கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் வியாபாரம் செய்யத் தொடங்கியபோது அவருக்கு வயது 17. அவரிடம் இருந்ததெல்லாம் ரூ. 1,800 மட்டும்தான். அவரது தாயார் தொழில் தொடங்க அவருக்குக் கொடுத்தத் தொகை அது. இன்று, 62 வயது வேணி, துறைமுகத்தில் வெற்றிகரமான ஏலதாரராகவும் விற்பனையாளராகவும் உள்ளார். மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டைப் போலவே, தனது தொழிலையும் "படிப்படியாக" கட்டியெழுப்பியுள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் விட்டு பிரிந்த பிறகு, நான்கு குழந்தைகளை வேணி தனியாக வளர்த்தார். அவரது தினசரி வருமானம் குறைவாக இருந்தது. வாழ்க்கை ஓட்ட போதுமானதாக இல்லை. சுழல் வலை மீன்பிடித்தல் அறிமுகமானதும், அவர் படகுகளில் முதலீடு செய்தார். பல லட்சங்களில் கடன் வாங்கினார். முதலீட்டில் கிடைத்த வருமானம் அவரது குழந்தைகள் கல்வி பயிலவும், வீடு கட்டவும் உதவியது.
1990களின் பிற்பகுதியில் இருந்து கடலூர் கடற்கரையில் சுழல் வலை மீன்பிடிப்பு பிரபலமடைந்தது. 2004 சுனாமிக்குப் பிறகு அதன் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் நெத்திலி போன்ற மீன் கூட்டங்களை வளைத்துப் பிடிக்கும் நுட்பத்தை சுழல் வலைகள் பயன்படுத்துகிறது.
பெரிய முதலீடுகளின் அவசியமும் உழைப்புக்கான தேவையும் சிறிய அளவிலான மீனவர்களை பங்குதாரர் குழுக்களாக்கி, செலவுகள் மற்றும் வருமானம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள வைக்கின்றன. வேணியும் இந்த வகையில்தான் முதலீட்டாளராகி தன் தொழிலை வளர்த்துக்கொண்டார். பெண்கள் ஏலதாரர்களாகவும் விற்பனையாளர்களாகவும் மீன் உலர்த்துபவர்களாகவும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை சுழல் வலைப் படகுகள் உருவாக்கிக் கொடுத்தன. "சுழல் வலையால்தான் சமூகத்தில் என் அந்தஸ்து வளர்ந்தது" என்கிறார் வேணி. "நான் ஒரு தைரியமான பெண்ணானேன். அதனால் நான் மேலே வந்தேன்."
படகுகள் ஆண்களுக்கான பிரத்யேக இடங்களாக இருந்தாலும், அவை துறைமுகத்தை அடைந்தவுடன், மீன்களை ஏலம் விடுவது முதல் மீன்களை விற்பனை செய்வது வரை, மீன்களை வெட்டி உலர்த்துவது முதல் கழிவுகளை அகற்றுவது, ஐஸ் விற்பது, தேநீர் மற்றும் உணவுகள் வரை பெண்களே பொறுப்பெடுத்துச் செய்கிறார்கள் . மீனவப் பெண்கள் பொதுவாக மீன் விற்பனையாளர்களாக வகைப்படுத்தப்பட்டாலும், சம எண்ணிக்கையிலான பெண்கள் மீன் கையாளும் பணியை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் விற்பனையாளர்களுடன் கூட்டாக வேலை செய்கிறார்கள். ஆனால் மீன்பிடித் துறையில் பெண்களின் பங்களிப்புக்கான மதிப்பும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் பன்முகத்தன்மையும் சிறு அங்கீகாரமே பெறுகின்றன.