57 வயது பாலாபாய் சவ்தாவுக்கு குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் வளமான நிலம் இருக்கிறது. நீர்ப்பாசனம் கொண்ட நிலம். 25 வருடங்களாக அவரின் உரிமையில் நிலம் இருக்கிறது. எனினும் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. அவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே செல்லக் கூட அவருக்கு அனுமதி இல்லை.

“என் உரிமத்துக்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது,” என்கிறார் பழுப்பாகிப் போன பட்டா ஆவணங்களை பிரித்தபடி. “ஆனால் ஆதிக்க சாதியினரின் கைவசம் இந்த நிலம் இருக்கிறது.”

குஜராத்தின் பட்டியல் சாதியான சமர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளரான பாலாபாய், உதவி கேட்டு பலரையும் நாடினார். உதவிக்கென சென்று அவர் தட்டக் கூடிய கதவுகள் அதிகம் இல்லை. “ஒருநாள் விடாமல் எல்லா நாட்களும் என்னுடைய நிலத்துக்கு நான் செல்வேன்,” என்கிறார் அவர். “தூர இருந்து அதைப் பார்த்து, என் வாழ்க்கை எப்படி ஆகியிருக்கும் என கற்பனை செய்வேன்…”

த்ரங்கதா தாலுகாவின் பாரத் கிராமத்திலுள்ள விவசாய நிலம், பாலாபாய்க்கு 1997ம் ஆண்டு குஜராத் நில விநியோகக் கொள்கையின்படி ஒதுக்கப்பட்டது. குஜராத் விவசாய நில உச்சவரம்பு சட்டம் 1960 -ன்படி கையகப்படுத்தப்பட்ட உபரி நிலம் பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்ட நிலம்.

சந்தானி ஜமீன் எனப்படும் இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களுடன் சேர்த்து “விவசாய நிலம் தேவைப்படும் மக்களுக்கு” - விவசாயிகள் கூட்டுறவு சங்கம், நிலமற்றோர், விவசாயத் தொழிலாளர்கள் போன்றோர் - பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இன மக்களுக்கான முன்னுரிமையுடன் அளிக்கப்படும்.

இத்திட்டம் காகிதத்தில் செயல்படுகிறது. நடைமுறையில் இல்லை.

நிலப்பட்டா கிடைத்ததும் பாலாபாய் பருத்தி, சோளம், கம்பு ஆகியவற்றை அந்த நிலத்தில் விதைக்க திட்டமிட்டார். வேலை பார்க்கும் இடத்திலேயே வசிக்கலாமென விவசாய நிலத்திலேயே ஒரு சிறு வீடு கட்டவும் நினைத்தார். அச்சமயத்தில் அவருக்கு வயது 32. இளமையாக ஒரு புது எதிர்காலத்தை கட்டக் கூடிய சாத்தியமிருந்த வயது. “மூன்று சிறு குழந்தைகள் எனக்கு இருந்தன,” என்கிறார் அவர். “தொழிலாளராக நான் பணிபுரிகிறேன். அடுத்தவருக்காக இனி உழைக்க வேண்டியதில்லை என நினைத்தேன். சொந்தமான நிலத்தைக் கொண்டு என் குடும்பத்துக்கு நல்ல ஒரு வாழ்க்கையைக் கொடுக்கலாமென நினைத்தேன்.”

PHOTO • Parth M.N.

பாலாபாய் சவ்தா, 25 வருடங்களாக கைக்கு வர காத்திருக்கும் அவரது ஐந்து ஏக்கர் நிலத்தின் ஆவணங்களைக் காட்டுகிறார்

ஆனால் பாலாபாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நிலத்தை அவர் உரிமையெடுப்பதற்கு முன்பே கிராமத்தின் இரண்டு குடும்பங்கள் அதை கைப்பற்றியது. பகுதியின் ஆதிக்க சாதிகளான ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த குடும்பமும் படேல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பமும் இன்று வரை அந்த நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. பாலாபாய் தொடர்ந்து தொழிலாளராக வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் மகன்கள் வளர்ந்துவிட்டனர். 35 வயது ராஜேந்திராவும் 32 வயது அம்ருத்தும் இளம்பருவத்திலிருந்தே நிலங்களில் வேலை பார்க்கத் தொடங்கி விட்டனர். வேலை இருந்தால் நாளொன்றுக்கு அவர்கள் 250 ரூபாய் வருமானம் ஈட்டுவர். வாரத்துக்கு மூன்று முறைதான் வேலை கிடைக்கும்.

“என்னுடைய உரிமையை ஏற்க கடுமையாக நான் முயன்றேன். ஆனால் அந்த நிலத்தை சுற்றியுள்ள நிலங்களும் ஆதிக்க சாதியினருக்கு சொந்தமாக இருக்கிறது,” என்கிறார் பாலாபாய். “உள்ளே நுழைய அவர்கள் என்னை அனுமதிப்பதில்லை. தொடக்கத்தில் என் (நிலத்தில் விதைப்பதற்கான) உரிமையை உறுதிப்படுத்தினேன். சண்டைகள் நேர்ந்தது. ஆனால் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் அதிகாரம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.”

90களின் பிற்பகுதியில் நேர்ந்த ஒரு சண்டையால் மருத்துவமனையில் பாலாபாய் அனுமதிக்கப்பட்டார். மண்வெட்டியால் அவர் தாக்கப்பட்டு, கை உடைந்து போனது. “காவல்துறையில் புகாரளித்தேன்,” என்கிறார் அவர். “(மாவட்ட) நிர்வாகத்தை அணுகினேன். பயன்படவில்லை. நிலமற்றோருக்கு நிலம் வழங்கிவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் களத்தில், அது காகிதங்களை மட்டும்தான் கொடுத்திருக்கிறது. நிலம், முன்பு எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது.”

2011ம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது இந்தியாவில் 14 கோடியே 40 லட்சம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இருந்தனர். 2001ம் ஆண்டு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது இருந்த 10 கோடியே 70 லட்சத்தை விட 35 சதவிகிதம் அதிகரித்திருந்தது.  குஜராத்தில் மட்டும் 17 லட்சம் பேர் அதே காலக்கட்டத்தில் நிலமற்றத் தொழிலாளர்களாக மாறினர். 32.5 சதவிகிதம் (51 லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து 68 லட்சத்து 40 ஆயிரம் வரை) அதிகரித்திருக்கிறது.

வறுமை மற்றும் நிலமின்மை ஆகியவற்றுக்கான காரணம் தெளிவாக சாதியுடன் ஒத்துப் போகிறது. குஜராத்தின் பட்டியல் சாதியினர் 6.74 சதவிகிதம் (கணக்கெடுப்பு 2011)  இருந்தாலும் வெறும் 2.89 நிலத்தில்தான் அவர்கள்- நிலவுரிமையாளர்களாகவோ பிறவாகவோ - பங்குபெறுகின்றனர். பட்டியல் பழங்குடி மாநிலத்தில் 14.8 சதவிகிதம் இருந்தாலும் 9.6 சதவிகித நிலத்தில்தான் பணிபுரிகிறார்கள்.

தலித் உரிமை செயற்பாட்டாளரான ஜிக்னேஷ் மெவானி 2012ம் ஆண்டில் மாநில அரசாங்கத்தின் நிலச்சீர்திருத்தக் கொள்கைகள் செயல்படுத்தப்படாததைக் கேள்வி கேட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட சாந்தானி நிலம், யாருக்குக் கொடுக்கப்பட வேண்டுமோ - நிலமற்றோர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் - அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

Balabhai on the terrace of his house. ‘I look at my land from a distance and imagine what my life would have been...’
PHOTO • Parth M.N.

வீட்டு மாடியில் பாலாபாய். ‘தூர இருந்து என் நிலத்தை பார்த்து, வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என கற்பனை செய்வேன்…’

ஒன்றிய அரசின், ‘நில உச்சவரம்புச் சட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றிய மூன்று மாத அறிக்கை’ நீதிமன்ற வாதத்தில் குறிப்பிடப்பட்டது. செப்டம்பர் 2011 வரை, 1,63,676 ஏக்கர் நிலம் 37,353 பேருக்கு குஜராத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும் 15,519 ஏக்கர் மட்டும்தான் இன்னும் விநியோகிக்கப்படாமல் இருக்கிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

இன்னும் நிலுவையிலிருக்கும் மெவானியின் பொது நல வழக்கோ ஒதுக்கப்பட்ட நிலம் கைக்கு வராத தன்மையைக் குறித்தே கவனம் செலுத்துகிறது. தகவல் அறியும் மனுவுக்கான பதில்கள் மற்றும் அரசாங்க ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அவர், பல பேர் நிலம் கைக்கு வராமல் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாலாபாய் இருபது வருடங்களுக்கு மேலாகக் காத்திருக்கிறார். “நிலத்தை உடைமை கொள்ள தொடக்கத்தில் நான் சண்டை போட்டேன்,” என்கிறார் அவர். “30 வயதுகளில் இருந்தேன். நிறைய சக்தியும் உத்வேகமும் இருந்தது. பிறகு என் குழந்தைகள் வளரத் தொடங்கின. நானும் வேலைகளில் மும்முரமாகி விட்டேன். அவர்களையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் பாதுகாப்பு குறித்தும் நான் யோசிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கு ஆபத்து விளைவிக்கும் எதையும் நான் செய்ய விரும்பவில்லை.”

1,700 பக்கங்கள் நீளும் மெவானியின் மனு, குஜராத் முழுக்க இருந்து பல உதாரணங்களை கொண்டிருப்பது, பாலாபாயின் பிரச்சினை முரணான ஒன்றில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

“சில இடங்களில் செயற்பாட்டாளர்களின் தொடர் தலையீட்டால் சிலருக்கு நிலம் கிடைத்திருக்கிறது,” என்கிறார் தற்போதய வட்கமின் சட்டப்பேரவை உறுப்பினரான மெவானி. மனுவுக்கு பதிலளிக்கும்போது மாநில மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டதாக அவர் சொல்கிறார்.

உதாரணமாக ஜூலை 18, 2011 தேதியிட்ட கடிதத்தில் அகமதாபாத்தின் நில ஆவணஙளுக்கான மாவட்ட ஆய்வாளர், அகமதாபாத் மாவட்டத்தின் சில கிராமங்களில் வருவாயத்துறை அதிகாரிகளின் செயல்பாடின்மையால் நில அளவைப் பணி முடியாமல் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். சில வருடங்கள் கழித்து நவம்பர் 11, 2015 அன்று பவாநகர் மாவட்டத்தின் நில ஆவண அதிகாரி, 1971லிருந்து 2011 வரை ஒதுக்கப்பட்ட நிலங்கள் 50 கிராமங்களில் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Chhaganbhai Pitambar standing on the land allotted to him in the middle of Chandrabhaga river in Surendranagar district
PHOTO • Parth M.N.

சுரேந்திரநகர் மாவட்டத்தின் சந்திரபகா ஆற்றுக்கு நடுவே ஒதுக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் சகன்பாய் பீதாம்பர்

டிசம்பர் 17, 2015-ல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மாநில வருவாய்த்துறை செயலாளரான ஹரிஷ் பிரஜாபதி, விநியோகிக்கப்படாமல் இருக்கும் 15,519 ஏக்கர் நிலம் சட்ட நடவடிக்கையில் இருக்கிறது என்கிறார். அதிலும் 210 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விவசாய நில உச்சவரம்பு சட்டத்தை செயல்படுத்த ஒரு செயல்முறையும் முன் வைக்கப்பட்டதாக பிரஜபதி சொல்கிறார். நான்கு அதிகாரிகளை நியமிப்பதும் மண்டலப் பிரிவு மாநிலத்துக்கு உருவாக்குவதும் அவற்றில் அடக்கம். “ஒவ்வொரு துண்டு நிலத்துக்கும் நேரடியாக சென்று பரிசோதித்து மேலும் உடைமை நிலையைப் பரிசோதிக்கும் வகையில் இச்செயல்முறை நடைபடுத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை நேரடியாக ஆய்வு செய்யும் இமாலய வேலையைக் கொண்ட செயல்முறை இது,” என்கிறது மனு. ஆனால் புறம்போக்கு நில ஒதுக்கீடு ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்குமெனவும் அது குறிப்பிடுகிறது.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் மெவானி பொது நல வழக்கு தொடுத்து ஏழு வருடங்கள் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை என்கிறார் மெவானிக்காக வாதாடும் வழக்கறிஞர் ஆனந்த் யக்னிக். “விநியோக நீதிக்காக அரசு ஆதிக்க சாதியிடமிருந்து நிலத்தைப் பிடுங்காமல் நிலத்தை வெறும் காகிதத்தில் கொடுக்கிறது,” என்கிறார் அவர். “பட்டியல் சாதியைச் சார்ந்தவர் உரிமை கோரினால் தாக்கப்படுகின்றனர். உள்ளூர் நிர்வாகம் உதவுவதில்லை. எனவே விநியோக நீதி காகிதத்தில் இருக்கிறது. நாகரிகத்தின் தீமை சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது.”

வருவாய்த் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான கமல் தயானிக்கும் நிலச்சீர்திருத்த ஆணையர் பி.ஸ்வரூப்புக்கும் இக்கட்டுரையாளர் தொடர்பு கொண்டு, குஜராத்தில் நில விநியோகத்தின் தற்போதைய நிலை என்னவெனக் கேட்டிருக்கிறார். பதில் கிடைத்தால் இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.

43 வயது சகன்பாய் பீதாம்பரைப் பொறுத்தவரை, அவரின் நிலத்தை வேறொருவர் அபகரிக்காமலே கூட நிர்வாகம் அவருக்கு தோல்வியைக் கொடுத்தது. பாரதில் 1999ம் ஆண்டில் அவருக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலம் சந்திரபகா ஆற்றின் நடுவே இடம்பெற்றிருக்கிறது. “பெரும்பாலும் நீருக்கடியில்தான் நிலம் இருக்கும். அதை வைத்து என்றால் ஒன்றும் செய்ய முடியாது,” என்னும் அவர் நம்மை அங்கு அழைத்துச் செல்கிறார்.

குட்டைகள்தான் இந்த நிலத்தின் பெரும் பகுதியில் நிறைந்திருக்கிறது. மிச்சப் பகுதியில் வழுக்கு மண். “1999ம் ஆண்டிலேயே நிலத்தை மாற்றிக் கொடுக்கக் கோரி துணை ஆட்சியருக்கு எழுதினேன்,” என்கிறார் அவர். “2010ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகி விட்டதால் ஒன்றும் செய்ய முடியாதென சொல்லி என் கோரிக்கையை தாசில்தார் நிராகரித்தார். 10 வருடங்களாக நிர்வாகம் ஏதும் செய்யாமலிருந்தது என் தவறா?”

Walking through the puddles Chhaganbhai explains that the land is under water almost all the time
PHOTO • Parth M.N.

குட்டைகளினூடாக நடந்தபடி, நிலம் பெரும்பாலான நேரம் நீருக்கடியில்தான் இருக்குமென சகன்பாய் விளக்குகிறார்

இந்த அலட்சியத்தால் சகன்பாய்க்கும் அவரது குடும்பத்துக்கும் நேர்ந்த விளைவு கடுமையாக இருந்தது. அவருடைய மனைவியான கஞ்சன்பென் சொல்கையில் தினக்கூலியை மட்டுமே குடும்பம் நம்பியிருப்பதால் வளர்ச்சிக்கோ பாதுகாப்புக்கோ வாய்ப்பே இல்லை என்கிறார். “ஒருநாளில் நீங்கள் சம்பாதித்து இரவில் உணவு வாங்க வேண்டும்,” என்கிறார் அவர். “நிலம் இருந்தால் வீட்டுக்கு தேவையானதையேனும் குறைந்தபட்சம் விளைவித்துக் கொண்டு தினக்கூலியில் கிடைக்கும் வருமானத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.”

குழந்தைகளின் கல்விக்காக குடும்பம் தனியார் வட்டிக்காரர்களிடமிருந்து கடன் பெற வேண்டியிருந்தது. “10 வருடங்களுக்கு முன், 3 சதவிகித வட்டிக்கு 50,000 ரூபாய் கடன் வாங்கினோம்,” என்கிறார் 40 வயது கஞ்சன்பென். “எங்களுக்கு நான்கு குழந்தைகள். அந்த காலத்தில் நாட்கூலி 100லிருந்து 150 ரூபாய்தான் கிடைக்கும். வேறு வாய்ப்புகளும் எங்களுக்கு இல்லை. இன்னும் அக்கடனை அடைத்துக் கொண்டிருக்கிறோம்.”

நிலத்தை இழப்பதால் ஏற்படும் விளைவுகள் பன்மடங்கு பாதிப்புகளைக் கொண்டது. அதற்கு செலுத்தப்படும் நேரம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றைத் தாண்டி, அதை அடைய முடியாததால் ஏற்படும் அழுத்தம், பல வருடங்களாக தேங்கி வளர்ந்திருக்கும் பொருளாதார நஷ்டம் ஆகியவை பொருட்படுத்தப்படுவதில்லை.

குறைந்தபட்சமாக ஒரு விவசாயி, இரண்டு விதைப்புப் பருவங்களை சேர்த்து 25,000 ரூபாய் ஒரு ஏக்கருக்கு சம்பாதிப்பதாக வைத்துக் கொண்டாலும், 5-7 வருடங்களில் 1,75,000 ரூபாய் ஒரு ஏக்கருக்கு விவசாயி நஷ்டம் அடைந்திருப்பார் என்கிறது மெவானியின் பொது நல வழக்கு மனு.

பாலாபாயிடம் ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் 25 வருடங்களாக விதைப்புக்கு அனுமதிக்கப்படவில்லை. பணவீக்கத்தையும் சேர்த்து கணக்கு பார்த்தால், லட்சக்கணக்கான ரூபாய்கள் அவருக்கு நஷ்டம். பாலாபாயைப் போல ஆயிரக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

“இன்றைய நிலையில் நிலம் மட்டுமே 25 லட்ச ரூபாய் விலை போகும்,” என்கிறார் அவர். “அரசனைப் போல் வாழ்ந்திருப்பேன். சொந்தமாக ஒரு மோட்டார் பைக் கூட வாங்கியிருப்பேன்.”

நிலவுடமை பொருளாதார திடத்தன்மை மட்டுமின்றி மரியாதை மற்றும் கண்ணியத்தை ஊருக்குள் பெற்றுத் தருகிறது. “ஆதிக்க சாதியினரின் நிலத்தில் நீங்கள் தினக்கூலியாக வேலை பார்க்கும்போது அவர்கள் உங்களைக் கொடுமையாக நடத்துவார்கள்,” என்கிறார் ராம்தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த  75 வயது திரிபுவன் வகெலா. “அவர்களை நீங்கள் அண்டி பிழைப்பதால் உங்களை அவமானப்படுத்துவார்கள். வேலைக்காக அவர்களை சார்ந்திருப்பதால் உங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.”

Tribhuvan Vaghela says it took 26 years of struggle for him to get possession of his land.
PHOTO • Parth M.N.
Vaghela's daugher-in-law Nanuben and son Dinesh at their home in Ramdevpur village
PHOTO • Parth M.N.

இடது: நிலத்தைப் பெறுவதற்கு 26 வருடங்கள் போராட வேண்டியிருந்தது என்கிறார் திரிபுவன் வகெலா. வலது: வகெலாவின் மருமகளான நனுபென் மற்றும் மகன் தினேஷ் ஆகியோர் ராம்தேவ்பூரிலுள்ள வீட்டில்

வகெலா, பட்டியல்சாதியான பங்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். ராம்தேவ்பூர் கிராமத்தில் அவருக்கு 1984ம் ஆண்டு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் நிலத்தை அவர் 2010-ல்தான் கைவரப் பெற்றார். “சமூகம் சாதிய பாகுபாடை கண்டுகொள்வதில்லை. அதனாலேயே அதிக காலம் பிடித்தது,” என்கிறார் அவர். “நவ்சர்ஜன் அறக்கட்டளையை நான் தொடர்பு கொண்டேன். செயற்பாட்டாளர்கள் போராட்டங்கள் நடத்தி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். எங்களுக்கு தேவை தைரியம்தான். தாகூர் (ரஜபுத்திர) சாதியை அந்தக் காலத்தில் எதிர்த்து நிற்பதெல்லாம் சாதாரண காரியமல்ல.”

குஜராத்தின் முன்னணி தலித் உரிமை செயற்பாட்டாளரும் நவ்சர்ஜன் அறக்கட்டளையின் நிறுவனருமான மார்டின் மெக்வான், நிலச்சீர்திருத்தம் எப்படி சவுராஷ்டிராவின் - தற்போது சுரேந்திர நகர் மாவட்டம் இடம்பெற்றிருக்கும் பகுதி - குத்தகை விவசாயிகளாக இருந்த படேல் சாதியினருக்கு பலனளித்தது என்பதை விளக்கினார். “சவுராஷ்டிராவின் ( மாநிலம்) முதல் முதலமைச்சரான உச்சரங்க்ராய் தெபார் மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து 30 லட்சம் ஏக்கர் நிலங்களை படேல்களுக்கு கைமாற்றி விட்டார். இது தனி மாநிலமாக 1960ம் ஆண்டில் குஜராத் ஆவதற்கு முன்பு நடந்தது,” என்கிறார் அவர். “அச்சமூகம் அவர்களின் நிலத்தைக் காத்துக் கொண்டு காலப்போக்கில் குஜராத்தில் முன்னணி சாதியாக மாறினார்கள்.”

தினக்கூலியாக பணிபுரிந்து கொண்டே வகெலா, அவரது நிலத்துக்காகவும் போராடிக் கொண்டிருந்தார். “போராட்டத்துக்கு பலன் இருந்தது,” என்கிறார் அவர். “என் மகனும் குழந்தைகளும் நான் எதிர்கொணட வாழ்க்கையை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக நான் போராடினேன். நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாய். கிராமத்துக்குள் அவர்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம்.”

வகெலாவின் 31 வயது மருமகளான நனுபென், குடும்பம் நம்பிக்கைக் கொண்டதாக மாறி விட்டதாக சொல்கிறார். “விவசாய நிலத்தில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வருடத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறோம்,” என்கிறார் அவர். “அதிக வருமானம் அது கிடையாது என தெரியும். ஆனால் நாங்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள். வேலைக்காகவும் பணத்துக்காகவும் நாங்கள் கெஞ்ச வேண்டியதில்லை. என் குழந்தைகள் திருமணம் செய்வதில் பிரச்சினை இருக்காது. நிலமில்லா குடும்பத்தில் குழந்தைகளை மணம் முடித்துக் கொடுக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.”

10 வருடங்களாக வகெலாவின் குடும்பம் அனுபவித்து வரும் சுதந்திரத்தை பாலாபாயும் அனுபவிக்க விரும்புகிறார். “நிலம் கிடைக்க என் வாழ்நாள் முழுக்கக் காத்திருக்கிறேன்,” என்கிறார் அவர் பழுப்பு நிற காகிதங்களை சரியாக மடித்தபடி. “60 வயதிலும் என் மகன்கள் தினக்கூலியாக உழைக்கும் நிலையை நான் விரும்பவில்லை. கொஞ்சம் அந்தஸ்து மற்றும் மரியாதையுடன் அவர்கள் வாழ விரும்புகிறேன்.”

நிலம் கிடைத்துவிடும் என இப்போதும் பாலாபாய் நம்புகிறார். பருத்தி, கம்பு, சோளம் ஆகிய பயிர்களை அதில் விளைவிக்க இன்னும் அவர் விரும்புகிறார். அங்கு சிறுவீடு கட்ட அவர் இன்னும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். நிலவுடமையாளராக இருக்கும்போது கிடைக்கும் உணர்வை அவர் அறிய விரும்புகிறார். என்றேனும் ஒருநாள் பயன்படுமென நம்பி 25 வருடங்களாக அவர் ஆவணங்களை காத்து வருகிறார். மிக முக்கியமாக பாலாபாய் நம்பிக்கையுடன் இருக்கிறார். “என்னை உயிரோடு வைத்திருப்பது நம்பிக்கை மட்டும்தான்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

پارتھ ایم این ۲۰۱۷ کے پاری فیلو اور ایک آزاد صحافی ہیں جو مختلف نیوز ویب سائٹس کے لیے رپورٹنگ کرتے ہیں۔ انہیں کرکٹ اور سفر کرنا پسند ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Parth M.N.
Editor : Vinutha Mallya

ونوتا مالیہ، پیپلز آرکائیو آف رورل انڈیا کے لیے بطور کنسلٹنگ ایڈیٹر کام کرتی ہیں۔ وہ جنوری سے دسمبر ۲۰۲۲ تک پاری کی ایڈیٹوریل چیف رہ چکی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Vinutha Mallya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan