிரிப்பேன். தாகெஜ்ஜில் நாங்கள் பெரிய சாக்கடைக் குழிகளையும் சுத்தப்படுத்தியிருக்கிறோம். பெரிய அறைகளை கொண்ட தனி குழிகள் உங்களுக்கு தெரியுமல்லவா? பக்கெட்டில் கயிறு கட்டி கழிவுகளை வெளியே எடுத்துப் போடுவேன்,” என அவர் விளக்குகிறார்.
“வேலை பார்க்கும் நாளொன்றுக்கு அவர்கள் 400 ரூபாய் கொடுப்பார்கள்,” என்கிறார் ரமிலா பென். “நான் வேலைக்கு சென்ற நாட்களுக்கு எனக்கு 400 ரூபாய் கிடைத்தது. நான்கு மாதங்கள் கழித்து அவர்கள் மாத ஊதியம் கொடுக்கத் தொடங்கினார்கள். முதலில் ஒன்பதாயிரம், பிறகு பன்னிரெண்டு, இறுதியில் பதினைந்தாயிரம் ரூபாய்.” அனிப்பும் கல்சிங்கும் ஊர்ப் பஞ்சாயத்துக்காக மாத ஊதியம் வாங்கிக் கொண்டு சில வருடங்கள் அந்த வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கவென ஓர் அறையையும் பஞ்சாயத்து ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.
வேலைக்கு நியமிக்கப்படுவதற்கு முன் ஏதேனும் ஒப்பந்தம் கையெழுத்தானதா?
உறவினர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. உள்ளாட்சி அமைப்புக்கு வேலை பார்த்த தனியார் ஒப்பந்தக்காரர்களால் அந்த ஊழியர்கள் பணிக்கமர்த்தப்பட்டனரா என எவருக்கும் தெரியவில்லை. ஒப்பந்தரீதியான பணியில் அவர்கள் பஞ்சாயத்துக்கு வேலை பார்த்தார்களா என்றும் தெரியவில்லை.
”முத்திரையுடன் கூடிய பேப்பர் ஏதாவது இருந்திருக்கும். ஆனால் அனிப்பின் பாக்கெட்டில் இருந்திருக்கும்,” என்கிறார் அவரின் தந்தை ஜாலு பாய். வேலைக்கு புதிதாக வந்திருக்கும் பாவேஷ் மற்றும் ஜிக்னேஷின் நிலை என்ன? “ஒப்பமிடுதலோ கடிதமோ ஏதும் இல்லை. எங்களை அழைத்தார்கள். நாங்கள் சென்றோம்,” என்கிறார் பாவேஷ்.
துயரம் தாக்கிய சமயத்தில் பாவேஷ் அங்கு பத்து நாட்களாக வேலை பார்த்திருந்தார். ஜிக்னேஷும் பாரேஷும் அன்று வேலைக்கு அழைக்கப்பட்டனர். வேலையில் அதுதான் அவர்களுக்கு முதல் நாள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் அவர்கள் செய்யவிருந்த வேலையின் தன்மை தெரிந்திருக்கவில்லை.
பாரேஷின் தாயான 51 வயது சப்னா பென் கண்ணீருடன் பேசுகிறார்: “பஞ்சாயத்து வேலை இருப்பதாக சொல்லி பாரேஷ் வீட்டை விட்டு கிளம்பினான். அவர்கள் அவனை அங்கு (தாகெஜ்) வரச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனது சகோதரன் (பாவேஷ்) ஏற்கனவே பத்து நாட்களுக்கு முன்பே அங்கு சென்றிருந்தான். கல்சிங் பாய் அவனை அழைத்தார். நாளொன்றுக்கு 500 ரூபாய் கிடைக்குமென பாவேஷும் பாரேஷும் கூறினார்கள். ஆனால் அவர்கள் சாக்கடைக் குழியை சுத்தப்படுத்த செல்கின்றனர் என சொல்லவே இல்லை. எத்தனை நாட்களாகும் என எங்களுக்கு எப்படி தெரியும்? என்ன வேலை அவர்கள் அங்கு செய்வார்களேன எங்களுக்கு எப்படி தெரியும்?” என அவர் கேட்கிறார்.
கல்சிங் முனியா வீட்டிலோ, 26 வயது கனிதா பென்னுக்கு கணவரின் வேலை பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. “வீட்டை விட்டு வெளியே நான் செல்வதில்லை,” என்கிறார் அவர். “’பஞ்சாயத்தில் வேலை பார்க்க போகிறேன்’ என்றுதான் அவர் சொல்லி விட்டு செல்வார். என்ன வேலை செய்கிறாரென சொன்னதே இல்லை. இந்த வேலையை கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக அவர் செய்து கொண்டிருக்கிறார். என்னிடம் அதைப் பற்றி அவர் சொன்னதில்லை. வீட்டுக்கு வந்தபோதும் சொன்னதில்லை,” என்கிறார் அவர்.
ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த எவருக்கும் அவர்களின் மகன்களும் கணவர்களும் சகோதரர்களும் என்ன வேலை பார்த்தனர் என தெரிந்திருக்கவில்லை. பஞ்சாயத்தில் வேலை பார்க்கின்றனர் என மட்டும் தெரிந்து வைத்திருந்தனர். ஜாலு பாய்க்கு மகன் அனிப் செய்து கொண்டிருந்த வேலை அவரின் மரணத்துக்கு பின்புதான் தெரிய வந்தது. பணத்துக்கான அவசியம்தான், அந்த வேலை செய்யுமளவுக்கு அவர்களை விரட்டியதாக அவர் கருதுகிறார். “ஊர் பஞ்சாயத்து வேலை எனில், நாங்கள் பன்றியின் உடலைக் கூட தூக்கி போட்டாக வேண்டும்,” என்கிறார் ஜாலு பாய். “சாக்கடைக் குழியை சுத்தப்படுத்தும்படி அவர்கள் கேட்டால், அதையும் செய்தாகத்தான் வேண்டும். இல்லையெனில், வேலையில் இருக்க விட மாட்டார்கள். வீட்டுக்கு செல்லும்படி கூறி விடுவார்கள்.”
இறந்தவர்களுக்கோ புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கோ என்ன வேலை என தெரிந்திருந்ததா? தெரிந்திருக்கவில்லை என்கின்றனர் பாவேஷும் ஜிக்னேஷும். பாவேஷ் கூறுகையில்,” கல்சிங் பாய் நாளொன்றுக்கு 500 ரூபாய் கொடுப்பதாகக் கூறினார். கொஞ்சம் சாக்கடைக் குழியை சுத்தப்படுத்த வேண்டுமென கூறினார்.” ஜிக்னேஷும் இதை உறுதிப்படுத்துகிறார். கூடுதலாக “அனிப் என்னை அழைத்தார். நான் சென்றேன். நேரடியாக காலையில் அவர்கள் என்னை வேலை பார்க்க செய்தனர்,” என்கிறார்.
ஜிக்னேஷை தவிர்த்து எவரும் நடுநிலைப் பள்ளியை தாண்டவில்லை. குஜராத்தி மொழி இளங்கலை படிப்பின் முதலாண்டை தொலைதூரக் கல்வியில் ஜிக்னேஷ் பயின்று கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் எதிர்கொண்ட யதார்த்தம் என்பது, வறுமையிலிருந்து பிழைக்க சாக்கடைக் குழிகளில் இறங்குவதாகத்தான் இருந்தது. பல வயிறுகள் உணவிடப்பட காத்திருந்தன. பல குழந்தைகள் பள்ளி செல்ல காத்திருந்தன.
*****
சஃபாய் கராம்சாரிகளுக்கான தேசிய கமிஷனின்(NCSK) 2022-23ம் ஆண்டுக்கான அறிக்கை யின்படி, குஜராத்தில் சாக்கடைக் குழிகளை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கி 1993ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு வரை 153 பேர் இறந்திருக்கின்றனர். அதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் பதிவான 220 மரணங்களுக்கு அடுத்தபடியான எண்ணிக்கை அது.
எனினும் மரண எண்ணிக்கை பற்றிய உண்மையான தரவுகளோ செப்டிங் டேங்க் மற்றும் சாக்கடைக் குழிகளை சுத்தப்படுத்தும் வேலைகளில் பணியாற்றுபவரின் எண்ணிக்கை பற்றிய தரவுகளோ தெளிவின்றி இருப்பது தொடரவே செய்கிறது. ஆனால் குஜராத்தின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சர், சட்டமன்றத்தில் 11 தூய்மைப் பணியாளர்கள் 2021-2023-ல் இறந்ததாக குறிப்பிட்டார். ஜனவரி 2021லிருந்து ஜனவரி 2022 வரை ஏழு பேர். ஜனவரி 2022 முதல் ஜனவரி 2023 வரை நால்வர்.
கடந்த இரண்டு மாதங்களில் இறந்த எட்டு தூய்மைப் பணியாளர்களையும் சேர்ந்தால் அந்த எண்ணிக்கை கூடும். மார்ச் மாதம் ராஜ்கோட்டில் இருவரும் (இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள) தாகெஜ்ஜில் ஏப்ரல் மாதம் மூவரும் அக்கணக்கில் வருவார்கள். அதே மாதத்தில் தோல்காவில் இரண்டு பேரும் தராடில் ஒருவரும் இறந்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களிடம் இருந்ததா?
அனிப்பின் 21 வயது மனைவி ரமிலா பென்னால் பாருச்சா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில் விடை இருக்கிறது: “ஊர்த் தலைவர் ஜெய்தீப் சிங் ரானாவும் துணைத் தலைவரின் கணவர் மகேஷ் பாய் கோஹிலும் 20 அடி ஆழ துர்நாற்றம் வீசும் சாக்கடைக் குழிக்குள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இறங்கவிருக்கின்றனர் என்பதை அறிந்தே இருந்தனர். அவர்கள் இறக்கவும் செய்யலாம் என்பதை அறிந்திருந்தனர். ஆனாலும் பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.” (துணைத் தலைவர் ஒரு பெண். வழக்கமாக பிற்போக்கு சமூகங்களில் இருப்பதை போல, அவரின் கணவருக்குதான் அதிகாரம்).
மனிதர்கள் சாக்கடைக் குழிகளையும் செப்டிக் டேங்குகளையும் சுத்தப்படுத்துவது, The Prohibition of Employment of Manual Scavengers And Their Rehabilitation Act, 2013 மற்றும் Employment Of Manual Scavengers and Construction Of Dry Latrines (Prohibition) Act, 1993 ஆகிய சட்டங்களின்படி சட்டவிரோதம். ஆனால் வெறும் எழுத்தளவில் மட்டும்தான் தடை நிலவுகிறது. அதே சட்டம், “அபாயகரமான சூழலில் சுத்தப்படுத்துகையில் பாதுகாப்பு உபகரணம் என்பது உரிமை. அத்தகைய உபகரணங்களையும் சுத்தப்படுத்தும் கருவிகளையும் வழங்கி ஊழியரின் பாதுகாப்பை உறுதிபடுத்தாத வேலை தருபவருக்கு பிணையில் வெளிவராத தண்டனை வழங்கப்படும்,” என்கிறது.
ரமிலா பென்னின் வழக்கை கையாளும் காவல்துறை, தாகேஜ் ஊர் பஞ்சாயத்து தலைவரையும் துணைத் தலைவரையும் கைது செய்தது. இருவரும் உடனடியாக பிணைக்கு விண்ணப்பித்து விட்டனர். அதனால் என்ன விளையும் என்பது இறந்து போன குடும்பங்களில் எவருக்கும் தெரியவில்லை.
*****
“எனக்கென யாருமில்லை. ஐந்து குழந்தைகள்தான் இருக்கின்றனர். எங்களின் உணவு, குழந்தைகளின் கல்வி எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக் கொண்டார். இப்போது அவற்றை செய்ய யாருமில்லை,” என சொல்லி உணர்ச்சிவசப்படுகிறார் கல்சிங்கின் மனைவியான கனிதா பென். கணவரின் மரணத்துக்கு பிறகு, கணவர் வீட்டாருடனும் ஐந்து குழந்தைகளுடனும் அவர் வசிக்கிறார். மூத்த குழந்தை கினாலுக்கு வயது 9. இளைய குழந்தை சாராவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. “எனக்கு நான்கு மகன்கள் இருந்தனர்,” என்கிறார் கல்சிங்கின் 54 வயது தாய் பபுதி பென். “இருவர் சூரத்தில் இருக்கின்றனர். அவர்கள் எங்களை பார்க்க வருவதே இல்லை. மூத்தவர் தனியாக வசிக்கிறார். எங்களுக்கு ஏன் அவர் உணவு கொடுக்க வேண்டும்? நாங்கள் இளையவன் கல்சிங்குடன் தங்கியிருந்தோம். இப்போது அவன் போய்விட்டான். இனி யார் எங்களுக்கு இருக்கார்?” என அவர் கேட்கிறார்.
21 வயதில் கணவரை இழந்திருக்கும் கர்ப்பிணியான ரமிலா பென்னும் நிர்க்கதியாக இருக்கிறார். “இனி எப்படி நான் வாழ்வது? எங்களின் உணவை யார் கொடுப்பார்? எத்தனை நாட்களுக்கு குடும்பத்தினரை சார்ந்திருக்க முடியும்?” அனிப்பின் குடும்பத்தில் இருக்கும் பெற்றோர், ஐந்து மைத்துனர் மற்றும் ஒரு மைத்துனி ஆகியோரை அவர் குறிப்பிடுகிறார்.
”இனி இந்த குழந்தையுடன் நான் என்ன செய்வேன்? எங்களை யார் பார்த்துக் கொள்வார்? குஜராத்தில் நான் தனியாக எங்கு செல்வேன்?” அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். ஆனால் திரும்பிச் செல்ல முடியாது. “என் தந்தைக்கு வயதாகி விட்டது. எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். விவசாயம் கூட அவரால் பார்க்க முடியாது. நிலமும் பெரிதாக இல்லை. என் குடும்பம் மிகப் பெரியது. நான்கு சகோதரர்களும் ஆறு சகோதரிகளும் இருக்கின்றனர். எப்படி நான் என் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல முடியும்?” அவரின் பார்வை அவரின் வயிற்றில் நிலைகுத்தியிருக்கிறது. ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறார்.
“அனிப் எனக்கு புத்தகங்களை கொண்டு வந்து கொடுப்பார்,” என்கிறார் அவரின் பத்து வயது சகோதரி ஜக்ருதி. சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவரின் குரல் உடைகிறது.
பாவேஷும் பாரேஷும் இளம்வயதிலேயே தந்தையை இழந்துவிட்டனர். பிற மூன்று சகோதரர்களும் இரண்டு மைத்துனிகளும் அம்மாவும் தங்கையும் குடும்பத்தில் இருக்கின்றனர். “பாரேஷ் என்னை பார்த்துக் கொண்டார்,” என்கிறார் 16 வயது சகோதரி பாவ்னா. “12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்ததும் என்னை மேற்படிப்பு படிக்க அனுப்புவதை பற்றி என் சகோதரர் சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு செல்பேசி வாங்கிக் கொடுப்பதாகவும் சொன்னார்.” 12ம் வகுப்பு தேர்வுகளை இந்த வருடம் அவர் எழுதியிருக்கிறார்.
கல்சிங், பாரேஷ் மற்றும் அனிப் ஆகியோரின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் மாநில அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களின் குடும்பம் பெரிது. வருமானம் ஈட்டுபவர்களை அக்குடும்பங்கள் இழந்துள்ளன. இன்னும் என்ன? காசோலைகள் கைம்பெண்களின் பெயர்களில் வந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு பணம் வந்ததை பற்றி எதுவும் தெரியாது. ஆண்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இயற்கைக்கு நெருக்கமாக வாழக் கூடியான சமூகத்தை சேர்ந்த பழங்குடிகள் எப்படி இந்த வேலை செய்யும் இடத்தை வந்தடைந்தனர்? அவர்களுக்கென நிலம் இல்லையா? வேறு வாழ்வாதார வாய்ப்புகள் இல்லையா?
“எங்கள் குடும்பங்களுக்கென சிறு நிலப்பரப்புகள் இருக்கின்றன,” என விளக்குகிறார் அனிப்பின் மாமா. “என் குடும்பத்தில் எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கலாம். ஆனால் அதைச் சார்ந்து 300 பேர் வாழ வேண்டும். எப்படி கையாளுவது? தொழிலாளராக நீங்கள் வேலை செய்ய வேண்டும். நிலம் தேவையானதை எங்களுக்கு வழங்கலாம். ஆனால் வியாபாரத்துக்கானதை வழங்காது.”
இந்த வேலைகள் செய்வதால் அவர்களுக்கு சமூகக் களங்கம் விளையாதா?
“சமூகக் களங்கமேதும் இல்லை,”என்கிறார் பாரேஷின் மாமா பச்சுபாய் கடாரா. “ஆனால் இப்போது இப்படி நடந்துவிட்டதால், இத்தகைய அசுத்த வேலையை செய்யக் கூடாதென நினைக்கிறோம்.
”ஆனால் எப்படி பிழைப்பது…?”
இக்கட்டுரை முதலில் குஜராத்தி மொழியில் கட்டுரையாளரால் எழுதப்பட்டு பின்பு ஆங்கிலத்துக்கு பிரதிஷ்தா பாண்டியாவால் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்