“உங்களிடம் என்ன சொல்வது? என் முதுகு உடைந்து, இடுப்பு எலும்புகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன,” என்கிறார் பிபாபாய் லோயாரி. “என் அடிவயிறு பள்ளமாகி, என் வயிறு முதுகுடன் ஒட்டிக்கொண்டு 2-3 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் எலும்புகளில் ஓட்டை விழுந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார்.”

முல்ஷி வட்டாரத்தில் உள்ள ஹதாஷி கிராமத்தில் அவரது வீட்டின் அருகே தகர அட்டை அடைக்கப்பட்ட அரை இருள் சமையலறையில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். 55 வயதாகும் பிபாபாய் மண் அடுப்பில் சட்டியை வைத்து, மிச்சமுள்ள அரிசியை கழுவி வேக வைக்கிறார். மரப் பலகை கொடுத்து என்னை அமரச் சொல்லிவிட்டு, தனது அன்றாட பணிகளை அவர் தொடர்கிறார். சமைக்கும் போது அவரது இடுப்பு முற்றிலுமாக வளைந்து தாடை முழங்கால்களை தொடுவதை கண்டேன். கால்களை மடக்கி அமரும்போது அவரது முழங்கால்கள் காதுகளைத் தொடுகின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் எலும்புப்புரையும் நான்கு அறுவை சிகிச்சைகளும் பிபாபாயை இப்படிச் செய்துவிட்டன. முதலில் குடும்ப கட்டுப்பாடு, பிறகு குடலிறக்கம், கருப்பை நீக்கம், குடல் - அடிவயிற்றுக் கொழுப்பு, தசைகளின் ஒரு பகுதி அகற்றம் என நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

“வயதிற்கு வந்தவுடன் 12 அல்லது 13 வயதிலேயே எனக்கு திருமணமாகிவிட்டது. முதல் ஐந்தாண்டுகள் நான் கருத்தரிக்கவே இல்லை,” என்கிறார் பிபாபாய். அவர் பள்ளிக்கும் செல்லவில்லை. அவரது கணவர் மகிபட்டி லோயாரியை அனைவரும் அப்பா என்றழைக்கின்றனர் - அவர் பிபாபாயைவிட 20 வயது மூத்தவர். மாவட்ட பஞ்சாயத்து பள்ளியின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர். அவர் புனே மாவட்டம், முல்ஷி வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியவர். லொயாரி குடும்பம் தங்களுக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் நெல், பயறு, பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை பயிரிடுகின்றனர். அவர்களுக்கு என இரண்டு காளைகள், ஒரு எருமை, ஒரு பசு, கன்று ஆகியவை சொந்தமாக உள்ளன. மாடுகளிடம் பால் கறந்து கூடுதல் வருமானம் பெறுகின்றனர். மகிபட்டி ஓய்வூதியமும் பெறுகிறார்.

“என் எல்லா குழந்தைகளும் வீட்டிலேயே பிறந்தனர்,” என்று தொடர்கிறார் பிபாபாய். அவரது முதல் மகன் 17 வயதில் பிறந்துள்ளான். “அப்போது எங்கள் கிராமத்தில் சரியான சாலை வசதி, வாகன வசதி கிடையாது. என் பெற்றோர் வீட்டிற்கு மாட்டு வண்டியில் செல்லும் வழியில், எனது பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி வந்துவிட்டது, மாட்டு வண்டியிலேயே என் முதல் குழந்தை பிறந்துவிட்டது!” என பிபாபாய் நினைவுக்கூர்கிறார். பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசலை பிறகு தைத்துள்ளனர் - இதுபற்றி அவர் கூறவில்லை.

'My back is broken and my rib cage is protruding. My abdomen is sunken, my stomach and back have come together...'
PHOTO • Medha Kale

'என் முதுகு உடைந்து, இடுப்பு எலும்புகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன, என் அடிவயிறு பள்ளமாகி, வயிறும், முதுகும் சேர்ந்துவிட்டது... '

இரண்டாவது பிரசவத்தின்போது இரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் கரு வளர்ச்சியும் குறைவாக உள்ளது என்று கொல்வானில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதை பிபாபாய் நினைவுகூர்கிறார். ஹதாஷி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சற்றே பெரிய கிராமம் கொல்வான். இதற்காக அவர் கிராம செவிலியரிடமிருந்து 12 ஊசிகள், இரும்பு மாத்திரைகள் பெற்றதையும் நினைவுகூர்கிறார். கர்ப்ப காலம் முடிந்தபிறகு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. “ஆனால் குழந்தை தொட்டிலில் அழாமல் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தது. அவள் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தோம்,” என்கிறார் பிபாபாய். அக்குழந்தை தான் இப்போது 36 வயதாகும் சவிதா. “மனவளர்ச்சி குன்றியவர்” அல்லது அறிவு வளர்ச்சி குன்றியவர் என புனேவின் சாசூன் மருத்துவமனையில் தெரிவித்தனர். சிலசமயம் அவர் மற்றவர்களிடம் பேசுவாள். விவசாய வேலைகளில் உதவுவதோடு, பெரும்பாலான வீட்டு வேலைகளையும் அவள் செய்கிறாள்.

பிபாபாய் அடுத்து இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளார். அவரது நான்காவது மகன் பிளவுப்பட்ட உதடு, அண்ணத்துடன் பிறந்தான். “அவனுக்கு பால் கொடுத்தால் மூக்கின் வழியாக வெளியேறிவிடும். 20,000 ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் [கொல்வானில் உள்ள தனியார் மருத்துவமனை]  எங்களிடம் சொன்னார்கள். அப்போது நாங்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். என் கணவரின் அப்பாவும், மூத்த சகோதரரும் இதுபற்றி [அறுவை சிகிச்சைக்கான தேவை]  கண்டு கொள்ளவில்லை, ஒரு மாதத்தில் என் குழந்தை இறந்துவிட்டது,” என்று வருத்தத்துடன் சொல்கிறார் பிபாபாய்.

அவரது மூத்த மகன் குடும்ப நிலத்தில் விவசாயம் செய்கிறார். மூன்றாவது மகன் புனேவில் லிஃப்ட் தொழில்நுட்ப பணியில் இருக்கிறார்.

நான்காவது மகன் இறந்த பிறகு, பிபாபாய்க்கு ஹதாஷியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனே தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20களில் இருக்கும். அவரது கணவரின் மூத்த சகோதரர் அதற்கான செலவை ஏற்றார். கருத்தடைக்கு பிறகு அவருக்கு வயிற்று வலி, இடப்பக்கம் பெரிய வீக்கம் ஏற்பட்டது - அது வெறும் வாயு தான் என்கிறார் பிபாபாய். மருத்துவர்கள் குடலிறக்கம் என்று கூறிவிட்டனர். அது கருப்பையை அழுத்தியதால் வலி அதிகரித்தது. புனே தனியார் மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அச்செலவை அவரது மருமகன் ஏற்றுக் கொண்டார்; எவ்வளவு செலவானது என்பது அவருக்கு தெரியவில்லை.

Bibabai resumed strenuous farm labour soon after a hysterectomy, with no belt to support her abdominal muscles
PHOTO • Medha Kale

கருப்பை நீக்கத்திற்கு பிறகு பிபாபாய் அடிவயிற்று தசைகளை தாங்கும் பெல்ட் எதுவும் அணியாமல் கடுமையான விவசாயப் பணிகளை தொடங்கிவிட்டார்.

பிபாபாய் 30களின் பிற்பகுதியில் இருந்தபோது அவருக்கு மாதவிடாய் ஆபத்தான உதிரபோக்கை கொடுத்துள்ளது. "அளவற்ற உதிர போக்கு வயல் வேலையில் இருக்கும் போது நிலத்தில் கூட சிந்திவிடும். நான் மண்ணைப் போட்டு மூடிவிடுவேன்," என்று அவர் நினைவுகூர்கிறார். இரண்டு ஆண்டுகள் வலியை தாங்கிய பிறகு கொல்வானில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரை பிபாபாய் பார்த்துள்ளார். அவரது கர்ப்பப்பை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அகற்ற வேண்டும் என மருத்துவர் கூறிவிட்டார்.

40 வயதான போது பிபாபாய்க்கு புனேவில் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் கழித்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு [அடிவயிற்று தசைகளைத் தாங்கும்] பெல்ட் அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் என் குடும்பத்தினர் ஒன்றைக் கூட வாங்கித் தரவில்லை,” என்கிறார் பிபாபாய்; அவர்களுக்கு பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. போதிய ஓய்வும் எடுக்காமல் விவசாய வேலைகளையும் அவர் தொடங்கி இருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு 6 மாதங்கள் வரை கடுமையான எந்த வேலையும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். வேளாண் துறையில் உள்ள பெண்களுக்கு “இதுபோன்ற நீண்ட காலத்திற்கு ஓய்வெடுக்கும் வசதி கிடையாது”  விரைவாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்கிறது, 2015 ஏப்ரலில் வெளிவந்த சமூக அறிவியல்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி பத்திரிகையில் நிலாங்கி சர்தேஷ்பாண்டேவின் கிராமப்புற மகளிரிடையே கர்ப்பப்பை அகற்றுதல் எனும் ஆய்வறிக்கை குறிப்பு.

நீண்ட காலத்திற்கு பிறகு பிபாபாயின் ஒரு மகன் அவருக்கு இரண்டு பெல்ட்டுகள் வாங்கி வந்தார். ஆனால் அவற்றை அவர் பயன்படுத்துவதில்லை. “நீங்களே பாருங்கள், எனக்கு அடிவயிறே இப்போது இல்லை, பெல்ட் எப்படி போட முடியும்,” என்கிறார் அவர். கர்ப்பபை அகற்றப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பிபாபாய் (ஆண்டு, தேதி போன்ற விவரங்களை அவரால் நினைவுகூர முடியவில்லை) புனேவின் மற்றொரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். “இம்முறை,” அவர் சொல்கிறார், “சிறுகுடல் பாதி அகற்றப்பட்டது.” தனது ஒன்பது கஜ புடவையை உருவி குழிவான அடிவயிற்றை என்னிடம் காட்டுகிறார். தசை, சதை எதுவுமில்லை. சுருங்கிய தோல் மட்டுமே உள்ளது.

இந்த அடிவயிற்று அறுவை சிகிச்சை குறித்த எந்த தகவலும் அவருக்கு தெளிவாக நினைவில் இல்லை. கர்ப்பப்பை அகற்றலுக்கு பிறகு சிறுநீர்ப்பை, குடல் மற்றும் சிறுநீர்க்குழாய்கள் பலத்த காயமடைகின்றன என்கிறது சர்தேஷ்பாண்டேவின் ஆய்வுக்கட்டுரை. புனே, சதாரா மாவட்ட கிராமப்புற மாதவிடாய் நிற்காத பெண்கள் 44 பேரில் பாதி பேருக்கு கர்ப்பப்பை அகற்றம் செய்யப்பட்டுள்ளது, அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்றவை உடனடியாக ஏற்படுகின்றன. அறுவை சிகிச்சைக்கு பிறகு பலருக்கும் நீண்ட காலத்திற்கு உடல்தொந்தரவு இருப்பதாகவும், சிகிச்சைக்கு முன் இருந்த அடிவயிற்று வலி அப்போதும் தொடர்வதாக தெரிவிக்கின்றனர்.

Despite her health problems, Bibabai Loyare works hard at home (left) and on the farm, with her intellactually disabled daughter Savita's (right) help
PHOTO • Medha Kale
Despite her health problems, Bibabai Loyare works hard at home (left) and on the farm, with her intellactually disabled daughter Savita's (right) help
PHOTO • Medha Kale

உடல் தொந்தரவுகளையும் தாண்டி, பிபாபாய் லோயாரி வீட்டிலும் வயலிலும் கடினமாக உழைக்கிறார் (இடது), அவரது மூளை வளர்ச்சி குன்றிய மகள் சவிதாவின் உதவியோடு (வலது).

இத்தொந்தரவுகளுக்கு எல்லாம் உச்சமாக பிபாபாய்க்கு கடந்த 2-3 ஆண்டுகளாக தீவிர எலும்புப்புரை ஏற்பட்டுள்ளது. கர்ப்பப்பை நீக்கம் அல்லது முன்கூட்டியே மாதவிடாய் நின்றுபோதல் போன்றவற்றால் நிகழும் சுரப்பிகளின் சமமின்மையால் எலும்புப்புரை ஏற்படுகிறது. எலும்புப்புரை நோயினால் உறங்கும்போது கூட முதுகை நேராக வைக்க முடியாமல் பிபாபாய் சிரமப்படுகிறார். அவருக்கு ‘எலும்புப்புரை அழுத்தத்தால் தீவிர எலும்பு முறிவுடன் கூன் முதுகு‘  தொந்தரவு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிம்ப்ரி -சின்ச்வாட் தொழிற்துறை நகரமான சிக்கலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனது மருத்துவ அறிக்கைகள் கொண்ட நெகிழி பையை என்னிடம் கொடுத்தார். வலிகளும், உடல் தொந்தரவுகளும் நிரம்பிய வாழ்க்கை அவருடையது. அவரது மருத்துவ கோப்பில் மூன்று பக்கங்கள், ஒரு எக்ஸ்-ரே அறிக்கை, மருந்து கடைகளின் சில ரசீதுகள் உள்ளன. அவரது வலியையும், தொந்தரவுகளையும் போக்கக்கூடிய கேப்சூல்களையும் என்னிடம் காட்டினார். சாக்கு நிறைய நொய் அரிசியை சுத்தம் செய்தல் போன்ற கடினமான பணிகளின் போது அவர் ஸ்டீராய்டற்ற அழற்சிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்.

“கடினமான உடல் உழைப்பு, மலைப்பாங்கான பகுதிகளில் அன்றாடம் அதிக வேலை, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை மகளிரின் உடல்நிலையை மோசமாக பாதிக்கின்றன,” என்கிறார் டாக்டர் வைதேஹி நகர்கார். அவர் கடந்த 28 ஆண்டுகளாக ஹதாஷியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவுட் கிராமத்தில் மருத்துவராக உள்ளார். “நம் மருத்துவமனையில் குழந்தைப் பேறு தொடர்பான சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைப் பெறும் பெண்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் கீல்வாதம், எலும்புப்புரை, இரும்பு பற்றாக்குறையால் இரத்த சோகை, போன்றவை இப்போதும் குணப்படுத்த முடியாமல் உள்ளது.”

“விவசாயப் பணிகளுக்கு மிகவும் முக்கியமான எலும்புகளின் ஆரோக்கியத்தை முதியோர்கள் முழுமையாக அலட்சியப்படுத்துகின்றனர்,” என்கிறார் அவரது கணவர் டாக்டர் சச்சின் நகர்கார்.


The rural hospital in Paud village is 15 kilometres from Hadashi, where public health infrastructure is scarce
PHOTO • Medha Kale

ஹதாஷியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவுட் கிராமப்புற மருத்துவமனையில் பொது சுகாதார உள்கட்டமைப்பு அரிதாகவே காணப்படுகிறது.

பிபாபாய்க்கு இத்தகைய தொந்தரவுகள் வந்ததற்கான காரணத்தையும் சொல்கிறார்: “அந்நாட்களில் [20 ஆண்டுகளுக்கு முன்], நாள் முழுவதும் காலை முதல் இரவு வரை வேலை செய்வேன். அதுவும் கடின உழைப்பு. மலையில் உள்ள எங்கள் வயலில் [வீட்டிலிருந்து ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் தூரம்] ஏழு முதல் எட்டு மணி நேரம் பசுஞ்சாணத்தை கொட்டுவேன், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பேன் அல்லது அடுப்பிற்கு விறகு வெட்டுவேன்…”

பிபாபாய் இப்போதும் வயலில் வேலை செய்யும் அவரது மூத்த மகன் மற்றும் மருமகளுக்கு உதவி செய்கிறார். “விவசாய குடும்பம் ஒருபோதும் ஓய்வெடுக்க முடியாது, தெரியுமா,” என்கிறார் அவர். “அதுவும் பெண்ணாக இருந்தால், கர்ப்ப காலமோ, உடல்நலம் குன்றிய காலமோ. அதெல்லாம் பொருட்டல்ல.”

936 மக்கள்தொகை கொண்ட ஹதாஷி கிராமத்தின் பொது சுகாதார உள்கட்டமைப்பு என்பது அரிதாகவே உள்ளது. அருகில் உள்ள சுகாதார துணை மையம் என்பது கொல்வானில் உள்ளது. 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலே கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. பிபாபாயின் நீண்ட கால உடல் தொந்தரவுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளை அவர் அணுகியதற்கும் இதுவே காரணம் - எப்போது எந்த மருத்துவரை பார்ப்பது என்பதை அவரது கூட்டு குடும்பத்தினர் தான் முடிவு செய்துள்ளனர்.

கிராமப்புற மகாராஷ்டிராவின் பலரையும் போலல்லாமல், பிபாபாய்க்கு மரபு மருத்துவர்கள் அல்லது இறைவழி மருத்துவர்கள் மீது சிறிது நம்பிக்கை இருந்தது. “என் கிராமத்திலிருந்து ஒரு மரபு மருத்துவரிடம் சென்றேன். அவர் என்னை பெரிய தாம்பாலத்தில் அமரச் சொல்லி, குழந்தைக்கு தலையில் தண்ணீர் ஊற்றுவதைப் போல ஊற்றினார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த ஒருமுறைதான் அவரிடம் சிகிச்சைக்கு சென்றேன்,” என்கிறார் அவர். நவீன மருத்துவத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவரது கணவரின் கல்வியறிவு, பள்ளி ஆசிரியர் பணி காரணமாக நவீன மருத்துவத்திற்கு அவர் சம்மதித்து இருக்கலாம்.

இப்போது அப்பாவிற்கு மருந்து கொடுக்கும் நேரம் என்பதால் அவர் பிபாபாயை அழைக்கிறார். 74 வயதாகும் அப்பா பதினாறு ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்விற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடக்குவாதம் வந்து படுக்கையில் விழுந்தார். அவரால் பேச முடியாது. தானாக சாப்பிட முடியாது. சில சமயம் அவர் படுக்கையிலிருந்து கதவிற்கு தன்னையே இழுத்துக் கொண்டு செல்கிறார். அவர்களுடைய வீட்டிற்கு நான் முதன்முறை சென்றபோது, என்னிடம் பிபாபாய் பேசிக் கொண்டிருந்ததால் அவருக்கு மருந்து கொடுக்க நேரமாகிவிட்டது. இதனால் அவர் எரிச்சலடைந்தார்.

ஒரு நாளுக்கு நான்கு முறை அவருக்கு பிபாபாய் உணவளிக்கிறார். அவரது சோடியம் பற்றாக்குறையை போக்க உப்பு நீரும், மருந்துகளும் கொடுக்கிறார். இப்பணியை 16 ஆண்டுகளாக, தனது உடல் தொந்தரவுகளையும் பொருட்படுத்தாமல் நேரத்திற்கு, அக்கறைடன் அவர் செய்து வருகிறார். விருப்பு, வெறுப்புகளின்றி வயல் மற்றும் வீட்டுவேலைகளை முடிந்தவரை செய்கிறார். உடல் தொந்தரவு, வலியுடன் பல ஆண்டுகளாக வேலை செய்கிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு ஓய்வு ஏது என்கிறார் அவர்.

முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.

இந்தியாவின் கிராமப்புற பருவப் பெண்கள், இளம் பெண்கள் குறித்த செய்தி சேகரிக்கும் திட்டத்தை பாரி மற்றும் கவுன்டர் மீடியா டிரஸ்ட் தேசிய அளவில் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் அங்கமாக செய்து வருகிறது. பின்தங்கிய பிரிவினர், எளிய மக்களின் சூழல், வாழ்க்கை அனுபவத்தை அவர்களின் குரல் வழியாக வெளிக் கொணர்கிறது.

இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள். [email protected] என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.

தமிழில்: சவிதா

Medha Kale

میدھا کالے پونے میں رہتی ہیں اور عورتوں اور صحت کے شعبے میں کام کر چکی ہیں۔ وہ پیپلز آرکائیو آف رورل انڈیا (پاری) میں مراٹھی کی ٹرانس لیشنز ایڈیٹر ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز میدھا کالے
Illustration : Priyanka Borar

پرینکا بورار نئے میڈیا کی ایک آرٹسٹ ہیں جو معنی اور اظہار کی نئی شکلوں کو تلاش کرنے کے لیے تکنیک کا تجربہ کر رہی ہیں۔ وہ سیکھنے اور کھیلنے کے لیے تجربات کو ڈیزائن کرتی ہیں، باہم مربوط میڈیا کے ساتھ ہاتھ آزماتی ہیں، اور روایتی قلم اور کاغذ کے ساتھ بھی آسانی محسوس کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priyanka Borar
Series Editor : Sharmila Joshi

شرمیلا جوشی پیپلز آرکائیو آف رورل انڈیا کی سابق ایڈیٹوریل چیف ہیں، ساتھ ہی وہ ایک قلم کار، محقق اور عارضی ٹیچر بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز شرمیلا جوشی
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha