மகாராஷ்டிராவின் விவசாய தற்கொலையின் மையத்தில் உள்ள வாரா கவ்தா கிராமத்தில் உள்ள அபர்ணா மாலிகரின் வீடு, 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 8:27 மணி அளவில் சலசலத்துக் கொண்டிருந்தது.

ஏழு வயதாகும் ரோகினி மங்கலான விளக்கு பொருத்திய அறையில் பொறுமையின்றி நின்று கொண்டிருந்தார்: மூன்று நிமிடத்திற்கு எப்படி இவ்வளவு நேரம் ஆகும்? 8:30 மணிக்கு அவரது தாய் அபர்ணா பங்குபெறும், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது, அதை காண்பதற்கு பாதி கிராமமே அவர்களது மூன்று அறைகள் கொண்ட மண் வீட்டில் குவிந்திருந்தது, தொலைக்காட்சி இருக்கும் ஒரு சில வீடுகளில் இதுவும் ஒன்று. நிச்சயமாக நிகழ்ச்சியின் முடிவு என்ன என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும்: 27 வயதாகும் விவசாய கணவரை இழந்த பெண், இரண்டு பிள்ளைகளின் தாய் மற்றும் அவர் ஒரு பருத்தி விவசாயி என்பது அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. அதனால் தான் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கிராமம் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியின் சிறப்பு அத்தியாயமான, இரண்டாவது வாய்ப்பு என்ற அத்தியாயத்தில், நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிதாப் பச்சன் உடன் அமர்ந்து அபர்ணா விளையாடிய மகிமைமிக்க தருணத்தைக் காண அபர்ணாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறது.

தொலைக்காட்சியில் அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருக்கும் தனது தாத்தா அருண் டாதேவை, ரோகினி சத்தம் போடுகிறார். "சோனி அலைவரிசைக்கு மாற்றுங்கள்!" அவர் புன்னகையுடன் அதற்கு கட்டுப்படுகிறார். அமைதியின் வெளிப்பாடு, தூக்கத்தில் இருந்த அவரது 4 வயதாகும் தங்கை சம்ருதி மற்றும் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இருந்து தீங்கற்ற முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களின் தந்தை சஞ்சய், ஆகியோரின் முகத்தில் மட்டுமே காணப்பட்டது.

அபர்ணா மகிழ்ச்சியாக காணப்பட்டார். செப்டம்பர் 10-ஆம் தேதி நிகழ்ச்சியின் பதிவிற்கு பின்னர் அமிதாப்பச்சன் தனக்கு ஒரு தனிப்பட்ட பரிசாக காசோலை ஒன்றை அனுப்பினார் என்று அவர் கூறுகிறார். "அவர் எனக்கு 50,000 ரூபாய் அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்", என்று அபர்ணா கூறுகிறார். "ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கண்டதும் நான் ஆச்சரியப்பட்டேன். நான் வியப்பில் ஆழ்ந்தேவிட்டேன்", என்ற அபர்ணா கூறுகிறார்.

அந்நடிகர் தனது வலைப்பதிவில்:  "இந்த அற்புதமான நிகழ்ச்சியில் மனவலி கொண்ட இதயங்களுக்கு மத்தியில் நான் நேரம் செலவழித்த பிறகு சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லாமல் போய்விடும் என்று நான் அஞ்சுகிறேன்" என்று எழுதினார்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த 10 விவசாய விதைகளில் இருந்து அபர்ணாவை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி தேர்ந்தெடுத்தது. விவசாயிகள் இயக்கமான, விதர்பா ஜன அந்தோலன் சமிதியினைச் சேர்ந்த கிஷோர் திவாரி தான் அந்த பத்து பேரையும் பரிந்துரைத்தார்.

அவர்களின் குழு என்னை நேர்காணல் செய்ய இங்கே வந்தது; அவர்கள் பூர்த்தி செய்வதற்கு எனக்கு ஒரு கேள்வித்தாளை வழங்கினர் என்று நினைவு கூர்கிறார் அபர்ணா. திருமணமான எட்டு ஆண்டுகளில் தன் மகள் இவ்வாறு சிரிப்பதைத் தான் கண்டதில்லை என்று அவரது தாய் லீலாபாய் கிசுகிசுத்தார்.

திருமணத்தின் பொருள் வேலை, கடன்கள் மற்றும் சண்டைகள் என்பதே. அப்போது 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தான்போரி அருகில் சஞ்சய் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். அப்போது ரோகினிக்கு 4 வயது தான் ஆனது, அவளது தங்கைக்கோ ஒன்பது மாதமே ஆனது. "சமுதாயத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள", தான் இன்னும் தாலியை அணிந்து இருப்பதாக அபர்ணா கூறுகிறார்.

ஆனால் இப்போது உற்சாகமூட்டும் நேரம். மணி 8:30 ஆனது. அபர்ணாவுக்கு தனது வாழ்க்கையை வாழ இரண்டாவது வாய்ப்பு வழங்க நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி விரும்புகிறது என்று பச்சனின் குரல் பார்வையாளர்களுக்கு தெரிவித்தது.

எப்படி இருந்தாலும் முதலில் அமிதாப்பச்சன் கடந்த இரவிலிருந்து போட்டியில் பங்கேற்று வரும் பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமாரை முதலில் பார்க்க வேண்டும் அவர் "மிக அருமையாக" விளையாடிக் கொண்டிருக்கிறார். அபர்ணாவின் வீட்டில் நிறம்பி இருக்கும் அந்த தொலைக்காட்சி அறையில் உள்ள மக்களால் இனியும் காத்திருக்க இயலாது.

இரவு 8:45 மணி. அடக்கொடுமையே! விளக்குகள் அணைக்கப்பட்டன. "கரண்ட் போயிடுச்சு", என்று கூட்டத்தில் இருந்த குழந்தை ஒன்று கத்தியது. "அமைதியாக இரு. நீண்ட நேரம் ஆகாது", என்று பெரியவர் ஒருவர் அறிவுறுத்தினார். அவர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. 8:50 மணிக்கு மீண்டும் விளக்குகள் எரிந்தன. ஆனால் அப்போது இடைவேளை, விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. காத்திருப்போ நீண்டது.

PHOTO • Jaideep Hardikar

சவால்கள்

சஞ்சயின் தற்கொலைக்குப் பிறகு அபர்ணாவுக்கான சவால்கள் பெருகின. நாக்பூரைச் சேர்ந்த அவரது மூன்று மைத்துனர்களும் அந்த நிலத்தை அபகரிப்பதற்காக அவரை வீட்டைவிட்டு வெளியேற்ற முயற்சித்திருக்கின்றனர்.

சஞ்சய் தற்கொலை செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அபர்ணாவின் தந்தை அருண் மற்றும் சகோதரர் ஆமோல் ஆகியோர் மீது சஞ்சயை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது சகோதரர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதே மைத்துனர் தான் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டபோது அவர் உடன் இருந்தார் என்று அபர்ணா கூறுகிறார்.

"என் மகள் விவசாய நிலத்தை அவர்களிடம் விட்டு விட வேண்டும் என்பதற்காக அவர்கள் எங்களை துன்புறுத்துகிறார்கள்", என்று அருண் கூறுகிறார். அபர்ணாவைப் பொருத்தவரை, சர்ச்சைக்குரியது அவரும் அவரது கணவர் இறக்கும் வரை அவரும் பயிரிட்ட இந்த 16 ஏக்கர் நிலம் ஆகும். மொத்த கிராமமுமே அபர்ணாவுக்கு ஆதரவாகத்தான் நின்றது.

அருணும், ஆமோலும் ஜாமீன் பெறுவதற்கு முன் தற்கொலைக்குத் தூண்டினார்கள் என்ற குற்றச்சாட்டுக்காக 10 நாட்கள் சிறையில் இருந்தனர். சஞ்சய் தற்கொலை செய்த போது தாங்கள் கண்டெடுத்ததாக ஒரு தற்கொலை குறிப்பை போலீசார் நீதிமன்றத்தில் முன்வைத்தனர், அதில் சஞ்சய் தனது சகோதரர்கள் தன்னை துன்புறுத்துவதாக கூறியிருந்தார், ஆனால் எதிர்த்தரப்பு வக்கீல் இந்தக் கடிதம் போலியானது என்று வாதிட்டார். தேசிய நெடுஞ்சாலை 7ல் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பந்தர்கவ்தாவில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

சஞ்சையின் மூத்த சகோதரர் ரகுநாத் மாலிகர், தேசிய மக்கள் கூட்டணியிலிருந்து காங்கிரசுக்கு மாறிய தலைவர் மேலும் அவர் நாக்பூரின் முன்னாள் மேயரும் ஆவார், இப்போது அவரது மனைவி அங்கு கவுன்சிலராக இருக்கிறார். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் பதிவுக்கு பிறகு, ரகுநாத் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களுக்கு அபர்ணா கணவரை இழந்த பெண்தான் ஆனால் அதற்கு விவசாயம் காரணம் அல்ல என்று கடிதம் எழுதினார்.

இருப்பினும், நிலப்பதிவு (7/ 12) ஆவணம் அவரை ஒரு விவசாயி என்று சுட்டிக்காட்டி, சர்ச்சைக்குரிய நிலம் அவரின் வசம்தான் உள்ளது என்று கூறுகிறது.

அவர் ஒரு கடினமாக உழைக்கும் விவசாயி; 16 ஏக்கர் நிலத்தை நிர்வகிப்பது, கடன்களை திருப்பிச் செலுத்துவது மற்றும் குழந்தைகளை பராமரிப்பது என்பது எளிதான செயல் அல்ல என்று கிராமத்து தலைவி நிர்மலா கோர் கூறுகிறார்.

தேனீக்களும் மட்டைகளும்

21 அங்குல தொலைக்காட்சி திரை, இப்போது அமிதாப்பச்சன் அவர்கள் அபர்ணாவை போட்டியாளர் இருக்கைக்கு அழைத்து செல்வதை காட்டிக் கொண்டிருக்கிறது. "நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்", என்று சிரித்துக்கொண்டே அபர்ணா நினைவு கூர்கிறார். அவர் யாவத்மாலைத் தாண்டிச் சென்றதே இல்லை. ’’ஆனால் அமிதாப்பச்சன் சார் என்னை ஆற்றுப்படுத்தினார். நான் கனவுலகில் இருப்பதாக நினைத்தேன்.”

அபர்ணாவை மும்பைக்கு அவரது தந்தை மற்றும் நாக்பூரைச் சேர்ந்த ஊடகவியல் மாணவி மஞ்சுஷா அம்பர்வார், அவரது தந்தையும் யாவத்மாலில் 1998 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயி, ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்பயணம் மிகவும் சுவாரசியமாக இருந்தது என்று அருண் கூறுகிறார். "நான் விமானத்தை பார்த்ததே கிடையாது. நாங்கள் மும்பைக்கு பறந்து சென்றோம்", என்று கூறினார்.

விளையாட்டு துவங்கியது. அபர்ணா தனது முதல் இலக்காக 1.6 லட்சம் ரூபாயை நிர்ணயித்தார்.

ரூபாய் ஐயாயிரத்திற்கான முதல் கேள்வி: தேனீக்களின் கூடு  ஹிந்தி மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அபர்ணா தனது முதல் உதவியாக பார்வையாளர் வாக்கினைப் பயன்படுத்திக் கொள்கிறார். 'சாத்தா' என்பதுதான் சரியான பதில். மராத்தியில் மொகரு என்று அழைக்கப்படுகிறது என்று தெரியும் என்று கூறினார்.

இரண்டாவது கேள்வி ரூபாய் பத்தாயிரத்திற்கானது:  பின்வரும் விளையாட்டுக்களில் செவ்வக வடிவம் அல்லாத அரங்கில் விளையாடப்படும் விளையாட்டு எது? அபர்ணா நிபுணரின் ஆலோசனை என்கிற இரண்டாவது உதவியைப் பயன்படுத்திக் கொள்கிறார். அழைக்கப்பட்டிருந்த பொருளாதார நிபுணர் அஜித் ராணடே, உறுதியாக கிரிக்கெட் என்று கூறி அவரை மீட்டார்.

நான் இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை எட்டிப்பிடிக்க தவறிவிட்டேன் என்று தனது வீட்டில் பார்க்கும் குழந்தைகள் நினைப்பார்கள், "எனக்கு அந்த இரண்டு பதில்களுமே தெரியும் ஆனால் நான் மிகவும் பதட்டமாக இருந்ததால் என்னால் கூற முடியவில்லை!" என்று அபர்ணா வெள்ளந்தியாகக் கூறினார்.

அமைதி, மூன்றாவது கேள்வி (ரூ.20,000க்கான கேள்வி): பின்வரும் விலங்குகளில் எந்த விலங்கிற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறப் பட்டைகள் இருக்கும்? அபர்ணா அமைதியாக வரிக்குதிரை என்று பதில் கூறுகிறார். ரோகினி இப்போது தான் நிமிர்ந்து அமர்கிறார்.

அடுத்து. பின்வரும் நோய்களுள் எந்த நோய் சோட்டி மா அல்லது காஸ்ரா என்று அழைக்கப்படுகிறது? ரூபாய் 40,000 கேள்விக்குறியாகி இருக்கிறது. மூன்று சகோதரிகளில் இளையவரான அபர்ணா பத்தாம் வகுப்பு இடை நின்றவர். நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அமிதாப்பச்சன் கேள்வியை மீண்டும் கேட்கிறார். அபர்ணா சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரது வீட்டில் திடீரென ஒரே அமைதி. "தட்டம்மை", என்று அவர் இறுதியாக கூற சிரமப்பட்டு கூறி முடித்தார். மும்பை ஸ்டுடியோவில் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மற்றும் வாரா கவ்தா மக்களும் கைதட்டினர்.

ஐந்தாவது கேள்வி (ரூ.80,000க்கான கேள்வி): 2009 ஆம் ஆண்டு நிதின் கட்கரியை அதன் தலைவராக தேர்ந்தெடுத்த அரசியல் கட்சி எது? அபர்ணா மூன்றாவது உதவியான நண்பரை தொலைபேசியில் அழைத்தல் என்பதனை தேர்வு செய்கிறார்.

கம்ப்யூட்டர்ஜி சமிதி ஆர்வலரான திவாரியை தொடர்பு கொள்கிறது. அக்கேள்வி அவருக்கு எளிதாக இருந்தது, பாஜாக என்று கூறினார்.

அடுத்த கேள்வி முக்கியமானது அது உறுதி பணத்திற்கான கேள்வி: இதை சரியாகச் சொன்னால் அவர் வீட்டிற்கு ரூபாய் 1.6 லட்சத்தை எடுத்துச் செல்லலாம்.

இந்து புராணங்களின்படி இவற்றில் குருக்ஷேத்திரத்துடன் தொடர்புடையது எது?

மகாபாரதம் என்பது சரியான பதில்.

பச்சன் காசோலையில் கையெழுத்திட்டார். விளம்பர இடைவேளை.

PHOTO • Jaideep Hardikar


தகுதியற்ற தற்கொலை

இந்தப் பணம் அபர்ணா தனது கடன்களில் பெரும்பகுதியை திரும்பச் செலுத்த உதவும். சஞ்சையின் தற்கொலை ஒரு தகுதியான தற்கொலை அல்ல என்பதால் அவருக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒரு லட்ச ரூபாய் தற்போது வரை கிடைக்கவில்லை.

மகாராஷ்டிரா அரசாங்கத்தைப் பொறுத்தவரை விவசாய காரணங்களுக்காக பாதிக்கப்பட்டவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டால் மட்டுமே அது ஒரு விவசாய தற்கொலைக்குத் தகுதி பெறும். தகுதிகள்: நிலுவையில் உள்ள வங்கிக் கடன்கள், உழுபவர் மற்றும் நில உரிமை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் விவசாயத்தைத் தவிர வேறு எந்தத்  துன்பங்களும் காரணங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தனிநபர்களிடமிருந்து பெறும் கடன் கூட. சஞ்சய் அவர்களுக்கு  இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அவர் யூனியன் வங்கியிடம் இருந்தும்  ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார், ஆனால் அது வீட்டுக் கடனாக பெறப்பட்டு இருந்தது, ஏனெனில் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கப்படுவதில்லை என்று அபர்ணா கூறினார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இழப்புகளை சந்தித்தார் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் அவரது சகோதரர்கள் இது ஒரு விவசாய தற்கொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அதிகாரப்பூர்வமாக, சஞ்சயின் தற்கொலை வீட்டு பிரச்சனைகளால் தூண்டப்பட்டது என்று முடிவு கட்டிவிட்டனர்.

"ஆம், நாங்கள் சண்டை போடுவோம். ஆனால் எந்த தம்பதியினர் தான் சண்டை போடாமலில்லை? கடனால் ஏற்பட்ட சோகத்தில் ஒவ்வொரு நாளும் அவர் செத்து கொண்டிருந்ததை நான் எப்படி பார்த்திருக்க முடியும்?" என்று அபர்ணா கேட்கிறார்.

"2005 ஆம் ஆண்டு வரை எனது கணவர் ஒரு குடிகாரர் அல்ல", என்று அவர் கூறுகிறார். அவர் "எப்போதும் கடன்களை பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்; மது பழக்கம் நமது பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என்று கூறி நான் அவரிடம் சண்டையிடுவேன்".

2008 ஆம் ஆண்டிற்குப் (விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒருமுறை கடன் தள்ளுபடி செய்த ஆண்டு) பிறகு, 70 சதவீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் தகுதியற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தனது வலைப்பதிவில் அமிதாப்பச்சன் அபர்ணாவின் போராட்டத்தை பற்றிய தனது வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று கூறுகிறார். "உறுதியான, மிருகத்தனமான மற்றும் உண்மையான கொடுமையாக அது இருக்கத்தான் செய்கிறது", என்று எழுதியுள்ளார்.

இறுதிச்சுற்று

ஏழாவது கேள்வி (ரூபாய் 3.2 லட்சத்திற்கானது):  பின்வரும் ஒலிப்பதிவில் இருக்கும் கதாநாயகர் யாரென்று கண்டுபிடிக்கவும். அபர்ணா புன்னகைக்கிறார், அந்நிகழ்ச்சியில் முதல்முறையாக: சல்மான்கானின் குரல் அவருக்கு நன்றாக தெரியும். சரியான விடை! மொத்தமாக அவருக்கு இருக்கும் அனைத்து கடன்களையும் அடைத்துவிடலாம், மேலும் அவரது கனவான அழகு நிலையத்தையும் அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த சுதந்திர போராட்ட வீரர் லோக்மான்யா என்று அழைக்கப்படுகிறார்?  பாலகங்காதர திலக். அமிதாப் பச்சன் 6.4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் ஒப்படைக்கிறார்.

இப்போது அமிதாப் பச்சன் பிரமிப்புடன் அபர்ணாவுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவர் அடுத்த கேள்வியை முன்வைக்கிறார்: ஒன்பதாவது கேள்வி 12.5 லட்சத்திற்கான கேள்வி. பந்தர்பூரிலிருக்கும் விதோபா என்ற கடவுளுக்கு எழுதப்பட்ட 4,000 அபங்கங்ளும் யாரால் எழுதப்பட்டது?

நீண்ட மௌனம். அபர்ணா தனது 4 தெரிவுகளையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இன்னும் ஒரு உதவி மீதமிருக்கிறது: இரட்டை முயற்சி. அமிதாப் பச்சன் அவரது சங்கடத்தை கண்டுணர்ந்து அவருக்கு பதில் உறுதியாகத் தெரிந்தாள் மட்டுமே பதிலை கூறுங்கள் என்று சொல்கிறார். சிறிது நேரம் கழித்து தான் போட்டியிலிருந்து விலக விரும்புவதாக அபர்ணா கூறுகிறார்.

நிச்சயமாக? அவர் மீண்டும் தான் வெளியேற விரும்புவதாகக் கூறுகிறார். அந்த நடிகர் பார்வையாளர்களை கடைசியாக ஒருமுறை கைதட்டுமாறு கூறுகிறார்.

இப்போது அவர் பதிலை தேர்வு செய்ய விரும்பினால் அவர் எந்த பதிலை தேர்வு செய்வார் என்று அமிதாப் பச்சன் கேட்கிறார். "துறவி துக்காராம்" என்று அபர்ணா கூறுகிறார். அது சரியான தேர்வாக இருந்திருக்கும்!

அவரது வீட்டில், அபர்ணா கிராமவாசிகளிடம் தனக்கு உறுதியாக பதில் தெரியவில்லை என்பதால் தான் போட்டியிலிருந்து விலகியதாக விளக்குகிறார்.

இரவு 10 மணி. நிகழ்ச்சி முடிந்தது.  கிராமவாசிகள் அவரை புகழ்ந்து பாராட்டி செல்கின்றனர். அபர்ணா தனது சிந்தனையில் இருந்து வெளியே வருகிறார். வாழ்க்கையின் முன்னால் மேலும் பல அச்சுறுத்தும் கேள்விகள் உள்ளன. ஆனால் உதவிகள் என்பது அரிதானது மற்றும் விலகிக் கொள்வது என்பது ஒரு தெரிவே கிடையாது.

இந்தக் கட்டுரையின் பதிப்பு முதலில் தி டெலிகிராஃப் இல் வெளிவந்தது: https://www.telegraphindia.com/india/when-to-fight-when-to-quit/cid/336076

தமிழில்: சோனியா போஸ்

Jaideep Hardikar

جے دیپ ہرڈیکر ناگپور میں مقیم صحافی اور قلم کار، اور پاری کے کور ٹیم ممبر ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز جے دیپ ہرڈیکر
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

کے ذریعہ دیگر اسٹوریز Soniya Bose