PHOTO • P. Sainath & Ananya Mukherjee

கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை தண்ணீர் கொண்டு வருவதற்கும் விறகு மற்றும் தீவனங்கள் தேடுவதற்கு செலவிடுகின்றனர்

மூன்று சில் கற்கள் மற்றும் மரக்கட்டை ஆகியவற்றின் மீது அவர் ஒய்யாரமாக நிமிர்ந்து நின்றார். கற்கள் கரடு முரடாகவும் சீரற்றதாகவும் இருந்தது. அந்த மரக்கட்டை தான் அவருக்கு தட்டையான மேற்பரப்பை வழங்கியது. மகாராஷ்டிராவின் யாவத்மல் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒரு தொட்டியில் இருந்து குழாய் மூலம் வெளியேறும் தண்ணீரை தன்னால் முடிந்தவரை பிடிக்க முயற்சிக்கிறார். வியக்கவைக்கும் பொறுமையுடனும் சமநிலையுடனும் அவர் தன் தலைக்கு மேலே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீரை பிடித்து பின்னர் தரையில் இருக்கும் ஒரு பெரிய பாத்திரத்தில் அதை நிரப்புகிறார். அவை இரண்டும் நிரம்பியதும் அவர் தன் வீட்டிற்கு நடந்து சென்று தண்ணீரை சேமித்து வைத்து விட்டு மீண்டும் தண்ணீர் பெருவதற்காக திரும்பி வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் கிட்டத்தட்ட 15 முதல் 20 லிட்டர் தண்ணீரை இரண்டு உலோக பாத்திரத்திலும் எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறார்.

அதே மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் சாரதா பத்ரே மற்றும் அவரது மகள்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஆரஞ்சு மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கான நீர் ஆதாரம் 300 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. கிராமப்புற அளவைகளின் படி பார்த்தால் அது அருகில் உள்ள இடம் தான். ஆனால் இந்த மரங்களுக்கு 214 பெரிய குடங்களில் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். போவதற்கும் வருவதற்கும் சேர்த்து கிட்டத்தட்ட 428 முறை பாதி நேரத்தில் முழு குடத்தையும் தலையில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அல்லது மூன்று பெண்களும் ஒவ்வொருவரும் 40 கிலோமீட்டர் நடக்க வேண்டியுள்ளது. அவர்கள் "பாதி மரங்களுக்கு திங்கள்கிழமைகளிலும் மீதி மரங்களுக்கு வியாழக்கிழமைகளிலும் தண்ணீர் விட்டு வருகின்றனர்". ஏப்ரல், மே மாதங்களில் 45 டிகிரி செல்சியஸ் தொடக்கூடிய வெப்பநிலையிலும் வயல்களில் அவர்களை பிற வேலைகளை பார்ப்பதோடு சேர்த்து இதையும் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் இது சிறிது காலத்திற்கு முன்பு. கிராமப்புற நீர் நெருக்கடி மேலும் அதிகமாகையில் பல ஆதாரங்கள் வறண்டு போவதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான தண்ணீர் தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களுக்கு திருப்பி விடப்படுவதால் பத்ரே மற்றும் அவரது மகள்களை போன்ற இலட்சக்கணக்கான இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் இன்னும் அதிக தொலைவிற்கு நடக்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்படுகின்றனர். ஏழை கிராமப்புற பெண்கள் இதை எல்லா நேரத்திலும் செய்து வருகின்றனர் உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும்.

PHOTO • P. Sainath & Ananya Mukherjee

கிராமப்புற இந்தியாவில் பல பெண்கள் தங்களது வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை இந்த மூன்று வேலைகளைத் தான் செய்து வருகின்றனர் : தண்ணீர் எடுப்பது, விறகு பொறுக்குவது, கால்நடை தீவனங்கள் சேகரிப்பது ஆகியவை. ஆனால் அவர்கள் இதைத் தாண்டி இன்னும் பல வேலைகள் செய்கின்றனர். லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களின் பொருளாதாரம் பெரும்பாலும் இவர்களின் உழைப்பையே சார்ந்துள்ளது.

கேரளாவின் தொலைதூரப் பகுதியான எடமால்குடியில் 60 பெண்கள் கூடி தங்களது கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டுவருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சோலார் பேனல்களை கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த சோலார் பேனல்களை மூணாறு நகரத்திற்கு அருகில் உள்ள பெட்டிமுடியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரமுள்ள மலைப்பாதை, காடு மற்றும் காட்டுயானைகள் இருக்கக்கூடிய பகுதியிலும் தங்களது தலையில் சுமந்து சென்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பெண்கள் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள். அனைவருமே ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (பிற இடங்களில் பூர்வீக வாசிகள் என்று அழைக்கப்படுபவர்கள்) தங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சபையினரிடம் சூரிய சக்தி தான் வருங்காலத்திற்கான வழி என்று புரியவைத்து சம்மதிக்க வைத்திருக்கின்றனர்.

அந்தப் பேனல்கள் ஒவ்வொன்றும் ஒன்பது கிலோ வரை எடை கொண்டது மேலும் பல பெண்கள் இரண்டினை தலையில் சுமந்து சென்றனர். இந்த ஆதிவாசி பெண்களில் சிலர் 40 கிலோவுக்கும் கொஞ்சம் மேல்தான் அவர்களது எடையே உள்ளது அதில் இரண்டு பேனல்களின் எடை என்பது அவர்களது மொத்த உடல் எடையில் பாதியாகும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக கிராமப்புற இந்தியாவில் ஏற்பட்டுள்ள தீவிரமான மற்றும் கொடூரமான மாற்றத்தின் பாதிப்பை இப்பெண்கள் சுமந்து வருகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் கிராமப்புறங்களிலிருந்து அல்லது விவசாயத்திலிருந்து வெளியேறி உள்ளனர் இதனால் அவர்களது பணிச்சுமை அதிகரித்துள்ளது (இருபாலினத்தவரும் புலம்பெயர்கின்றனர், ஆனால் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேறுகின்றனர்). கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி பராமரிப்பு ஆகியவற்றில் பாரம்பரிய வேலைகளையும் சமாளிக்க இப்பெண்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இந்தப் புதிய அழுத்தம் இவர்களது கால்நடை வளர்ப்பிற்கான நேரத்தைக் குறைக்கிறது.

விவசாயத்தில் 1990 களில் கூட விதை விதைப்பவர்களில் பெண்கள் 76 சதவீதத்தினராகவும் நெல் நடவு செய்வதில் ஈடுபட்டவர்கள் 90 சதவீதத்தினராகவும் இருந்து வந்தனர். இது வயல்களில் இருந்து உணவினை வீட்டிற்கு கொண்டு செல்வதில் பெண்களின் பங்கு 72 சதவீதமாக இருந்தது அதில் 32 சதவீதம் பேர் விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்பவர்களாகவும் 69% பேர் கால்நடைகளையும் வளர்த்தும் வந்தனர். இப்போது இவர்களின் பணிச்சுமை இந்த அளவிற்கும் அதிகரித்து இருக்கிறது.

PHOTO • P. Sainath & Ananya Mukherjee

ஜார்ஜ் மான்பியோட் கூறுவது போல் : "கடின உழைப்பும் சுயவேலைவாய்ப்பும் செல்வத்தைக் கொண்டு வருமானால் இந்நேரம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் லட்சாதிபதியாக இருந்திருப்பார்". இது பொதுவாக கிராமத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஏழை பெண்கள் அனைவருக்கும் பொதுவாக பொருந்தும்.

மைல்கற்களா அறவைகற்களா ?

ஐ. நா சபை அக்டோபர் 15 ஆம் தேதியை சர்வதேச கிராமப்புற பெண்கள் தினமாகவும் அக்டோபர் 17ஆம் தேதியை சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகவும் அனுசரித்து வருகிறது. இது 2014 ஆம் ஆண்டினை குடும்ப வேளாண்மைக்கான சர்வதேச ஆண்டு என்றும் அழைத்தது. இந்தியாவில் லட்சக்கணக்கான கிராமப்புற பெண்கள் தங்கள் உழைப்பால் தங்களது 'குடும்பத்தின் பண்ணைகளை' தாங்களே கவனித்து வருகின்றனர். ஆனால் நில உரிமையை எடுத்துக் கொண்டால் அவர்கள் 'குடும்பத்தின்' ஒரு அங்கமாக கருதப்படுவதில்லை. அரிதாகவே பெண்களின் பெயர்கள் விவசாயப் பத்திரங்களில் தோன்றும் மேலும் கிராமப்புற பெண்களின் பெரும்பகுதியினர் ஏழைக்குளுக்கும் ஏழையாக இருக்கின்றனர்.

இந்த மைல்கற்கள் அனைத்தும் பெரும்பான்மை ஊடகங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. அக்டோபர் 20ஆம் தேதி வெளிவரும் ஃபோர்ப்ஸ் ஆசியா இதழ் தன் அவர்களுக்கு முக்கியமானது. ஃபோர்ப்ஸ் ஆசியா இதழ் இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலை முறையாக வெளியிடும் போது அவர்கள் அனைவரும் இப்போது டாலர் பில்லியனர்கள் என்று அறிவிக்கிறது. கிராமப்புற பெண்கள் குறித்த எந்த கட்டுரைகளும் வெளியாகாது.

கட்டாயப் புலப்பெயர்வுகளால் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் 1990களில் இருந்து கிராமப்புற இந்தியாவில் இது பொதுவான ஒரு நிகழ்வு மேலும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். தனியார் மற்றும் அரசு தொழில்துறை திட்டங்கள் மற்றும் 'சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்' ஆகியவற்றுக்காக விவசாய நிலங்களை அரசு வழுக்கட்டாயமாக கையகப்படுத்தியுள்ளது. இது நிகழும் போது தண்ணீர் மற்றும் தீவனம் தேடி பெண்கள் அலைவது இன்னும் அதிக தூரமாக்கப்படுகிறது. இவற்றை தேடி அலையும் புது இடங்களில் அந்த உள்ளூர்வாசிகளிடமிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் விரோதமும் இதை மேலும் கடினமாக்குகிறது. ஒரு காலத்தில் காடுகளில் இருந்து விளை பொருட்களை சேகரித்தவர்களுக்கு இன்று காடுகளை அணுகுவதே சிரமமாக இருக்கிறது. புலம்பெயர்ந்தோருக்கு நல்ல வேலைகளுக்கான வழிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றது.

கிழக்கு மாநிலமான ஒடிசாவில் உள்ள குஜ்ஜாரி மொஹந்தி சொல்வது போல் மிகவும் வெற்றிகரமான விவசாயி கூட புலம்பெயர்வுக்கு பயந்து தான் வாழ்ந்து வருகின்றனர். குஜ்ஜாரிக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகிறது திறமையான வெற்றிலை விவசாயி. ஆனால் இவரது கிராமம் எஃகு நிறுவனமான போஸ்கோவிற்கு எதிராக உள்ளது, இவரை போன்ற பலர் தங்களுக்கு மாநில அரசு நிலம் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது என்று கூறுகிறார்.

"இவை என்ன வேலைகளை உருவாக்கும்"? என்று அவர் கேட்கிறார். "இந்த தொழிற்சாலைகள் இயந்திரங்கள் மூலம் இயங்குகின்றன மனிதர்களால் அல்ல. கணினிகள் மற்றும் தொலைபேசிகள் அதிக வேலைகளை உருவாக்கியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா? இப்போதெல்லாம் தபால்காரர்கள் ஏன் அதிகமாக வருவதில்லை? எனது வளமான வெற்றிலை தோட்டத்தை பாருங்கள் இவை எத்தனை உயிர்களை வாழ வைக்கின்றன என்று பாருங்கள்", என்று கூறினார்.

PHOTO • P. Sainath & Ananya Mukherjee

கிராமப்புற பெண்களும் சில இக்கட்டான நிலையிலும் வெற்றி பெற்றுள்ளனர். 1995 முதல் இந்தியாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது என்று தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகள் காட்டுகின்றன. http://psainath.org/maharashtra-crosses-60000-farm-suicides/ அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக இருப்பது ஆண்களே. இது பெரிய குடும்பங்களை தாங்களாகவே நடத்துவதற்கும் வங்கிகள், கடன்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆகியவற்றை கையாள்வதற்கும் திடீரென பெண்கள் மீது தங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.

பெண் விவசாயிகளிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை பெரிதாக கணக்கிடப்படுவது இல்லை என்பது தான் யதார்த்தம், பொதுவாக பெரும்பாலும் பெண்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படவில்லை. விவசாயிகளின் மனைவிகளாக மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு சொத்துரிமை இல்லாததால் ஏற்படும் விளைவாகும். மிகவும் அரிதாகவே உரிமையாளர் பத்திரத்தில் பெண்களின் பெயர் தோன்றும். (விவசாயிகள் அல்லாதவர்களிடையே கூட கிராமப்புற இந்தியாவில் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்த வண்ணம் உள்ளது).

வேதனையும் முரண்பாடும்

இங்கு உள்ள முரண்பாடு என்னவென்றால் உலகெங்கிலும் உள்ள பல பெண்கள் ஆண்டுதோறும் இவ்வாறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நம் காலத்தின் மிகப் பெரிய பிரச்சனைகளை தீர்க்க உதவும் பார்வையும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. அவற்றில் பின்வருவனவைகள் அடங்கும்: உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நீதி, சமூக மற்றும் ஒருமைப்பாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் பல.

அவற்றில் ஏதேனும் நடக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு ஆழமான மற்றும் ஒரு அடிப்படையான மாற்றம் தேவை. துண்டு துண்டான நிரல்கள் அல்ல.

அதிகமான பெண்கள் எங்களிடம் சொல்வது போல அவர்கள் கடினமாக உழைக்கும் விவசாயக் கூலியாக இருப்பதைவிட சுயாதீன உற்பத்தியாளராக இருப்பதையே விரும்புகின்றனர். அப்படி ஒரு உற்பத்தியாளராக இருப்பதன் மூலம் அவர்களது பணி மற்றும் நேரத்தை அவர்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் மேலும் எதை உற்பத்தி செய்ய வேண்டும் எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இருக்கும் என்றும் கருதுகின்றனர். கிராமப்புற பெண்களின் இந்த ஆசை நனவாக வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் தேவை.

முதலாவது வளங்களுக்கான உரிமைகள் - குறிப்பாக நில உரிமைகள். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, வளரும் பிராந்தியங்களில் உள்ள பெண்கள் நிலத்தை சொந்தமாக வைத்திருப்பது அல்லது இயக்குவது அல்லது குத்தகை நிலத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவு அவர்கள் அப்படியே ஏதேனும் வைத்திருந்தால் கூட அந்த நிலம் மோசமான நிலையிலோ அல்லது அளவில் சிறியதாகவோ இருக்கிறது கால்நடைகள் மற்றும் பிற சொத்துக்களை பெண்கள் அணுகுவதற்கான இந்த முறை உலகம் முழுவதும் பின்பற்றப்படுவதை நாம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளது .

இரண்டாவதாக நிறுவனங்களுக்கான கட்டமைப்புக்களை உருவாக்குவது பெண்களுக்கு அவர்களின் மிகப்பெரிய வளத்தை பயன்படுத்த அது உதவுகிறது அதாவது அவர்களின் கூட்டு உள்ளுணர்வு மற்றும் ஒற்றுமையுணர்வு.

இது சில பெரிய மறுபரிசீலனைக்கு வித்திடுகிறது. தனிநபர் அடிப்படையிலான சிறு கடன் நிறுவனங்கள் நீண்ட காலமாக உலகை ஆண்டு வந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இது பெண்களின் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்திவருவதற்கான ஆதாரங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணம் ஆந்திராவில் இருந்து கிடைக்கிறது. பல சிறு கடன் நிறுவனங்களால் உந்தப்பட்ட தற்கொலைகள் சிறுகடன் நிறுவனங்களை மூட உத்தரவிட வழிவகுத்தது . (அதிகரித்து வரும் ஆய்வுகள் துணைசஹாரன் ஆப்பிரிக்காவிலும் , லத்தீன் அமெரிக்காவிலும் சிறு கடன் தொடர்பான சிக்கல்களை சுட்டிக்காட்டுகின்றன மேலும் அதில் வால்ஸ்ட்ரீட்டுக்கும் பெரும் பங்குண்டு )

சுய உதவிக் குழுக்கள் ஒரு பிரபலமான வாய்ப்பாக உருவெடுத்துள்ளது மேலும் அவை சிறுகடன் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய மாற்றாக விளங்குகின்றன. இருப்பினும் சுய உதவிக்குழுக்கள் பாலின நீதி நடைபெறும் அனைத்து துறைகளையும் ஒத்திசைவாக இணைக்காமல் தனித்து நிற்கும் அமைப்பாக இருக்கிறது. உதாரணத்திற்கு வீடு, சமூகம், பணியிடம் மற்றும் அரசியல் களம் ஆகியவற்றை இணைக்கத் தவறிவிட்டது.

ஆனால் அப்படி இணைப்பு செய்யப்படும் போது பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.

ஒற்றுமை புதிய வழிகளைத் திறக்கிறது

கேரளாவின் குடும்பஶ்ரீயை எடுத்துக்கொண்டால் - அது 40 லட்சம் பெண்களின் கூட்டுறவாக இருக்கிறது. அதில் பெரும்பாலானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள்.

PHOTO • P. Sainath & Ananya Mukherjee

1998 இல் கேரள அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் குறிக்கோள் ஒடுக்கப்பட்ட பெண்களின் கூட்டு திறனை அதிகரித்து அதன்மூலம் அவர்களின் வறுமை பிரச்சனைக்கு தீர்வு காண்பது. கேரளாவின் புகழ்பெற்ற 'மக்கள் திட்டம்' செயல்படுத்தப்பட்ட போது துவங்கப்பட்டது, இது மாநிலத்திற்கும் அதன் குடி மக்களுக்கும் இடையிலான தடைகளை உடைப்பதை நோக்கமாகக் கொண்டது. கீழுள்ள சமூகங்களின் மூலம் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதன்படி குடும்பஸ்ரீ ஆரம்பத்திலிருந்தே ஒரு சமூகம் மற்றும் அதிகாரத்துவ கூறுகள் ஆகியவற்றை இணைத்தே செயல்பட்டு வந்தது. இதன் ஆளும் குழுவிற்கு மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் தலைமை தாங்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கள அலுவலருடன் குடும்பஸ்ரீ அலுவலகம் இருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ கட்டமைப்பின் முக்கிய பணி மாநிலம் முழுவதும் உள்ள சமூக கூட்டுறவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகும், இது இப்போது 40 லட்சம் பெண்களை உள்ளடக்கிய அமைப்பாக வளர்ந்துள்ளது. அவர்கள் வருமானம் ஈட்டும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் பல வகையான சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் குடிமக்களாக மாறி வருகின்றனர்.

குடும்பஸ்ரீ நிறுவனத்தின் கட்டமைப்பு தான் அதை தனித்து காட்டுகிறது. இது மூன்று நிலைகளில் கூட்டுறவை ஏற்படுத்தும் சமூக கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. முதலாவதாக 'அண்டையர் குழு' இதில் 10 முதல் 20 பெண்கள் உறுப்பினராக இருப்பார். இந்த அண்டையர் குழுக்ககள் பின்னர் 'பகுதி மேம்பாட்டு சங்கமாக' இணைக்கப்படுகின்றது. பின்னர் அவை பஞ்சாயத்து அளவில் சமூக மேம்பாட்டு சங்கங்களை உருவாகின்றது.

குடும்பஸ்ரீ சோதனை சில முக்கியமான விளைவுகளை கொண்டுள்ளது. முதலாவதாக பெண்கள் தனிமைப்படுத்தப்படுவதை தடுக்க உதவும் ஒரு சிறந்த நிறுவனமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தனிமை என்பது நாம் புரிந்து கொள்வதை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. கோஸ்டாரிகாவில் உள்ள மகளிர் மேம்பாட்டு கூட்டுறவுகளுடன் நாங்கள் செய்த ஒரு ஆய்வில் (DS3) மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பெண்கள் இதை ஒரு முதன்மையான தடையாக அடையாளம் காட்டியுள்ளனர். இந்த கூட்டுறவுகளின் குறிக்கோள், "நாம் தனியாக இருப்பதை விட இணைந்து அதிகமாக செய்ய முடியும்" என்பதே. மேலும் அது இத்தகைய இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கான தேவைக்கு குரல் கொடுத்து வருகிறது.

பெண்கள் எதிர்கொள்ளும் தனிமை என்பது பல மட்டங்களில் இருக்கக்கூடும் மேலும் இது ஒரு பெரிய பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தும். வெற்றிகரமான குறு நிறுவனங்களை உருவாக்குவது என்பது மிகவும் கடினம், பெண்கள் தங்கள் வீட்டு கடமைகளையும் செய்யது கொண்டு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை தாங்களே கையாள வேண்டியிருக்கிறது. ஆனால் அடிப்படையில் தனிமை என்பது தன்னம்பிக்கையை குறைக்கிறது அதேசமயம் தங்களைப் போன்ற பெண்களுடன் இணைக்கப்படும் போது அது முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய இணைப்புகள் குறு நிறுவனங்களை உயர்த்துவதற்கு உதவுகிறது இது தனியாக வேலை செய்யும் பெண்களால் முடிவதில்லை.

குடும்பஸ்ரீ சுற்றுப்புறத்தில் இருக்கும் பெண்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் இதனை செய்து வருகிறது. அவர்களில் பலருக்கு இது அவர்களின் வீட்டிற்கு வெளியே உள்ள முதல் மற்றும் ஒரே இடமாக இருக்கிறது. அவர்கள் தங்களைப் போன்ற மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்கின்றனர். மேலும் வார்டு மற்றும் கிராம அளவில் உள்ள தொடர்புகள் மூலம் மேலும் அது விரிவடைகிறது. குடும்பஸ்ரீ நிறுவனம் மாதாந்திர சந்தைகள் உணவுத் திருவிழாக்கள் மற்றும் பல புதிய வாய்ப்புகளை இப்பெண்களுக்கு வழங்கி வருகிறது. அவர்களது வலைதளத்தின்படி கஃபே குடும்பஸ்ரீ உணவு திருவிழா சமீபத்தில் 3.22 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது மேலும் அவர்களது 1434 மாதாந்திர சந்தைகள் மூலம் 4.51  கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

இரண்டாவதாக, குடும்பஶ்ரீ மகத்தான சமூக விளைவுகளுடன் வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருகிறது.

சங்க க்ருஷி அல்லது கூட்டு வேளாண்மை என்பது அத்தகைய வழிகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட குழுக்களில் இப்போது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்று கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்து வருகின்றனர். உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறையாக இது 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதை கேரளப் பெண்கள் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டனர். இப்போது மாநிலம் முழுவதும் பெண் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 47,000திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்கள் தரிசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, நிலத்தை தயார் செய்து விவசாயம் செய்து வருகின்றன. பின்னர் அந்த உறுப்பினர்களின் தேவைகளைப் பொறுத்து அவர்கள் அதனை நுகர்வுக்கு பயன்படுத்துகின்றனர் அல்லது அதனை விற்பனை செய்து விடுகின்றனர். இவற்றில் எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டுகளும் இருக்கின்றன. பெரம்பராவிலுள்ள குடும்பஸ்ரீ பெண்கள் பஞ்சாயத்துடன் பணியாற்றி கடந்த 26 வருடத்தில் 140 ஏக்கர் தரிசு நிலத்தை மீட்டெடுத்துள்ளனர். இப்போது அதில் நெல், காய்கறிகள் மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை விளைவித்து வருகின்றனர்.

PHOTO • P. Sainath & Ananya Mukherjee

இது கேரள விவசாயத்தில் பெண்களின் பங்கு ஒரு தெளிவான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பஸ்ரீ பெண்கள் குறைந்த ஊதிய வேலைகளில் இருந்து விடுபட்டு தயாரிப்பாளராக மாறி வருகின்றனர். ஒரு சுயாதீன உற்பத்தியாளராக அவர்கள் தங்களது நேரம் மற்றும் உழைப்பின் மீது அதிக அளவு கட்டுப்பாடுகளை பெறுகின்றனர். மேலும் பயிர்கள், உற்பத்தி முறைகள் மற்றும் விளை பொருட்களின் மீதும் அவர்களது கட்டுப்பாடு இருக்கிறது.

சுமார் ஒரு லட்சம் பெண்கள் இப்போது இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் அதனை பல பெண்கள் செய்ய விரும்புகின்றனர். குடும்பஸ்ரீ விவசாயிகள் மாற்று வேளாண் முறைகள் மூலம் சுற்றுச்சூழல் பேரழிவை எதிர்த்துப் போராடுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருக்கும் அனுபவம் மேலும் பல தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. குடும்பஸ்ரீ பெண்கள் அரசியலிலும் பங்கேற்கின்றனர். 2010ஆம் ஆண்டில் அவர்களில் 11,173 பேர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டனர் அதில் 5,485 பேர் வெற்றியும் பெற்றனர் .

தெலுங்கானாவின் வராங்கல் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற விவசாய தொழிலாளர்கள் தேசிய மாநாட்டில் பல பேச்சாளர்கள் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுக் கூறினர்: அதாவது விவசாய தொழிலாளர்கள் இப்போது அவர்கள் யாராக இருக்கிறார்களோ அப்படியே தொடரக்கூடாது. அதாவது நிலமற்றவர்களாக தொடரக்கூடாது. அவர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்களாக இருக்க வேண்டும். குடும்பஸ்ரீ பெண்கள் இதைப் பொறுத்தமட்டில் நன்றாக முன்னேறி சென்றுள்ளனர். இந்த மாற்றம் 'நிலமற்ற விவசாயிகள்' என்ற வகையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.

ஏன்? இதிலிருந்து அவர்களுக்கு கிடைப்பது என்ன?

எடமாலகுடியில், அதாவது பழங்குடிப் பெண்கள் தங்களது கிராமத்திற்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் கொண்டு வந்த ஊர், இங்கு குடும்பஸ்ரீ குடையின் கீழ் 40 சமூக மேம்பாட்டு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 34 சங்கங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு பெண்களும் முதவன் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு உற்பத்தியாளராகவே பார்க்கின்றனர், அவ்வாறே தங்களை மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த தொலைதூர பிராந்தியத்தில் வசித்துவரும் அவர்கள், 'தாங்கள் யாருக்கும் ஊழியர்கள் அல்ல' என்று கூறினார். "நாங்கள் உற்பத்தியாளர்கள்". இந்த வரலாற்று மாற்றத்தை ஒருவர் எவ்வாறு அளவிட முடியும்? இந்த மனநிலை மாற்றம் அவர்களது சொந்த உலகத்தை மாற்றியிருக்கிறது அதே அளவிற்கு இல்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள உலகையும் அது மாற்றியிருக்கிறது.

எதை அளவிட முடியாது

அவர்களது மைல்கற்கள் எண்ணிக்கையில் இருப்பதால் குடும்ப பெண்களின் மிகப் பெரிய சாதனைகளில் சிலவற்றை கிலோ கிராம் அல்லது ஏக்கர், வருமானம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடமுடியாது.

வீட்டில் மாறும் சமன்பாடுகளை ஒருவர் எவ்வாறு கணக்கிடுகின்றனர்? பல மாவட்டத்தில் உள்ள பல பெண்கள் குறிப்பாக இடுக்கி, வயநாடு திருச்சூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் சுதந்திரமாக சம்பாதிப்பவர்கள் என்ற உணர்வு எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தினர்.

இதன் முக்கியத்துவத்தை நாம் எவ்வாறு அளவிடுவது : பின்னாலிருந்து ஆதரவளிப்பதிலிருந்து மாறி முழுநேர சம்பாதிப்பவராக மாறுவது ஒரு சிறந்த உணர்வு.

உயர்ந்து வரும் அரசியல் பொறுப்பை ஒருவர் எவ்வாறு மதிப்பிடுகின்றனர்? அல்லது அதிகம் அர்த்தமுள்ள வேலையை செய்வதற்கான திருப்தியை எவ்வாறு அளவிட முடியும்? பெண்களுக்கு அவர்கள் முதலாளியிடமிருந்து வரும் மற்றும் பணியிட துன்புருத்தலை நாம் எவ்வாறு அளவிடுவது? அல்லது கூலியாக கூலிக்கு வேலை செய்வதிலிருந்து உற்பத்தியாளராக உயர்ந்த அந்த விடுதலை உணர்வை எப்படி கணக்கிடுவது.

பாலின நீதிக்கு ஒருவர் பணமதிப்பை கணக்கிட முடியுமா? - இத்தகைய பெரிய மாற்றத்தைத்தான் குடும்பஶ்ரீ சாத்தியப்படுத்தியிருக்கிறது.

திலங்கரி சமூக மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் சுபைரா (36) கூறுவது போல்: "ஆணும் பெண்ணும் சமமா? நிச்சயமாக. இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமே இல்லை, ஆனால் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று". சுபைராவிற்கு தீவிர சிறுநீரக நோய் உள்ளது. நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் அவரது தாயாருடன் வசித்து வருகிறார். ஆனால் சுபைராவின் தலைமைத்துவ பண்பு மிகவும் சிறப்பானது. அவர் தனது கிராமத்தை கிட்டதட்ட பூஜியத்திலிருந்து 100 சதவீத நிதி சேர்க்கைக்கு வழிநடத்தியுள்ளார்.

PHOTO • P. Sainath & Ananya Mukherjee

பல குடும்பஶ்ரீ பெண்கள் பொருளாதார ரீதியாதவும் சமூக ரீதியாகவும் சுறுசுறுப்பாக மாறியவுடன் தங்களது பிள்ளைகள் அவர்கள் வித்தியாசமாக பார்ப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். இது பல இளம் பெண்கள் பல கனவுகளைக்க காண உதவுகிறது. உதாரணமாக, பயோலியில் இருக்கும் 10ம் வகுப்பு பயின்றுவரும் சமிஷா அந்த பஞ்சாயத்திலுள்ள குழந்தைகளின் பஞ்சாயத்து தலைவராவார். "நான் ஒரு பத்திரிக்கையாளராகி நமது சமூகத்தில் நிலவும் தீமைகளைப் பற்றி பேச விரும்புகிறேன்", என்று கூறினார்.

இருப்பினும், சில பெண்களுக்கு இந்த இயக்கத்தில் பங்கேற்பது அவ்வளவு எளிதாக இல்லை. பெரும்பாலும் அவர்களது வீடுகள் மற்றும் சமூகத்தில் கடுமையான ஆட்சேபனைகள் இருக்கின்றன. ஆனால் பெண்களை அதையும்.மீறி இதனை தொடர்ந்து வருகின்றனர் - நம்மிடமிருக்கும் அளவீடுகளை வைத்து அளவிட முடியாத ஒன்றிற்காக.

"நான் இந்த இயக்கத்தில் இருக்கிறேன் ஏனென்றால் அது எனது வலியை சக்தியாக மாற்ற உதவுகிறது", அவர் தனது வேலையே தொடர முயற்சித்த போது எதிர்கொண்ட பிரச்சனைகளை விவரித்தபடி குடும்பஶ்ரீயின் உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்.

குடும்பஶ்ரீயின் சங்க க்ருஷிகள் என்ன செய்துவருகின்றனர் என்பதன் முக்கியதுவத்தை நாம் அளவிட முடியுமா? அவர்கள் உணவு உற்பத்தியில் பெண்களுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்துள்ளனர் - இது உணவு பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாகும்.

எல்லா இடங்களிலும் பழங்குடி பெண்கள் நிலையான வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றி வருகின்றனர். பெருநிறுவனமயமாக்கல் அல்லது வணிக நில மேம்பாட்டை எதிர்ப்பதில் அல்லது நிலையான விவசாயத்தை கடைபிடிப்பதில் ஆகியவற்றில் சங்க க்ருஷிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

தரிசு நிலங்களை மீட்டெடுப்பதில் முக்கியத்துவத்தை ஒருவர் எவ்வாறு கணக்கிடுவது - அதுவும் அதிகமான உணவுப் பயிர் நிலங்கள் பணப் பயிர் சாகுபடிக்காக மாற்றப்படும் ஒரு நாட்டில்?

குடும்பஶ்ரீயின் 'பசுமை படைகள்' இதைத்தான் துள்ளியமாக செய்திருக்கின்றது.

சங்க க்ருஷிகளால் மீட்டெடுக்கப்பட்ட வயல்களுக்கு புலம்பெயர்ந்த பறவைகள் திரும்பியதற்கு ஒருவர் விலை நிர்ணயிக்க முடியுமா? அதை அளவிட முடியுமா?

அத்தகைய மாற்றத்தின் சமூக, கலாச்சார மற்றும் உளவியல் முக்கியத்துவத்தை ஒருவர் எவ்வாறு மதிப்பிடுவது?

மனதின் கற்றல் வளைவை ஒருவர் எவ்வாறு மதிப்பிடுகிறார்? பொருள் உற்பத்தி மட்டுமல்ல பெண்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை புரிந்து கொண்டு  சரியான முறையில் பயன்படுத்துகின்றனரா? இது ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறு அரசியல். பெரும்பாலும் உறுப்பினர்கள் வலுவான அரசியல் தொடர்புகளை கொண்டுள்ளனர் ஆனால் இவை குழு கூட்டங்களில் ஆதிக்கம் செலுத்துவதில்லை.

நில சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமே மிக முக்கியமானவை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் அதில் இதுவரை இல்லாத பாலீன நீதியை சாதித்துக் காட்டியிருக்கிறது குடும்பஶ்ரீ. இதை நாம் எவ்வாறு மதிப்பிடுவது? அது ஏக்கராகவோ கிலோவாகவோ மாறுவதில்லை. இது தான் உண்மையான சிக்கல் இதை நாம் எவ்வாறு பயன்படுத்தி 'வளர்ச்சி' மற்றும் 'வறுமை ஒழிப்பு' ஆகியவற்றை நாம் எவ்வாறு அணுகி பாலின நீதியை அணுகுகிறோம் என்பதே உண்மையான சவால்.

இந்த கட்டுரை முதலில் யாகூ இந்தியா ஒரிஜினலில் வெளியிடப்பட்டது.

P.  சாய்நாத் கிரமப்புற இந்திய மக்கள் காப்பகத்தின் (பாரியின்) நிறுவனர் மற்றும் ஆசிரியராவார். பல தசாப்தங்களாக கிராமப்புற நிரூபராக இருந்த அவர் 'Everybody loves a good drought', என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அனன்யா முகர்ஜி டொரன்டோவின் யார்க் பல்கலைகழக அரசியல் அறிவியல் பேராசிரியராக உள்ளார்.

இந்த கட்டுரையில் இருக்கும் தகவல்களை தெரிவிக்கும் ஆராய்ச்சியை ஆதரித்த கனடாவின் சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சாஸ்திரி இந்தோ - கனடிய நிறுவனம் ஆகியவற்றிகு அனன்யா நன்றி தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதி முன்னர் தி இந்துவில் மற்றொரு வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

தமிழில்: சோனியா போஸ்

P. Sainath & Ananya Mukherjee

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'. Ananya Mukherjee is Professor of Political Science, York University, Toronto.

کے ذریعہ دیگر اسٹوریز P. Sainath & Ananya Mukherjee
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

کے ذریعہ دیگر اسٹوریز Soniya Bose