கேரள மாநிலத்தின் பரப்பா கிராமத்தில், சுமார் 15 பேர் கொண்ட குழு புல்லால் செய்த முழம் செண்டா என்ற மூங்கில் பறையைை இசைக்கின்றனர். இவர்கள் மாவிலன் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பாரம்பரிய இசைக் கலைஞர்கள். பெரும்பாலானோர் காசர்கோட்டிலும், கண்ணூர் மாவட்டத்திலுமே வசிக்கின்றனர்.
"பழங்காலத்தில் இருந்தே எங்கள் முன்னோர்கள், இந்த மூங்கில் பறைகளை பயன்படுத்தி இசையை உருவாக்கினார்கள்" என்கிறார் கே பி பாஸ்கரன், அவரது குழுவினர் இசைக்கும் காணொளியானது இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் காசர்கோட்டின் வெள்ளரிக்குந்து தாலுகாவின் பரப்பா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். "இன்றைக்கும் கூட கேரளாவின் பிற பகுதியில் மாட்டின் தோலை பயன்படுத்தி பறைகளை செய்கின்றனர். “பாரம்பரியமாகவே நாங்கள் மாட்டின் இறைச்சியையோ, தோலையோ எங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது இல்லை. அதனால் எங்கள் முன்னோர்கள் மூங்கிலிலிருந்து இந்தப் பறையை தயார் செய்து தீய்யம் போன்ற சடங்குகளில் இசைத்து வந்தனர்.”
சில காலங்களுக்கு முன்பு வரை இந்த சமூகத்தினருக்கு காட்டின் விளை பொருட்களை எளிதில் பெற முடிந்தது, ஆனால் அரசாங்கம் இப்போது அதை தடை செய்திருப்பதால் மூங்கில் பறைகளின் விலை சற்று அதிகம் ஆகிவிட்டது. இப்பொழுது மாவிலன்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பதியத்கா நகரின் சந்தையிலிருந்து மூங்கில்களை வாங்கி வருகின்றனர். ஒரு மூங்கில் தண்டு ரூபாய் 2500 முதல் 3000 ஆக உள்ளது இதைக்கொண்டு மூன்று முதல் நான்கு மூங்கில் பறைகளை செய்யலாம். ஒரு மூங்கில் பறையை அதிகபட்சமாக இரண்டு முறை இசைப்பதற்கு பயன்படுத்தலாம், அதன் பின்னர் அது உடைய ஆரம்பித்துவிடும். ஒரு மூங்கில் பறையை செதுக்கி, வெயிலில் காய வைத்து தயார் செய்வதற்கு பறை இசை கலைஞருக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் தேவைப்படும். "ஒரு மூங்கில் பறையை உருவாக்குவதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும்" என்கிறார் பறை இசை கலைஞருள் ஒருவரான சுனில் வெட்டியோடி.
கடந்த காலங்களில், (மாவிலர் என்று அழைக்கப்படும்) மாவிலன்கள் விவசாய நிலங்களில் நில உடமையாளர்களுக்கு வேலை செய்தனர்.ஆனால் இன்று சில குடும்பங்கள் விவசாயம் செய்ய சிறிய நிலங்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர். பறை இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாகவும், தச்சர்களாகவும் அல்லது சித்தாளாகவோ அல்லது வீட்டிற்கு வெள்ளை அடிப்பவர்களாகவோ இருக்கின்றனர்.
இச்சமூகத்தில் சுமார்
30-35 நபர்கள் மட்டுமே இப்போதும் மூங்கில் பறைகளை இசைக்கின்றனர். பாரம்பரியமாக, திருவிழாக்களின் போது மாவிலன் ஆண்கள் பறையை இசைத்துக் கொண்டே பாடுவர், அதற்கேற்றார் போல் பெண்கள் ஆடுவர். ஒரு இசைக் கலைஞருக்கு இசைப்பதற்கான அழைப்பு ஒரு வருடத்தில் 0- 10 ஆக இருக்கும் என்கிறார் கே பி பாஸ்கரன். ஒரு பறை இசைக் கலைஞர் 10 முதல் 30 நிமிடம் வரை வாசிப்பார், நபர் ஒருவருக்கு ரூபாய் 1500 வழங்கப்படும். பயணப்படியும் அன்றைய சம்பளமும் அவருக்கு கிடைக்காது.
"நாங்கள் பெரும் கஷ்டப்படலாம், ஆனால் எங்கள் கலாச்சாரம் எங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்"
என்கிறார் பாஸ்கரன். "எங்களது கலையும் கலாச்சாரமும் எங்களது பொக்கிஷமாகும். இது ஒரு தனித்துவமான கலை என்பதை நாங்கள் அறிவோம் அதை எங்களது அடுத்த தலைமுறையினருக்கு நிச்சயம் கற்றுக் கொடுப்போம். இதுவே எங்களது அடையாளம்".
தமிழில் சோனியா போஸ்