செப்டம்பர் 19, 2017ஆம் ஆண்டு, அம்தி கிராமத்தில் தனது முதலாளியின் பருத்திக் காட்டில் மயங்கி விழுந்தார் 40 வயது விவசாயக் கூலியான பண்டு சோனுலே. பல நிலங்களில் பல நாட்களாக பணிபுரிந்ததைப் போலவே கொளுத்திய வெயிலில் பருத்திச் செடிகளின் மீது பூச்சிக்கொல்லிகளைதான் அன்றும் அவர் அடித்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பருத்திக் காட்டிலேயே ஓய்வெடுத்த அவரை யாவத்மால் மாவட்டத்தில் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அவரது வீடு அமைந்திருக்கும் சொந்த கிராமமான மணோலிக்கு அவரது முதலாளி கொண்டு வந்து விட்டுச் சென்றார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது உடல்நிலை தேறாமல் இருந்ததால் யாவத்மால் நகரிலிருந்து 45 கிலோமீட்டர் தள்ளி அமைந்திருக்கும் கதஞ்சி துணை மாவட்ட மருத்துவமனைக்கு, ஆட்டோ ரிக்ஷாவில் அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது மனைவி கீதா. வயிற்று வலி, மயக்கம், சோர்வு போன்ற அறிகுறிகளெல்லாம் இருப்பதாக மருத்துவமனையிலிருந்த மருத்துவரிடம் தெரிவித்தார் பண்டு. இரண்டாவது நாளில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. கண் பார்வை தெரியவில்லை என சொல்லியதும் யாவத்மாலில் உள்ள வசந்த்ராவ் நாயக் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அவரது நிலை மோசமடைந்தது.
செப்டம்பர் 23ம் தேதி - ஒரு வாரத்திற்கு முன்புவரை, பகலிரவு பாராமல் சுற்றிச் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த பண்டு - யாவத்மால் மருத்துவமனையின் ஐசியு வார்டில் கோமாவுக்குச் சென்றார். அடுத்த நாள் காலையில் அவர் உயிரிழந்தார்.
"அவர் பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதில்தான் மும்முரமாக இருப்பார்" என்கிறார் பண்டுவின் மனைவி. தனது இரண்டு பிள்ளைகளான செளரப் (17) மற்றும் பூஜா (14) ஆகியோருடன் தன் குடிசையில் அமர்ந்து பேசிய அவர், "ஒருநாள் கூட ஓய்வெடுக்கவில்லை. தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தார்" என்கிறார். குடிசைக்கு முன்பாக வேயப்பட்டிருந்த ஓலைகளின் ஓரத்தில், பண்டு பயன்படுத்திய மோட்டாரால் இயக்கப்படும் பூச்சிக்கொல்லி தெளிக்கும் பம்பு சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.
அக்டோபர் 2017ல் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோதும், கீதா அதிர்ச்சியில்தான் இருந்தார். பண்டு எந்த பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்தார் என்பதும், எது அவரைக் கொன்றது என்பதும் அவருக்குத் தெரியவில்லை. 2017ல், பருத்திச் செடிகளின் மீதான மிக அதிகமான பூச்சித் தாக்குதலைத் தடுப்பதற்காக பருத்தி முதலாளிகள் நினைத்ததால், அந்த வாய்ப்பை பண்டு பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் என்றார் கீதா. சொற்ப கூடுதல் வருமானத்திற்காக பண்டு எடுத்த முயற்சியால் அவரது வாழ்வையே இழந்துவிட்டார்.
பண்டுவின் நண்பர் நாராயண் கோட்ரங்கே. "சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் பண்டு காப்பாற்றப்பட்டிருக்கலாம்" என்றார். நாராயண் கோட்ரங்கேவும் மணோலியில் இருக்கும் இன்னொரு விவசாயியிடம் 10 ஏக்கர் நிலத்தை ஒத்திகைக்கு வாங்கி உழுது கொண்டிருக்கும் நிலமற்ற விவசாயிதான். மருத்துவரை பார்க்காமல் கொஞ்சம் பொறுப்போம் என காத்திருந்த குடும்பம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைத் தாமதம் ஆகிய விஷயங்கள் பண்டுவின் உயிரையும், மற்ற சிலரின் உயிரையும் போக்கியிருக்கிறது. அதிகமான பூச்சிக்கொல்லி மருத்துகளை அடித்துக்கொண்டிருக்கும்போது விஷ வேதியல் கலவையை விபத்தாக சுவாசித்த அனைவருமே கூலியாட்களும், விவசாயிகளும்தான். விரைவாக மருத்துவமனைக்கு வந்து சரியான மருந்துகளை உட்கொண்டவர்கள் உயிர் பிழைத்தார்கள்.
கண்காணிப்பற்ற, வசதிகளற்ற மருத்துவமனைகள்
ஜூலை - நவம்பர் 2017ல் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட அந்தக் காலத்தில், பண்டுவைப் போலவே உடல்நலன் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ரத்தத்தில் கலந்திருந்த ஆர்கனோ பாஸ்பேட் கூறுகளை கண்டறிவதற்கான முக்கியமான கொலைன்ஸ்டெரேஸ் சோதனையைச் செய்வதற்கான வசதிகள் யாவத்மால் மருத்துவமனையில் இருந்திருந்தால், அந்த அரசு மருத்துவமனையில் இருந்த சில உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். சோதனை செய்யப்படாமல், இவ்விஷத்திற்கான மாற்றும் கொடுக்கப்படாமல், பல வாரங்களுக்கு விவசாயிகளுக்கும், கூலியாட்களுக்கும் அறிகுறிகளை மட்டும் வைத்தே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வந்ததாக ஐசியுவில் இருந்த அரசு மருத்துவர் ஒருவர் கூறினார். முக்கியமான ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்படவேயில்லை.
சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை, இத்தகைய குறைகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. விதர்பாவின் சில பகுதிகள் மற்றும் யாவத்மாலில் நடந்த பூச்சிக்கொல்லி தொடர்புடைய உடல்நலக் கோளாறு மற்றும் மரணங்களைக் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது மாநில அரசு. அக்டோபர் 10, 2017ல் இக்குழு அமைக்கப்பட்டு, அமராவது பிரிவு கமிஷனர் பியுஷ் சிங் அதற்குத் தலைமை தாங்கினார். சிறப்பு விசாரணைக் குழுவில், நாக்பூர் மத்திய பருத்தி ஆய்வகத்தின் இயக்குநர் விஜய் வாக்மரேவும், ஃபரிதாபாத், பயிர் காப்பு இயக்ககத்தின் கிஷன் தேஷ்கரும் இருந்தனர்.டிசம்பர் 2017ல் மராத்தியில் சமர்பிக்கப்பட்டது, சிறப்பு விசாரணைக் குழுவின் அந்த அறிக்கை . ஆனால், சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டருமான ஜம்மு ஆனந்த் தொடுத்த பொதுநல வழக்கு விசாரிக்கப்பட்ட பிறகு ஜனவரி 2018ல், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட்ட பின்புதான் பொதுவில் வைக்கப்பட்டது.
மார்ச் 6, 2017ல் நடந்த பூச்சிக்கொல்லி விஷ மரணங்கள் மட்டுமே அசாதாரணமானவை அல்ல என்றும், கடந்த 4 வருடங்களாகவே மஹாராஷ்ட்ராவில் 272 மரணங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், லோக் சபாவில் விவசாயத்துறை அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனைத் தரவுகளின்படியும், நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்த மருத்துவர்களின் தகவல் படியும், யாவத்மாலில் அத்தகைய மரணங்கள் நிகழ்ந்ததில்லை. பார்வைக் குறைபாடு, வாந்தி, மயக்கம், நரம்புத் தளர்ச்சி, அரைப் பக்கவாதம், பதற்றம் போன்ற போன்ற மோசமான விளைவுகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் நோயாளிகள் வரவில்லை என்பது அவர்களின் தரப்பு. 50 பேர் இறந்திருக்கிறார்கள், `1000 பேர் உடல் நலிவுற்றிருக்கிறார்கள், சிலர் மாதக் கணக்காக உடல்நலிவுற்றிருக்கிறார்கள். (பார்க்க: மரண விஷபூச்சிகள், மரணம் விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் யாவத்மாலின் பயமும் விஷத்தெளிப்பும் )
சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்ததன் மூலம் இது எவ்வளவு தீவிரமான, அசாதாரணமான விஷயம் என்பதை மாநில அரசு உணர்த்தியிருக்கிறது.பிரச்சனைகளின் தீவிரத்தையும், அளவையும் மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு விளக்கவில்லை என்பதை அறிந்து சொல்லியிருக்கிறது சிறப்பு விசாரணைக் குழு. பூச்சிக்கொல்லி சட்டம் 1968ன் படி உள்துறை கமிட்டி அமைக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையும் இது செயல்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பது மாநில அரசின் கடமையுமாகிறது. பூச்சிக்கொல்லிகளுக்கு ஏற்ற மாற்றுகள் விற்கப்படுகிறதா என்பதை அறிவதும், விவசாயிகள், பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை இந்த கண்காணிப்புக் குழு தொடர்கிறதா என்பதை அறிவதும் முக்கியமானதாகும். யாவத்மாலில் அத்தகைய கண்காணிப்புக் குழுவோ, குழுவை மேற்பார்வையிடும் அமைப்போ இல்லை.
சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையில், கோலினிஸ்டெரேஸ் சோதனையை செய்வதற்கான வசதிகள் இருக்க வேண்டுமெனவும், ஆர்கனோபாஸ்பேட் விஷத்திற்கான மருந்துகள் இருக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. பருத்தி, சோயாபீன் மற்றும் விதர்பாவின் மற்ற பயிர்களுக்கான பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் அளவுக்கு மீறிய வேதியல் கலவை குறித்த சிக்கலையும் இது கேள்வியெழுப்புகிறது.அமராவதியிலுள்ள அரசு மருத்துவமனையும், மேற்கு விதர்பாவின் மாவட்ட தலைநகரும் 2017 பிரச்சனையை சமாளித்து, அதிலிருந்து கோலினெஸ்டெரேஸ் சோதனையை செய்யத் தொடங்கினார்கள். அசிடைல் கொலைன் என்னும் நியூரோட்ரான்ஸ்மிட்டரை சரியாக செயற்பட உதவுவதுதான் கோலினெஸ்டெரேஸ். ஆர்கனோபாஸ்பேட் விஷத்தன்மை என்பது கோலினெஸ்டெரேசை முடக்கி, முக்கிய உறுப்புகளை இயங்காமல் செய்து, நரம்பு மண்டலத்தை முடக்கி மரணத்தை ஏற்படுத்தும். அமராவதி மருத்துவமனையில் அதற்கு எதிரான மாற்றுகள் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்திருக்கிறது.
யாவத்மாலின் இரு டெசில் தலைநகரங்களிலும், அதாவது வனி மற்றும் புசாதின் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படவேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்திருக்கிறது. யாவத்மால் அரசு மருத்துவமனையின் 30 படுக்கை கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவுடன், அகோலா மாவட்ட அரசு மருத்துவமனையிலும், அமராவது மருத்துவமனையைப் போலவே பூச்சிக்கொல்லி விஷம் தொடர்புடைய அவசர நிலையில் கையாள்வதற்காக பரிந்துரைக்கப்பட்டது.
அம்மாவட்டத்தின் தொடர்ச்சியான விஷ மரணங்களை கணக்கில் கொண்டு, யாவத்மால் அரசு மருத்துவமனையில், டாக்ஸிகாலகி ஆய்வகம் தொடங்க பரிந்துரைக்கப்பட்டது. 2017 சம்பவத்தின்போது, சுகாதார அலுவலர்கள் ரத்த மாதிரிகளை விரைந்து டாக்ஸிகாலகி பரிசோதனைகளுக்கு அனுப்பவில்லை. விஷ மரணங்கள் தொடர்பான விஷயத்தின் மோசமான மேலாண்மையில் இது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மோனோக்டோஃபோக்களை தடை செய்யவேண்டும். மாற்று மருந்துகளை தயார்நிலையில் வைக்கவேண்டும்.
மோனோக்ரோடோஃபோக்களின் மீது முழுமையான தடையைக் கோரியிருக்கிறது சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை. மனிதர்கள் மற்றும் பறவைகள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், பயிர்களின் செயல்பாட்டைத் தடுத்தும் நிறுத்துகிறது. பல நாடுகளில், மோனோக்ரோடோஃபோக்கள் தடைசெய்யப்பட்டுவிட்டன.
மஹாராஷ்ட்ர அரசு, இதன் விற்பனைக்கு 60 நாட்களுக்கான தடையை விதித்தது. முழுத்தடை அறிவிக்கப்படவில்லை. பூச்சிக்கொல்லி சட்டத்தைப் பொறுத்தவரை, மொத்தமாக மோனோக்ரோடோஃபோஸை தடை செய்வதற்கு மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது.
இத்தகைய பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் புதிய உரிமம் வழங்காமலும், உரிமத்தை புதுப்பிப்பதை ரத்து செய்தும் மாநில அரசு உத்தரவிடலாம். ஜனவரி 2018-ந் இறுதியில், 20 பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கு புதிய உரிமம் வழங்காமல் இருக்க முடிவெடுத்தது. சர்வதேச உணவு மற்றும் விவசாய நிறுவனம் கூறியிருப்பதைப் போல அபாயகரமானது என அறிவிக்கப்பட்ட மோனோக்ரோடோஃபோஸும் அதில் அடக்கம். கேரளாவும் இதைத் தடை செய்திருக்கிறது. சிக்கிம் எந்த வேதியியல் பூச்சிக்கொல்லி மருந்தையும் அனுமதிப்பதில்லை.
பூச்சிக்கொல்லிகளுக்கு தகுந்த மாற்றுகள் இல்லையென்றால் அதைப் பயன்படுத்த மாநில அரசு அனுமதிக்ககூடாது என்றும் சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது. செடி வளர்ப்பில் இத்தகைய வேதியியல் தெளிப்புகள் திடீரென அதிகமாகி இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கும் இக்குழு, நீண்ட நாள் நோக்கில் ஒரு விஞ்ஞான சோதனையை நடத்தி பூச்சிக்கொல்லிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
விவசாய விரிவாக்க அமைப்பின் முழு பிரிவுகளைக் குறித்து இந்த அறிக்கை குறிப்பிடவில்லை - விவசாயப் பல்கலைக்கழகங்களும், மாநில விவசாயத் துறையும் புதிய பூச்சிக்கொல்லி வரவுகளைப் பற்றியும், பூச்சிக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தைக் குறித்தும் எந்த தரவுகளும் வைத்துக்கொள்வதில்லை. முறைப்படுத்தினால்,இவர்கள் முக்கிய செயலாற்றக் கூடியவர்கள்.
இவர்களை நம்ப வேண்டிய விவசாயிகளோ, பூச்சிக்கொல்லி வரவுகளைக் குறித்து கடைக்காரரிடம், விற்பனையாளரிடம் தெரிந்துகொள்கிறார்கள். விற்பனைக்காக அவர்களும் ஆபத்தை விளக்காமல் விட்டுவிடுகிறார்கள். "புதிய பூச்சிக்கொல்லிகளில் கலக்கும் வீரியமான வேதியியல் பொருட்கள், விஷத்தன்மையையும், ஈரம் நிறைந்த சூழலில் மரணம் தரும் விஷத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது" என்று அறிக்கை கூறுகிறது.2017 பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் காலத்தின்போது, சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ், ஆர்கனோபாஸ்பேட்டுகள், ஜிப்பராலிக் அமிலம் போன்ற செடி வளர்ப்பு முறைப்படுத்துதல்கள் (அதிக வளர்ச்சிக்காக) இன்டோல் அசிடிக் அமிலம் (செடியின் உயரத்துக்காக) இன்டோல் பூட்டிரிக் அமிலம் (செடியின் வேர்களுக்காக) ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. ஹ்யூமிக் அமிலம் மற்றும் நைட்ரோபென்சீன் போன்ற அங்கீகரிக்கப்படாத வேதியியல் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஃபிப்ரோனில் மற்றும் இமிடாக்ளோப்ரிட் ப்ராண்டுகள், பூச்சிக்கொல்லிகள் இதுவரை பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்படவில்லை. உள்ளூர் சந்தைகளில் இப்படியான தயார் நிலை தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.
அங்கீகரிக்கப்படாத இந்த வேதியியல் பொருட்களை கண்காணிக்க ஒரு வழியுமில்லை. யாவத்மாலின் 16 தாலுக்காக்களில், ஒரே ஒரு தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் மட்டுமே இருக்கிறார். அவரின் பணியிடமும் கூட இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல்தான் இருந்திருக்கிறது. அறிக்கைக்குள் இன்னொரு விஷயமும் ஒளிந்திருக்கிறது. 2017ல் விதர்பா பருத்தி விளைச்சல் நிலங்களில் எதிர்பாராத, மோசமான செம்புழு தாக்குதல் நடந்திருக்கிறது.
குற்றம்சாட்டப்படும் விவசாயிகள்
விஷத்தன்மை தொடர்பான அசம்பாவிதங்களுக்கு விவசாயிகளையும், விவசாயக் கூலிகளையும் குற்றம்சாட்டும் அறிக்கை, அவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளையோ, நிலையான விதிமுறைகளையோ பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறது.
பருத்திச் செடிகள் நன்றாக வளரவேண்டும் என்ற நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள், வளர்ச்சிக்கான மருந்துகள், உரம் எல்லாவற்றையும் கலந்து தெளிப்பதாக கூறுகிறது அறிக்கை. ஈரப்பதம் அதிகம் நிறைந்த நேரங்களில், இத்தகைய விஷத்தன்மை வாய்ந்த வேதியியல் பொருட்களை சுவாசிக்கும்போது அசம்பாவிதங்களுக்கு ஆளாவதாகவும் குறிப்பிடுகிறது அறிக்கை.
பிப்ரவரி 6, 2018-இல், நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் வாக்மரே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்விடம் இரண்டாவது சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்குமாறு மனுவில் கோரியிருக்கிறார். இத்தகைய ஆபத்தை விளைவிக்கும் வேதியியல் தயாரிப்புகளை விற்கும் நிறுவனங்களும், இதை முறைப்படுத்தாத அரசும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்துவதற்கு இரண்டாவது சிறப்பு விசாரணைக் குழு செயலாற்ற வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது.