புத்துராம் சிண்டா அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார். சில அடி தொலைவில் பெரும் கறுப்பு உருவங்கள் நிலவொளியில் நின்று கொண்டிருக்கின்றன. 60 வயது புஞ்சியா பழங்குடி விவசாயி, கத்தாஃபர் கிராமத்திலிருக்கும் அவரது வீட்டின் பாதி மூடிய கதவின் இடைவெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒடிசாவின் சுனாபெடா வன உயிர் சரணாலயத்தின் மையத்தில் இருக்கும் 52 வசிப்பிடங்களில் ஒன்றில் வாழும் விவசாயிக்கு பெரிய பாலூட்டி மிருங்களை பார்ப்பதென்பது வழக்கமான விஷயம்தான்.
ஆனாலும் அவர் சொல்கிறார்,”என்னை அது காலில் போட்டு மிதித்து என் வீட்டையும் நிமிடங்களில் இடித்து விடுமோ என எண்ணி நடுங்கினேன். சற்று நேரம் கழித்து அது வீட்டுக்கு பின்பக்கம் சென்று துளசி செடிக்கு அருகே நின்று கொண்டது. நான் லஷ்மி கடவுளையும் அந்த பெரும் பாலூட்டிகளையும் கும்பிட்டேன். அந்த மந்தை என்னை பார்த்திருக்கும்.”
புத்துராமின் மனைவியான 55 வயது சுலாஷ்மி சிண்டாவும் யானையின் பிளிறல்களை கேட்டார். அச்சமயத்தில் அவர், ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கிராமத்தில் மகன்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வசிக்கும் வீட்டில் இருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து அவை கிளம்பிச் சென்றன.
டிசம்பர் 2020-ல் நடந்த அச்சம்பவத்தை நினைவுகூரும் விவசாயி, வேண்டுதல்கள் உதவியதாக நினைக்கிறார்.
டிசம்பர் 2022-ல் யானைகள் பாதையை மாற்றியபிறகு, புத்துராமுக்கு மட்டுமல்ல, நுவாபடா மாவட்டத்தின் 30 பழங்குடி கிராமங்களுக்கும் நிம்மதி.
சுலாஷ்மிக்கும் புத்துராமுக்கும் ஐந்து மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். மொத்தக் குடும்பமும் விவசாயம் செய்கிறது. கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலத்தை விளைவிக்கிறது. இரண்டு மூத்த மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. கத்தாஃபர் கிராமத்தில் மனைவி, மக்களுடன் அவர்கள் வாழ்கின்றனர். புத்துராமும் சுலாஷ்மியும் ஒரு வருடத்துக்கு முன் நிலத்துக்கு அருகே இடம்பெயர்ந்து விட்டனர்.
அங்குதான் யானைகள் உணவு தேடி வந்து செல்கின்றன.
நெல் வயல்களுக்கு நேர்ந்த சேதத்தை பார்க்க புத்துராம் அடுத்த நாள் சென்றபோது அரை ஏக்கர் பயிர் அழிந்திருப்பதை கண்டார். ஒரு பருவகால ஓடையிலிருந்து பிரித்து கரை கட்டி உருவாக்கப்பட்ட நிலம் இது. அவரின் பிரதானமான நிலமான இது, ஒவ்வொரு வருடமும் 20 மூட்டைகள் (கிட்டத்தட்ட ஒரு டன்) நெல் கொடுக்கவல்லது. “’ஐந்து மாத’ மதிப்பு கொண்ட நெல்லை இழந்துவிட்டேன்,” என்னும் அவர், “யாரிடம் நான் புகார் சொல்வது?” எனவும் கேட்கிறார்.
அங்குதான் சிக்கல் இருக்கிறது. சொந்த நிலமென புத்துராம் குறிப்பிட்டு சுலாஷ்மியுடன் சேர்ந்து விளைவிக்கும் நிலம் அவரின் பெயரில் இல்லை. 600 சதுர அடி பரப்பளவில் இருக்கும் சரணாலயத்துக்குள் அவரும் பிற விவசாயிகளும் விதைத்து விளைவிக்கும் நிலங்களின் ஆவணங்கள் அவர்களின் பெயர்களில் இல்லை. அவர்கள் அந்த நிலங்களுக்கு வாடகையும் கொடுப்பதில்லை. “நான் விதைக்கும் பெரும்பாலான நிலம் வன உயிர் இலாகாவுக்கு சொந்தமானது. வன உரிமைச் சட்டப்படி ( The Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest) Rights Act ) எனக்கு பட்டா வழங்கப்படவில்லை,” என அவர் சுட்டிக் காட்டுகிறார்.
புத்துராம் மற்றும் சுலாஷ்மி ஆகியோரும் கத்தாஃபரில் வசிக்கும் 30 குடும்பங்களும் (கணக்கெடுப்பு 2011) புஞ்சியா சமூகத்தை சேர்ந்தவர்கள். இங்கு வசிக்கும் பிற பழங்குடிகள் கோண்ட் மற்றும் பகாரியா ஆவார்கள். ஒடிசாவின் நுவாபடா மாவட்டத்திலுள்ள போடென் ஒன்றியத்தில் இருக்கும் அவர்களின் கிராமம், சுனாபெடா பள்ளத்தாக்கின் தெற்கு முனையில் சட்டீஸ்கர் மாநிலத்துக்கு அருகே அமைந்திருக்கிறது.
யானைகள் கடந்து செல்வதற்கு தேர்ந்தெடுக்கும் பாதை இது.
சுற்றுச்சூழல் மற்றும் வனங்களுக்கான அமைச்சகத்தின் 2008-2009 வருட அறிக்கையில் நான்கு புலிகள் காப்பகத்தில் ஒன்றாக சுனாபெடா அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. புலிகளுடன் சிறுத்தைகளும் யானைகளும் தேன் கரடியும் இந்திய ஓநாயும் காட்டுப் பன்றிகளும் காட்டெருதுகளும் காட்டு நாய்களும் அங்கு இருக்கின்றன.
வனத்துறை அதிகாரிகள் வந்து சுனாபெடா மற்றும் பத்தர்ஹா பள்ளத்தாக்கு பகுதிகளில் இருக்கும் கதாஃபர் உள்ளிட்ட கிராமங்களின் மக்களை பலமுறை சந்தித்து, கிராமவாசிகள் இடம்பெயர்வதற்கு சம்மதிக்க வைக்க முயன்றனர். 2022ம் ஆண்டில் தெகுன்பானி மற்றும் கடிபெடா ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் இடப்பெயர்வுக்கு சம்மதித்தனர்.
சம்மதிக்காதவர்கள் சூறையாடும் பாலூட்டி விலங்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒடிசாவில் 1976 யானைகள் இருப்பதாக வன உயிர் கணக்கெடுப்பு 2016-17 பதிவு செய்திருக்கிறது. மாநிலத்தின் 34 சதவிகித காடுகள் ஈர்ப்பை கொடுக்குமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதில் சுனாபெடா சரணாலயத்தின் மூங்கிலும் அடக்கம் என்கிறார் மாயாதர் சரஃப்: “மூங்கில் அதிகமாக இருக்கும் சுனாபெடா - பத்தார்ஹா பள்ளத்தாக்கில் அவை கடந்து செல்லும்.” முன்னாள் வன உயிர் காப்பாளர் சொல்கையில், “அவை நுவாபடாவில் நுழைந்து மேற்கில் சட்டீஸ்கருக்கு செல்வதற்கு முன் மாவட்டத்துக்குள் 150 கிமீ பயணிக்கின்றன.”
உண்டு முடித்தபின் யானைகள் ஒரு மாதத்துக்கு பிறகு பலாங்கிருக்கு கிட்டத்தட்ட அதே பாதையை பயன்படுத்தி சென்றடையும்.
வருடந்தோறும் இரு முறை நேரும் அவற்றின் பயணத்தின் பாதையில் புத்துராம் போன்ற புஞ்சியா, கோண்ட் மற்றும் பகாரியா பழங்குடி விவசாயிகள் விளைவிக்கும் சிறு நிலங்கள் சுனபெடா சரணாலயத்துக்கு உள்ளும் வெளியும் அமைந்திருக்கின்றன. ஒடிசாவின் பழங்குடிகளுக்கு மத்தியில் இருக்கும் நிலவுரிமை பற்றி பேசுகையில், “ஒடிசாவில் கணக்கெடுக்கப்பட்ட பழங்குடி குடும்பங்களில் 14.5 சதவிகிதம் நிலமற்றிருப்பதாகவும் 69.7 சதவிகிதம் விளிம்புநிலையில் இருப்பதாகவும்,” பழங்குடி வாழ்க்கைகள் நிலை அறிக்கை 2021 தெரிவிக்கிறது.
கொம்னா தொடரின் துணை காட்டிலாகா அதிகாரியாக இருக்கும் சிபா பிரசாத் கமாரி சொல்கையில், வருடத்துக்கு இரு முறை யானைகள் இப்பகுதிக்கு வரும் என்கிறார். முதல் பருவமழையின்போதும் (ஜூலை) பிறகு மீண்டும் டிசம்பர் மாதத்திலும் யானைகள் வரும் என்கிறார். சரணாலயத்தின் பாதுகாப்பு பணியில் இருக்கும் அவருக்கு யானைகளின் இருப்பை துல்லியமாக அறிந்து கொள்ளும் அறிவு இருக்கிறது. வரும் வழியில் வெவ்வேறு வகைகளிலான புற்களையும் விவசாயப் பயிர்களையும் முக்கியமாக சம்பா பயிர்களையும் அவை உண்ணும் என்கிறார். “ஒவ்வொரு வருடமும் யானைகள் பயிரையும் வீடுகளையும் வெவ்வேறு கிராமங்களில் அழிக்கின்றன,” என்கிறார் அவர் டிசம்பர் 2020ம் ஆண்டின் நிகழ்வுகளை குறிப்பிட்டு.
புத்துராமின் பயிரிழப்பு என்பது வழக்கத்தை மீறிய விஷயம் அல்ல.
விவசாயிகள் விளைச்சலை வன விலங்குகளுக்கு பறிகொடுக்கும்போது பணப்பயிர் எனில் ஏக்கருக்கு ரூ.12,000மும் நெல் மற்றும் தானியம் என்றால் ரூ,10,000மும் இழப்பீடாக பெற முடியும் என ஒடிசாவின் வன உயிர் காப்பக இணையதளம் தெரிவிக்கிறது. அது வன உயிர் பாதுகாப்பு விதிகளை மேற்கோள் காட்டுகிறது.
ஆனால் நிலவுரிமை ஆவணம் இல்லாமல், புத்துராம் இழப்பீடுக்கு விண்ணப்பிக்க முடியாது.
“என் மூதாதையரிடமிருந்து எனக்கு இந்த நிலம் கிடைத்தது. ஆனால் வன பாதுகாப்பு சட்டம், 1980 -ன்படி எல்லாமும் அரசாங்கத்துக்குதான் சொந்தம்,” என்கிறார் புத்துராம். நிலத்தை மேம்படுத்தவும் விவசாயம் பார்க்கவும் செல்லும்போது எங்களின் நடமாட்டத்தை வனத்துறை முடக்குகிறது,” என்கிறார் அவர்.
காட்டில் வசிக்கும் மக்களுக்கு நிலையான வருமானத்தை கொடுக்கும் தும்பிலி இலைகள் சேகரிப்பதை குறித்துதான் அவர் தெரிவிக்கிறார். “உடைமைக்கான உரிமை, காட்டு பொருட்களை சேகரிக்கவும் பயன்படுத்தவும் அனுமதி,” வன உரிமை சட்டம் 2006-ம்ன்படி உள்ளது. ஆனால் அந்த உரிமை மறுக்கப்படுவதாக வனத்தில் வசிக்கும் அவர் குறிப்பிடுகிறார்.
இலுப்பை பூக்கள், பழங்கள் போன்றவற்றுக்கு 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடென் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புத்துராம் எப்போதும் சந்தைகளுக்கு செல்ல முடிவதில்லை. வணிகர்கள் கிராமவாசிகளிடம் பொருட்களுக்காக முன் தொகை கொடுப்பார்கள். ஆனால் அந்த தொகை புத்துராம் நேராக சென்றிருந்தால் விற்க முடிகிற தொகைக்கும் குறைவாகதான் இருக்கும். “வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.
*****
பண்ணை வீட்டின் முன் இருக்கும் மேட்டு நிலத்தில் புத்துராமும் சுலாஷ்மியும் சோளம், கத்தரிக்காய், மிளகாய், குறுங்கால நெல் மற்றும் கொள்ளு போன்றவற்றை விளைவிக்கின்றனர். மத்தியிலும் தாழ்வாகவும் உள்ள நிலங்களில் நெல் விதைக்கிறார்கள். குறுங்காலம் மற்றும் நீண்டகால பயிர்களை விளைவிக்கின்றனர்.
சம்பா பருவத்தில் பத்தார்ஹா காட்டுப்பகுதிக்கு அருகே உள்ள நிலங்களில் களையெடுத்தல், செடிகளை பார்த்துக் கொள்ளுதல், பசிய இலைகளை சேகரித்தல் போன்ற வேலைகளை சுலாஷ்மி செய்கிறார். “என் மூத்த மகனுக்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்த பிறகு எனக்கு வேலைப்பளு குறைந்தது. என் மருமகள் இப்போது பொறுப்பெடுத்திருக்கிறாள்,” என்கிறார் அவர்.
குடும்பத்திடம் மூன்று ஜோடி காளைகள் ஒரு ஜோடி எருமைகள் உட்பட்ட 50 கால்நடைகள் இருக்கின்றன. காளைகள் நிலத்தை உழ உதவுகின்றன. உழுவதற்கென இயந்திரம் எதுவும் அக்குடும்பத்திடம் இல்லை.
புத்துராம் பசுக்களில் பால் கறப்பார். ஆடுகளை கூட்டிச் சென்று மேய்ப்பார். சொந்த பயன்பாட்டுக்காகவும் அவர்கள் சில ஆடுகள் வளர்க்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் வன விலங்குகளுக்கு ஒன்பது ஆடுகளை பறிகொடுத்திருந்தபோதும் ஆடு வளர்ப்பை அவர்கள் கைவிட விரும்பவில்லை.
கடந்த சம்பா பருவத்தில், புத்துராம் ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் விதைத்தார். மேலும் இரு வகைகள் கொண்ட பீன்ஸ், பச்சைப்பயறு, உளுந்து, கொள்ளு, கடலை, மிளகாய், சோளம் மற்றும் வாழை போன்றவற்றையும் அவர் முயற்சித்து பார்த்திருக்கிறார். “கடந்த வருடத்தின் குளிரால் பச்சைப்பயறு விதைப்பு பொய்த்து போனது. ஒரு விதை கூட எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு ஈடாக பிற பருப்புகள் பலனளித்தன,” என்கிறார் அவர்.
“இரண்டு டன் நெல்லும் போதுமான அளவு பருப்பு, தானியம், காய்கறி மற்றும் எண்ணெய் விதைகள் போன்றவை எங்களுக்கு கிடைக்கின்றன,” என்கிறார் சுலாஷ்மி. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவற்றை பயன்படுத்துவதில்லை என்கின்றனர் அவர்கள். மாட்டுச்சாணம், சிறுநீர் மற்றும் பயிர் கழிவுகள் மட்டும் போதும். “பிரச்சினைகள் இருப்பதாக சொன்னாலோ உணவு பற்றாக்குறை இருந்தாலோ அது பூமியை பழிப்பது போன்ற செயல்,” என்கிறார் புத்துராம். “பூமித்தாயுடன் நீங்கள் ஐக்கியமாகாமல் அவள் எப்படி உங்களுக்கு உணவளிப்பாள்?” எனக் கேட்கிறார் சுலாஷ்மி.
விதைப்பு, களையெடுத்தல், அறுவடை போன்ற வேலைகள் மிகுந்திருக்கும் காலங்களில் மொத்த குடும்பமும் களத்தில் இறங்கும். பிறரின் நிலங்களில் கூட வேலை பார்க்கின்றனர். ஊதியம் பெரும்பாலும் நெல்லாக கொடுக்கப்படுகிறது.
யானைகள் பயிர்களை அழித்த வருடத்துக்கு அடுத்த வருடமான 2021-ல் நடவு செய்யவில்லை என்கிறார் புத்துராம். அவரின் முடிவுக்கு பலன் கிடைத்தது. “யானைகள் மிதித்ததில் விதைகள் நிலத்தில் கிடந்ததை நான் பார்த்தேன். அவை முளைக்குமென எனக்கு நிச்சயமாக தெரியும்,” என்கிறார் அவர். மழைக்காலத்தின் முதல் மழை பெய்தவுடனேயே விதைகள் முளைவிட்டன. அவற்றை நான் பராமரித்தேன். 20 மூட்டை (ஒரு டன்) நெல் எந்த பணமும் செலவழிக்காமல் கிடைத்தது.”
“எங்களின் வாழ்க்கைகள் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாதவை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளாது,” என்கிறார் இந்த பழங்குடி விவசாயி. இந்த மண், நீர், மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் யாவும் அடுத்த உயிர் ஜீவிக்க உதவுகின்றன.”
*****
யானைகளின் நடமாட்டமும் இப்பகுதியில் இன்னொரு பிரச்சினை. மின்சார கம்பிகளை யானைகள் இழுத்து விடுகின்றன. கொம்னா மற்றும் போடென் ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்க வேண்டிய நிலை இருக்கிறது.
2021ம் ஆண்டில் 30 யானைகள் அருகே இருக்கும் சட்டீஸ்கருக்கு ஒடிசாவின் கந்தாமர்தன் காடுகளிலிருந்து சிதானதி சரணாலயத்தின் வழியாக சென்றன. வடகிழக்கு பக்கமாக செல்லும் இந்த வழி, வனத்துறையின் வரைபடத்தின்படி, நுவாபடாவின் கோலி கிராமத்தை நோக்கி பொலாங்கிர் மாவட்டம் வழியாக செல்கிறது. இரண்டு யானைகள் டிசம்பர் 2022-ல் அதே வழியில் திரும்பின.
சுனாபெடா பஞ்சாயத்தை சேர்ந்த 30 கிராமங்களை சுற்றி வருடாந்திர பயணத்தை மேற்கொள்வதற்கு பதில், அவை நேரடியாக சுனாபெடா வன உயிர் சரணாலயத்துக்குள் நுழைந்து அதே வழியில் வெளியேறின.
அனைவரும் நிம்மதி பெருமூச்செறிந்தனர்.
தமிழில் : ராஜசங்கீதன்