திரௌபதி சபர் கண்ணீரை அடக்க முடியாமல் புடவையின் நுனியால் கண்களைத் துடைத்துக் கொண்டே இருக்கிறார். அவரது பேரன்களான மூன்று வயது கிரீஷ்ஷும் ஒன்பது மாத குழந்தை விராஜ்ஜும் ஒடிசாவின் குடாபெலி கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு வெளியே அமைதியாக விளையாடுகிறார்கள். தனது பேத்தி துல்சாவின் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் 65 வயது மூதாட்டிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் கூற முயலுகின்றனர்.
"இப்போது யாரை 'எங்கள் மகள்' என்று அழைப்பது?" என அவர் பொதுவாகக் கேட்கிறார்.
நுவாபாடா மாவட்டத்தின் காரியார் ஒன்றியத்தில் பாதி கட்டி முடிக்கப்பட்ட செங்கல் வீட்டின் முன் ஒரு பிளாஸ்டிக் பாயில் அமர்ந்து, சபார் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த துல்சாவின் குடும்பம், அவர்களின் திடீர் இழப்பை சமாளிக்க முயற்சிக்கிறது. பெற்றோரான தாய் பத்மினியும் தந்தை தேபானந்த்தும் அவர்கள் மகளின் கைக்குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். குறிப்பாக கைக்குழந்தை விராஜ். “நானும் என் மருமகள் பத்மினியும் மாறி மாறி இந்தக் குழந்தைகளை கவனித்து வருகிறோம்” என்றாள் திரௌபதி.
குழந்தைகளின் தந்தை துல்சாவின் கணவர் போசிந்து அருகில் இல்லை. தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ரங்காபூர் என்ற கிராமத்தில் 500 கிலோமீட்டர் தெற்கே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். அவர் தனது தாயார் மற்றும் துல்சாவின் தங்கை தீபாஞ்சலியுடன் டிசம்பர் 2021-ல் சூளையில் ஆறு மாதங்கள் வேலை செய்வதற்காக சென்றிருந்தார். அவர்கள் நாளொன்றுக்கு சுமார் ரூ.200 வருமானம் ஈட்டச் சென்றிருந்தார்கள்.
ஜனவரி 24, 2022 அன்று இரவு, 25 வயது துல்சா சபர் குடாபெலியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சனாடமால் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தார். இரவு 8 மணியளவில் கடுமையான வயிற்று வலி இருப்பதாக புகார் கூறினார். "நான் அவளை காரியாரில் [நகரில்] உள்ள துணை-பிரிவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்," என்று அவரது 57 வயது மாமனார் தஸ்மு சபர் கூறுகிறார். அங்குள்ள மருத்துவர், நிலைமை மோசமாக இருப்பதாகவும், நுவாபாடாவில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறினார். ஆனால் நாங்கள் சென்றடைவதற்குள் துல்சா இறந்துவிட்டாள்.”
ஒரு மருத்துவமனைக்குச் செல்வதற்கு வெகுதூரம் பயணித்த குடும்பத்தின் அனுபவம் ஒடிசாவின் பழங்குடி மக்களுக்கு புதிதில்லை. காரியாருக்கு 20 கிலோமீட்டர்களும் நுவாபாடாவுக்கு மற்றொரு 50 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும். ஒடிசாவின் பழங்குடிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பொது சுகாதார அமைப்பை அணுகுவது சுலபமான காரியம் கிடையாது. கிராமப்புற ஒடிசாவின் இந்தப் பகுதிகளில் உள்ள 134 சமூக சுகாதார மையங்களில் (CHC) சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையால், மக்கள் அவசரகாலத்தில் ஒன்றியம் அல்லது மாவட்டத் தலைமையகத்திற்குச் செல்ல வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.
2019-20 கிராமப்புற சுகாதாரப் புள்ளிவிபரங்களின்படி , ஒடிசாவின் பழங்குடிப் பகுதிகளில் உள்ள சமூகச் சுகாதார மையங்களில் குறைந்தது 536 சிறப்பு மருத்துவர்கள் - மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் - தேவைப்படுகிறார்கள். 461 மருத்துவர்கள் பற்றாக்குறை. மூன்று அடுக்கு கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு உச்ச சுகாதார வசதியான சமூக சுகாதார மையம், சராசரியாக ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களுக்கு சேவை செய்கிறது.
துக்கத்தில் இருந்த குடும்பத்திற்கு, அவரது கணவர் தெலுங்கானாவில் இல்லாதது துயரத்தை மேலும் கூட்டியது.
27 வயது போசிந்து தனது மனைவியின் இறுதிச் சடங்குகளைச் செய்யத் திரும்ப முடியவில்லை. "அவரது மனைவியின் மறைவு பற்றி நான் சொன்னபோது, என் மகன் முதலாளியிடம் விடுப்பு கேட்டான். ஆனால் விடுப்புக் கிடைக்கவில்லை," என்று தாஸ்மு கூறுகிறார். குடும்பத்தை பெத்தப்பள்ளியில் இருந்து திரும்ப ஏற்பாடு செய்யுமாறு உள்ளூர் தொழிலாளர் ஒப்பந்ததாரரிடம் (அல்லது சர்தார்) அவர் முறையிட்டது வீணானது.
தெலுங்கானாவில் உள்ள சூளைக்கு கிராமத்தில் இருந்து சுமார் 60 பேருடன் போசிந்தை அனுப்பிய ஒப்பந்ததாரர், குடும்பத்திற்கு முன்பணமாக கொடுத்த ரூ.1,11,000 பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொன்னார். செங்கல் சூளை உரிமையாளருக்கு அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
*****
போசிந்தைப் போலவே, நுவாபாடாவில் உள்ள சபார் சமூகத்தைச் சேர்ந்த பலர், குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு வருமானம் ஈட்டவும் அதிக செலவுகள் இருக்கும்போதும் வேலைக்காக இடம்பெயர்கின்றனர். மாவட்டத்தின் ஏறக்குறைய பாதி பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இங்குள்ள பழங்குடிச் சமூகங்கள் மஹுவா பூக்கள், கரி விதைகள் போன்ற மரமற்ற வனப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியிருக்கிறார்கள். மானாவாரி விவசாயத்தையும் செய்கிறார்கள். இருப்பினும், வன விளைபொருட்களுக்கு லாபம் இல்லை. மேலும் மானாவாரி பயிர்களின் விவசாயம் வறட்சி மற்றும் போதிய மழையின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாசனம் கிட்டத்தட்ட இல்லை.
"சம்பாப் பருவத்திற்குப் பிறகு வழக்கமான விவசாய வேலைகள் கிடைக்காத நிலையில், எங்களின் ஒரே நம்பிக்கை ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மட்டுமே. ஆனால் தாமதமான ஊதியம் வேறு வழிகளைத் தேடத் தூண்டுகிறது" என்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த தனது குடும்பத்தின் அனுபவத்தைப் பற்றி தஸ்மு கூறுகிறார். “என் மகனும் என் மனைவியும் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களது ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. மொத்த நிலுவைத் தொகை சுமார் 4,000 ரூபாய்,'' என்கிறார்.
சம்பாப் பருவத்தில் கூட வேலை வாய்ப்புகள் குறைவு என்கிறார் தஸ்முவின் அண்டை வீட்டாரான ரவீந்திர சாகாரியா. "அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் இருந்து இப்பகுதி இளைஞர்கள் இடம்பெயர்கின்றனர்," என்று அவர் மேலும் கூறுகிறார். இம்முறை வேலைக்குச் சென்ற கிராமத்தைச் சேர்ந்த 60 பேரில் கிட்டத்தட்ட 20 பேர் இளைஞர்கள் என்கிறார்.
நுவாபாடாவின் சபார் சமூகத்தில் 53 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். கிராமப்புற ஒடிசாவின் சராசரியான 70 சதவீதத்தை விட மிகக் குறைவான அளவு. பள்ளிக் கல்வி பெற்ற சிலர் மும்பைக்குச் செல்கிறார்கள். ஆனால் போசிந்தைப் போல மற்றவர்கள், செங்கல் சூளைகளில் தினசரி கூலி சம்பாதிக்க குடும்பத்தின் கூட்டு உழைப்பை அடகு வைக்கிறார்கள். அங்கு அவர்கள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சூடான செங்கற்களைத் தலையில் சுமக்கிறார்கள்.
உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், செங்கல் சூளைகளில் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்து, அவர்களின் மொத்த ஊதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துகிறார்கள். போசிந்தின் குடும்பத்திற்கு அவர்களது வீட்டைக் கட்டுவதற்குப் பணம் தேவைப்பட்டதால், வேலைக்குச் சேர்ந்தனர்.
பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டது என்றும் ஆனால் அதை முடிக்க அனுமதிக்கப்பட்ட 1.3 லட்சம் ரூபாய் போதுமானதாக இல்லை என்றும் தாஸ்மு கூறுகிறார். குடும்பம் தங்களின் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை ஊதியமாக ஜூன் 2020 வரை பெற்ற ரூ. 19,752-ஐ சேமித்து வைத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. "நாங்கள் கடன் வாங்கினோம். அதைத் திருப்பிச் செலுத்த, ஒப்பந்ததாரரிடம் பணம் வாங்கினோம்," என்று அவர் கூறுகிறார்.
இது 2021ம் ஆண்டில் குடும்பம் வாங்கிய முதல் கடன் அல்ல. துல்சாவின் கடினமான கர்ப்பம் அவருக்கு உடல்நலத்தைக் குன்றச் செய்தது. மேலும் விராஜ் முன்கூட்டியே பிறந்தார். பிறந்த முதல் மூன்று மாதங்களில், தாயும் குழந்தையும் நுவாபாடாவில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பல்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
"நாங்கள் எங்களின் ஒன்றரை ஏக்கர் நிலத்தை 35,000 ரூபாய்க்கு அடகு வைத்தோம். துல்சா தனது சுய உதவிக் குழு மூலம் மருத்துவச் செலவுக்காக 30,000 ரூபாய் வங்கிக் கடனாகப் பெற்றுள்ளார்," என்கிறார் தாஸ்மு. கடனை அடைப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த குடும்பம் ஒப்பந்ததாரரிடம் முன்பணத்தை பெற்றுக்கொண்டு தெலுங்கானாவுக்கு சென்றது.
ஒடிசாவின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்று நுவாபாடா. இங்கிருந்தும் மாநிலத்தின் பிற தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் ஆந்திரா, சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வேலை செய்வதற்காக இடம்பெயர்கின்றனர் என்கிறது இடப்பெயர்வுகள் குறித்த 2020 ஆய்வு . ஒடிசாவில் இருந்து சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் இடம்பெயர்கின்றனர் என்றும் அவர்களில் இரண்டு லட்சம் பேர் போலங்கிர், நுவாபாடா, கலஹண்டி, பௌத், சோனேபூர் மற்றும் பர்கர் மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள் என்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டத் தரவுகளை மேற்கோள் காட்டி ஆய்வு கூறுகிறது.
சம்பல்பூர் நகரத்தைத் தளமாகக் கொண்ட ஒடிசாவின் நீராதார தன்னார்வ அமைப்பு ஒன்றின் நிறுவனரான ரஞ்சன் பாண்டா, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். "இந்தப் பகுதி மக்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பலக் காரணிகளால் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக காலநிலை மாற்றத்தால் பல ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் அவர்களுக்கு நேர்கிறது," என்று அவர் கூறுகிறார். "இயற்கை வளங்களின் தொடர்ச்சியாக சீரழிந்து கொண்டிருக்கிறது. உள்ளூர் வேலைவாய்ப்பு திட்டங்களின் தோல்வி அடைந்துவிட்டன."
*****
"நீங்கள் அவளைப் பார்த்திருக்கலாம். அவள் அழகாக இருந்தாள்” என்று திரௌபதி தன் பேத்தியைப் பற்றிக் கண்ணீருடன் கூறினார்.
இறப்பதற்கு முன், மாநிலத்தில் (பிப்ரவரி 16 முதல் 24 வரை நடைபெற்ற) 2022 பஞ்சாயத்துத் தேர்தலுக்காக, அரடா கிராமப் பஞ்சாயத்தில் கிராமம் கிராமமாகச் சென்று துல்சா பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமமான சனடமால், அரடா பஞ்சாயத்தில் உள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட்டார். இப்பகுதி பழங்குடியினப் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் கிராமத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஒரே பழங்குடிப் பெண் துல்சாதான். அவர் ஒரு சுய உதவிக் குழுவிற்கும் தலைவராக இருந்தார். "எங்கள் உறவினர்கள் அவளை போட்டியிட ஊக்குவித்தனர்," என்று தஸ்மு கூறுகிறார்.
தேர்தலில் நிற்க வேண்டாமென துல்சாவுக்கு திரௌபதி அறிவுறுத்தினார். "ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவள் உடல்நிலை சரியானது. அதனால் நான் எதிர்த்தேன்," என்று துன்பப்பட்ட பாட்டி கூறினார். "அதன் காரணமாக அவள் இறந்தாள்."
தேர்தல்களிலும் இடப்பெயர்வு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று காரியார் தொகுதியின் பார்கோன் கிராம பஞ்சாயத்தில் ஊர்த்தலைவர் பதவிக்கு நின்ற சஞ்சய் திவாரி கூறினார். குறிப்பாக ஏழைப் பிரிவினரின் வாக்காளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார் அவர். நுவாபாடா மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வாக்களிக்க முடியவில்லை. 300 பேர் பார்கானைச் சேர்ந்தவர்கள் என்று மதிப்பிட்டார் அவர்.
"தேர்தல்கள் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன என்று நாம் கூறுகிறோம். ஆனால் தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்ய கூட வீட்டுக்கு அனுமதிக்கப்படாத போசிந்து மற்றும் அவரது தாயார் போன்ற புலம்பெயர்ந்தோருக்கு, தேர்தல்கள் ஒன்றுமில்லை" என்று திவாரி கூறினார்.
போசிந்தின் அண்டை வீட்டாரான சுபாஷ் பெஹெரா, மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை குறைத்த கோவிட்-19 பொது முடக்கமே அவரை இடம்பெயரத் தூண்டியது என்று நம்புகிறார். "வேலை வாய்ப்புகள் இங்கு கிடைத்திருந்தால் தேர்தலில் போட்டியிட மனைவியை தனியாக விட்டுவிட்டு சூளைக்குச் சென்றிருக்க மாட்டார்" என்று அவர் கூறுகிறார்.
“எங்கே போனாய் கண்ணே? ஏன் எங்களை விட்டுச் சென்றாய்?”
துல்சாவைப் பற்றிய திரௌபதியின் வார்த்தைகள் பெரிய சமூகத்தினரை நோக்கி எழுப்பப்படுகிறது.
*****
பின்குறிப்பு: துல்சா இறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, பத்திரிகையாளர் அஜித் பாண்டா குடும்பத்தின் நிலைமையைப் பற்றி ட்வீட் செய்தார். ஒடிசாவின் முதல்வர், நுவாபாடா மாவட்ட ஆட்சியர் மற்றும் ராமகுண்டம் போலீஸ் கமிஷனர் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டிருந்தார். போசிந்து, அவரது தாயார் மற்றும் தீபாஞ்சலி ஆகியோரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கண்டறிந்தனர். செங்கல் சூளை உரிமையாளரிடம் அவர்களை சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூருக்கு அனுப்புமாறு கூறப்பட்டது. மற்ற இருவரும் திரும்பி வருவதை உறுதிசெய்ய தீபாஞ்சலி அங்கேயே இருக்க வேண்டும் என்று சூளை உரிமையாளர் வலியுறுத்தினார். ஆனால் அவர் இறுதியாக அதிகாரத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அவர்களை வெளியேற அனுமதித்தார்.
துல்சாவின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அவர்களின் ஒப்பந்ததாரரால் ராய்ப்பூரில் இருந்து அழைத்து வரப்பட்டனர். சனாடமாலில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள காந்தபாஞ்சி ரயில் நிலையத்திற்கு ரயிலில் அழைத்து வரப்பட்டனர். முன்பணமாகச் செலுத்திய பணத்தைத் திரும்பச் செலுத்த, அதே செங்கல் சூளையில் வேலைக்குச் செல்வதாக ஒப்புக்கொண்டு, ரயில்வே ஸ்டேஷனில் ஒரு வெற்றுத் தாளில் கையெழுத்துப் போடச் சொன்னதாக தாஸ்மு கூறுகிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்