கார்கிலின் முதன்மைச் சந்தை சாலையில் நடக்கும்பொழுது, அதிலிருந்து ஒரு சிறிய தெரு பிரிகிறது. அத்தெருவில் இரண்டு பக்கங்களும் கடைகளாக இருக்கின்றன. பல வண்ணங்கள் தலையில் கட்டும் ஸ்கார்ஃப்கள் மற்றும் துப்பட்டாக்கள் இரண்டு புறங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடைகளுக்குள் சல்வார் கமீஸ் ஆடைகள், ஸ்வெட்டர்கள், அணிகலன்கள், காலணிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.

இந்த இடத்திற்கு கமாண்டர் கடைத்தெரு என்று பெயர். ‘கமாண்டருக்கு’ சொந்தமான நிலத்தில் இந்தக் கடைகள் இருப்பதால், கடைத்தெருவுக்கு இப்படி ஒரு பெயர். இங்கு கடையில் விற்பனையாளராக நிற்பவர்கள் அனைவரும் ஷியா பிரிவு பெண்கள்.

லடாக்கின் எல்லையில் அமைந்திருக்கிறது கார்கில். மேலும் இது இமயமலைக்குப் பக்கவாட்டில் அமைந்திருக்கிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லைகள் வகுக்கப்படும் வரையில், 1947 வரை மைய ஆசிய சில்க் வழி வணிகத்தில் இது ஒரு முக்கியமான தெற்குப் பகுதி. இஸ்லாமியர்கள், புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள், சில சீக்கியக் குடும்பங்கள் என 16,000 பேர்  அடங்கியது இந்நகரின் மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பு) தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் அவர்கள் மூன்று போர்களைக் கண்டிருக்கிறார்கள். 1999-ஆம் ஆண்டு கடைசி போரைக் கண்டார்கள்.

இந்தப் பகுதியில் முதன்முதலாக கடைவைத்தது ஒரு பெண்தான். அதற்குப் பிறகுதான் கமாண்டர் கடைத்தெரு பெயர் வைக்கப்பட்ட நிகழ்வு நடந்தது. முப்பதாண்டுகளுக்கு முன்பாக இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு முதலில் கடை வைத்தவருக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தன, குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதனால்தான் அவரது பெயரைத் தவிர்க்கிறோம். அதன்பிறகு, அவருடைய உறுதியைக் கண்டு, 2 முதல் 3 பெண்கள் இப்பகுதியில் கடை வைப்பதற்கு வாடகை அளித்து கடை அமைத்தனர். இப்போது, சந்தை முழுவதும் எடுத்துக்கொண்டால் 30 கடைகள் இருக்கின்றன. அதில் மூன்று கடைகள் பெண்களால் நடத்தப்படுகின்றன.

பத்தாண்டுக்கு முன்பாக அரிதாகவே பெண்கள் வெளியில் தென்படுவார்கள். கமாண்டர் கடைத்தெரு இப்போது மிக முக்கியமான பகுதி. இங்கு கடையைப் பார்த்துக்கொள்பவர்கள் , பெண் கல்வி அதிகரித்திருக்கும் மாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். (2001-இல் 42 சதவிகிதமாக இருந்தது. 2011-இல் 56 சதவிகிதமாக மாறியது) மேலும், முன்பிருந்த கடை உரிமையாளர்கள், அவர்களுடைய நிதிசார்ந்த விஷயங்களின் சார்ந்திருக்கும் நிலை, பெண்கள் அதிகம் இங்கு வரத்தொடங்கிய பின்னர் குறைந்ததாகச் சொல்கிறார்கள். சிலர் வருமானம் ஈட்டுவதற்கான கட்டாயத்தில் வந்தாலும், சிலர் அவர்களின் முன்னோடிகளைத் தொடர்ந்து இத்தொழிலைச் செய்கிறார்கள் என்றார்கள். கார்கில் இப்போது மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறது என்றார்கள்.

இந்தப் புகைப்படக் கட்டுரைக்காக கமாண்டர் சந்தைக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, சில பெண்கள் கேமராவைத் தவிர்த்தார்கள். சிலருக்கு அவர்களின் புகைப்படங்கள் வெளியாவதில் தயக்கம் இருந்தது. சிலருக்கு அவர்களின் முழுப்பெயர் பயன்படுத்தப்படுவதில் தயக்கம் இருந்தது. ஆனால், பலரும் மகிழ்ச்சியுடன் அவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

PHOTO • Stanzin Saldon

ரம்ஜான் மாதத்தில், சனிக்கிழமை பிற்பகலில் பரபரப்பான கமாண்டர் கடைத்தெருவின் காட்சி

PHOTO • Stanzin Saldon

அபிதா கானம் (வலம்), 28, “தொலைதூரக் கல்வி வழியாக பி.ஏ படிக்கிறேன். ஏனெனில் எனக்கு பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கவேண்டும். இந்தக் கடையை என்னுடைய அத்தை நடத்துகிறார். ஷாஹிதாவும் நானும் அவருக்கு உதவியாக இருக்கிறோம். எனக்கு மாத வருமானமாக இதிலிருந்து 7000 முதல் 8000 வரை கிடைக்கிறது. இங்கு பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார்

PHOTO • Stanzin Saldon

“ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும், லூதியானா மற்றும் டெல்லிக்கும் சென்று ஆடைகளை வாங்குவோம்” என்கிறார் அபிதா கானம். கார்கிலின் மோசமான குளிர்காலத்துக்குப் பிறகு, பெண்கள் இங்கு வந்து பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். மே மாதத்தில் ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை திறக்கப்படும்போது, அவர்கள் கேட்ட பொருட்களை அவர்களுக்கு வழங்குவோம் என்றார். புதிய சரக்குகள் வரும் வரை, தேவையான பொருட்களை வைத்திருப்போம்” என்கிறார்

PHOTO • Stanzin Saldon

இந்த கடையை மன்சூர் பார்த்துக்கொள்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு இந்தக் கடையைத் தொடங்கியது மன்சூரின் அம்மாதான். “இந்தச் சந்தையில் இருக்கும் ஆண்களில் நான் ஒருவன் என்பதில் எனக்குப் பெருமை” என்கிறார் அவர். “வயதாகிவிட்ட என்னுடைய பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வதற்காக இங்கு உழைப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார்

PHOTO • Stanzin Saldon

32 வயதான சாராஹ் (இடது) புதிதாக தொடங்கியுள்ள தனது வியாபாரத்தைக் குறித்து உற்சாகமாகப் பேசுகிறார். அவரின் இளைய சகோதரியுடன் இந்தக் கடையை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார். “இஸ்லாம் மதத்தில் பெண்கள் குறைவாக நடத்தப்படுகிறார்கள் என்பதும், முடக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மையில்லை” என்கிறார் அவர். “என் குடும்பம் என்னை ஆதரிக்கிறது. என் நம்பிக்கை வழியில் இருக்கும் வலிமையான பெண்கள் உதாரணமாகவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் நான் உழைப்பதற்கு ஊக்கம் அளிக்கிறார்கள்” என்கிறார்

PHOTO • Stanzin Saldon

கேமராவைப் பார்த்து வெட்கப்படும் பனோ, “நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். விரதத்தை முடிக்கும் இஃப்தார் நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார்

PHOTO • Stanzin Saldon

“இந்த உல்லன் ‘இன்ஃபினிட்டி லூப்’ இப்போது மிகவும் பிரசித்தமானது (கழுத்தைச் சுற்றி அணிந்துகாட்டுகிறார்) கார்கிலுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் இதை விரும்புகிறார்கள்” என்கிறார், 38 வயதான ஹஜி அக்தர். “சுயநிதிக் குழுக்களில் சில கிராமத்துப் பெண்களைச் சேர்த்திருக்கிறேன். அவர்கள் செய்யும் கைவினைப்பொருட்களை வாங்கி உதவி புரியலாம் என நினைத்தேன். எனது கடையில் வாங்குவதைப் போலவே கார்கிலின் சில ஹோட்டல்களிலும் இதை வாங்குகிறார்கள். கோடைக்காலத்தின்போது வியாபாரம் நன்றாக இருக்கும். இந்த நாட்களில் மாதத்துக்கு 40,000 அல்லது அதற்கு மேலான தொகையும் கிடைக்கும்” என்கிறார்

PHOTO • Stanzin Saldon

25 வயதான கனீஸ் ஃபாத்திமா, அவருடைய அம்மாவுக்கு உதவியாக இருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கடையைத் தொடங்கியவர் கனீஸின் தாய்

PHOTO • Stanzin Saldon

ஃபாத்திமா ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தக் கடையை நடத்துகிறார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவரது கணவர் முகமது ஈசா, இந்தச் சிறிய வணிகத்தைத் தொடங்குவதற்கு உதவியாக இருந்திருக்கிறார். “அவர் இப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அவருடைய மனைவி என்று சொல்லிக்கொள்வதற்கு பெருமையாக இருக்கிறது” என்கிறார். “என்னுடைய மிகப்பெரிய ஊன்றுகோலும், ஆதரவான நபரும் அவர்தான்” என்று சொல்லி மகிழ்கிறார்

PHOTO • Stanzin Saldon

ஃபாத்திமாவின் கடைக்கு பொருட்கள் வாங்க வந்திருக்கும் சில சிறுவர்கள் “ஆச்சே (தங்கை) எங்களையும் புகைப்படம் எடுங்களேன்?”  என்கிறார்கள்

தமிழில்:  குணவதி

Stanzin Saldon

اسٹینزِن سیلڈون لیہ، لداخ سے 2017 کی پاری فیلو ہیں۔ وہ پیرامل فاؤنڈیشن فار ایجوکیشن لیڈر شپ کے اسٹیٹ ایجوکیشنل ٹرانسفارمیشن پروجیکٹ کی کوالٹی اِمپروومنٹ منیجر ہیں۔ وہ امیریکن انڈیا فاؤنڈیشن کی ڈبلیو جے کلنٹن فیلو (16-2015) رہ چکی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Stanzin Saldon
Translator : Gunavathi

Gunavathi is a Chennai based journalist with special interest in women empowerment, rural issues and caste.

کے ذریعہ دیگر اسٹوریز Gunavathi