“இந்த ஆண்டு நிறைய மழை பெய்தது. அதனால் ஓடையில் இருந்து வரும் நீர் நீண்ட காலம் நீடிக்கும் என்று நினைத்தேன். எனவே எனது கணவரிடம் கிராமத்திலேயே தங்கி விடும்படி கூறினேன். நாம் இன்னும் சில காய்கறிகளை பயிரிடலாம் என்றேன். பிழைப்புக்காக புலம்பெயர்வதை விட எங்களது சொந்த பண்ணையில் வேலை செய்வது மிகவும் சிறந்தது. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்” என்று எனது பெரியம்மாவான ஜெயஸ்ரீ பரீத் மேகமூட்டத்துடன் இருக்கும் வானத்தை பார்த்தபடி கூறுகிறார். அது 2019 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம். “குளிர் காலம் துவங்கிவிட்டது ஆனால் காற்றில் குளிர் இல்லை. மழைக் காலம் முடிவடைந்து விட்டது ஆனால் வானம் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் என்னுடைய வெந்தயக் கீரை மற்றும் பாலக்கீரை ஆகியவை இறந்து விடும் தருவாயில் உள்ளது. நேற்று வரை கடுகுச் செடிகள் நன்றாகத்தான் இருந்தன, ஆனால் இன்றைக்கு அதிலும் பூச்சிகள் வந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?” என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பெரியம்மா பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி கொண்டிருந்தார்.
வானிலை மாறிவிட்டது. எங்களுக்குப் போதுமான வெயில் நாட்கள் கிடைப்பதில்லை. அது தான் எல்லாவற்றிற்குமான (நோய்த் தொற்றுக்கு) காரணம். இந்தப் (பூச்சி மருந்துகளை) விற்கும் கடைக்காரரும் கூட அதைத் தான் சொல்கிறார். "நிச்சயமாக அவருக்கு இதைப்பற்றி இன்னும் அதிகமாக தெரியும் என்று நம்புகிறேன்", என்று அவர், என்னுடைய தலை அசைத்தலை எதிர்பார்த்தபடி கூறினார். கருகல் நோய் நிலம் முழுவதும் பரவி அனைத்து காய்கறிகளும் வீணாகிவிடும் என்று அவர் கவலைப்பட்டார். "இந்த ஒரு கூறு நிலப் பகுதியில் இருந்து வரும் காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் எனக்கு 200 முதல் 250 ரூபாய் வரை கிடைத்திருக்கும். ஆனால் அதில் பெரும்பாலான செடிகள் முளைக்கும் போதே கருகிவிட்டது. இப்போது முளைத்ததும் கருகிவிட்டது. இதிலிருந்து நான் எவ்வளவு சம்பாதிக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை அதனால் எனக்கு பதற்றமாக உள்ளது. பீன்ஸும், சுரையும் பூத்தது ஆனால் எல்லா பூக்களும் கருகி உதிர்ந்து விட்டது. பீன்ஸிலும் நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டது", என்று பெரியம்மா தொடர்ந்தார்.
அவர் காய்கறிகளை கூடையில் வைத்து தலையில் தூக்கி சுமந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து கணேஷ்புரிக்கு சென்று தெருவில் உட்கார்ந்து அந்த காய்கறிகளை விற்கிறார் அல்லது சில நேரங்களில் பஸ் ஏறி வசையில் இருக்கும் சந்தைக்குச் செல்கிறார்; இது எனது பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கு வாரம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டித் தரும். அதுவே அவர்களின் ஒரே வருமான ஆதாரம் ஆகும்.
நம்பாவலி கிராமத்தில் கரேல்பதா அருகே ஒரு மலைச்சரிவில் ஒரு ஏக்கர் நிலத்தில் 40 வயதாகும் எனது பெரியம்மா மற்றும் 43 வயதாகும் எனது பெரியப்பா ராமச்சந்திரா ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் வடா தாலுகாவிலுள்ள இக்கிராமத்தில் சுமார் 85 குடும்பங்கள் வசித்து வருகின்றன, அவர்கள் அனைவரும் பெரும்பாலும் எனது பெரியம்மாவையும் மற்றும் பெரியப்பாவையும் போன்ற ஆதிவாசிகளே. அவர்கள் வார்லி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள செங்கல் சூளைகளிலோ, கட்டுமான தளங்களிலோ அல்லது வசை மற்றும் பிவண்டியில் உள்ள தொழிற்சாலைகளிலோ வேலை செய்கின்றனர் மற்றும் அவர்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிரிட்டும் வருகின்றனர்.
எங்களுக்கும் மலையில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. மழைக்காலத்தில் எங்களது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து நெல் பயிரிடுவோம். அதை நாங்கள் சந்தையில் விற்பது இல்லை; அது எங்களது குடும்பத் தேவைக்கானது. அத்துடன் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், சோளம், எள்ளு, நைஜர் விதைகள் மற்றும் சேனை கிழங்கு ஆகியவற்றை பயிரிடுக்கிறோம். மலையில் பல வகையான மரங்கள் உள்ளன அவற்றுள் நாவல் பழ மரம், ஆலவ் மரம், பூந்திக்கொட்டை மரம் மற்றும் தோரண மரம் ஆகியவை காட்டுப் பழங்களைத் தரும். மழைக் காலத்தில் இங்கு பல வகையான காட்டு காய்கறிகளும் விளையும்.
எங்கள் நிலத்தில் ஒரு நீரோடை பாய்கிறது. பெரியம்மாவும் பெரியப்பாவும் பருவமழை முடிந்ததும் நீரோடையின் ஒரு பகுதியில் குட்டைல் தேங்கியுள்ள நீரை பயன்படுத்தி காய்கறிகளை பயிர் செய்கின்றனர். அது வறண்டு போகும் போது மண்வெட்டியை கொண்டு ஐந்து ஆறு அடி ஆழம் தோண்டுகின்றனர் இருவரும் ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களுக்கு உழைத்து நான்கு நாட்களுக்குள் ஒரு குட்டையை ஆழமாக தோண்டி தண்ணீர் சேகரிக்கின்றனர்.
"நாங்கள் பெரிய குட்டை ஒன்றை தோண்ட ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு பிடித்து இருந்தோம் (அதற்கான இரண்டு மணி நேரத்திற்கான வாடகை 1,800 ரூபாய்) ஆனால் வனத்துறையினர் இதனை அனுமதிக்கவில்லை. இந்த நிலம் பயிர் இடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், கிணறு தோண்டுவதற்கோ அல்லது வீடு கட்டுவதற்கோ அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் எங்கள் ஊரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு இரண்டு முறை சென்று விட்டோம் ஆனால் உயர் அதிகாரியை எங்களால் சந்திக்க முடியவில்லை. நாங்கள் இன்னொரு அதிகாரியை சந்தித்தோம் அவர் கைகளால் குழியை தோண்டி கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் அதற்கு அதிக காலம் ஆகும். நாங்களே பிற வயல் வேலைகளையும் செய்ய வேண்டும்", என்று பெரியப்பா கூறினார்.
அவரும் பெரியம்மாவும் தண்ணீர் ஓட்டத்தை நிறுத்த முயற்சி செய்தனர் மேலும் மண் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் மூட்டையைக் கொண்டு தடுத்து சேமித்து வைக்க முயற்சி செய்தனர். "கடந்த அக்டோபர் மாதம் ஓடையில் இதை நாங்கள் கட்டிய போது, தண்ணீர் நீண்டகாலத்திற்கு வரும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் பாருங்கள் இப்போது எல்லாம் தீர்ந்துவிட்டது", என்று பெரியப்பா கூறுகிறார். முன்னரெல்லாம் பெரியம்மாவும் பெரியப்பாவும் பல்வேறு களங்களில் மலை மேல் இருக்கும் நிலத்திற்கு தண்ணீரை சுமந்து கொண்டு செல்வர்; சில மாதங்களுக்கு முன்பு உள்ளூரில் இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அவர்களுக்கு காலில் மிதித்து தண்ணீர் ஏற்றம் செய்யும் ஒரு இயந்திரத்தை வழங்கியது அது மலைக்கு மேல் வரை தண்ணீரை கொண்டு செல்லப் பயன்படுகிறது. இது வேலைப்பளுவை வெகுவாக குறைத்திருக்கிறது, ஆனால் இப்போது தண்ணீர் குறைவாகவே இருக்கிறது.
"இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை", என்று பெரியப்பா தொடர்ந்தார். "ஆனால் கூடிய சீக்கிரம் (மும்பையிலிருந்து வதோதரா செல்லும் அதிவிரைவு நெடுஞ்சாலை) எங்களது கிராமத்தின் வழியாக செல்லப் போகிறது மேலும் அதில் எங்களது வீடும் இடிக்கப்பட்டு விடும் (அதற்கான வெளியேற்ற அறிவிப்பு 2018 ஆம் ஆண்டில் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது). நாங்கள் இடமாற்றம் செய்யப்படுவோம். ஆனால் அது எங்கு என்று எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு இருப்பதெல்லாம் இந்த இடம் மட்டும் தான். அதனால் என்னுடைய வீட்டை மறுபடியும் இங்கேயே கட்டிக்கொள்ள நான் விரும்புகிறேன். அதற்கான கோரிக்கையையும் அந்த அதிகாரியிடம் முன்வைத்தேன். அவர் மறுத்துவிட்டார். வாழ்வதற்கு ஒரு குடிசை வேண்டுமானால் கட்டிக்கொள்ளுங்கள் என்று அவர் கூறிவிட்டார்".
விவசாயம் செய்வதற்கு அவர்களுக்கு நிலையான நீர் ஆதாரம் தேவைப்படுகிறது. நீர் கிடைத்து, பற்றாக்குறை குறைந்தால் புலம்பெயர வேண்டியிருக்காது.
2011 ஆம் ஆண்டில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பெரியப்பாவுக்கு இந்த ஒரு ஏக்கர் நிலம் கிடைத்திருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தினரும் இந்நிலத்தில் வசிக்கும் உரிமையை இழக்கின்றனர் என்று இந்த சட்டம் கூறுகிறது. பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கு விவசாயம் செய்வதற்கு நிலையான தண்ணீர் ஆதாரம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தண்ணீர் கிடைத்து, பற்றாக்குறை குறைந்தால் அவர்கள் மறுபடியும் புலம்பெயர வேண்டியிருக்காது.
வேலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது எங்களது கிராமத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் பல ஆண்டுகள் அவர் வேலை செய்ததாக எனது பெரியப்பா என்னிடம் கூறினார். பெரியம்மா பள்ளிக்கூடத்திற்கு சென்றதில்லை. பெரியப்பா பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. பரிட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பெரியப்பாவை மாடு முட்டி விட்டது. பல நாட்களுக்கு அவர் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அவரால் உட்காரவோ எழுந்து நிற்கவோ முடியவில்லை. அதனால் அவர் பரிட்சைக்கு செல்லவில்லை. கல்வி கற்க வேண்டும் என்ற அவருடைய கனவு நிறைவேறாமலேயே போனது.
பெரியப்பா தனது 22 வயதில் திருமணம் செய்து கொண்ட சிறிது காலத்திற்குப் பிறகு - அப்போது பெரியம்மாவுக்கு வெறும் 19 வயது -வசை தாலுகாவிலுள்ள தலையசபதா கிராமத்தில் - அவர்களது முதல் குழந்தையான அர்ச்சனா மிகவும் நோய் வாய்ப்பட்டு கிடந்தார். என்ன நோய் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை எல்லா வகையான மருந்துகளையும் வைத்து முயற்சித்தனர், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் அவரை ஒரு மருத்துவரிடம் (உள்ளூர் பாரம்பரிய வைத்தியரிடம்) ஆலோசித்தனர். அவரை குணப்படுத்தியது வைத்தியர் தான் என்று அவர்கள் கூறுகின்றனர். வைத்தியர் அவர்களிடம் ஒரு ஆட்டினை பலியிடுமாறு சொன்னதாகக் கூறினார். ஆனால் அதற்கான காசுக்கு எங்கே போவது? இரவும் பகலுமாக அதைப்பற்றிய சிந்தித்தாக பெரியப்பா கூறினார். இறுதியாக ஒரு உறவினரிடம் அவர்கள் கேட்டிருக்கின்றனர். அவர் ஆட்டினை பலியிடுவதற்கு அவர்களுக்கு 1,200 ரூபாய் கொடுத்திருக்கிறார். பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய நேரம் வந்த பொழுது அவர் அதை கேட்க ஆரம்பித்து விட்டார். பெரியம்மாவும் பெரியப்பாவும் அந்த பணத்தை எப்படி திருப்பி செலுத்துவது என்று எண்ணினர் அவர்களிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை. அச்சமயத்தில் தான் அவர்கள் செங்கல் சூளை உரிமையாளரிடம் இருந்து முன்பணத்தை பெற்று உறவினரிடம் கடனை அடைத்துள்ளனர், பின்னர் செங்கல் சூளைக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
"இந்த சூழ்நிலைகளால் நான் செங்கல் சூளைக்கு சென்றது என் வாழ்க்கையில் அதுவே முதல் முறையாகும்", என்று பெரியப்பா கூறினார். அது நடந்தது 2001 ஆம் ஆண்டில். பல வருடங்களுக்கு நான் செங்கல் சூளையிலேயே வேலை செய்து வந்தேன். ஆனால் இப்போது என்னால் தாங்க முடியவில்லை. எனது முதுகு வலிக்கிறது. கீழ் முதுகில் தான் அதிக வலி இருக்கிறது. என்னால் அந்த வேலையை தொடர்ந்து செய்ய முடியும் என்று தோன்றவில்லை", என்று கூறினார்.
பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அர்ச்சனாவுக்கு 20 வயது ஆகிவிட்டது, அவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டார் இப்போது தையல் கலை பயின்று வருகிறார், 18 வயதாகும் யோகிதா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் மற்றும் 16 வயதாகும் அவர்களது மகன் ரோஹித் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் பழங்குடியின விடுதியில் இருக்கின்றனர். பெரியம்மாவும் பெரியப்பாவும் வயலில் வேலை செய்து அவர்களது குடும்பத்தினருக்கு உணவு கொடுக்கின்றனர். அவர்கள் இ துவரை கடினமான வாழ்க்கையை நடத்தி வந்திருக்கின்றனர் மேலும் அவர்களது குழந்தைகளும் அதைப் போலவே வாழக்கூடாது என்பது தான் அவர்களது கனவு.
அதிக படிப்பறிவு இல்லாததால் பெரியப்பா உடல் உழைப்பைத் தவிர வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. வருமானம் ஈட்டித் தரும் எந்த திறமையும் அவரிடம் இல்லை. வன உரிமைகள் சட்டத்தின் கீழ் அவர் பெற்ற நிலம் ஒன்றே அக்குடும்பத்தினரடம் இருக்கும் சொத்து. நிலையான தண்ணீர் அவர்களுக்கு கிடைத்தால் அதை வைத்து அவர்களது நிலத்தை அவர்கள் வளமாக்கி போதுமான வருமானம் ஈட்டிக் கொள்வர். அவர்களும் அப்படித் தான் நம்புகின்றனர்.
மேத்தா காலே யால் மராத்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழில்: சோனியா போஸ்