கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை மருத்துவமனைகளுக்குச் சென்றிருப்பீர்கள்?
இக்கேள்வியை கேட்டதும் சுஷிலா தேவி மற்றும் அவரது கணவர் மனோஜ் குமாரின் முகங்களில் சோர்வும், விரக்தியும் நிழலாடின. மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அவர்கள் இருவரும் (அவர்களின் பெயர்கள் இங்கு மாற்றப்பட்டுள்ளன) மறந்துவிட்டனர். 2017ஆம் ஆண்டு பண்டிகு நகரில் உள்ள மாதுர் மருத்துவமனையில் கருத்தடை செய்த பிறகு தான் பிரச்சனை தொடங்கியது.
10ஆண்டுகால திருமண வாழ்வில் மூன்று பெண் குழந்தைகளைத் தொடர்ந்து நான்காவதாக மகன் பிறந்துள்ளான். எனவே குடும்ப வாழ்வை மேலும் சமாளிப்பதற்காக 27 வயதான சுஷிலாவிற்கு கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. ராஜஸ்தானின் தெளசா தாலுக்காவில் உள்ள தங்களின் தானி ஜாமா கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பண்டுகியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. எனினும் அவர்களின் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இருந்தது.
“[அரசு] சுகாதார மையங்களில் கருத்தடை முகாம்கள் குளிர் காலங்களில் தான் அதிகம் நடைபெறும். குளிர் காலங்களில் வேகமாக நலமடையலாம் என்பதால் பெண்கள் அம்மாதங்களை தேர்வு செய்கின்றனர். கோடைக் காலங்களில் அறுவை சிகிச்சை செய்ய விரும்பினால் தெளசா, பண்டுகியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வோம்,” என்கிறார் 31 வயதாகும் ஆஷா பணியாளரான சுனீதா தேவி. 25 படுக்கைகள் கொண்ட மாதுர் பொது மருத்துவமனைக்கு அத்தம்பதியை அவர் அழைத்துச் சென்றார். மாநில குடும்ப நல திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் கருத்தடைக்கு சுஷிலா கட்டணம் செலுத்தவில்லை. அவருக்கு உதவித்தொகையாக ரூ.1,400 வழங்கப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் சுஷிலாவிற்கு மாதவிடாய் வந்துள்ளது. அதிலிருந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு வேதனை தரும் வலியும், சோர்வும் தொடங்கின.
“முதன்முதலில் அவளுக்கு வலி வந்தபோது வீட்டிலிருந்த வலி நிவாரணியை கொடுத்தேன். அது கொஞ்சம் உதவியது. மாதவிடாய் வரும்போதெல்லாம் அவள் வலியால் துடிப்பாள்,” என்கிறார் 29 வயதாகும் மனோஜ்.
“வலி தீவிரமடைந்து அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும். குமட்டல் வரும். நான் எப்போதுமே உடல் பலவீனமானவள்,” என்கிறார் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள இல்லத்தரசியான சுஷிலா.
மூன்று மாதங்களாக பிரச்னை தொடர்ந்ததால், இத்தம்பதியினர் தயக்கத்துடன் குண்டலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
“அங்கு பணியாளர்களை பார்ப்பதே அரிது,” என்று சொல்லும் மனோஜ், சுஷிலாவை பரிசோதித்துக் கூட பார்க்காமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரைகளைக் கொடுத்தனர் என்றார்.
உடலுறவின் போதும் வலி ஏற்பட்டு இல்லற வாழ்விலும் தாக்கம் செலுத்தியது. கருத்தடை முடிந்த ஐந்து மாதங்களில் பண்டுகியில் மாதுர் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை அளித்த மருத்துவரைக் காண சுஷிலா சென்றுள்ளார்.
அடிவயிற்றில் சோனோகிராபி சோதனை உள்ளிட்ட தொடர் பரிசோதனைகளுக்கு பிறகு கருமுட்டை குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர், மூன்று மாத மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்தார்.
“என் மனைவிக்கு எப்படி தொற்று ஏற்பட்டது?“ நீங்கள் அறுவை சிகிச்சையை ஒழுங்காக செய்யவில்லையா?” என மருத்துவரிடம் கோபமாக மனோஜ் கேட்டுள்ளார். அவர் சொன்ன பதிலை தம்பதியினர் இப்போதும் நினைவில் வைத்துள்ளனர்: “எங்கள் வேலையை நாங்கள் சரியாக செய்துவிட்டோம். இது உங்கள் விதி,” என்று கூறிவிட்டு மருத்துவர் நகர்ந்துள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு 10 நாட்கள் இடைவேளையில் தங்களின் இருசக்கர வாகனத்தில் மாதுர் மருத்துவமனைக்கு காலை 10 மணியளவில் இத்தம்பதியினர் புறப்பட்டனர். நாள் முழுவதும் பரிசோதனைகள், ஆய்வுகள், மருந்துகளை வாங்குவது என கழிந்துள்ளன. மனோஜ் தனது வேலையை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு அலைந்துள்ளார். அவர்களின் மூன்று மகள்கள் (ஒன்பது, ஏழு, ஐந்து வயதுடையோர்), ஒரு மகனை (நான்கு வயது) தானி ஜாமாவில் உள்ள தங்களின் பெற்றோரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். ஒவ்வொரு முறை பயணத்திற்கும் ரூ.2000 முதல் ரூ.3000 வரை அவர்கள் செலவிட்டுள்ளனர்.
மூன்று மாத சிகிச்சையின் முடிவில், மனோஜ் உறவினர்களிடம் இருந்து இதற்காக ரூ.50,000 கடன் வாங்கி செலவு செய்திருந்தார். பி.ஏ பட்டதாரியாக இருந்தும் அவருக்கு சாதாரண வேலை (கட்டுமானப் பணிகள் அல்லது வயல்களில் வேலை) தான் கிடைத்துள்ளது. இதிலிருந்து மாதம் ரூ.10,000 வரை வருவாய் ஈட்டியுள்ளார். எனினும் சுஷிலாவின் உடல்நிலையில் மாற்றமில்லை. அவர்களின் குடும்பம் வருவாய் இழந்து கடன் சுமையில் மூழ்கியது. வாழ்க்கையே மங்கலாகிவிட்டது, என்கிறார் சுஷிலா.
“மாதவிடாயின்போது நான் குலைந்துவிடுவேன், அடுத்த சில நாட்களுக்கு மிகவும் பலவீனமாக உணர்வேன்,” என்கிறார் அவர்.
தங்கள் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெளசா மாவட்ட தலைநகரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க மனோஜ் முடிவு செய்தார். அவர்கள் சென்ற நாளில் 250 படுக்கைகள் கொண்ட அம்மருத்துவமனையில் மகளிருக்கான சுகாதார சேவைக்கென தனி துறை இருந்துள்ளது. ஆனால் நடைபாதையிலேயே நோயாளிகளின் நீண்ட வரிசையும் தொடங்கியிருந்தது.
“நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து, பொறுமை இழந்தேன். எனவே தெளசாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்தோம்,” என்கிறார் மனோஜ். முடிவிலா மருத்துவமனை அலைச்சலிலும், பரிசோதனைகளிலும் சிக்கப் போகிறோம் என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை.
தெளசாவில் மாவட்ட மருத்துவமனையின் வரிசையில் நின்றபோது யாரோ சொன்னதைக் கேட்டு அங்குள்ள ராஜ்தானி மருத்துவமனை மற்றும் மகப்பேறு இல்லத்திற்குச் சென்றுள்ளனர். சுஷிலாவின் பழைய சோனோகிராபி அறிக்கையை நிராகரித்த அவர்கள், புதிதாக ஒன்றைக் கேட்டுள்னர்.
அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த மனோஜ், கிராமத்தில் சிலர் கூறிய ஆலோசனையின்படி சில வாரங்கள் கழித்து தெளசாவில் உள்ள கண்டேல்வால் மருத்துவமனைக்கு சுஷிலாவை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு மற்றொரு சோனோகிராபி பரிசோதனை செய்யப்பட்டு, அவரது கருமுட்டை குழாயில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டு அடுத்த சுற்று மருத்துவம் தொடங்கியது.
“மருத்துவ நடைமுறைகள் எதுவும் கிராமத்தினருக்கு புரியாது என தனியார் மருத்துவமனைகளின் ஊழியர்களுக்கு தெரியும். எதைச் சொன்னாலும் நாங்கள் செய்வோம் என்பதும் அவர்களுக்கு தெரியும்,” என்கிறார் மனோஜ். முற்றிலும் குழப்பமடைந்த மனோஜ் தம்பதி தெளசாவில் மூன்றாவது மருத்துவமனையாக ஸ்ரீ கிருஷ்ணாவிற்கு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் பல பரிசோதனைகளைச் செய்துவிட்டு, மீண்டும் சோனோகிராபி செய்துள்ளார். அதில் குடல்களில் சிறிய வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகச் சொல்கிறார் சுஷிலா.
“ஒரு மருத்துவமனை எனது கருப்பை குழாய் வீங்கியுள்ளது என்றது, மற்றொன்று அங்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றது. மூன்றாவது மருத்துவமனை என் குடல் பற்றி பேசுகிறது. ஒவ்வொரு மருத்துவமனையும் அதற்கேற்ப மருந்துகளை அளித்தன. யார் உண்மையை சொல்கிறார்கள், என்ன நடக்கப் போகிறது என எதுவும் தெரியாமல் பைத்தியமாக ஒவ்வொரு இடத்திற்கும் திரிந்தோம்,” என்கிறார் சுஷிலா. ஒவ்வொரு மருத்துவமனையிலும் சொன்ன மருந்துகளை உட்கொண்டும் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
தெளசாவில் உள்ள இந்த மூன்று மருத்துவனைகளுக்கு ஏறி, இறங்கியதில் மனோஜுக்கு ரூ. 25,000 வரை கடன் ஏற்பட்டது.
ஜெய்ப்பூரில் உள்ள தூரத்து உறவினர் உட்பட பலரும் கிராமத்திலிருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலத் தலைநகரில் நல்ல மருத்துவமனைகள் இருக்கும் என பரிந்துரைத்தனர்.
மீண்டும் இத்தம்பதி செலவுக்கு கடன் வாங்கி கொண்டு ஜெய்ப்பூரில் உள்ள டாக்டர் சர்தார் சிங் நினைவு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு சுஷிலாவிற்கு செய்யப்பட்ட சோனோகிராபி பரிசோதனையில், அவரது கருப்பையில் கட்டி வளர்வதை கண்டனர்.
“கட்டி இன்னும் பெரிதாக வளரும் என மருத்துவர் என்னிடம் சொன்னார். அவர் கட்டாயம் எனது கர்ப்பபையை அகற்ற வேண்டும் என்றார்,“ என்கிறார் சுஷிலா.
ஐந்து தனியார் மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகள் அளித்த ஆர்.டி.ஐ தகவல்படி 2010ஆம்ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 385 மகளிருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 286 கர்ப்பப்பை நீக்கத்திற்கான அறுவை சிகிச்சை… அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள், ஒரு 18 வயது பெண்ணுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது
எட்டு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கி, இறுதியாக 2019 டிசம்பர் 27ஆம் தேதி சுஷிலாவிற்கு தெளசாவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையான ஷூபி பல்ஸ் மருத்துவமனை மற்றும் வலி நிவாரண மையத்தில் கர்ப்பப்பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கர்ப்பப்பையை அகற்றுவதற்கு ரூ. 20,000மும், அதை தொடர்ந்து மருத்துவ செலவுக்கு ரூ.10,000மும் மனோஜ் செலவிட்டுள்ளார்.
வலி மற்றும் கடனில் இருந்து விடுபடுவதற்கு கர்ப்பப்பை நீக்கம் மட்டுமே வழி எனும் நிலைக்கு இத்தம்பதியினர் தள்ளப்பட்டனர்.
மனோஜ், சுஷிலாவின் துயரங்கள் குறித்து அகில பாரதிய கிரஹக் பஞ்சாயத்து எனும் அரசு நிறுவன வழக்கறிஞர் துர்கா பிரசாத் சைனியிடம் எடுத்துச் சொன்னோம். அவர்கள் தான் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டுகியில் உள்ள ஐந்து தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்ட கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை குறித்து புலனாய்வு செய்ய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விண்ணப்பித்தனர்.
ஐந்து தனியார் மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகள் மட்டும் அளித்த தகவல்படி 2010ஆம்ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 385 மகளிர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 286 கர்ப்பப்பை நீக்கத்திற்கான அறுவை சிகிச்சை. மாதுர் மருத்துவமனை (சுஷிலாவிற்கு கருத்தடை செய்யப்பட்டது), மதான் நர்சிங் ஹோம், பாலாஜி மருத்துவமனை, விஜய் மருத்துவமனை, கட்டா மருத்துவமனை ஆகியவை விசாரணையில் உள்ளன. கர்ப்பப்பை நீக்கப்படும் பெண்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள், மிக குறைந்த வயதாக 18 வயது பெண்ணுக்கும் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அம்மாவட்டத்தின் பைர்வா, குஜ்ஜார், மாலியின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள். மனோஜூம், சுஷிலாவும் பைர்வா பழங்குடியினர். தானி ஜாமியா கிராமத்தின் 97 சதவீத மக்கள்தொகையினர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
“எத்தனை பெண்களுக்கு கர்ப்பப்பை இருக்கிறது என தெரியவில்லை, ஆனால் நாம் பெண் சிசுக்கொலை பற்றி விவாதிக்கிறோம்,“ எனும் சைனி, எங்கோ தவறு நடப்பதாக தோன்றுகிறது என்றார்.
“மருத்துவர்கள், ஆஷா பணியாளர்கள், ஆரம்ப சுகாதார மைய பணியாளர்கள் இடையேயான பிணைப்பு காரணமாக தேவையின்றி அதிகளவில் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என நினைக்கிறோம். ஆனால் எங்களால் அதை நிரூபிக்க முடியாது,“ என்கிறார் சைனி. ராஜஸ்தான், பீகார், சத்திஸ்கரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் லாப நோக்கில் “கர்ப்பப்பை நீக்கும் சிகிச்சையில் ஊழல்“ நடைபெறுவதாகவும், பண்டுகியில் கண்டறியப்பட்டதும் இணைக்கப்பட்டு ராஜஸ்தானைச் சேர்ந்த லாப நோக்கமற்ற பிரயாசின் நிறுவனர் டாக்டர் நரேந்திரா குப்தா என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு
பொது நல வழக்குப் பதிவு
செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அரசு தந்து கொள்கை முடிவில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.
“பீகார், சத்திஸ்கர், ராஜஸ்தானின் பல பெண்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வது மிகவும் அவசரம் என தவறாக வழிநடத்தப்பட்டது தெரியவந்தது,” என பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டது. “மருத்துவர்களின் அறிவுரையை கேட்காவிட்டால் புற்றுநோய் வரும் என்றும் அவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.”
கர்ப்பப்பை நீக்கத்தால் ஏற்படும் நீண்ட கால பக்கவிளைவுகள், ஆபத்துகள் குறித்த தேவையான தகவல்களும் மனுவில் சேர்க்கப்பட்டன. இத்தகவல்களை அப்பெண்களுக்கு தெரிவிக்காமல் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.
ஊடகங்களில் வெளியாகும் இந்த குற்றச்சாட்டை தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மறுத்தனர், தேவையின் பேரில் தான் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“இப்போது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தெளசா மாவட்ட தனியார் மருத்துவமனைகள் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சையை செய்கின்றன. முன்பெல்லாம் அப்படியில்லை. கட்டுபாடின்றி, பரிசோதிக்காமல் செய்துள்ளனர். கிராமப்புற மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மாதவிடாய் தொடர்பான எந்த பிரச்னைக்கு சென்றாலும் அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் கர்ப்பப்பை நீக்கம் செய்யப்பட்டனர்,” என்கிறார் சைனி.
2015-16ஆம் ஆண்டு நடைபெற்ற
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு
(NFHS-4) நான்காவது சுற்றில் கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சையையும் உடனடியாக சேர்க்குமாறு அரசிடம் டாக்டர் குப்தாவின் மனு நிர்பந்தித்துள்ளது. இந்தியாவில் 15 முதல் 49 வயதிலான பெண்களில் 3.2 சதவீதம் பேர் கர்ப்பப்பை நீக்கப்பட்டவர்கள். 67 சதவீதத்திற்கு மேலான இவ்வகை அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் தான் செய்யப்படுகின்றன. ராஜஸ்தானில் 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் 2.3 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது என்கிறது NFHS-4.
பிரயாசின் உண்மை அறியும் குழுவினர் கர்ப்பப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்களை அணுகியபோது பெரும்பாலானோர் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அறிகுறிகள் தொடர்வதாக தெரிவித்துள்ளனர். கர்ப்பப்பை நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து சுஷிலாவை நாங்கள் சந்தித்தபோது, அறுவை சிகிச்சையின் காயங்கள் முழுமையாக ஆறுவதற்குள், அவர் வாளிகளை தூக்கிச் செல்வது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டார். அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தார். மனோஜ் வேலைக்கு திரும்பிவிட்டார். அவரது வருமானத்தில் பாதி சுஷிலாவின் உடல்நிலையை சரிசெய்வதற்கும், வட்டிக்கும், உறவினர்களிடம் வாங்கிய ரூ. 1 லட்சத்தை திருப்பி செலுத்துவதற்கும் சென்றுவிடுகிறது. ரூ.20-30,000க்கு சுஷிலாவின் நகைகளும் விற்கப்பட்டுவிட்டது.
கருப்பை நீக்கியது சரியா, தவறா, எதனால் நீண்டகால வலியும், உதிரப்போக்கும் ஏற்பட்டது என காரணத்தை அவர்களால் அறிய முடியவில்லை. கடந்த மூன்றாண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து அவர்களால் மீளவும் முடியவில்லை. சுஷிலாவிற்கு மீண்டும் வலி ஏற்படாது என்பதால் அவர்கள் ஓரளவுக்கு நிவாரணம் அடைந்துள்ளனர்.
“ஒருவர் பணம் செலவழித்து சோர்ந்து போகலாம், ஆனால் இறுதியில் சரியானவற்றை செய்துவிட்டோம் என்று நம்புகிறோம்,“ என்கிறார் மனோஜ்.
முகப்புச் சித்திரம்: லபானி ஜாங்கி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தின் சிறிய நகரை பூர்வீகமாக கொண்டவர். கொல்கத்தாவில் சமூக அறிவியலுக்கான கல்வி மையத்தில் வங்காள தொழிலாளர்களின் புலப்பெயர்வு குறித்து முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து வருகிறார். சுயமாக ஓவியங்களை கற்றவர். பயணங்களை நேசிப்பவர்.
எளிய மக்களின் குரல்கள், வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பருவநிலை மாற்றம் குறித்து தேசிய அளவில் செய்தி சேகரிக்கும் திட்டத்தை UNDP ஆதரவுடன் பாரி செய்து வருகிறது.
இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா?
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள்.
[email protected]
என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா