”இது எங்களின் திருவிழா. 10 நாட்களுக்கு வித்தியாசமான வாழ்வை நாங்கள் வாழ்வோம். சிலநாட்களாக மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டிய நிலையில்லாமல் இருந்தேன். அதைவிட்டு நான் வெளிவரவும் விரும்பவில்லை” என்றார் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நான் சந்தித்த 26 வயது திருநங்கை ஜெயமாலா. தமிழ் நாட்காட்டியின்படி, சித்திரை மாதத்தில் 18 நாட்களுக்கு நடக்கும் வருடாந்திர கூவாகம் திருவிழாவுக்காக வந்திருந்தார் ஜெயமாலா.
அழகிப்போட்டி, இசை, நடனம் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் கூவாகம் நோக்கித் திரள்கிறார்கள் மாற்றுப்பாலினத்தவர்கள். இறைவன் அரவானை திருமணம் செய்துகொள்வதற்காக பலரும் வருகிறார்கள். மகாபாரதத்திலிருந்து சொல்லப்படும் ஒரு கதையில் இருப்பதைப்போலவே பக்தர்களால் கூத்தாண்டவர் என அழைக்கப்படும் அரவானை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு கோவிலுக்குள்ளே நடக்கிறது.
அரவானைப் பற்றிய கதை இப்படியாக இருக்கிறது: போரில் கெளரவர்களை எதிர்த்து பாண்டவர்கள் வெல்லவேண்டும் என்பதற்காக, அர்ஜுனனும் உலுப்பி அரசி நாகாவும் தங்களுக்கு பிறந்த மகனான அரவானை காளிதேவிக்கு பலி கொடுக்க சம்மதிக்கிறார்கள். அரவானுக்கு திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்பதே கடைசி ஆசையாக இருக்கிறது. திருமணத்திற்கு அடுத்த நாள் காலையில் அவர் பலிகொடுக்கப்படுவார் என்பதை அறிந்து, அவரை மணக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. கிருஷ்ணனே மோகினி அவதாரம் தரித்து அரவானை மணந்து கொள்கிறார்.
கூவாகம் திருவிழாவின்போது திருமணம் புரிந்து, பலி கொடுத்து, விதவைக்கோலம் பூணும் சடங்குகளைச் செய்கிறார்கள் திருநங்கைகள். நான் சென்று சேர்ந்தபோதே திருமண நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு திருநங்கைக்கும் திருமணச் சடங்கை நடத்திவைத்துக் கொண்டிருந்தார் கோவில் பூசாரி. கோவிலுக்கு வெளியே மலர் மாலைகளையும், தாலியையும், வளையல்களும் அணிந்து திருநங்கைகள் நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.
பெங்களூருவிலிருந்து வந்திருந்த திருநங்கைகள் குழுவைச் சந்தித்தேன். அந்தக் குழுத் தலைவி ப்ரஜ்வாலா, “12 வருடங்களாக நான் இங்கு வந்து கொண்டிருக்கிறேன். இந்த சமூகத்தில் நாங்கள் வாழ்வதே கடினமான விஷயம்தான். ஆனால், என்றாவது ஒரு நாள் எங்களையும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை இந்த இடத்திற்கு வரும்போதெல்லாம் எனக்கு கிடைக்கிறது. இறைவனுக்கு மனைவியாவதை எங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக நினைக்கிறோம்” என்றார்.
இந்த திருவிழா கொண்டாட்டப்பூர்வமாக இருந்தாலும் இதற்கு கருப்புப் பக்கங்களும் இருக்கின்றன. திருவிழாக் கூட்டத்தில் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளையும், காவல்துறையினர் அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டுவதையும் குறித்து பேசினர். 37 வயதான திருநங்கை ஐவி, ”இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இங்கு வருகிறோம். இனியும் இங்கு வருவோம்” என்று சொல்லியபடியே கூட்டத்தில் சென்று மறைந்துவிட்டார். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், ஒவ்வொருமுறையும் அவரை இங்கு வரவழைப்பது எது என கேட்க விரும்பினேன். ஆனால், பதில் ஏற்கனவே தெரிந்ததுதான். இது அவர்களுக்கான திருவிழா. இங்குதான் அவர்கள் அவர்களாகவே இருப்பதற்காக வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த கட்டுரையின் முந்தைய வடிவம் புகைப்பட கலைஞரின் வலைதளத்தில் வெளியாகியிருந்தது.