சத்யபானும், ஷோபா ஜாதவும் டிராக்ரில் ஏறுவதற்கு தயாராகிவிட்டார்கள். “எங்களால் முடிந்தளவு கம்பு, மாவு மற்றும் சமைப்பதற்கு தேவையான உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டோம். அதனால், பயணத்தின்போதும், பெல்காம் மாவட்டத்திலும் நாங்கள் பணம் செலவழிக்க வேண்டாம்“ என்று சத்யபான் கூறுகிறார்.
மஹாராஷ்ட்ராவின் பீட் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான போத்காவில் 1,200 பேர் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பயணத்திற்கு தேவையானவற்றையே செய்கிறார்கள். அவர்களின் உடைகளை மடித்து பைகளில் நிரப்புவது, தேவையான பாத்திரங்களை மூட்டை கட்டுவது. பயணத்திற்கு தேவையான சப்பாத்திகளை டப்பாக்களில் அடைத்து வைப்பது, மற்ற பொருட்களை எடுத்து வைப்பது உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் விரைவாக, அந்த அக்டோபர் மாதத்தின் வெயில் நிறைந்த ஒரு செவ்வாய்க்கிழமையில் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப்பைகளையும், சாக்கு மூட்டைகளையும் டிராக்டரில் ஏற்றுகிறார்கள். அவர்களின் எளிமையான வீடுகளில் உள்ள மரக்கதவுகளை வலுவான தாளிட்டு பூட்டுவதை மீண்டும், மீண்டும் உறுதி செய்துகொள்கிறார்கள். அடுத்த 5 மாதங்களுக்கு அந்த தாழ்ப்பாள்கள் வலுவானதாக இருக்க வேண்டும்.
இந்த பயணம் ஆண்டுதோறும் நடைபெறுவதாகும். ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர்-நவம்பர் மாதவாக்கில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் (மாவட்ட ஆட்சியரின் கணக்கீட்டின்படி) மராத்வாதாவின் பீட் மாவட்டத்தில் இருந்து மட்டும் மேற்கு மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் கரும்பு வெட்டும் வேலைக்காக, 4 முதல் 5 மாதங்கள் வரை இடம்பெயர்கிறார்கள். அவர்கள் கிராமத்தில் கிடைக்கும் குறைவான வேலைகள், அதிகரித்து வரும் விவசாய நெருக்கடிகள், மூலப்பொருட்களின் விலையை உயர்த்துவது, விளைச்சலுக்கு நிச்சயமற்ற விலை, மந்தமான கடன் வழிமுறைகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் இதர காரணிகளும் அவர்கள் இடம்பெயர வற்புறுத்துகிறது.
அவர்கள் இல்லாத அவர்களின் கிராமம் பாலைவனமாகத்தான் காட்சியளிக்கும். வெகு சிலரே, வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், சில குழந்தைகள் மட்டுமே ஊரில் தங்குவார்கள். கிராமத்தில் பராமரிக்க தாத்தா, பாட்டிகள் இல்லாத குழந்தைகளை, அவர்கள் பள்ளிப் படிப்பிற்கான செலவில், பெற்றோர்கள் தங்களுடனே அழைத்துச் செல்கிறார்கள். சத்யபானும், ஷோபாவும் தங்களது 6 வயது இளைய மகன் அர்ஜீனை தங்களுடனே அழைத்துச் செல்கிறார்கள். அவர்களின் 9 வயது மற்றும் 12 வயது மகன்களை வீட்டிலேயே விட்டுச் செல்கின்றனர். “இவன் என்னுடன் வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். மற்ற இருவரும் எனது மாமனார், மாமியாருடன் இருக்கிறார்கள்“ என்று ஷோபா கூறுகிறார்.
இன்னும் சில நாட்களில், ஜாதவ் குடும்பத்தினர் மற்றும் போத்கா கிராமத்தில் உள்ள மற்றவர்களும் கர்நாடகாவின் கோகாக் தாலுகாவை அடைந்துவிடுவார்கள். அது பீட்டில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனம் மற்றும் பஞ்சாரா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு செல்வதற்கு அவர்கள் இரண்டரை நாட்கள் இடைவிடாத பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவும் டிரைலர் பொருத்தப்பட்ட டிராக்டரில் திறந்தவெளியில் பயணம் செய்ய வேண்டும்.
சதாசிவ பாடே, கர்நாடகாவின் பல்வேறு கரும்பு ஆலைகளுக்கும் தொழிலாளர்கள் வழங்கும் ஒப்பந்தகாரர், ஒவ்வொரு டிராக்டருடனும் இரண்டு டிரைலர்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிடுகிறார். “நான் 200 டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளுக்கு பொறுப்பு. (அவற்றில் பெரும்பாலானவை பீட் மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து புறப்படுகின்றன.) ஒவ்வொரு வண்டியும் 10 தம்பதிகளை சுமந்து செல்கிறது. நான் ஏற்கனவே 50 வாகனங்களை அனுப்பி வைத்துவிட்டேன். போத்காவில் இருந்து மேலும் இரண்டு வாகனங்கள், இங்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராகிவிட்டன.
மதியவேளை முடிந்து, மாலை நெருங்கும்போது, பெரும்பாலானோர், அவர்களின் கம்பு, மாவு மற்றும் உப்பு அடங்கிய மரப்பெட்டிகள் மற்றும் பாத்திரங்கள், உடைகள் அடங்கிய சாக்குப்பைகள் உள்ளிட்ட அனைத்தையும் டிரைலரில் அடுக்கிவிட்டிருந்தனர். ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் நிரப்பி, வாகனத்தின் பக்கவாட்டில் கயிறு மூலம் கட்டிப்பட்டிருந்தது.
பயண மூட்டைகளை அடுக்கிவிட்டு, அவர்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை உண்பதற்காக திரும்பினர். இன்னும் சிறிது காலம் அவர்கள் குடும்பத்தினரைவிட்டு பிரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் வீட்டைவிட்டு தொலைதூரம் வேலைக்குச் செல்வது வழக்கம் என்றாலும், வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் டிராக்டர் டிரைலரில் ஏறும்போது கண் கலங்கி விடுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் முதல் டிரைலரிலும், ஆண்கள், சிறுவர்கள் இரண்டாவதிலும் ஏறிக் கொள்கின்றனர். தாத்தா, பாட்டிகளுடன் விட்டுச் செல்லப்படும் சிறு குழந்தைகள், தங்கள் தாய் டிராக்டரில் ஏறும்போது கத்தி அழுகின்றனர். அக்குழந்தைகளின் தாய்மார்களும், குற்றவுணர்வு கொள்கின்றனர்.
ஆனால், கடந்த 17 ஆண்டுகளாக தனது கணவர் சத்யபானுடன் இடம்பெயர்ந்து வரும் ஷோபா, இந்த முறை உற்சாகமாவே இருந்தார். இருவரும் தங்களின் 40 வயதுகளில் உள்ளனர். “இந்தாண்டு தீபாவளி முன்னதாகவே வந்தது. அதற்கு நான் என் குடும்பத்தினருடன் இருந்தேன். குடும்பத்தினருடனான தீபாவளி கொண்டாட்டத்தை இந்த இடம்பெயர்தல் மறக்கச்செய்துவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.
தெற்கு நோக்கி செல்லும் பயணம் துவங்குவதற்கு முன், ஒருவர் டிராக்டருக்கு பூஜை செய்து சிதறு தேங்காய் உடைக்கிறார். மகாதேவ் டிட்கே என்ற 24 வயது இளைஞர் டிராக்டர் இன்ஜினை இயக்க துவங்குகிறார். அதற்கு இரவு 10 மணியாகிவிடுகிறது. டிட்கேவும் போத்காவைச் சேர்ந்தவர்தான், அவர் தனது 19 வயது முதலே இடம்பெயர்பவர்களை அழைத்துச்செல்கிறார்.
“ஜெய் பீம்“ என்று சத்யபான் கத்துகிறார். டிராக்டர், நட்சத்திர ஒளியில் மின்னும் வானத்தின் கீழ் இருள்சூழ்ந்த பாதையில் முன்னேறிச்செல்கிறது. காற்று சில்லென்று வீசுகிறது. மகாதேவ், தனது சீட்டிற்கு அருகில் உள்ள சாக்கெட்டில் ஒரு பென்டிரைவை பொருத்துகிறார். அதிலிருந்து பாடும் இந்தி பாடல்கள் இரவின் மௌனத்தை துளைத்துச்செல்கின்றன. டிராக்டரில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். தங்களின் மூட்டைகளுக்கு மத்தியில் தாங்களும் நன்றாக அமர்ந்து கொள்கின்றனர்.
அவர்களின் டிரைலரில் இரண்டு ஆடுகளுக்கும் இடம் உள்ளது. “பெல்காமில் அவை பால் கொடுக்க உதவும்“ என்று ஷோபா கூறுகிறார். டிராக்டர் மேடு, பள்ளங்களின் ஏறி இறங்கும்போது, மகன் அர்ஜீன், தனது மடியில் நன்றாக அமர்ந்திருக்கிறானா என்பதை ஷோபா உறுதிபடுத்திக்கொள்கிறார். கார்களும், மற்ற வாகனங்களும் சாலையில் செல்கின்றன. குளிர்ந்த காற்று, திறந்த டிரைலரில் இதமாக வீசுகிறது. ஷோபா, தனது பையில் இருந்து ஒரு குல்லாவை எடுத்து அர்ஜீனுக்கு போட்டுவிடுகிறார். தனது புடவையை வைத்து தனது காதுகளை மூடிக்கொள்கிறார். மற்றவர்கள், அவர்களின் துணி மூட்டைகளைப் பார்த்து, அதிலிருந்து போர்வையை எடுத்து போர்த்திக்கொள்கின்றனர். அவை குளிருக்கு சிறிது இதமளிக்கும். ஒரு சிலர் தூங்கவும் முடியும்.
மகாதேவ், முழுக்கை சட்டை அணிந்துள்ளார், கழுத்தில் மப்ளர் சுற்றியுள்ளார். அவர் கடும் இருள் சூழ்ந்த இரவில், தெருவிளக்குகள் கூட இல்லாத வளைவுப்பாதைகளில் டிராக்டரை திறம்பட ஓட்டிச்செல்கிறார். அதிகாலை மூன்றரை மணியளவில், அவருக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. “இதற்கு மேல் ஓட்ட முடியாது“ என்று செய்கை காட்டுகிறார். “என்னால், கண்களை மூடாமல் ஒரு நொடி கூட வண்டியை நகர்த்த முடியாது. இத்தனை குடும்பங்களை அழைத்துச் செல்கிறேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
நெடுஞ்சாலையில் ஒரு காலியான கொட்டகையை பார்த்தவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு, ஒரு போர்வையை எடுத்து கொட்டகையின் தரையில் விரித்து படுத்துக்கொள்கிறார். குழந்தைகளுடன், 24 பேர் கொண்ட அந்த பயணிகளில் பெரும்பாலானோர் தூங்கிவிட்டிருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் மகாதேவ் திரும்பி வந்துவிட்டார்.
ஒரு காலத்தில் கிடைத்ததைபோல், கரும்பு வெட்டுவதில் பெரியளவில் வருமானம் கிடைத்துவிடாது, ஆனால், நிரந்தர வேலைக்கான உறுதி நிகால்ஜிகள் மற்றும் மற்ற குடும்பத்தினருக்கு ஆண்டுதோறும் வீட்டைவிட்டு இடம்பெயர்ந்து செல்வதற்கு போதுமானது.
ஷோபா, சத்யபான் உள்ளிட்ட டிராக்டரில் இருந்த மற்றவர்களும், புதன்கிழமை விடியும்போதே விழித்துவிட்டனர். மகாதேவ், ஒஸ்மனாபாத்தின் கலாம்ப் தாலுகாவில் ஒரு இடத்தில் ஏரியின் அருகே ஆள்நடமாட்டம் அதிகமில்லாத இடத்தில் டிராக்டரை நிறுத்தினார். அங்கு அனைவரும் இறங்கி, இரவு முழுவதும் சிரமப்பட்டு அமர்ந்திருந்ததிலிருந்து விடுபட்டு, தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். பற்களை சுத்தம் செய்து, புத்துணர்வு ஏற்படுத்திக்கொண்டனர். (பெண்கள், காலை கடன்களை முடிப்பதற்கு புதர்கள் மற்றும் மரங்களடர்ந்த மறைவான இடங்களை தேட முயற்சித்துக்கொண்டிருந்தனர்).
ஒரு மணி நேரம் கழித்து, எட்டரை மணிக்கு, ஏர்மாலாவில் ஒரு தாபாவில் (உணவு அருந்தும் சாலையோர கடை) காலை சிற்றுண்டி. அது தொழிலாளர்களுக்கான பொதுவான ஒரு ஓய்வு இடம்போல் காட்சியளித்தது. இன்னும் நிறைய டிராக்டர்களும், டிரைலர்களுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது அதை உறுதிபடுத்தியது. அங்கு அவல் சாப்பிட்டுக்கொண்டிருந்த, சிவாஜி நிக்கால்ஜே (48), போத்காவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோதிங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர். கரும்பு வெட்டும் வேலை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது என்று கூறுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் கர்நாடகாவிற்கு இடம்பெயர்கிறார். “ஒரு தம்பதிக்கு மொத்தமாக ரூ.75 ஆயிரம் பெறுகிறோம். நாங்கள் வெட்டும் ஒவ்வொரு டன் கரும்புக்கும் ரூ.228 பெறுகிறோம். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின்னர், ஒப்பந்தக்காரர்கள் நாங்கள் வெட்டிய டன்களின் அளவை எண்ணி, மொத்த தொகையிலிருந்து கூட்டியோ, கழித்தோவிடுவார்கள்“ என்று அவர் கூறுகிறார். ரூ.75 ஆயிரம் சம்பாதிப்பதற்கு ஒரு தம்பதி 335 டன் கரும்பு வெட்டியிருக்க வேண்டும்.
நிக்கால்ஜே தனது மனைவி அர்ச்சனா மற்றும் 15 வயது மகள் சரஸ்வதியுடன் வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் மகள் உடன் வருகிறார். “நான் ஏழாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடடேன்“ என்று சரஸ்வதி கூறுகிறார். “நான் அவர்களின் சுமைகளை குறைக்கலாம் என்பதற்காக, நான் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறேன். கரும்பு வயலில் நாள் முழுவதும் கடுமையாக உழைப்பார்கள். நான் இருந்தால், அவர்கள் கடுமையான வேலையை முடித்துவிட்டு வந்து சமைக்க வேண்டிய தேவை இருக்காது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
டிராக்டருடன் நடந்துசெல்லும்போது அர்ச்சனா, அவர்களுக்கு ஆண்டுதோறும் ஏன் இந்த பயணத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விளக்குகிறார். “எங்களுக்கு சொந்தமான நிலம் கிடையாது. நாங்கள் போத்கா மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் விவசாய கூலிகளாக வேலை செய்கிறோம். எனக்கு ரூ.100 கிடைக்கிறது, சிவாஜிக்கு ரூ.200 கிடைக்கிறது. ஆனால் அதுவும் நிச்சயமற்றது. மழை பொய்த்துவிட்ட இந்த காலங்களில், விவசாய நிலங்களில் வேலை கிடைப்பதும் அரிதாகிவிட்டது. கடந்த மாதம் நாங்கள் இருவரும் இணைந்தே ரூ.1,000 மட்டுமே ஈட்டினோம்“ என்று கூறுகிறார். அவர்களிடம் இருந்த சிறிய சேமிப்பு மற்றும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியும் சமாளித்ததாக கூறினார்கள்.
ஒரு காலத்தில் கிடைத்ததுபோல், கரும்பு வெட்டுவதில் பெரிய வருமானம் ஒன்றும் கிடைத்துவிடாது. ஆனால், ஆண்டுதோறும் ஐந்து மாதங்கள் நிரந்தரமான வேலை உறுதியாக கிடைக்கும் என்பதே நிக்கால்ஜே மற்றும் மற்ற குடும்பங்களின் இந்த இடப்பெயர்வுக்கு போதுமான காரணமாகும். “கடந்தாண்டு எங்களுக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. ஏனெனில், பெரும்பாலான கரும்பு ஆலைகளில் வேலை இல்லை“ என்று அர்ச்சனா கூறுகிறார். “சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்றோம். மழைப்பொழிவு குறைவு எனில், கரும்பு விளைச்சலும் குறைவு“ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இன்னும் சிறிது நேரத்தில், நாங்கள் மஹாராஷ்ட்ராவின் ஷோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குர்துவாடி என்ற சிறிய நகரத்தை அடைந்துவிடுவோம். அங்கு நாங்கள் மதிய உணவிற்காக நிறுத்துவோம். மீண்டும் அனைவரும் டிராக்டரில் இருந்து இறங்குவார்கள். ஆடைகள் சுருங்கி, தலை முடி வறண்டு, சோர்வு அவர்களின் முகத்தில் நன்றாக தெரிகிறது.
17 வயதான ஆதிநாத் டிட்கே உற்சாகமாக நடந்து வருகிறார். அவர் இரண்டு ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வருகிறார். முதல் முறையாக அவருக்கு அவரது மாமாவுக்கு வழங்கப்படும் தொகை கிடைக்கும். அவரது மாமாவும் அதே டிராக்டர் டிரைலரில்தான் பயணம் செய்கிறார். “கடந்தாண்டு வரை, எனக்கு ஒரு டன் கரும்பு வெட்டுவதற்கு ரூ.190 கிடைத்தது. இந்தாண்டு நான் வயது வந்தோருக்கான அளவுகோலில் வந்துவிடுவேன்“ என்று கூறுகிறார்.
குர்துவாடியில் ஒரு உணவகத்தில், களைத்த பயணிகள் அனைவரும் பருப்பு மட்டுமே வாங்கிக்கொண்டனர். அவர்களுக்கு தேவையான ரொட்டியும், சட்டினியும் அவர்கள் எடுத்து வந்திருந்தனர். “மாலை நேர தீனிக்கு நாங்கள் தீபாவளி காலங்களில் வீடுகளில் செய்யும் லட்டு மற்றும் அவல்பொரியும் எடுத்து வந்துள்ளோம்“ என்று ஷோபா கூறுகிறார்.
டிராக்டர், இரவு எட்டரை மணிக்கு, மேற்கு மஹாராஷ்ட்ராவின் ஷோலாப்பூர் மாவட்டத்தின் கோயில் நகரமான பந்தர்பூர் நகரை அடைகிறது. அது பீட்டில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு தாபாவில் இரவு உணவு முடிந்த பின்னர், குளிர் காற்று வீசத்துவங்குகிறது. மீண்டும் அனைவரும் ஸ்வெட்டர், மப்ளர்கள், போர்வைகளை பையில் இருநது வெளியே எடுத்து உபயோகிக்க துவங்குகின்றனர்.
வியாழக்கிழமையில் நடு இரவை நெருங்கும் வேலையில் பயணிகள் கோகாக்கின் சதீஷ் சர்க்கரை ஆலையை அடைகின்றனர். அங்கு நிறைய டிரக்குகளில், கரும்பு அடுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. “நன்றாக தூங்குவதற்கு இறுதியாக நேரம் கிடைத்துவிட்டது“ என்று சத்யபான் கூறுகிறார். சர்க்கரை ஆலைக்கு அருகிலேயே தரையில் போர்வைகளை விரித்து படுத்து உறங்குகின்றனர். அவர்கள் அனைவரும் நாளை காலை முதல் தங்களின் கடினமான கரும்பு வெட்டும் வேலைகளை துவங்க வேண்டும்.
தமிழில்: பிரியதர்சினி. R.