தனது வாக்காளர் அடையாள அட்டை எனப்படும் வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு, “எனது விரல்களால் ஓட்டு போட முடியும் என்றால், அவை ஏன் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவானதாக இல்லை?“ என்று 51 வயதான பார்வதி தேவி கேட்கிறார். அவர் 1995ம் ஆண்டு முதல் இந்த அடையாள அட்டை முலம் வாக்களித்து வருகிறார்.
பார்வதியின் விரல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் 2016 – 17ன் அறிக்கைப்படி , இந்நோய் 86 ஆயிரம் இந்தியர்களை பாதித்துள்ளது. இவை பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல் மட்டும்தான். அதற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும், தொழுநோய் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகம் முழுவதிலும் கண்டறியப்படும் நபர்களில் 5ல் மூன்றுக்கு மேற்பட்டோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள்.
மாநில அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500ஐ பெறுவதற்கு தடையாக இருக்கும் பூட்டுகளை திறக்கும் முக்கியமான சாவியான ஆதார் அட்டை பெறும் அவரின் முயற்சிகளுக்கு அந்த நோய் தடையாக உள்ளது.
“என்னிடம் ஆதார் அடையாள அட்டை இருந்தால், என்னால் உதவித்தொகை பெற முடியும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது மகன் என்னிடம் கூறினார். அப்போது முதல் நான் ஆதார் அட்டை பெறுவதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வருகிறேன். ஆனால், சரியான விரல்கள் இல்லாமல் என்னால் அதைப் பெற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்“ என்று அவர் கூறுகிறார்.
'ஆனால், எந்த தவறும் செய்யாமலேயே ஆண்டவன் கைகளைப் பறித்துக் கொண்டஎன் போன்றோருக்கு ஏன் ஆதார் அட்டை வழங்கப்படுதில்லை? எங்களுக்குத்தானே அதன் தேவை அதிகம் உள்ளது?' என்று அவர் ஆச்சர்யமாக கேட்கிறார்
ஆதார் அட்டைக்கான பார்வதிதேவியின் போராட்டம் அவரை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச்சென்றது. தனி அடையாள ஆணையம் இந்தியாவில் 2009ம் ஆண்டு தொடங்கிய திட்டத்தின் 12 இலக்க எண் பல்வேறு சேவைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மாயாவதி காலனி என்பது லக்னோவின் சின்ஹாட் வட்டத்தில் உள்ள குடிசைப்பகுதி. அங்குதான் பார்வதி வசிக்கிறார். ”என்னால் அந்த இயந்திரத்திற்குள் எனது கையை வைக்க முடியாது என்று கூறப்பட்டது. (விரல் ரேகைகளை பதிவு செய்யும் இயந்திரம்). நான் எனது வாக்காளர் அடையாள அட்டையை எனது அடையாளத்தை நிருபிப்பதற்காக எடுத்துச்சென்றேன். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நான் அதே நபராக உள்ளபோது, ஏன் அதை அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை?“ என்று அவர் கேட்கிறார்.
ஜெக்தீஷ் மகாடோவை திருமணம் செய்துகொண்டு 30 ஆண்டுகளுக்கு முன்னர், பிகார் மாநில முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாரைத்தா உதய்நகர் என்ற கிராமத்திலிருந்து பார்வதி லக்னோவிற்கு இடம்பெயர்ந்தார். அப்போது முதல் அவர் நகரில் உள்ள குப்பைகள் சேகரிப்பது, பிளாஸ்டிக், இரும்பு, பேப்பர், கண்ணாடி ஆகியவற்றை குப்பையிலிருந்து பிரிப்பது போன்ற தொழிலை செய்துவருகிறார். முறையே 11 முதல் 27 வயதுடைய அவரின் 6 குழந்தைகள் பிறந்தபோதும், குழந்தைப்பெற்ற சில நாட்களில் மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து நாட்களிலும் வேலை செய்தார். குப்பைகளை, குப்பைப் பொருட்களை வாங்குபவர்களிடம் விற்பதன் மூலம் தினமும் ரூ.50 முதல் ரூ.100 வரை சம்பாதித்தார். அவர் தனது வேலையை காலை 4 மணிக்கு துவங்கி, இரவு 11 மணி வரை செய்கிறார். இரவு 11 மணிக்குதான், தனது வீட்டு வேலைகளை முடிக்கிறார்.
தற்போது சில நாட்களாக தனது வீட்டின் வெளிப்புறம் அமைந்துள்ள அறையில் மரக்கட்டிலில் அமர்ந்துள்ளார். திரைச்சீலைக்கு பின்னால் இந்த உலகம் இயங்குவதை பார்த்துக்கொண்டிருக்கிறார். சில நாட்கள் அவர் பயனற்றவராக உணர்கிறார். சில நேரங்களில் குப்பை சேகரிப்பதற்கும் துணிச்சலுடன் சென்றுவிடுகிறார்.
“ஒரே ஆளாக வீட்டின் அத்தனை வேலைகளையும் செய்திருக்கிறேன். தற்போது என்னால், நியாய விலை கடை பொருட்களை கூட எடுத்துவர முடிவதில்லை“ என்று அவர் கூறுகிறார். பார்வதியிடம் அந்தியோதயா அட்டை உள்ளது. அதில் அவரது குடும்பத்திற்கு 35 கிலோ தானியங்கள் (20 கிலோ கோதுமை மற்றும் 15 கிலோ அரிசி) மானிய விலையில் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை கிடைக்காததால் அவரால் பொது விநியோக திட்டத்தின் மூலம் உணவு தானியங்கள் பெறமுடியாது.
“நான் இங்கு வந்ததில் இருந்து எனக்கு பார்வதியை தெரியும். ஆனால், விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவேண்டும்“ என்று பார்வதியின் பக்கத்துவீட்டுக்காரரும் காய்கறி வியாபாரியுமான சுர்ஜி சாஹ்னியின் ரேகையைப் பொருந்தி போக வைக்கப் போராடிக் கொண்டிருக்கும் ரேஷன் கடை உரிமையாளர் பூல்சந்த் பிரசாத் நம்மிடம் கூறுகிறார். “நாங்கள் இந்த இயந்திரங்கள் சொல்வதைத்தான் கேட்கவேண்டும்“ என்று தோள்களை குலுக்குகிறார். சுர்ஜி ஒரு பெட்டியில் உள்ள பல எண்களை அழுத்துகிறார். அது பொருந்திப் போனதற்கு அறிகுறியாக பீப் என்ற ஒலியை எழுப்புகிறது. (நீண்ட நாட்களாக காய்கறிகள் உரித்து விரல் ரேகைகள் தேய்ந்துவிட்டதால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது).
யாருடைய விரல் ரேகைகளை நன்றாகப் பதிவு செய்ய முடியுமோ அந்த குடும்ப உறுப்பினருடன் சென்றால் மட்டுமே பார்வதியால் ரேஷன் பொருட்களை பெறமுடியும். அவர் ரேஷன் கடைகளுக்கு செல்வது கடினமான ஒன்று. பார்வதியின் இரு மகள்கள் திருமணம் முடிந்து மும்பையில் வசிக்கிறார்கள். இரு மகன்கள் அவர் வீட்டிற்கும், அவரது சகோதரிகள் வீட்டிற்கும் மாறிமாறி சென்று வந்துகொண்டு இருப்பார்கள். அவரது கணவர் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். அவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. அவருக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதில் வழக்கமாக ஒருநாள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நிற்பதில் சென்றுவிடும். மற்றொரு மகன் ராம்குமாரும் (20) குப்பை சேகரிப்பவராக உள்ளார். விடுபட்ட வேலைகளை செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுவார். 11 வயதான கடைசிப் பையன். முரணாக அவரது பெயர் ராம் ஆதார். தனது தனியார் பள்ளிப் படிப்பை மாதம் ரூ.700 செலுத்த முடியாததால், பாதியில் நிறுத்திவிட்டார். அவரும் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். அது வரவேண்டியுள்ளது.
“இந்த ஆதார் அடையாள அட்டை நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால், எங்கள் தவறு ஏதுமின்றி கடவுள் கரங்களைப் பறித்த பிறகும் வாழும் எங்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை? எங்களுக்குத்தானே அது அதிக தேவையாக உள்ளது?“ என்று பார்வதி அலுத்துக்கொள்கிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.